நவ புலியூர்க் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நவ புலியூர்க் கோயில்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள, புலியூர் என்பதோடு தொடர்புடைய ஒன்பது சிவன் கோயில்களாகும்.

நவ புலியூர்க் கோயில்கள் தோன்றிய கதை[தொகு]

ஆதிசேடனும் வியாக்ரபாத முனிவர் எனப்படுகின்ற புலிக்கால் முனிவரும் சிவபெருமானின் கூத்தினைக் காண மிக ஆவல் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தைப்பூச நாளன்று வந்து தரிசிக்கும்படியாக சிவபெருமான் கூறினார். மேலும் அவர் அவர்கள் முன்பாக நடன தரிசனமும் தந்து அவர்களுக்கு அருளினார். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி சிவனைத் தொழுது நின்றார்கள். அப்போது சிவபெருமான் ஒன்பது புலியூரைத் தரிசித்து, கடைசியாக திருவரங்கத்தில் அவர்களின் புனிதமான கோயில் யாத்திரையை நிறைவு செய்துகொள்ளுமாறுக் கூறினார். [1] திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாளும், சிதம்பரத்தில் உள்ள நடராஜரும் ஒரே பரம்பொருளின் இரு வடிவங்கள் என்பதை உணர்த்திய யாத்திரை என்று இதனைக் கூறுவர். [2]

நவ புலியூர்க் கோயில்கள்[தொகு]

வியாக்ரபாதர் வழிபட்ட கோயில்கள் பின்வருமாறு அமையும். [1]

பெரும்பற்றப்புலியூர்[தொகு]

இத்தலம் பொற்புலியூர் என்றும் தில்லை என்றும் அழைக்கப்படுகின்ற சிதம்பரம் ஆகும். பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாகும். நடராஜருக்கு தினமும் நடைபெறுகின்ற பூஜைகளில் பதஞ்சலி பூஜை சூத்திரப்படி வைதீக பூஜையும், வியாக்ரபாதர் புஷ்பார்ச்சனை விதிப்படியும் நடைபெற்று வருகிறது. சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என்ற ஐந்து சபைகள் இங்கு உள்ளன. [3]

திருப்பாதிரிப்புலியூர்[தொகு]

இத்தலம் கடலூர் புது நகர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள நடுநாட்டுத் தலமாகும். பாதிரி மரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளதாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் பாடலீஸ்வரர், இறைவி பெரியநாயகி. [4]

எருக்கத்தம்புலியூர்[தொகு]

இது மற்றொரு நடுநாட்டுத் தலம் ஆகும். வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ராஜேந்திரபட்டினம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. வெள்ளெருக்கைத் தல மரமாகக் கொண்டதாலும், வியாக்ரபாதரால் வழிபட்டதாலும் இப்பெயரினைப் பெற்றது. இங்குள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர், இறைவி நீலமலர்க்கண்ணி. ஞானசம்பந்தருக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதார தலமான இத்தலத்தில் அவருக்குத் தனியாக ஒரு சன்னதி காணப்படுகிது. [5]

ஓமாம்புலியூர்[தொகு]

சோழ நாட்டின் வடகரைத் தலம். சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமா தேவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்ததாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இத்தலம் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி மூல மூர்த்தியாக, சிலை வடிவில் உயர்ந்த பீடத்திலிருந்து அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில் நடராஜர் இருக்குமிடத்தில் தட்சிணாமூர்த்தியும், தட்சிணாமூர்த்தி இடத்தில் நடராஜரும் உள்ளனர். இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், துயர்தீர்த்த நாதர் என்றழைக்கப்படுகிறார். இறைவி புஷ்பலதாம்பிகை, பூங்கொடிநாயகி என்றழைக்கப்படுகிறார். [6]

சிறுபுலியூர்[தொகு]

மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் வழித்துணைநாதர், மார்க்கபந்தீஸ்வரர், கங்காளநாதர் என்றவாறு அழைக்கப்படுகின்றார். வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இந்த ஊரை அடையும் நேரத்தில் இருட்டிவிட்டது. சிவபெருமானும், அரங்கப்பெருமாளும் அவர்களுக்குக் காட்சி தந்ததாக் கூறுவர். இங்குள்ள பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற பெருமையுடையதாகும். அங்குள்ள மூலவர் அருள்மாகடலமுத பெருமாள் ஆவார். வியாக்ரபாதர் பெருமாளை வணங்கிய நிலையில், அவரது திருவடியின் கீழ் அமரந்த நிலையில் உள்ளார். [7]

அத்திப்புலியூர்[தொகு]

கீழ்வேளூருக்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. அத்தி என்றால் யானை என்று பொருளாகும். யானையும், புலியான வியாக்ரபாதரும் வழிபட்டதால் அத்திப்புலியூர் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் சிதம்பரேஸ்வரர், இறைவி சிவகாமசுந்தரி. இத்தலம் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும், அகத்தியருக்கும் திருமணக் காட்சி நல்கிய தலம் என்ற பெருமையுடையது. [8]

தப்பளாம்புலியூர்[தொகு]

திருவாரூருக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் வியாக்ரபாதருக்கும், மண்டூக மகரிஷிக்கும் அருள் தந்த இடமாகும். வியாக்ரபாதரின் புலிக்கால், புலிக்கைத் திருமேனியை நீக்கியதாக வரலாறு கூறுகிறது. பதஞ்சலி, வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி ஆகிய மூவரும் இறைவனின் நடனக் காட்சியை இங்கு கண்டுகளித்தனர். [9]

பெரும்புலியூர்[தொகு]

திருவையாற்றுக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலம், வியாக்ரபாதர் வழிபட்ட தலமாகும். இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீஸ்வரர், இறைவி செளந்தர நாயகி. [10]

கானாட்டம்புலியூர்[தொகு]

சிதம்பரத்திற்குத் தென்மேற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தினை சிதம்பரத்திலிருந்தும், ஓமாம்புலியூரிலிருந்தும் வந்து அடையலாம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட இந்தத் தலத்தின் இறைவன் பதஞ்சலிநாதேசுரர், இறைவி கண்ணார்குழலி. வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தரிசித்த தலமாகும். [11]

ஜீவ சமாதி[தொகு]

வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மேற்கண்ட ஒன்பது புலியூர்களையும் தரிசித்தனர். அதற்குப் பின்னர் அவர்கள் இருவரும் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதரைத் தரிசித்துவிட்டு, பின்னர், திருப்பட்டூர் சென்று அங்குள்ள பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மாவையும் வணங்கி ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறுவர். [1]

அடிக்குறிப்பு[தொகு]