சொண்டி
சொண்டி / செளண்டிகர் ( Chondi[1] / Sonti ) என்ற குலத்தினர், சென்னை மாகாணத்தின் மலைப்பகுதிகளில் உள்ள வளமான நிலங்களைத் தங்கள் உடமையாக்கிக் கொண்டு, மலைப் பகுதிகளைச் சேர்ந்த கள்ளங்கபடமற்ற குடியானவர்களை, தங்கள் அடிமைகளாக்கிக் கொண்டவருள் மிக முக்கியமானவர்கள் இவர்கள் என, சி. பி. மேக்கார்டை, 1881 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில் கூறியிருக்கிறார். மேலும், விசாகப்பட்டினம் மாவட்ட விவரக் குறிப்பிலும், 1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையிலும், இவர்களைக் குறித்துக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவர்கள் அசிலி சாதியினரின், புறமணக் கட்டுப்பாடு உடைய ஒரு குலம் ஆவர். இப்பெயரில், இத்தகைய குலத்தோர் இருந்ததற்கு பல வரலாற்று ஆவணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை, இங்கு தரப்படுகின்றன.
வாழ்வியல் முறை
[தொகு]தொழில்
[தொகு]சொண்டிகள்இலுப்பைப் மலரை, அரிசி, வெல்லம் ஆகியவற்றிலிருந்து சாராயம் வடிக்கின்றனர்.[2] இச்சாரயத்தை, பழங்குடி மக்களுக்குக் கொடுத்து, அவர்களை அடிமையாக்கினர். சொண்டிகள் நூற்றுக்கு நூறு சதவிகித வட்டி வாங்கும், வட்டித் தொழிலையும் நடத்தினர். வட்டி கணக்கு வழக்குகளில், தில்லுமுல்லு செய்து, நிலங்களைக் கடனில் மூழ்கும் படி செய்து, நிலத்தை அபகரிக்கரித்தனர்.
பூப்பெய்தல்
[தொகு]ஒரு சிறுமி பூப்படையும் போது, அவளைத் தனியே ஒரு அறையில், நான்கு அம்புகளை, நான்கு மூலைகளில் நட்டு, நூலால் இணைக்கப்பட்ட சதுரமான இடத்தில் இருக்கும்படி விடுவர். நாள்தோறும் அவளுக்கு எண்ணெயும், மஞ்சளும் பூசுவர். ஏழாம் நாள், அவள் உள்ளூர் கோயிலுக்குச் சென்று வருவாள்.
திருமணம்
[தொகு]மணநாளன்று மணமகன் முகம் மழிக்கப்படுவதோடு அவனுக்குப் பழைய பூனூலுக்குப் பதிலாகப் புதிய பூனூலும் அணிவிக்கப்படும். விநாயகர் வழிபாட்டுடன் மணச் சடங்குகள் தொடங்கும். இவை பெரிதும் ஒரியர் மணச் சடங்குகளைப் போலவே இருக்கின்றன. கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த, சொண்டி சாதிச் சிறுமி ஒருத்தி பூப்படையும் முன், ஒருவனுக்கு திருமணம் செய்விக்கப்படாது போவாளாயின், அதே சாதியினைச் சேர்ந்த முதியவன் ஒருவனுக்கோ, அவளுடைய அக்காவின் கணவனுக்கோ, அவளை மணம் செய்விப்பதற்குரிய சடங்குகளுக்கு உட்படுத்துவர். இவ்வாறு அவளைப் பெயரளவிற்கு மணந்தவன் இறக்கும் வரை, அவள் வேறொருவனை மணந்து கொள்ள அனுமதிப்பது இல்லை.
திருமணத்திற்கு முன்னான சடங்கு
[தொகு]இக்குலத்தோரின் பழக்க வழக்கங்களில், பல புறமணக் கட்டுப்பாடு உடைய குலங்கள் அடங்கியுள்ளன. 'பொடொ', 'ஒடிய', 'மடிய', 'கூகுல', 'சன்னொகுல' என்பன அவற்றுள் சிலவற்றுக்கான பெயர்களாம். சிறுமியர் பூப்படையும் முன்பே திருமணத்தைச் செய்த பழக்கம் இருந்தது.. திருமணத்திற்குச் சில நாள்கள் முன்னதாக, மணமகன் இல்லத்தின் முன் குங்கிலியம் என்ற சால் மரம் (Shorea robusta) , நாவல் மரத்தின் (Eugenia Jambolana) மரக்கிளை ஒன்றினை நட்டு, அதனைச் சுற்றிலும் பந்தல் இடுவர். குறிப்பிட்ட நாளில் சாதியினைச் சேர்ந்தவர்களுக்கு, விருந்து அளித்தபின், ஆண்கள் ஊர்வலமாக மணமகள் இல்லத்திற்கு மோதிரங்கள், வெள்ளி மற்றும் கண்ணாடி வளையல்கள், ஐம்பது ரூபாய் பரிசத் தொகை (ஜொல் டொங்கி) ஆகியனவற்றை எடுத்துச் செல்வர்.
திருமணச் சடங்கு
[தொகு]அதற்கும் மறுநாள், மண் மகள் மணமகன் இல்லம் வருவாள். மணநாளன்று மணமக்கள் பந்தலின் நடுவே, நடப்பட்டுள்ள கம்பத்தை, எழுமுறை வலமாகச் சுற்றி வருவர். ஒரியப் பிராமணன் அவர்கள் கரங்களை, இணைத்து வைப்பான். அவர்கள் அருகருகே அமர்ந்தபின் புனித நெருப்பு மூட்டப்படும். மணமகன் வீட்டைச் சேர்ந்த பெண்கள் அவர்கள் மீது மஞ்சளும் அரிசியும் தூவுவர். அடுத்த நாள் ஒரு பொந்தாரி (நாவிதன்) பந்தல் அமைந்துள்ள இடத்தைத் துப்புரவு செய்து அதில் அரிசி மாவால் கோலங்கள் இடுவான். அங்குப் பாய் ஒன்றினை விரித்து, மணமக்கள் சோழி விளையாடுவர்.
திருமணத்திற்கு பின்னாளின் சடங்கு
[தொகு]ஐந்து சோழிகளை மணமகன் தன் வலக்கையில் வைத்து கையை இறுக்கமாக மூடிக் கொள்வான். மணமகள் அவன் கையிலிருந்து அவற்றைப் பிடுங்கப் பார்ப்பாள். அதில் அவள் வெற்றி பெறுவாளாயின் அவளுடைய சகோதரர்கள் மணமகனை அடித்துக் கேலிசெய்வர். அதன்பின் மணமகள் அந்தச் சோழிகளைத் தன் வலக்கையில் வைத்து மூடிக் கொள்வாள். மணமகன் அவற்றைப் பிடுங்க முயற்சிப்பான். அதில் அவன் வெற்றி பெறின் மணமகனோடு உடன் பிறந்த பெண்கள் மணமகளை அடித்துக் கேலி செய்வர். பின் ஒரு கூடையில் அரிசி கொண்டு வந்து வைக்கப்படும். அதில் கொஞ்சத்தை ஒரு பாத்திரத்தில் இடுவர். அதிலிருந்து சிறிது அரிசியை மணமகன் தன் கையிலெடுத்து வைத்துக் கொள்வான். மணமகள் அவனிடம் அதனைப் பாத்திரத்தில் போடுமாறு வேண்டுவாள். அவள் சற்று நேரம் மல்லாடியபின், அவன் அதனைப் போட்டுவிட உடன்படுவான். இச் சடங்குகள், அடுத்துவரும் ஐந்து நாள்களிலும் மீண்டும் நிகழ்த்தப்படும். ஏழாம் நாள், பன்னிரண்டு இலைகளில் சிறிது சோறு படைப்பர். பன்னிரண்டு பிராமணர்கள் தட்சணை பெற்றுக்கொண்டு, அந்த இலைகளில் உள்ள சோற்றை உண்பர்.
மறுமணம்
[தொகு]கைம்பெண்கள் மறுமணம் அனுமதிக்கப்படுகின்றது. இறந்துபோன அண்ணன் மனைவியினைத் தம்பி மணந்து கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால், கைம்பெண்ணான ஒருத்தி, குடும்பத்தில் மூத்தவனுடைய மனைவியாக இருப்பாளாகில், அவன் இறந்தபின், அவனுடைய தம்பியருள் ஒருவனை, அவள் மணக்க அனுமதிப்பதில்லை. குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையினை மணந்து கொண்டவளே, கைம்பெண்ணாக ஆக நேர்ந்தால் மட்டுமே, அவ்வாறு தன் கணவனின் தம்பியருள் ஒருவனை மணக்க அனுமதிக்கப்படுகிறாள்.
நீத்தார் சடங்கு
[தொகு]இறந்தவர்களை எரிக்கும் இவர்கள், பத்து நாள்கள் சாவுத் தீட்டினை மேற்கொள்கின்றனர். அக்காலங்களில், நாள் தோறும் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி நெடுகச் சோற்றினை இரைத்துச் செல்வர். பதினொன்றாம் நாள், தீட்டுக்குரியவர்கள் குளித்தபின், ஒரு பிராமணன் புனித நெருப்பினை வளர்ப்பான். திருமண நாளில் போலவே, பன்னிரண்டு பிராமணர்கள் தட்சணை பெற்றபின் சோறு உண்பர். அன்று நள்ளிரவு நெருங்கும்போது, ஒரு புதிய பானையினை வாங்கி வந்து அதில் துளைகள் இட்டு, அதனுள் ஒரு விளக்கினையும் சோற்றினையும் வைத்து, அதனைச் சுடுகாட்டில் கொண்டுவைத்து இறந்தவன் பெயரை, மும்முறை கூவி அழைப்பர். அவனிடம் சோறு தயாராக உள்ளதாகவும் வந்து உண்ணும்படியும் கூறுவர்.
ஆங்கில அரசின் கணக்கெடுப்புகள்
[தொகு]1881 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை
[தொகு]- சி.பி.மேக்கார்டை 1881 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில், பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.
"கோண்ட்கள் தங்களுக்கு உரியதான நிலத்தில் பெரும்பகுதியினை மற்றச் சாதியினருக்கு விற்று விட்டனர். கோண்ட்கள் வாழும் பகுதியில் உள்ள நிலத்தின் பெரும்பகுதி இவ்வாறாகச் சாராயம் வடிக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள சொண்டிகள் உடமையாக மாறிவிட்டுள்ளது. இது பற்றிய தகவல் அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன் இதனைத் தடுக்க அரசு விரைந்து செயல்பட்டது. அச்செயல்பாட்டின் வெற்றி காரணமாக அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இப்பகுதியில் சொண்டியர் எண்ணிக்கை குறைந்துவிட்டுள்ளது. இவ்வாறு இவர்களுடைய பழிபாவத்திற்கு அஞ்சாத வஞ்சகச் செயல் ஒடுக்கப்பட்டதால் இவர்களுள் பெரும்பாலானவர்கள் போடு (Boad) விற்கும் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். எனக்குத் தெரிந்தவரை இது ஒன்றே குறிப்பிட்ட தொழிலின் நசிவாகும். இதன் காரணமாகக் கோண்ட்களின் மக்கள்தொகை முழுவதுமாக அழிந்துபோகாமல் காக்கப்பட்டதான நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். இல்லையாயின் கோண்ட்கள் விரைவில் நிலத்தோடு பிணைக்கப்பட்ட அடிமைகளாகிவிட அவர்களுடைய நிலங்களுக்குச் சொண்டிகள் உரிமையாளர்களாகிவிட்டிருப்பர்."
- விசாகப்பட்டினம் மாவட்ட விவரக் குறிப்பில் ,
"மலைப் பகுதிகளில் வாழ்வோர் இலுப்பைப் பூவினைக் கொண்டு சாராயம் வடிப்பதோடு கூட அரிசி, சாமை, ராகி ஆகியவற்றிலிருந்தும் சாராயம் வடிக்கின்றனர். இந்தத் தானியங்களை இவர்கள் நன்கு ஊறும்படி நனைத்து அதனோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துச் சிறிது புளித்த காடியினை உடன் கலந்து நான்கைந்து நாள்வரை புளிக்கச் செய்து பின் அதிலிருந்து ஊறலை வடித்தெடுப்பர். இவ்வாறு பெறப்பட்ட ஊறல் லொண்ட், பண்டியம், மத்திகள்ளு என்ற பல்வேறு பெயர்களில் போதையூட்டும் பானமாக விற்கப்படுகின்றது. இவ்வாறு புளிக்க வைக்கப்பட்ட ஊறல் சாராய மருந்து அல்லது சொண்டி மந்து என்ற பெயரால் வாரச் சந்தைகளில் விற்கப்படுகிறது. இதனைப் பல்வேறு முறைகளில் தயாரிக்கின்றனர். காட்டு மரஞ்செடி கொடிகளின் வேர்களும் பட்டைகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன." இவ்வாறு ஊறல் தயாரிப்பதற்கான பொருள்கள் அரிசியோடு கூடக் கலக்கப்பட்டு சிறு உருண்டைகளாக விற்கப்படுகின்றன. இத்தகைய உருண்டைகளைச் சிறப்பாகப் பர்வதிப்பூர், பால்கொண்ட முகவர் பகுதிகளில் கடைகள் வைத்திருக்கும் சொண்டிகளே விற்று வருகின்றனர். சூதுவாது செய்து ஏமாற்றும் இச் சொண்டிகள், போதை ஊட்டும் மதுவிற்கு அடிமையாகி உள்ள மலை இன மக்களை ஏமாற்றி, அவர்களுடைய உடமைகளைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்கின்றனர்."
1892 ஆம் ஆண்டு டெய்லர் கூறியுள்ளவை
[தொகு]அவர் கூறியுள்ள தகவல்கள் வருமாறு :-
"சொண்டிகள் நூற்றுக்கு நூறு சதவிகித வட்டி வாங்குகின்றனர். ஓராண்டிற்குள்ளாக கடன்தொகை, திரும்பச் செலுத்தப்படாது போகுமானால் எஞ்சியுள்ள நிலுவையின் மீது கூட்டு வட்டி வாங்கப்படுகின்றது. இதனால் பயிரிடும் குடியானவர்கள், தங்கள் கடனைத் திரும்ப அடைக்க இயலாதவர்களாகச் செளகார்களின் கொத்தடிமைகளாகக் கோடியராக ஆகி, அவர்களுக்காகச் சோற்றுக்கு உழைக்க வேண்டியதாகி விடுகின்றது. இதற்கிடையே செளகார் இந்த அடிமைகள் என்றும், கடனை அடைக்க இயலாதபடியாகக் கணக்கு வழக்கில் தில்லுமுல்லுச் செய்து விடுகின்றான். சில நாள்களுக்கு முன்பு இது தொடர்பான குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி என் கவனத்திதற்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு குடியானவன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ரூ.20 கடன் வாங்கியிருந்தான். அவன் ரூ.50-ஐ அவ்வப்போது திரும்பச் செலுத்தியிருந்தான். பாக்கித் தொகைக்காக வாழ்நாள் முழுவதும் அடிமையாக உழைத்தபின் அவன் கடன் காரனாகவே இறக்க நேர்ந்தது. அதே கடன்தொகைக்காகச் செளகார் அவனுடைய மகனையும் கொத்தடிமையாக்கிக் கொண்டான். அவனும் 13 மற்றும் 9 வயதில் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு இறந்துபோனான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கிய ரூ.20/- செலுத்தப்பட வேண்டிய பாக்கி ரூ.30-க்காக இந்தச் சிறுவர்கள் இருவரும் அவனுக்குக் கொத்தடிமைகளாக வரவேண்டுமென செளகார் உரிமை கொண்டாடினான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.20-க்காக ரூ.50 செலுத்தியதோடு ஐம்பது ஆண்டுகள் ஒருவன் கொத்தடிமையாக உழைத்தும் அக்கடன் தீர்ந்தபாடில்லை 'கோடி’ என்ற கொத்தடிமை முறை இப்பகுதிகளில் வேரூன்றிவிட்ட வழக்கமாகி விட்டது.
அண்மையில் ஒருவன் தான் பட்ட கடனுக்காகத் தன் தம்பியையும், அவனுடைய மனைவியினையும் “கோடியாக“ பிணையாளாக்கியுள்ளான். மரியாதைக்கு உரியவர்களிடமிருந்து, கடனை வசூலிக்கச் சொண்டிகள், எரிச்சலூட்டும் வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இதனால் குறைந்தது ஒரு கொலையும், நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவர்கள் தீண்டத்தகாத தீட்டு உண்டாக்கும் தாழ்ந்த சாதியினரான காசிகளைக் கொண்டு, தங்கள் கடனைத் திரும்பித் தராதவர் வீட்டினுள் புகுந்து தீட்டு உண்டாக்கி, அவர்களையும் அவர்கள் குடும்பத்தவர்களையும் வீட்டை விட்டு சொண்டியின் முன் இழுத்துக் கொண்டுபோய் நிறுத்துவதாக அச்சுறுத்தவும் செய்வர்.
என் நண்பர் ஒருவர் செயப்பூர் மலைகளில் சென்று வேட்டைகளில் ஈடுபட்டவராகப் புலி ஒன்றினைச் சுட்டு வீழ்த்தினார். அவர் அவருடைய சிகாரியிடம் அவன் செய்த உதவிக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்க, அதற்கு அவன் தன் தம்பியினைப் பிணையிலிருந்து மீட்கத் தனக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தால் போதுமானது எனக் கூறினான். அவன் சொல்வது என்னவென்று விளங்காத வேட்டைக்காரர், அவனிடம் அதுபற்றி விவரம் கேட்டார். அதற்கு அவன் தன் சாதியினை விடச் சற்று உயர்ந்த சாதியினைச் சேர்ந்த ஒருத்தியினை, நூறு ரூபாய் கொடுத்துதான் மனைவியாக வாங்கியவதாகவும் அதற்கான தொகைக்காக, தன் தம்பியினைப் பிணையாளாக ஒரு செளகாரிடம் வைத்திருப்பதாகவும், அந்தச் செளகாருக்குச் செலுத்த வேண்டிய தொகையில் 25 ரூபாய் போகப் பாக்கி அனைத்தையும் செலுத்திவிட்டதாகவும், இப்பொழுது அவன் தம்பி அச் செளகாரிடம் கொத்தடிமையாகச் சோற்றுக்கு, அவன் நிலத்தில் பயிரிட்டு உழைத்து வருவதாகவும் அவன் விளக்கம் கூறினான்.
விசாகப்பட்டினம் மாவட்ட விவரக் குறிப்பில் கொள்ளையரான தோம்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதாவது :- "இவர்கள் செல்வர்களான சிலருடைய வீடுகளில் புகுந்து (இவ்வாறு இவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் சாராயம் விற்பவர்களான சொண்டிகளும் செளகார்களுமே ஆவர். முகவர் பகுதிக் கிராமங்களில் கொள்ளையிடக் கூடிய அளவு பொருள்படைத்த இரக்கமற்ற பணமுதலைகளாக உள்ளோர் இவர்கள். இவர்களுடைய அண்டை அயலார் இவ்வாறு இவர்கள் கொள்ளைக்கு ஆளாகும்போது தங்களைச் சுரண்டிய இவர்கள்மீது ஒரு சிறிதும் இரக்கம் காட்ட மாட்டார்கள்.) அவர்களைக் கட்டிப்போட்டு அவர்கள் வீட்டுப் பெண்களோடு வன்முறையில் உறவு கொண்டபின் அங்குக் கிடைக்கும் அனைத்தையும் கவர்ந்து செல்வர். கஞ்சத்தைச் சேர்ந்த சொண்டிகள் சௌத்ரி, பொதானொ, சாகு என்ற பட்டப் பெயர்களைத் தரிக்கின்றனர். விசாகப்பட்டினம் முகவர் பகுதியில் பிஸ்ஸோயி என்ற பட்டப்பெயரைத் தரிக்கின்றனர்.
1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை
[தொகு]- 1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையின்[3] சில பகுதிகள் வருமாறு;-
"கள் விற்கும் ஒரியச் சாதியாரான இவர்கள் தாங்களே கள் இறக்குவதில்லை. அதனைச் சீயொலொக்களிடமிருந்து வாங்கி விற்கின்றனர். இவர்கள் சாராயமும் வடிக்கின்றனர். போகிற போக்கில் சாராயம் பற்றியும் ஒரு வார்த்தை கூறலாம் என நினைக்கிறேன். அது "தென்னை வகைப் பாளைகளிலிருந்து எடுக்கப்படும் பதநீரினை வடித்து எடுக்கப்படுவதும் ஆகும். 'ஏரக்' என்ற இந்தச் சொல்லின் சிதைந்த வடிவம் 'ரக்' ஆகும். இது 'ரக் பஞ்ச்' என்பது போல, பிற சொற்களோடு இணைந்து வரும். 'பராசரபதாதி' என்ற வடமொழி நூலின்படி செளண்டிகர் (கள் இறக்குவோரும் சாராயம் காய்ச்சுவோரும்) கைவரச் சாதியினைச் சேர்ந்த ஆணுக்கும், கெளதிகெ சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர்கள். இந்த இரு சாதிகளுமே பிரதிலோம சாதிகளாம். மச்ச புராணத்தில் சோண் ஆற்றங்கரையில், ஏழு அப்சர மகளிருக்குச் சிவன் வழியாகப் பிறந்தவர்கள் செளண்டிகர் எனக் கூறப்பட்டுள்ளது. மனு, செளண்டிகர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்தானகன் ஒருவன் வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுவோன், செளண்டிகர், வண்ணான், சாயம் போடுபவன், கருணையற்றவன், எந்த வீட்டில் ஒருவன் மனைவியும் அவன் கள்ளக் காதலுனும் உடன் வாழ்கின்றானோ அந்த வீட்டிற்குரியவன் ஆகியோரிடமிருந்து உணவைப் பெற்று உண்ணமாட்டான் எனக் கூறியுள்ளார். இவர்களோடு தொடர்புடையவர்களான கண்ரிகள் அல்லது கண்டிகள் "
- 'ரிஸ்லெ' என்பவர் தனது, 'வங்காளக் குலங்களும் குடிகளும்' என்ற நூலில் கூறியிருப்பது வருமாறு;-
இந்துக்களின் கோட்பாட்டின்படி, சாராயம் காய்ச்சி விற்பவர்களே எல்லாச் சாதியாரினும் மிகவும் இழிந்தவர்கள். வைவர் தல புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இவர்கள் இழிந்த சாதியாரானதற்கான காரணத்தை நினைவுபடுத்துகின்றது.
இந்துக்களின் கடவுளான சனிபகவான், சிவனால் வெட்டப்பட்ட கணேசனுடைய உடலில் ஒரு யானையின் தலையினைப் பொருத்த இயலாதவனாகிவிட்டபோது, தேவர்களின் தச்சனாகிய விசுவகர்மா வரவழைக்கப்பட்டான். தக்கபடி அந்த உறுப்புகளைச் சீரமைத்து, அவன் 'கேதாரசேனன்' என்ற ஒருவனை உருவாக்கினான். மிகக் களைத்துத் தாகத்தற்கு உள்ளான, பகவதி கேதாரசேனனிடம் குடிக்கத் தண்ணீர் கொண்டுவரும்படி கேட்டாள். ஆற்றங்கரையில் ஒரு சிரட்டையில் நிறைந்திருந்த தண்ணீரை அவன் பகவதியிடம் கொண்டு வந்து தந்தான். அதில் ஒரு கிளி சில அரிசி மணிகளைப் போட்டிருந்ததால், அது புளித்துப் போதை தரும் பானமாக மாறியிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அதைக் குடித்த பகவதி, அதனை உணர்ந்தவளாகச் சினங்கொண்டு, அதனைக் கொண்டு வந்து தந்தவனை, மனிதர்களுக்குச் சாராயம் வடித்து விற்கும் தாழ்ந்த சாதியானாக ஆகும்படி சாபமிட்டாள்.
மற்றொரு கதை வழக்குப்படி, பாஸ்கர் அல்லது பாஸ்கர முனி என்பவர் கண்ணனோடு உடன்பிறந்தவரான பலராமனால், அவருக்கு மிக்க போதை தரும் பானங்களின் மீதுள்ள விருப்பத்தைத் தணித்துக் கொள்ளப் படைக்கப்பட்டவன் எனக் கூறுகின்றது. இதே கதை வழக்கின் மற்றொரு வடிவம், நிறைந்திருந்த நாட்டுச் சாராயப் பானையோடு ஆற்றில் மிதந்து வந்த நிரஞ்சன் என்ற சிறுவனைப் பாஸ்கரர் காப்பாற்றியபின், அவனை வளர்த்துச் சாராயம் வடிக்கும் தொழிலில் ஈடுபடும்படி செய்தார் எனக் கூறுகிறது.
- விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சொண்டிகள் பற்றிய பின்வரும் குறிப்புக்கு, சி.ஹயவதன ராவ் அவர்களுக்குக் கடப்பாடுடையேன்.
இப்பொழுது வழக்கில் உள்ள வழக்கு வரலாற்றுக் கதைப்படி முன்னாளில் மாய வித்தைகள் புரிவதில் புகழ் பெற்றிருந்த ஒரு பிராமணன் இருந்தான். அவனை ஆதரித்து வந்த அரசன் அவனால் ஒரு குட்டையில் உள்ள தண்ணிரை நெருப்பு பற்றி எரியச் செய்ய முடியுமா எனக் கேட்டான். அதற்கு அவன் தன்னால் அதனைச் செய்ய முடியும் எனக் கூறினான். எனினும் அதனை எவ்வாறு நிகழ்த்துவது என்பதனை அறியாதவனான அவன் கவலையுற்றவனாக இருந்தான். எதிர்பாராத வகையில் அவன் சாராயம்வடிக்கும் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. அவன் அந்தப் பிராமணனை அவனுடைய கவலைக்குக் காரணம் என்ன என்று கேட்டான். அவனுக்கு நேர்ந்துள்ள தொல்லையினைக் கேள்விப்பட்ட சாராயம் வடிப்பவன், அந்தப் பிராமணன் அவனுடைய மகளைத் தனக்கு மணம் செய்து தர முன் வருவதாயிருந்தால் அவனுக்கு உதவுவதாகக் கூறினான். இந்த உடன்பாட்டுக்கு அந்த பிராமணன் உடன்பட்டான். சாராயம் வடிப்பவன் அவனிடம் ஒரு குறிப்பிட்ட அளவு சாராயத்தைத் தந்து அதனை அந்தக் குளத்தில் கொட்டியபின் அரசன் முன்னிலையில் நெருப்பிடுமாறு கூறினான். பிராமணன் தான் முன்பு உடன்பட்ட படி அவனுக்குத் தன் மகளை மணம் செய்து தர வேண்டியதாயிற்று. அவனுக்கு அந்தப் பிராமணனுடைய மகள் வழியாகப் பிறந்தவர்களின் சந்ததியினரே சொண்டிகள். இந்தச் சாதி பல புறமணக் கட்டுப்பாடு உடைய குலங்களைப் பெற்றுள்ளது. பொடொ ஒடிய, மடிய, கூகுல, சன்னொகுல என்பன அவற்றுள் சிலவற்றுக்கான பெயர்களாம். இவற்றுள் சன்னொகுல முதல் இரண்டு குலத்தவர்களின் முறையற்ற உறவின் வழிப் பிறந்தவர்களின் சந்ததியினர். பிரமன் இந்த உலகத்தைப் படைத்தபோது தன் புருவங்களுக்கு இடையே பட்ட ஒரு துளி சேற்றினை வழித்தெடுத்து அதனை ஒரு உருவாக்கி உயிரூட்டினான் எனவும் அதுவே 'சுக முனி' எனவும், அவரிடம் அதுவரை பறவைகள் தின்று வந்த இலுப்பைப் பூவிலிருந்து, சாராயம் வடிக்கும்படி பணித்தான் எனவும் ஒரு வழக்கு வரலாறு வழங்கி வருகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Castes and Tribes of Southern India, என்ற கூகுள் இலவச நூற்பக்கம் - Volume I of VII
- ↑ 1869-இல் வெளியான, விசாகப்பட்டின மாவட்டக் கையேட்டின் 264ஆம் பக்கத்தில் இதனைத் தயாரிக்கும் முறை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.
- ↑ இன்டுபீடியா என்ற இணையத்தின் Castes and Tribes of Southern India - 1909 கட்டுரைப் பக்கம்
உயவுத் துணைகள்
[தொகு]- "இந்தியர் ஒருவர் எழுதிய தென்னிந்தியர் வாழ்க்கை முறை பற்றிய சொற்சித்திரங்கள், 1880. (A Native-Pen and ink Sketches of Native Life in Southern India, 1880)
- யூலும், பர்னலும், ஹாப்சன்-ஜாப்சன். (Yule and Burnel, Hobson-Jobson)[1]
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி-2,6
வெளியிணைப்புகள்
[தொகு]- கட்டற்ற உரிமையிலுள்ள தமிழ்பெருங்களஞ்சியத் திட்டம் பரணிடப்பட்டது 2016-11-21 at the வந்தவழி இயந்திரம்