குறளமுதம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறளமுதம் என்னும் நூல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் சிறப்பு வெளியீடாக 2000ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் சென்னை குறளகத்தில் அமைந்த தமிழ் வளர்ச்சி இயக்ககத்தால் வெளியிடப்பட்டது.

இதன் தொகுப்பாசிரியராக சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தியும் பொதுப்பதிப்பாசிரியராக தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரனும் செயல்பட்டுள்ளனர்.[1]

கட்டுரைத் தொகுப்பு[தொகு]

குறளமுதம் என்னும் நூலுக்கு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி வாழ்த்துரையும், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மு. தமிழ்க்குடிமகன் அணிந்துரையும் வழங்கியுள்ளனர். இந்த நூல் எழுந்த வரலாறு பற்றி "தொகுப்பாசிரியர் உரை"யில் இ. சுந்தரமூர்த்தி கீழ்வருமாறு கூறுகிறார்:

திருக்குறளுக்கு உரை விளக்கம் தந்த பழைய உரையாசிரியர்களேயன்றி, பிற இலக்கிய இலக்கண உரையாசிரியர்களும், புத்துரையாசிரியர்களும் திருக்குறளைத் தம் விளக்கத்திற்கு விளக்காகப் பயன்படுத்தினர். காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் திருக்குறளின் கருத்தைப் போற்றின; வளர்த்தன. "சமயந்தொறும் நின்ற தனிநூலாக"த் திருக்குறள் விளங்கியது...மேலைநாட்டு வரவின் பயனாகத் திருக்குறள் ஓலையினின்றும் அச்சுருவிற்குப் பெருமாற்றம் கொள்கின்றது. 1812ஆம் ஆண்டில் முதன்முதல் திருக்குறள் அச்சேற்றப் பெறுகின்றது. தஞ்சை ஞானப்பிரகாசரும், அம்பலவாணத்தம்பிரானும் இந்த முதல்பதிப்பைத் தமிழில் அச்சேற்றி இலக்கிய உலகின் பெருமை பெறுகின்றனர். அச்சுருவம் பெற்ற பின்னர், கடந்த இரு நூற்றாண்டுகளாகத் திருக்குறளுக்கு எழுந்த நூல்கள் பல ஆயிரம், பதிப்புகளாகவும், பல்பொருள் ஆய்வுகளாகவும் நாள்தோறும் இன்றும் தோன்றிக்கொண்டேயுள்ளன. கணினி யுகத்திலும் குறள் குறுந்தகடுகளாக உருப்பெற்றுப் புதிய பொலிவில் கோலம்கொள்கிறது...

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவள்ளுவரின் சிலையை வியந்து பாடிய (1904) திருமணம் செல்வக்கேசவராயரின் எண்ணத்தை எதிரொலிக்கும் வண்ணம் முக்கடல்கள் இணையும் தமிழ் மண்ணில் மனித சிந்தனையின் தூயஉருவமாகத் திகழும் திருவள்ளுவரின் திருவுருவம் கம்பீரமாக எழுந்துநின்று புதிய ஆயிரத்தாமாண்டிற்கு நல்வரவு கூறுகின்றது.

வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும் "குறளமுதம்" ஒரு நூற்றாண்டு காலம் வள்ளுவ ஆய்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியின் ஒரு முன்னோடி நூல்.

திருக்குறள் குறித்து இந்த நூற்றாண்டின் அறிஞர் பெருமக்கள் பலரும் திருக்குறள் ஆய்விற்குத் தம் பங்களிப்பைச் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான அறிஞர்கள் இத்துறையில் உழைத்துள்ளனர். அனைத்து ஆய்வுமுயற்சிகளையும் பதிவுசெய்ய வேண்டியது இன்றியமையாதது எனினும் காலவரையறைக்குள் ஒருசிலவே இடம்பெற்றுள்ளன. இடம்பெற வேண்டிய கட்டுரைகள் இன்னும் நூற்றுக்கணக்கில் உள. இத்தகைய முயற்சிகள் மேலும் பெருக இந்நூல் துணைநிற்கும்... (பக்கங்கள்: 11-13)

நூறாண்டுகள் ஆய்வின் தொகுப்பு நூல்[தொகு]

குறளமுதம் என்னும் இந்நூல் ஒரு மாபெரும் கட்டுரைத் தொகுப்பு. இதில் அடங்கியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் மறைமலையடிகள் 1902இல் எழுதிய "திருக்குறள் ஆராய்ச்சி" என்னும் கட்டுரையிலிருந்து தொடங்கி, முனைவர் மு. தமிழ்க்குடிமகன் 1999இல் எழுதிய "உன்னைத் திருத்து" என்னும் கட்டுரை வரை, 20ஆம் நூற்றாண்டு திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பாக அமைந்துள்ளது.

ஆய்வுக் கட்டுரைகள் நாற்பது[தொகு]

குறளமுதம் என்னும் நூல் தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகள் அரிய வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தலைசிறந்த அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளைத் தனியாகக் காண்பது அரிதாக உள்ள நிலையில் இவற்றைத் தொகுப்பாக இந்நூல் கொணர்வது சிறப்பு.

குறளமுதத்தில் அடங்கியுள்ள 40 கட்டுரைகள், அவற்றை எழுதிய அறிஞர்களின் பெயர்கள், கட்டுரைகள் வெளியான ஆண்டு, குறளமுதம் நூலில் கட்டுரைகள் காணப்படும் பக்கம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய பட்டியல் கீழே தரப்படுகிறது.

கட்டுரை வரிசை எண் கட்டுரைத் தலைப்பு கட்டுரை ஆசிரியர் கட்டுரை வெளியான ஆண்டு குறளமுதம் நூலில் பக்கம்
1 திருக்குறள் ஆராய்ச்சி மறைமலையடிகள் 1902 17
2 திருவள்ளுவர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் 1904 35
3 திருவள்ளுவரைப் பற்றிய குறிப்புகள் மு. இராகவையங்கார் 1909 57
4 திருக்குறள் வீட்டின் பால் ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை 1909 69
5 திரிக்குறள் அயோத்தி தாசர் 1914 87
6 குறள் தமிழ்முதனூலா தரும சாத்திர சாரத்திரட்டா? சோமசுந்தர பாரதியார் 1929 109
7 திருக்குறள் அறத்துப்பால் நாகை. சொ. தண்டபாணிப்பிள்ளை 1933 119
8 குறள் - குறளும் நானும் தந்தை பெரியார் 1935 125
9 திருவள்ளுவரும் திருக்குறளும் உ.வே. சாமிநாதையர் 1936 141
10 திருக்குறள் விரிவுரை திரு.வி. கலியாண சுந்தரனார் 1939 161
11 நம் பண்டைய நீதி நூலாசிரியர் மு. கதிரேசச் செட்டியார் 1941 177
12 வள்ளுவர் உள்ளம் கி.ஆ.பெ. விசுவநாதம் 1945 185
13 வள்ளுவர் தந்த இன்பம் இராய. சொக்கலிங்கனார் 1947 207
14 காதல் வாழ்க்கை மு. வரதராசன் 1948 227
15 தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை 1949 247
16 திருக்குறள் - ஓர் திருப்பணி அறிஞர் அண்ணா 1949 261
17 திருக்குறள் குழந்தையுரை புலவர் குழந்தை 1949 275
18 வள்ளுவர் கொள்கையும் வடவர் கொள்கையும் இறையனார் 1949 289
19 திருக்குறளும் சமதர்மமும் அ. சக்கரவர்த்தி நயினார் 1949 307
20 வள்ளுவர் நெஞ்சம் வ.சுப. மாணிக்கம் 1950 323
21 திருக்குறளும் பொது நோக்கமும் புலவர் சரவண ஆறுமுக முதலியார் 1951 349
22 வள்ளுவர் - தெய்வ ஒளி ச. வையாபுரிப்பிள்ளை 1953 363
23 வழி வழி வள்ளுவர் - சிலப்பதிகாரத்திலே வள்ளுவர் ரா.பி. சேதுப்பிள்ளை 1953 375
24 பாரதிதாசன் திருக்குறள் உரை - வள்ளுவர் உள்ளம் பாரதிதாசன் 1956 391
25 வள்ளுவர் காலம் சாமி. சிதம்பரனார் 1956 409
26 வள்ளுவரின் உள்ளம் நாமக்கல் கவிஞர் 1956 409
27 குறளோவியம் கலைஞர் மு. கருணாநிதி 1956 423
28 வள்ளுவர் கண்ட காமம் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் 1957 433
29 திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன் ஜீவபந்து டி.எஸ். சிறீபால் 1959 445
30 வள்ளுவர் வாசகம் இராஜாஜி 1960 463
31 திருவள்ளுவர் காலம் மா. இராசமாணிக்கனார் 1963 481
32 குறள் காட்டும் இயற்கை ச. தண்டபாணி தேசிகர் 1968 501
33 திருவள்ளுவர் தமிழகத்தின் முதல் புரட்சியாளர் இலக்குவனார் 1970 517
34 திருக்குறள் மணி விளக்கவுரை கா. அப்பாத்துரை 1971 527
35 மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை ஞா. தேவநேயப் பாவாணர் 1973 545
36 சான்றோர் கண்ட திருவள்ளுவர் க.த. திருநாவுக்கரசு 1979 557
37 உலகப் பொதுமறை திருக்குறள் வீ. முனிசாமி 1983 575
38 வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள் குன்றக்குடி அடிகளார் 1988 587
39 வள்ளுவர் வகுத்த நெறியில் வாழ்ந்த அறிஞர் பேராசிரியர் க. அன்பழகன் 1999 603
40 உன்னைத் திருத்து முனைவர் மு. தமிழ்க்குடிமகன் 1999 613

குறிப்பு[தொகு]

  1. இ. சுந்தரமூர்த்தி (தொகுப்பாசிரியர்), குறளமுதம், தமிழ் வளர்ச்சி இயக்ககம், குறளகம், சென்னை, 2000, பக்கங்கள்: 624.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறளமுதம்_(நூல்)&oldid=3693895" இலிருந்து மீள்விக்கப்பட்டது