உள்ளடக்கத்துக்குச் செல்

குறும்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறும்படம் என்பது, முழுநீளத் திரைப்படமாகக் கருதுவதற்குப் போதிய நீளம் இல்லாத திரைப்படங்களைக் குறிக்கும். நன்றி தெரிவிப்புப் பகுதி உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கி 40 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவாக ஓடக்கூடிய திரைப்படமே குறும்படம் எனத் திரைப்படக் கலைகள் அறிவியல்கள் கழகம் (Academy of Motion Picture Arts and Sciences) வரைவிலக்கணம் தருகின்றது.[1] 1920 ஆம் ஆண்டுக்கும் 1970 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் குறும்படங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 35 மிமீ அளவுள்ள இரண்டு சுருள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் ஒரு வகை. மூன்று அல்லது நான்கு சுருள்களைக் கொண்ட திரைப்படங்கள் இரண்டாவது வகை.

பெரும்பாலும் குறும்படங்கள் உள்ளூர், தேசிய அல்லது அனைத்துலக திரைப்பட விழாக்களிலேயே திரையிடப்படுவதுடன், தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களினால் குறைந்த செலவில் அல்லது செலவில்லாமல் தயாரிக்கப்படுவனவாக உள்ளன. குறும்படங்களுக்கான நிதி திரைப்பட நல்கைகளூடாகவோ, இலாப நோக்கற்ற அமைப்புக்களிடமிருந்தோ, ஆதரவு அளிப்பவர்களிடமிருந்தோ, தனிப்பட்ட நிதிகளூடாகவோதான் கிடைக்கின்றன. குறும்படங்கள் பொதுவாக தொழில் அனுபவங்களைப் பெறவும், எதிர்காலத் திட்டங்களுக்கு தனிப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்தோ, தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்தோ, திரைப்படக் கலையகங்களிடம் இருந்தோ நிதி பெறும் நோக்கத்துக்காகத் தமது திறமையைக் காட்டுவதற்காகவுமே குறும்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு

[தொகு]
வில்லியம் கார்வூட் ஏராளமான குறும் படங்களில் நடித்துள்ளார், பெரும்பாலானவை 20 நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடியவை

தொடக்க காலத்தில் எல்லாத் திரைப்படங்களுமே குறுகிய படங்களாகவே இருந்தன. சில ஒரு நிமிடம் அல்லது அதற்கும் குறைந்த நேரம் ஓடக்கூடியனவாகவே இருந்தன. 1910 ஆம் ஆண்டு வரை திரைப்படங்கள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நீளம் கொண்டவையாகவே இருந்தன. முதல் தொகுதித் திரைப்படங்கள் 1894 ஆம் ஆண்டில் "கைனெட்டோசுக்கோப்பு" என்னும் தோமசு எடிசனின் கருவி ஊடாகக் காட்டப்பட்டது. இது தனியாள் பார்ப்பதற்காக மட்டுமே. டி. டபிள்யூ. கிரிபித்தின் "தேசத்தின் பிறப்பு" (The Birth of a Nation) போன்ற நீளமான படங்களுடன் ஒப்பிடும்போது நீளம் குறைவான நகைச்சுவைப் படங்களே பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டன. 1920 ஆம் ஆண்டளவில் ஒரு நுழைவுச் சீட்டை வாங்குவதன் மூலம் முழு நீளப்படம், இரண்டாவது நீளப் படம், குறும் நகைச்சுவைப் படம், 5 - 10 நிமிடக் கேலிச் சித்திரப் படங்கள், ச்ய்திப் படங்கள் போன்ற பல்வேறுபட்ட படங்களைப் பார்க்க முடியும்.

குறும் நகைச்சுவைப் படங்கள் குறிப்பாகப் பெயர் பெற்றிருந்தன. அவை தொடராக வெளிவந்தன. கேலிச் சித்திர அசை படங்கள் முதன்மையாகக் குறும் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. உண்மையில் எல்லா முக்கியமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும், குறும்படத் தயாரிப்புக்கான பிரிவுகளைக் கொண்டிருந்தன. குறிப்பாக ஊமைப்படக் காலத்திலும், தொடக்க பேசும் படக் காலத்திலும் பல நிறுவனங்கள் குறும்படங்களை மட்டும் அல்லது பெரும்பான்மையாகக் குறும்படங்களைத் தயாரித்தன. எடுத்துக்காட்டாக ஆல் ரோச் 1935க்குப் பின் லாரலையும் ஆடியையும் (Laurel and Hardy) முழு நேரம் முழு நீளப்படங்களுக்கு மாற்றியது.

1930களில் பெரும் பொருளாதார வீழ்ச்சியினால் பெரும்பாலான நாடுகளில் விநியோக முறை மாற்றம் அடைந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் தாமே தமது விருப்பப்படி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் நிலைக்குப் பதிலாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் முதன்மைத் திரைப்படம், துணைப்படம், கேலிச் சித்திரப்படம், மற்றும் சில உள்ளிட்ட ஒரு தொகுதியாக விற்பனை செய்யத் தொடங்கின. ஒரு நுழைவுச் சீட்டில் இரண்டு முழுநீளப் படங்களைக் காட்டும் முறை எழுச்சியுற்றபோது, இரண்டு படச் சுருள்களைக் கொண்ட குறும்படங்கள் வணிக அடிப்படையிலான படங்கள் என்னும் நிலையில் இருந்து வீழ்ச்சியடையத் தொடங்கின.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rule Nineteen: Short Films Awards". AMPAS. பார்க்கப்பட்ட நாள் 2011-03-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்படம்&oldid=3059253" இலிருந்து மீள்விக்கப்பட்டது