ஆண்டின் மனிதர் (டைம் இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டின் மனிதர் (Person of the Year) என்னும் விருது, புகழ்பெற்ற "டைம் வார இதழ்" (டைம் (இதழ்)) என்னும் வெளியீட்டின் நிர்வாகத்தால் ஒவ்வோர் ஆண்டும் உலகில் தம் செயல்பாட்டால் நல்லதுக்கோ தீயதுக்கோ பேரளவில் அறியப்பட்ட மனிதர்கள், குழுக்கள், கருத்துகள், கருவிகள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பட்டத்தையும் அதையொட்டி வெளியிடப்படும் சிறப்பிதழையும் குறிக்கிறது.[1]

இந்த விருதின் வரலாறு[தொகு]

ஆண்டின் சிறந்த மனிதர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மரபை "டைம் வார இதழ்" 1927ஆம் ஆண்டு தொடங்கியது. செய்தி வரவு மந்தமாக இருக்கும் ஒரு வாரத்தில் ஒரு சிறப்பிதழை வெளியிடும் வாய்ப்பாகவும் அது அமைந்தது. மேலும், அந்த ஆண்டில் முதன்முறையாகத் தன்னந்தனியாக அமெரிக்காவிலிருந்து அட்லாண்டிக் கடலை விமானத்தில் கடந்து சென்று சாதனை படைத்த சார்லஸ் லிண்ட்பெர்கு (Charles Lindbergh) என்பரைச் சிறப்பித்து முதல்பக்கத்தில் அவருடைய படத்தை வெளியிடத் தவறிய "டைம் இதழ்" அக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாகவும் அந்த ஆண்டு இறுதியில் அவரை "ஆண்டின் சிறந்த மனிதர்" என்று அறிவித்து கவுரப்படுத்தியது.[2]

அந்த ஆண்டிலிருந்து தொடங்கி, தனி மனிதர்கள், மனிதக் குழுக்கள் ஆகியோரை மட்டுமன்றி, 1982இல் "ஆண்டின் பொறி" என்று கணினியையும், புவி மாசுபடுவதை உணர்ந்து புவியைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 1988இல் "ஆண்டின் கோள்" என்று புவியையும் டைம் இதழ் கவுரவித்து, சிறப்பிதழ் வெளியிட்டது.

இவ்வாறு டைம் வார இதழ் வெளியிடுகின்ற ஆண்டு இறுதிச் சிறப்பிதழ்களை, அந்த இதழ் தேர்ந்தெடுத்த மனிதருக்கு அளிக்கப்படுகின்ற கவுரவம் என்றோ விருது என்றோ கொள்ள வேண்டாம் என்று டைம் இதழ் கூறினாலும், பொதுமக்கள் பார்வையில் அத்தகைய சிறப்பிதழ்கள் விருது அல்லது பரிசு போலவே கருதப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், டைம் இதழ் தேர்ந்தெடுத்த மனிதர்களில் மிகப்பெரும்பான்மையோர் உலகளவில் சிறப்பான பணியாற்றியோராய் விளங்கியதே.[3]

இருப்பினும், உலக மக்களுக்கு நன்மை கொணர்ந்தனர் என்ற அடிப்படையில் அல்லாமல், தம் செயல்பாட்டினால் உலக மக்களைப் பெருமளவில் பாதித்த நபர்கள் என்ற முறையில் 1938இல் அடோல்பு இட்லர், 1939 மற்றும் 1942 ஆண்டுகளில் ஜோசப்பு ஸ்டாலின், 1957இல் நிக்கிட்டா குருசோவ், 1979இல் அயத்தொல்லா கொமெய்னி போன்றோருக்கும் சிறப்பிதழ்கள் அர்ப்பணிக்கப்பட்டதை டைம் இதழ் சுட்டிக்காட்டுகிறது.[4]

பெண்களும் "ஆண்டின் மனிதர்" பட்டமும்[தொகு]

முதலில் "ஆண்டின் மனிதன்" (Man of the Year) என்று ஆண்பாலில் இருந்த பட்டம் 1999இல் "ஆண்டின் மனிதர்" (Person of the Year) என்று இருபாலாருக்கும் பொருந்தும் விதத்தில் மாற்றப்பட்டது.[5]

"ஆண்டின் மனிதர்கள்" என்ற புதிய பெயர் பிறகு டைம் இதழால் "பெண்கள்" என்ற முறையில் சிறப்பிக்கப்பட்ட பெண்கள் இதுவரை நால்வர் மட்டுமே ஆவர். இவர்களுள் சிந்தியா கூப்பர், கோலீன் ரவுலி, ஷெரன் வாட்கின்ஸ் ஆகிய பெண்கள் 2002இல் "வேர்ல்ட்காம்" (WorldCom) என்னும் வலுமிக்க தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்தபோது அந்நிறுவனத்தில் நடந்த கொண்டிருந்த பெரிய ஊழலை உலகறியச் செய்தனர். மற்றொரு பெண் மெலிண்டா கேட்ஸ் என்பவர். அவரோடு 2005ஆம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டோர் மெலிண்டாவின் கணவரும் மைக்ரோசாஃப்டு நிறுவனத்தில் தலைமையாளருமான பில் கேட்ஸ், மற்றும் பாடகர் போனோ (Bono) ஆவர்.

அதற்கு முன்னர் "ஆண்டின் பெண்" என்ற சிறப்புப் பெயரின்கீழ் டைம் இதழால் கவுரவிக்கப்பட்ட பெண்கள் கீழ்வருவோர்: வின்ட்சர் பண்ணையின் ஆளுநர் வால்லிசு சிம்சன் (Wallis Simpson) (1936), சங் கை செக் என்ற சீனத் தலைவரின் மனைவி சூங் மைலிங் (Soong May-ling) (1937), பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத்து (1952) மற்றும் பிலிப்பீன்சு நாட்டு அதிபர் கொரசோன் அக்கினோ (1986) ஆகியோர்.

"அமெரிக்கப் பெண்கள்" என்ற பெயரில் அமெரிக்க நாட்டின் அனைத்துப் பெண்களும் 1975இல் டைம் இதழால் கவுரவிக்கப்பட்டனர். சில ஆண்டுகளில் குழுவாக கவுரவிக்கப்பட்டோரில் பெண்களும் அடங்குவர். எடுத்துக்காட்டாக, "ஐக்கிய அமெரிக்க அறிவியலார்" (1960), "அமெரிக்க நடுத்தர மக்கள்" (1969), "அமெரிக்க போர்ப்படையினர்", "நீ" (2006), "எதிர்ப்பாளர்" (2011). அந்த 2011ஆம் ஆண்டு இதழின் முகப்புப் பக்கத்தில் ஒரு பெண்ணின் படம் போடப்பட்டது.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் டைம் இதழால் கவுரவிக்கப்படல்[தொகு]

இந்த விருது வழங்கல் தொடங்கிய 1927ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் உயர் தலைவராகப் பணிபுரிந்த அந்நாட்டின் அனைத்துக் குடியரசுத் தலைவர்களுக்கும் இந்த விருது ஒரு முறையாவது வழங்கப்பட்டுவந்துள்ளது. இதற்கு விதிவிலக்குகள்: கால்வின் கூலிட்சு, எர்பெர்ட்டு கூவர் மற்றும் ஜெரார்டு ஃபோர்டு ஆகிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்.

டைம் இதழ் கவுரவித்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களுள் பெரும்பாலோர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிலோ அவர்கள் பதவியிலிருந்தபோதோ இக்கவுரவத்தைப் பெற்றனர். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் டைம் இதழால் கவுரவிக்கப்பட்ட ஒரே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டுவைட்டு டி. ஐசனாவர் ஆவார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன், 1944இல் நேசப்படைகளின் உயர்தலைமையாளராகப் பணிபுரிந்த காலத்தில் அவர் டைம் விருதினைப் பெற்றார். அவர் குடியரசுத் தலைவர் ஆன பின்பு 1959இல் அச்சிறப்பினை மீண்டும் ஒருமுறை பெற்றார். பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு மட்டுமே மூன்று முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1932, 1934, 1941 ஆண்டுகளில் டைம் விருதினைப் பெற்றார்.

ஆல்பர்ட்டு ஐன்ஸ்டைன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகக் கவுரவிக்கப்படுதல்[தொகு]

1999, திசம்பர் 31ஆம் நாள் வெளியான டைம் இதழ் இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் வாழ்ந்த மக்களிடையே மிக்க சிறப்புற்றவர் யார் என்று தேடியபோது, ஆல்பர்ட்டு ஐன்ஸ்ட்டைன் பெயரைச் சுட்டி அவரைக் கவுரவப்படுத்தியது. அந்த விருதுக்காக தயாரான பெயர்ப்பட்டியலில் பிராங்க்ளின் ரூசவெல்டு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் பெயர்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.[6]

டைம் இதழால் கவுரவிக்கப்பட்ட "ஆண்டின் மனிதர்கள்"[தொகு]

Year Image Choice Lifetime Notes
1927 சார்லஸ் லின்ட்பெர்கு  United States 1902–1974 1927ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து பாரிசு வரை வழியில் நிறுத்தமின்றி தொடர்பயணமாக விமானத்தை ஓட்டியவர் சார்லஸ் லின்ட்பெர்கு.
1928

வால்ட்டர் கிரைசுலர்  United States 1875–1940 கிரைசுலர் கூட்டு நிறுவனத்தை டாட்ஜ் நிறுவனத்தோடு 1928இல் இணைத்த இவர், நியூயார்க் நகரில் அமைந்த புகழ்பெற்ற கிரைசுலர் கட்டடத்தைக் கட்டி எழுப்பினார்.
1929 ஆவன் டி. யங்  United States 1874–1962 முதலாம் உலகப் போருக்குப் பின், போரில் தோற்ற செருமனி நாட்டுக்கு இழப்பீடு கொடுப்பதை நெறிப்படுத்த வகுக்கப்பட்ட திட்டம் "யங் திட்டம்" என்று அழைக்கப்பட்டது. அத்திட்டத்தை உருவாக்கிய குழுவுக்கு யங் தலைமை தாங்கினார்.
1930 மகாத்மா காந்தி  இந்தியா 1869–1948 பிரித்தானியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று கோரிய இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தியவர் மகாத்மா காந்தி. 1930இல் காந்தி பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். பிரித்தானிய ஆட்சியாளர் உப்பின் மீது வரி விதித்ததை எதிர்த்து நடத்தப்பட்ட அந்த சத்தியாகிரகத்தின் போது காந்தி பெருந்திரளான மக்களோடு 23 நாள்கள், 240 மைல் கால்நடையாகச் சென்று கடல் நீரிலிருந்து உப்பு உண்டாக்கி பிரித்தானிய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்.
1931 பியேர் லவால்  France 1883–1945 1931இல் லவால் பிரான்சு நாட்டின் முதல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1932 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு  United States 1882–1945 1932இல் நிகழ்ந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் தேர்தலில் பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு எதிர் வேட்பாளரான ஹெர்பர்ட் ஹூவர் என்பவரை மிகப் பெரும்பான்மையான வாக்குகளோடு முறியடித்து வெற்றி பெற்றார்.
1933 ஹியூ சாமுவேல் ஜாண்சன்  United States 1882–1942 தொழில்துறை, தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அரசுத் துறைகளை ஈடுபடுத்தி, வாணிக நடவடிக்கைகளில் நற்பழக்கங்களைக் கொணர்ந்து, நேர்மையான விலை குறிக்கும் நோக்கத்தோடு அதிபர் பிராங்ளின் டி. ரூசவெல்ட் 1933இல் "தேசிய புத்தமைப்பு நிர்வாகம்" என்றொரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் இயக்குநராக ஜாண்சன் நியமிக்கப்பட்டார்.
1934 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு  United States 1882–1945 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு 1933இலிருந்து 1945 வரை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பணியாற்றினார்.
1935 முதலாம் ஹைலி செலாசி வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ethiopian Empire 1892–1975 செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக ஆட்சிசெலுத்திய போது, 1935இல் இத்தாலிய இராணுவம் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது. இது இரண்டாம் இத்தாலிய-அபிசீனியப் போரின் தொடக்கம் ஆயிற்று.
1936 வின்ட்சர் பண்ணையின் ஆளுநரான வாலிசு சிம்சன்  United States 1896–1986 1936இல் எட்டாம் எட்வர்டு இங்கிலாந்தின் அரசராக இருந்தபோது அரச குடும்பத்துக்கு வெளியே வாலிசு சிம்சன் என்பவரைத் திருமணம் செய்ய விரும்பினார். அவ்வாறு திருமணம் செய்தால் அரச பதவியைத் துறக்க வேண்டியதாகும் என்று நியமம் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அரசர் தம் அரியணையைத் துறந்து வாலிசு சிம்சனை மணந்துகொண்டார்.
1937 சங் கை செக் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of China (1912-1949) 1887–1975 1937இல் இரண்டாம் சீன-யப்பானியப் போர் வெடித்தபோது, சங் கை செக் சீனக் குடியரசின் பிரதமராக இருந்தார்.
சூங் மைலிங் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Republic of China (1912-1949) 1898–2003 சூங் மைலிங் என்பவர் சங் கை செக் சீனக் குடியரசின் பிரதமராக இருந்த காலத்தில் 1927இலிருந்து சங் கை செக்கின் இறப்பு ஆண்டாகிய 1975 வரை அவருடைய மனைவியாக இருந்தார்.
1938 அடோல்பு இட்லர்  Germany 1889–1945 இட்லர் செருமனியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதும் ஆத்திரியா நாட்டை செருமனியோடு இணைத்தார். அதன் பின் செக்கொசுலாவாக்கியா பகுதிகளில் செருமன் பேசப்பட்ட பகுதிகளையும் செருமனியோடு இணைத்தார். இது 1938இல் நிகழ்ந்தது.
1939 ஜோசப் ஸ்டாலின்  Soviet Union 1878–1953 1939இல் ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் ஆனார். அப்பதவியில் அவர் நடைமுறையில் சோவியத் யூனியனின் தலைவராகச் செயல்பட்டார். செருமனியும் சோவியத் யூனியனும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ஸ்டாலின் நாசி செருமனியோடு ஒப்பந்தம் செய்தார். ஆயினும் ஸ்டாலின் கிழக்கு போலந்தை ஆக்கிரமித்தார்.
1940 வின்ஸ்டன் சர்ச்சில்  United Kingdom 1874–1965 டைனமோ நடவடிக்கை என்று அழைக்கப்படுகின்ற "டன்கிர்க் காலிசெய்தல்" (Dunkirk evacuation) மற்றும் "பிரிட்டன் சண்டை" காலத்தில், 1940இல், வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்தார்.
1941 பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு  United States 1882–1945 1941இல் பேர்ள் துறைமுகம் யப்பானியர்களால் தாக்கப்பட்டபோது பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு அமெரிக்க அதிபராக இருந்தார். இத்தாக்குதலுக்குப் பதிலடி அளிக்க அணியமாக இல்லாத நிலையில் உடனடியாக அமெரிக்கா யப்பான் மீது போர்தொடுக்கப் போவதாக அறிவித்து இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது.
1942 ஜோசப் ஸ்டாலின்  Soviet Union 1878–1953 சுடாலின்கிராட் சண்டை (1942-1943) நிகழ்ந்த காலத்தில் அதை ஜோசப் ஸ்டாலின் மேற்பார்வையிட்டார்.
1943 ஜோர்ஜ் மார்ஷல்  United States 1880–1959 இரண்டாம் உலகப் போரின் போது, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் போர் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் ஜோர்ஜ் மார்ஷல் பெரும் பங்காற்றினார். 1943இல் அவர் அமெரிக்க படைகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
1944 டுவைட்டு டி. ஐசனாவர்  United States 1890–1969 1944இல் இரண்டாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவில் கூட்டு நாடுகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் ஐசனாவர் செயல்பட்டார்.
1945 ஹாரி எஸ். ட்ரூமன்  United States 1884–1972 1945இல் பிராங்ளின் டி. ரூசவெல்ட்டு இறந்ததைத் தொடர்ந்து, ஹாரி எஸ். ட்ரூமன் அமெரிக்க அதிபர் ஆனார். இவரே இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் யப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர்கள் மீது அணுகுண்டு வீச ஆணையிட்டவர்.
1946 ஜேம்ஸ் எஸ். பைர்ன்ஸ்  United States 1879–1972 1946இல் பைர்ன்ஸ் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த வேளையில் "1946ஆம் ஆண்டு ஈரான் நெருக்கடி" (Iran crisis of 1946) ஏற்பட்டது. சோவியத் யூனியன் ஈரானை விட்டு வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து பைர்ன்ஸ் சோவியத் அதிபர் ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார். "செருமனி பற்றிய கொள்கை" என்ற தலைப்பில் அவர் வழங்கிய உரை அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு வித்திட்டது. அதன்படி, செருமனியின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை துளிர்த்தது.
1947 ஜோர்ஜ் மார்ஷல்  United States 1880–1959 ஜோர்ஜ் மார்ஷல் 1947இல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆனார். அப்போது, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் தாக்கத்தைத் தடுக்கும் நோக்குடனும் போரில் சேதமடைந்த ஐரோப்பாவை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான உதவிகளை அளிக்கும் நோக்குடனும் ஒரு பெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. அது "மார்ஷல் திட்டம்" (Marshall Plan) என்று அழைக்கப்படுகிறது.
1948 ஹாரி எஸ். ட்ரூமன்  United States 1884–1972 ஹாரி எஸ். ட்ரூமன் அமெரிக்காவின் 1948ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அமெரிக்க வரலாற்றிலேயே பரபரப்பான வெற்றியாக இது கருதப்படுகிறது.
1949 வின்ஸ்டன் சர்ச்சில்  United Kingdom 1874–1965 "அரை நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்" என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து நாட்டில் 1949இல் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
1950 அமெரிக்க படையினர்  United States கொரியப் போரில் (1950-1953) ஈடுபட்ட அமெரிக்க படையினரைக் கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்கப்பட்டது.
1951 மொகமத் மொசாடே  Iran 1882–1967 மொகமத் மொசாடே 1951இல் ஈரான் நாட்டின் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அபதான் நகரிலிருந்து வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை இவர் வெளியேற்றினார்.
1952 இரண்டாம் எலிசபெத்து பொதுநலவாய நாடுகள் (commonwealth realms) 1926– இங்கிலாந்தின் அரசர் 6ஆம் ஜோர்ஜ் இறந்ததைத் தொடர்ந்து, அவருடைய மகள் எலிசபெத்து 1952இல் அரியணை ஏறினார். அவர் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆத்திரேலியா, நியூசீலந்து, சிலோன், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசியானார்.
1953 கோன்ராடு ஆடெனாவர்  West Germany 1876–1967 மேற்கு செருமனியின் முதல்வராக கோன்ராடு ஆடனாவர் 1953இல் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954 ஜான் ஃபாஸ்ட்டர் டல்லஸ்  United States 1888–1959 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர் என்ற அடிப்படையில் டல்லஸ் 1954இல் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த நிறுவனம் என்னும் அமைப்பு உருவாகக் காரணமாயிருந்தார்.
1955 ஹார்லோ கர்ட்டிசு  United States 1893–1962 அமெரிக்காவின் புகழ்பெற்ற இயந்திர ஊர்திகள் உற்பத்தி நிறுவனமான "ஜெனரல் மோட்டார்ஸ்" (GM) அமைப்பின் தலைவராக 1953-1958 காலத்தில் ஹார்லோ கர்ட்டிசு பணிபுரிந்தார். 1955இல், ஜெனரல் மோட்டார்ஸ் ஐந்து மில்லியன் ஊர்திகளை விற்று, ஓர் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர் சம்பாதித்த கூட்டு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.
1956 அங்கேரி சுதந்திரப் படையினர்  Hungary அங்கேரி நாட்டில் மக்களுக்கு அதிக சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கேட்டு புரட்சி செய்தவர்களை கவுரவிக்கும் விதமாக விருது வழங்கப்பட்டது. அப்புரட்சி அரசு வன்முறையோடு ஒடுக்கப்பட்டாலும் பிற்காலத்தில் சோவியத் யூனியன் வீழ்ச்சியுற வழிகோலிற்று.
1957 நிக்கிட்டா குருசேவ்  Soviet Union 1894–1971 1957இல் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த நிக்கிட்டா குருசேவைப் பதவியிலிருந்து இறக்க பொதுக்குழு முடிவுசெய்ததைத் தொடர்ந்து அவர் சோவியத் யூனியனில் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். மேலும், விண்வெளியில் ஸ்புட்னிக் 1 என்னும் விண்கலத்தைச் செலுத்தி, சோவியத் யூனியனின் விண்வெளி ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
1958 சார்லசு டிகால்  France 1890–1970 டிகால் 1958ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரான்சு நாட்டின் முதல் அமைச்சராக நியமனம் பெற்றார். பிரான்சின் நான்காம் குடியரசு 1958 மே மாதத்தில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து தேசியத் தேர்தல் நடைபெற்றது. ஐந்தாம் குடியரசும் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டிகால் பிரான்சின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1959 டுவைட்டு டி. ஐசனாவர்  United States 1890–1969 ஐசனாவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவராக 1953-1960 காலகட்டத்தில் பணிபுரிந்தார்.
1960 அமெரிக்க அறிவியலார்  United States தலைசிறந்த அமெரிக்க அறிவியலார்கள் அறிவு வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்புகளுக்காக கவுரவிக்கப்பட்டார்கள். அவர்கள்: ஜோர்ஜ் வெல்ஸ் பீடில்; சார்லஸ் ஸ்டார்க் ட்ரேப்பர்; ஜான் பிராங்ளின் எண்டெர்ஸ்; டோனால்ட் கிளேசர்; ஜாஷுவா லேடெர்பெர்க்; வில்லர்ட் லிபி; லைனசு பவுலிங்; எட்வர்டு மில்சு ப்ர்செல்; இசிடோர் ஐசக் ராபி; எமீலியோ ஜி. சேக்ரே; வில்லியம் ஷாக்லீ; எட்வர்டு தெல்லர்; சார்ல்ஸ் ஹார்ட் டவுன்சு; ஜேம்சு வான் ஆலன்; ராபர்ட் பர்ன்சு உட்வார்ட்.
1961 ஜான் எஃப். கென்னடி  United States 1917–1963 ஜான் எஃப். கென்னடி அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக 1961இல் பொறுப்பேற்றார். கியூபா நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்கள் கியூபாவை ஆக்கிரமிக்க அவர் செய்த ஏற்பாடு தோல்வியுற்றது.
1962 திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்  Vatican City/ Italy 1881–1963 திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 1958-1963 காலகட்டத்தில் பணியாற்றினார். 1962இல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே கியூபா ஏவுகணைகள் தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டபோது திருத்தந்தை அவ்விரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வழிசெய்தார்.
1963 மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர்  United States 1929–1968 குடிமை உரிமை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவருமான மார்ட்டின் லுத்தர் கிங் ஜூனியர் 1963இல் "கனவொன்று கண்டேன்" என்ற புகழ்மிக்க உரையை நிகழ்த்தினார்.
1964 லிண்டன் பி. ஜாண்சன்  United States 1908–1973 லிண்டன் பி. ஜாண்சன் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராக ஜாண் எஃப். கென்னடி பணியாற்றியபோது துணைத்தலைவராக இருந்தார். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜாண்சன் குடியரசுத் தலைவரானார். 1964இல் அவர் தேர்தலில் நின்று குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குடிமை உரிமைச் சட்டத்தில் கையெழுத்திட்டு அமெரிக்காவில் ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கு சம உரிமை கிடைக்கச் செய்தார். ஏழ்மை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். அவர் காலத்தில் வியட்நாம் போரில் அமெரிக்காவின் ஈடுபாடு மிக அதிகரித்தது.
1965 வில்லியம் வெஸ்ட்மோர்லாந்து  United States 1914–2005 வியட்நாம் போர் நிகழ்ந்த போது ஜெனரல் வெஸ்ட்மோர்லாந்து தென் வியட்நாமில் அமெரிக்க படையினரின் தலைமைத் தளபதியாக இருந்தார்.
1966 வாரிசு 25 வயதும் அதற்குக் குறைந்த பருவத்திலும் இருந்த புதிய அமெரிக்க தலைமுறையினரைச் சிறப்பித்து விருது வழங்கப்பட்டது.
1967 லிண்டன் பி. ஜாண்சன்  United States 1908–1973 ஜாண்சன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடியரசுத் தலைவராக 1963-1969 காலகட்டத்தில் செயல்பட்டார்.
1968 அப்போல்லோ 8 விண்கலத்தின் விண்வெளிப் பயணிகள்  United States 1968இல் அமெரிக்கா அப்போல்லோ 8 என்னும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதில் வில்லியம் ஆன்டெர்சு, ஃப்ராங்க் போர்மன், ஜிம் லவ்வெல் என்னும் மூன்று விண்வெளி வீரர்கள் சென்றனர். புவிச் சுழற்சி மண்டலத்தைத் தாண்டிச் சென்று, சந்திரனைச் சுற்றிச் சுழன்ற முதல் மனிதர்கள் இவர்களே. 1969இல் சந்திரனில் மனிதர் காலடி வைப்பதற்கு இவர்களது பயணம் வழிவகுத்தது.
1969 அமெரிக்க நடுத்தர மக்கள்  United States அமெரிக்காவில் வாழ்ந்த நடுத்தர மக்கள் கவுரவிக்கப்பட்டார்கள். இவர்களை "குரலற்ற பெரும்பான்மையர்" (Silent Minority) என்றும் கூறுவதுண்டு.
1970 வில்லி பிராண்ட்டு  West Germany 1913–1992 செருமனியின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லி பிராண்டு சோவியத் யூனியன் மற்றும் கிழக்குத் தொகுதி நாடுகளோடு புதிய உறவுகளை உருவாக்கி, மேலை நாடுகளும் சோவியத் யூனியன் மற்றும் அதன் தாக்கத்துக்கு உட்பட்ட கீழை நாடுகளும் இசைவோடு செயல்பட பெருமுயற்சி மேற்கொண்டார்.
1971 ரிச்சர்டு நிக்சன்  United States 1913–1994 ரிச்சர்டு நிக்சன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைவராக 1969-1973 காலகட்டத்தில் பணியாற்றினார்.
1972 ரிச்சர்டு நிக்சன்  United States 1913–1994 ஐக்கிய அமெரிக்காவின் தலைவர் என்ற முறையில் ரிச்சர்டு நிக்சன் 1972இல் சீனாவுக்குச் சென்றார். அமெரிக்க அதிபர் சீனாவுக்கு அரசியல் பயணமாகச் சென்றது இதுவே முதல் தடவை. மேலும், சோவியத் யூனியனோடு பேச்சுவார்த்தை தொடங்கி, இரு நாடுகளும் தம் கைவசமுள்ள ஏவுகணைகளைக் குறைக்க வழிவகுக்கும் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டார் (SALT I). 1972இல் நிக்சன் மீண்டும் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார்.
ஹென்றி கிசிங்கர்  United States 1923– அமெரிக்க அதிபராக ரிச்சர்டு நிக்சன் இருந்த காலத்தில் ஹென்றி கிசிங்கர் அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். நிக்சன் 1972இல் சீனா சென்றபோது கிசிங்கரும் அவரோடு சென்றார்.
1973 ஜாண் சீரிக்கா  United States 1904–1992 1973இல் ஜாண் சீரிக்கா ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொலம்பியா மாவட்டத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியை சார்ந்த ரிச்சர்ட் நிக்சன் பதவியிலிருந்தார். குடியரசுக் கட்சியின் தூண்டுதல் பேரில் அதற்கு எதிரியான மக்களாட்சிக் கட்சியின் மைய அலுவலகத்தில் கன்னமிட்டுச் சென்று அங்கிருந்து இரகசிய ஆவணங்களைச் சிலர் திருடிச் சென்றனர். அந்த மைய அலுவலகம் இருந்த இடம் "வாட்டர்கேட்" என்ற பெயர் கொண்டது. மேலும் மக்களாட்சிக் கட்சியின் மைய அலுவலகத் தொலைபேசிகளில் ஒற்றுக் கேட்கும் கருவிகளையும் அவர்கள் பொருத்தினார்கள். இது பெரியதொரு அரசியல் சிக்கலாக வெடித்தது. இதுவே "வாட்டர்கேட் பெரும்பழி" (Watergate Scandal) என்னும் பெயரால் அறியப்படுகிறது. ஜாண் சீரிக்கா இந்த வழக்கை விசாரித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மக்களாட்சிக் கட்சி மைய அலுவலகம் தொடர்பாக சேமித்து வைத்த உரையாடல் நாடாத் தொகுப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டார். இது 1973இல் நடந்தது.
1974 ஃபைசால் அரசர்  Saudi Arabia 1906–1975 1973இல் நடந்த அரபு-இசுரயேலிப் போரின்போது (யோம் கிப்பூர்ப் போர்) மேற்கு நாடுகள் இசுரயேலுக்கு ஆதரவு தெரிவித்ததை எதிர்த்து, சவுதி அரேபியாவின் அரசரான ஃபைசால், உலகச் சந்தையில் பாறை எண்ணெய் விற்கப்போவதில்லை என்று முடிவு செய்தார். இதனால் பாறை எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது.
1975 அமெரிக்கப் பெண்  United States "அமெரிக்கப் பெண்" என்ற பெயரில் கீழ்வரும் அமெரிக்கப் பெண்டிர் கவுரவிக்கப்பட்டனர்: சூசன் ப்ரவுன்மில்லர், காத்லீன் பையர்லி, ஆலிசன் சீக், ஜில் கெர் கான்வே, பெட்டி ஃபோர்டு, எல்லா டி. கிராசோ, கார்லா ஆண்டர்சன் ஹில்சு, பார்பரா ஜோர்டன், பில்லி ஜீன் கிங், காரல் சட்டன், சூசி ஷார்ப், மற்றும் ஆடி வையட் என்போர்.
1976 ஜிம்மி கார்ட்டர்  United States 1924– 1976இல் ஜிம்மி கார்ட்டர் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977 அன்வார் சதாத்  Egypt 1918–1981 இசுரயேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவைச் சரிப்படுத்தும் நோக்கத்துடன் எகிப்திய அதிபர் சதாத் 1977இல் இசுரயேலுக்குச் சென்றார். இசுரயேலுக்குச் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
1978 டெங் சியாவ்பிங்  China 1904–1997 ஹுவா குவோஃபெங் என்பவரை முறியடித்து, சீனாவின் நடைமுறைத் தலைவராக டெங் சியாவ்பிங் 1978இல் பொறுப்பெடுத்தார்.
1979 அயத்தோல்லா கொமேய்னி  Iran 1902–1989 அயத்தோல்லா கொமேய்னி 1979இல் ஈரானியப் புரட்சியை வழிநடத்தி, அந்நாட்டின் "உயர் தலைவராக" பொறுப்பெடுத்தார்.
1980 ரானல்டு ரேகன்  United States 1911–2004 ரானல்டு ரேகன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராக 1980இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1981 லேக் வலேன்சா  Poland 1943– போலந்து நாட்டு உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நிகழ்த்தியபோது "சாலிடாரிட்டி" (Solidarity) என்ற தொழில் சங்கத்தின் தலைவராக லேக் வலேன்சா செயல்பட்டார். போலந்தின் பொதுவுடைமை அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையில் வலேன்சாவும் கையெழுத்திட்டார். பின்னர் 1981இல் அவர் கைது செய்யப்பட்டார்; அந்த ஆண்டு டிசம்பரில் போலந்தில் இராணுவ ஆட்சி திணிக்கப்பட்டது. இவருக்கு 1983இல் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
1982 கணினி 1982ஆம் ஆண்டில் நவீனப் பொறியாக பிரபலமடைந்த கருவியாகிய "கணினி" டைம் இதழால் "ஆண்டில் சிறந்த எந்திரம்" என்று கவுரவிக்கப்பட்டது.
1983 ரானல்டு ரேகன்  United States 1911–2004 கரிபிய நாடான கிரெனாடாவைத் தாக்குமாறு 1983இல் அமெரிக்க அதிபர் ரானல்டு ரேகன் ஆணை பிறப்பித்தார் (Invasion of Grenada). மேலும், ஏவுகணைத் தாக்குதலிலிருந்து அமெரிக்காவைக் காக்கும் நோக்குடன் அவர் "பாதுகாப்பு முயற்சி" (Strategic Defense Initiative) என்னும் அமைப்பையும் உருவாக்கினார்.
யூரி ஆந்த்ரோப்போவ்  Soviet Union 1914–1984 சோவியத் யூனியனின் அதிபராக இருந்த யூரி ஆந்த்ரோப்போவ் அமெரிக்காவின் "பாதுகாப்பு முயற்சி" என்ற அமைப்பைக் கடுமையாக விமரிசித்தார். அவர் 1983 ஆகத்து மாதத்தில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 1984இல் இறந்தார்.
1984 பீட்டர் யூபெர்ராத்  United States 1937– அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் 1984இல் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன. அந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியவர் பீட்டர் யூபெர்ராத் ஆவார்.
1985 டெங் சியாவ்பிங்  China 1904–1997 மார்க்சிய பொருளாதாரத் தத்துவத்திற்குச் சவால் விடுக்கும் வகையில் சீனாவின் உயர் தலைவராகச் செயல்பட்ட டெங் சியாவ்பிங் சீனாவில் பொருளாதாரச் சீரமைப்பைக் கொணர்ந்தார்.
1986 கொரசோன் அக்கினோ  Philippines 1933–2009 கொரசோன் அக்கினோ பிலிப்பீன்சு நாட்டின் குடியரசுத் தலைவராக 1986இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிலிப்பீன்சு நாட்டில் சர்வாதிகார ஆட்சி செலுத்திய மார்க்கோசுக்கு எதிராக எழுந்த மக்கள் புரட்சிக்குத் தலைமை தாங்கிய பெனினோ அக்கினோ என்பவரின் மனைவியான கொரசோன் அக்கினோ தம் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அரசியலில் இறங்கினார். பிலிப்பீன்சு நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் அவர்.
1987 மிக்காயில் கோர்பச்சோவ்  Soviet Union 1931– சோவியத் யூனியனின் தலைவராக மிக்காயில் கோர்பச்சோவ் அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை 1987இல் கொணர்ந்தார்.
1988 இடருக்குள்ளான புவி புவி மாசுபடுதல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மனிதர் வாழும் புவியைக் காத்து, பிற்காலத் தலைமுறையினரும் பயன்பெற வழிவகுக்கவும் 1988இல் புவி சிறப்பிக்கப்பட்டது.
1989 மிக்காயில் கோர்பச்சோவ்  Soviet Union 1931– "பத்தாண்டுகளில் சிறந்த மனிதர்" என்று சிறப்பிக்கப்பட்ட கோர்பச்சோவ் சோவியத் யூனியனின் தலைவராக இருந்த போது அந்நாட்டில் சுதந்திரமாக நடந்த முதல் தேர்தலைக் கண்காணித்தார். பின்னர் சோவியத் கூட்டணிநாடு சிதறுண்டது.
1990 ஜோர்ஜ் எச்.டபுள்யூ. புஷ்  United States 1924– ஜோர்ஜ் எச்.டபுள்யூ. புஷ் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில், முதலாம் வளைகுடாப் போரில் (1900-1991) அமெரிக்காவை ஈடுபடுத்தினார்.
1991 டெட் டேணர்  United States 1938– டேணர் என்பவர் மின்வட செய்தி வலையம் (சிஎன்என்) என்ற பிரபலமான ஊடக நிறுவனத்தை அமைத்தவர். இந்நிறுவனம் முதன்முறையாக நாளுக்கு 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்த அமைப்பு ஆகும்.
1992 பில் கிளிண்டன்  United States 1946– அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சியைச் சார்ந்த பில் கிளிண்டன் 1992இல் நடந்த தேர்தலில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1993 சமாதானம் செய்வோர் பலத்தீன் நாடு பலத்தீன தேசிய ஆணையம்
 South Africa
 Israel
உலக சமாதானத்திற்குத் தனிப்பட்ட விதத்தில் துணைபுரிந்த நாட்டுத் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இவ்வாறு கவுரவிக்கப்பட்டோர்: யாசிர் அரஃபாத், எஃப். டபுள்யூ. டெ கிளர்க், நெல்சன் மண்டேலா, இட்சாக் ரபீன் ஆகியோரர். தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்த டெ கிளர்க் காலத்தில் விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவ்விருவரும் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல் முறையை ஒழித்திட இணைந்து உழைத்தனர். அரஃபாத் பாலத்தீன நாட்டு அமைப்பின் தலைவர் என்ற முறையிலும் ரபீன் இசுரயேலின் அதிபர் என்ற முறையிலும் முதன்முதலாக நேருக்கு நேர் சந்தித்து ஆஸ்லோ சமாதான உடன்படிக்கையில் 1993இல் கையெழுத்திட்டனர்.
1994 திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்  Vatican City/ Poland 1920–2005 இரண்டாம் யோவான் பவுல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 1978-2005 காலகட்டத்தில் பணியாற்றினார். போலந்து நாட்டிலிருந்து வந்த முதல் திருத்தந்தை இவர். திருத்தந்தைப் பணியிடத்தின் வரலாற்றில் 455 ஆண்டுகளில் இத்தாலிக்கு வெளியே இருந்து வந்த திருத்தந்தை இவர். மிக நீண்ட காலம் திருத்தந்தையாகப் பணியாற்றிய திருத்தந்தையருள் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
1995 நியூட் கிங்ரிச்  United States 1943– அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான நியூட் கிங்ரிச் 1994இல் அக்கட்சி அமோக வெற்றி பெறச் செய்தார். இது "குடியரசுக் கட்சிப் புரட்சி" என்று அழைக்கப்படுகிறது. அதன் விளைவாக அவர் மக்கள் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 டேவிட் ஹோ  Taiwan/ United States 1952– டேவிட் ஹோ என்னும் அறிவியலார் எய்ட்சு பற்றி ஆய்ந்தவர்களுள் முன்னணியில் இருந்தவர்.
1997 ஆண்ட்ரூ க்ரோவ்  Hungary/ United States 1936– குறைக்கடத்திகளை உற்பத்தி செய்து கணினி போன்றவற்றில் பயன்படுத்த வழிவகுத்த நிறுவனமாகிய இன்டெல் என்னும் அமைப்பின் முதன்மை இயக்குநராக 1997இல் இருந்தவர் ஆண்ட்ரூ க்ரோவ். இத்தொழில் துறையில் ஒரு முன்னோடியாக க்ரோவ் கருதப்படுகிறார்.
1998 பில் கிளிண்டன்  United States 1946– மோனிக்கா லூவின்ஸ்கி என்ற வெள்ளை மாளிகைப் பயிற்சிக்கால அலுவலரோடு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உறவுகொண்டார் என்ற குற்றச்சாட்டுப் பின்னணியில் அதை மறுத்தார் என்றும், அரசினால் நியமிக்கப்பட்ட நடுவர்குழுவின் முன் அந்த விவகாரம் குறித்துப் பொய்யாணை அளித்தார் என்றும் 1998இல் அரசு விசாரணை நடந்தது. பின்னர், அரசுக்கு எதிரான குற்றத்தை அவர் செய்யவில்லை என்று நாடாளுமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கென் ஸ்டார்  United States 1946– பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் நிர்வாகத்தில் இருந்த பலர்மேல் சாட்டப்பட்ட குற்றங்கள் பற்றி கென் ஸ்டார் விசாரித்தார். 1998இல் ஸ்டார் அறிக்கை வெளியானது. இது பில் கிளிண்டன் விசாரணைக்கு வழிவகுத்தது.
1999 ஜெஃப்ரீ பி. பேசோசு  United States 1964–

பேசோசு என்பவர் இணையத்தில் பிரபல வணிக நிறுவனமான அமேசான்.காம் என்னும் அமைப்பின் நிறுவுநர் ஆவார். இந்நிறுவனம் 1995இல் தொடங்கப்பட்டு உலகெங்கும் சேவைகளை வழங்குகிறது.
2000 ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்  United States 1946– ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக 2000 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001 ரூடி ஜூலியானி  United States 1944– செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நிகழ்ந்தபோது ரூடி ஜூலியானி நியூயார்க் நகரத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார்.
2002 ஊழலை வெளிக்கொணர்ந்தோர்  United States முக்கியமான நிறுவனங்களில் நடந்த ஊழல்களை வெளிக்கொணர்ந்த சிலர் கவுரவிக்கப்பட்டார்கள். இவர்கள்: சிந்தியா கூப்பர், கோலீன் ரவுலி, ஷெரன் வாட்கின்ஸ் என்போர். 2011இல் வாட்கின்ஸ் என்பவர் அமெரிக்கா முழுவதும் மின்சாரம், இயற்கை எரிவாயு போன்றவற்றை வினியோகம் செய்த என்ரான் என்ற பெரும் கூட்டுநிறுவனத்தில் பல கோடிக் கணக்கான டாலர்கள் ஆன தணிக்கை ஊழல் நடைபெற்றதை உலகறியச் செய்தார். அடுத்த ஆண்டில் அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் வாக்குமூலம் அளித்தார். 2002இல் கூப்பர் என்பவர் "வேர்ல்ட்காம்" (WorldCom) என்னும் பிரபல தொலைபேசி இணைப்பு நிறுவனத்தில் 3.8 பில்லியன் டாலர் ஊழல் நடந்ததை வெளிக்கொணர்ந்தார். அப்போது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரும் தொகை குறித்த ஊழலாக இது இருந்தது. 2002இல் அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) ஊழியராக இருந்த ரவுலி என்பவர் அந்நிறுவனம் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை முறைகேடாகக் கையாண்ட ஊழலை வெளிக்கொணர்ந்தார்.
2003 அமெரிக்க படைவீரர்  United States உலகெங்கும் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைவீரர்கள், குறிப்பாக அமெரிக்காவின் ஈராக் போரில் (2003-2011) ஈடுபடுத்தப்பட்ட படைவீரர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.
2004 ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்  United States 1946– 2004இல், ஈராக் போர் நடந்துகொண்டிருந்த வேளையில் புஷ் அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2005 நல்ல சமாரியர்கள்  Ireland
 United States
மனித நேய உணர்வோடு உலக மக்களுக்கு நன்மை புரிந்த "நல்ல சமாரியர்கள்" கவுரவிக்கப்பட்டார்கள். இப்பட்டியலில் போனோ, பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் என்போர் அடங்குவர். போனோ என்பவர் தலைசிறந்த பாடகரும் மனித நேய மேம்பாட்டாளாரும் ஆவர். 2005இல் "லைவ் 8" (Live 8) என்ற இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்தார். ஃபோர்பெஸ் இதழின் கணிப்புப்படி உலகிலேயே மிகப் பெரிய செல்வர் என்று அப்போது கணிக்கப்பட்ட பில் கேட்ஸ் என்பவர் மைக்ரோசாப்ட் என்ற புகழ்பெற்ற மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கியவர். அவருடைய மனைவி மெலிண்டா. அவ்விருவரும் இணைந்து "பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை" என்ற மனித நேய நிறுவனத்தை ஏற்படுத்தினர்.
2006 நீ/நீங்கள் இணையம் தொடர்பான உலகளாவிய வலையில் தரவுகள் அளித்து உருவாக்குகின்ற தனி மனிதர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.
2007 விளாடிமீர் பூட்டின்[7]  Russia 1952– விளாடிமீர் பூட்டின் உருசிய நாட்டின் தலைவராகப் பணியாற்றியவர் (2000-2008).
2008 பராக் ஒபாமா[8]  United States 1961– அமெரிக்க அதிபர்களுள் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்னும் சிறப்புப்பெற்ற பராக் ஒபாமா 2008இல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009 பென் பெர்னாங்கி[9]  United States 1953– அமெரிக்காவில் 2007-2008இல் ஏற்பட்ட நிதி நெருக்கடி காலத்தில் பெர்னாங்கி அமெரிக்க மைய நிதியகத்தின் தலைவராக இருந்தார்.
2010 மாற்கு சுக்கர்பெர்க்[10]  United States 1984– முகநூல் என்று அழைக்கப்படுகின்ற இணையத்தள சமூக வலையத்தை உருவாக்கியவர் சுக்கர்பெர்க் ஆவார்.
2011 எதிர்ப்பாளர்[11] உலக அளவில் தோன்றிய பல எதிர்ப்பு இயக்கங்கள் கவுரவிக்கப்பட்டன. குறிப்பாக, "அரபு வசந்தம்" என்று அழைக்கப்படுகின்ற 2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள், அரசியலில் மாற்றம் கோரி உருவான 2011 எசுப்பானிய எதிர்ப்பு இயக்கம் (Spanish protests), 2009இல் அமெரிக்காவில் தோற்றம் பெற்ற தேனீர் கட்சி இயக்கம் என்ற அரசு எதிர்ப்பு இயக்கம், சமூக-பொருளாதார சமனின்மையை எதிர்த்து எழுந்த "ஆக்கிரமிப்பு இயக்கம்" (Occupy Movement), கிரேக்க எதிர்ப்பு இயக்கம் (2010-12 Greek protests), இந்தியாவில் ஊழல் ஒழிப்புக்காக எழுந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கம் (2011), உருசியாவில் தோன்றிய அரசியல் ஊழல் ஒழிப்பு இயக்கம் (2011 Russian protests, சிலி நாட்டு மாணவர் எதிர்ப்பு இயக்கம் (2011–12 Chilean student protests) போன்ற இயக்கங்கள்.
2012 பராக் ஒபாமா[12]  United States 1961– 2012இல் அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.
2013 திருத்தந்தை பிரான்சிசு[13]  Vatican City/ Argentina 1936– 2013ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதவி துறந்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாக, அர்ஜென்டீனாவைச் சேர்ந்த கர்தினால் பெர்கோலியோ என்பவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் பதவி ஏற்றார். உலகத்தின் மனச்சாட்சி போல் இருந்து, ஏழை எளியவர் மட்டில் கரிசனம் காட்டி, எளிய வாழ்க்கைமுறையைத் தேர்ந்துகொண்டு மக்கள் அனைவருக்கும் நன்மை செய்வதில் கருத்தாய் இருக்கின்ற மனிதர் இவர் என்று டைம் இதழ் 2013ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிசுவை கவுரவப்படுத்தியது.
2014 அருணாச்சலம் முருகானந்தம் இந்தியா கிராமப்புற மகளிர்க்கான மலிவு விலை நாப்கின்கள் தயாரிக்கும் முறையும் அதற்கான இயந்திரங்களை கண்டுபிடித்தமைக்கு.[14].

குறிப்புகள்[தொகு]

  1. Person of the Year: 75th Anniversary Celebration (Special Collector's Edition ). New York: Time Books. 2002. இணையக் கணினி நூலக மையம்:52817840. 
  2. Time (2002) p. 1.
  3. Time (2002) pp. 2, 79.
  4. "Person of the Year: A Photo History - Notorious Leaders: Controversial Choices". Time. http://content.time.com/time/specials/packages/article/0,28804,2019712_2019694_2019586,00.html. பார்த்த நாள்: 2013–09–27. 
  5. First "Person" of the Year (rather than "Man" of the Year) is Jeff Bezos of அமேசான்.காம்.
  6. Golden, Frederic (January 3, 2000). "Person of the Century: Albert Einstein". Time. http://content.time.com/time/specials/packages/article/0,28804,2019712_2019694_2019586,00.html. பார்த்த நாள்: 2008–02–13. 
  7. "Person of the Year 2007". Time. 2007 இம் மூலத்தில் இருந்து 2013-08-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130824201145/http://www.time.com/time/specials/2007/0,28757,1690753,00.html. பார்த்த நாள்: 2009–07–08. 
  8. "Person of the Year 2008". Time. 2008–12–17 இம் மூலத்தில் இருந்து 2009-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090429064022/http://www.time.com/time/specials/2008/personoftheyear/article/0,31682,1861543_1865068,00.html?cnn=yes. பார்த்த நாள்: 2008–12–17. 
  9. Grunwald, Michael (16 December 2009). "Person of the Year 2009". Time இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130826123238/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1946375_1947251,00.html. பார்த்த நாள்: 16 December 2009. 
  10. Grossman, Lev (15 December 2010). "Person of the Year 2010". Time இம் மூலத்தில் இருந்து 15 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101215133743/http://www.time.com/time/specials/packages/article/0,28804,2036683_2037183,00.html. பார்த்த நாள்: 15 December 2010. 
  11. Grunwald, Michael (14 December 2011). "Person of the Year 2011". Time. http://timemagazine.tumblr.com/post/14212577849/times-2011-person-of-the-year-is-the-protester. பார்த்த நாள்: 14 December 2011. 
  12. "Person of the Year 2012". Time. 2008–12–19. http://poy.time.com/2012/12/19/person-of-the-year-barack-obama/. பார்த்த நாள்: 2012–12–23. 
  13. "Pope Francis, The People’s Pope". Time. 2013–12–11. http://poy.time.com/2013/12/11/person-of-the-year-pope-francis-the-peoples-pope/?hpt=hp_t2. பார்த்த நாள்: 2013–12–11. 
  14. http://time.com/70861/arunachalam-muruganantham-2014-time-100/

வெளி இணைப்புகள்[தொகு]