திருமணம் கே. செல்வகேசவராய முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமணம் கே. செல்வகேசவராய முதலியார்

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் (1864-1921) இலக்கியம், திறனாய்வு, மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவர், தமிழ் தனித்தியங்கும் தன்மை உள்ள செம்மொழி என்பதனை நிறுவிய அறிஞர்களுள் ஒருவர் ஆவார்.[1]

பிறப்பு[தொகு]

செல்வக்கேசவர், 1864 ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகிலுள்ள திருமணம் என்னும் ஊரில் [1] கேசவ சுப்பராய முதலியார் – பாக்கியத்தம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி[தொகு]

பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியருக்கு மகனாகப் பிறந்த செல்வகேசவர், முதலில் பச்சையப்பன் கல்லூரியிலும் பின்னர் மாநிலக் கல்லூரியிலும் பயின்று கலைமுதுவர் பட்டம் பெற்றார்.[2]

பணி[தொகு]

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2]

தொகுத்துப் பதிப்பித்தவை[தொகு]

செல்வகேசவர் தமிழ்ப் பழமொழிகள் பலவற்றைத் தொகுத்து அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து இணைப் பழமொழிகள் என்னும் நூலை 1898 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

படைப்புகள்[தொகு]

இவர் பின்வரும் நூல்களைப் படைத்துள்ளார்:[2]

  1. கம்பன் (1902)
  2. கண்ணகி சரித்திரம் (1905)
  3. குசேலர் சரித்திரம்
  4. தமிழ் (1904
  5. திருவள்ளுவர் (1904)

மொழியியற் கட்டுரைகள்[தொகு]

செல்வகேசவர் தமிழ்மொழி வரலாறு என்னும் தலைப்பில் 15 கட்டுரைகளை சுதேசமித்திரன் இதழில் எழுதியிருக்கிறார்.

இலக்கணம்[தொகு]

பஞ்சலட்சணம் என்னும் தமிழ் இலக்கண நூலை 1903ஆம் ஆண்டில் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளியநடையில் இயற்றி இருக்கிறார்.[1]

தமிழின் முதற்சிறுகதை[தொகு]

இலக்கியத்தில் மேனாட்டுமுறைகளை பரிசோதித்துப் பார்க்கும் புதுமைக் குணம் உடையவராக இருந்த இவர் வ. வே. சு. ஐயர் குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதையை எழுதுவதற்கு முன்னரே சிறுகதை எழுதினார்.[1] இதுவே தமிழின் முதற் சிறுகதை என்கிறார் கமில் சுவெலபில். இவருடைய சிறுகதைகள் அபிநவக் கதைகள் என்னும் நூலாக வெளிவந்துள்ளன.

புதினம்[தொகு]

சுப்பிரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா இதழில் கற்பலங்காரம் என்னும் புதினத்தை செல்வகேசவர் எழுதி இருக்கிறார்.

பதிப்பாசிரியர்[தொகு]

இவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி என்னும் நூலை பழைய உரையோடு சந்தி பிரித்துப் பதிப்பித்தார். மேலும் ஆசாரக்கோவை, அறநெறிச்சாரம், அரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியம் ஆகிய நூல்களையும் பதிப்பித்தார்.

குடும்பம்[தொகு]

செல்வகேசவருக்கு பரிமேலழகர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூன்று மகன்கள் இருந்தனர்.

மறைவு[தொகு]

செல்வகேசவர் சென்னை பெரம்பூரில் 1921 ஆம் ஆண்டில் மறைந்தார்.

சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.277
  2. 2.0 2.1 2.2 கந்தையா பிள்ள ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி: புலவர் அகர வரிசை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, மு.பதிப்பு 1952, பக்.194