ஆசிய மரநாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிய மரநாய்[1]
குட்டி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கார்னிவோரா
குடும்பம்:
விவேரிடே
பேரினம்:
பாராடாக்சூரசு
இனம்:
பா. கெர்மாபோரோடிடசு
இருசொற் பெயரீடு
பாராடாக்சூரசு கெர்மாபோரோடிடசு
(பல்லாசு, 1777)
ஆசிய மரநாய்களின் பரம்பல்
(பச்சை - இயற்கையாக உள்ளது,
சிவப்பு - அறிமுகப்படுத்தப்பட்டது)

ஆசிய மரநாய் (Asian Palm Civet, பாராடாக்சூரசு கெர்மாபோரோடிடசு) தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மரநாய்க் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய ஊனுண்ணி விலங்காகும். ஆசிய மரநாய்கள் பல்வேறு வகையான வாழிடச்சூழல்களிலும் இசைந்து வாழக்கூடியவை. அத்துடன், அவை மிகப் பெரும் எண்ணிக்கையில் நன்கு பரவிக் காணப்படுகின்ற விலங்குகளாகும்.[2] ஆகையால் 2008-ஆம் ஆண்டு இவ்விலங்கு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டது.

உடலமைப்பு[தொகு]

ஆசிய மரநாயின் மண்டையோடு மற்றும் பற்களின் அமைப்பு

ஆசிய மரநாய் ஒழுங்கற்ற நிறவமைப்பும் நீண்டு மெலிந்த உடலமைப்பும் கொண்டதாகும். இதன் நிறை 2–5 கிலோகிராம் (4.4–11 இறாத்தல்) இருக்கும்..[3] ஆசிய மரநாய் கிட்டத்தட்ட 53 சமீ (21 அங்குலம்) நீளமான உடலும் கிட்டத்தட்ட 48 சமீ (19 அங்குலம்) நீண்ட வாலும் கொண்டதாகும். ஆசிய மரநாயின் நீண்ட, கட்டான உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும் கால்கள், காதுகள், முகப்பகுதி என்பன கரு நிறத்திலும் மயிரடர்ந்து சொர சொரப்பானதாகக் காணப்படும். இதன் உடலில் மூன்று கறுப்புக் கோடுகள் காணப்படும். அதன் முகத்திலுள்ள கோடு வட அமெரிக்காவில் வாழும் இரக்கூன் விலங்கை ஒத்திருக்கும். ஏனைய மரநாய் இனங்களைப் போல் இதன் வாலில் வளையங்கள் போன்ற அமைப்பு காணப்படுவதில்லை.

ஆசிய மரநாய்களின் ஆண், பெண் இரண்டிலும் வாலின் கீழே விதை போன்ற அமைப்பில் மணச் சுரப்பிகள் காணப்படும். மரநாய்கள் இச்சுரப்பிகளினால் கெட்ட நாற்றத்தை வெளியேற்றும்.

பரவலும் வாழிடமும்[தொகு]

ஆசிய மரநாய்கள் இந்தியா, நேப்பாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவின் சுமாத்திரா, சாவகம், கலிமந்தான், பாவேஆன், சிபெருத் தீவுகள் போன்ற இடங்களில் இயற்கையாகவே வாழ்கின்றன. இவை பிற்காலத்தில் பப்புவா, சிறு சுண்டாத் தீவுகள், மலுக்கு தீவுகள், சுலாவெசி தீவு மற்றும் யப்பான் ஆகிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், இவை பப்புவா நியூ கினி நாட்டில் காணப்படுகின்றனவா என்பது சரியாக அறியப்படவில்லை.[2]

ஆசிய மரநாய்கள் பொதுவாக அடர்ந்த காடுகளிலேயே காணப்படும். எனினும், அடர்த்தி குறைந்த காட்டுப் பகுதிகளிலும் இவை சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்றன.

இவை நகர்ப்புறத் தோட்டங்களிலுள்ள அத்தி போன்ற வளர்ந்த பழ மரங்கள், மனித நடமாட்டம் குறைந்த பற்றைக் காடுகள் என்பவற்றிலும் வாழ்கின்றன. இவற்றின் கூரிய உகிர்கள் (நகங்கள்) மரங்களிலும் வீடுகளின் கழிவு நீர்க் குழாய்களிலும் விரைவாக ஏறுவதற்கு உதவுகின்றன. இலங்கையில் இவை தொல்லைமிகு விலங்குகளாகவே பொதுவாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், உட்கூரைகளிலும் வீட்டுப் பாவனைப் பொருட்களிலும் மலங்கழிப்பதுடன் இரவு வேளைகளில் ஒன்றுடனொன்று சண்டையிட்டு இரைச்சலை ஏற்படுத்தும்.

சூழலும் நடத்தையும்[தொகு]

மரமொன்றில் நிற்கும் ஆசிய மரநாய்
பிலிப்பைன்ஸிலுள்ள மரநாயொன்று

உணவுப் பழக்கம்[தொகு]

அனைத்துண்ணி விலங்குகளான ஆசிய மரநாய்கள் சதைப்பற்றுள்ள, சிறிய விதைகளையுடைய பழங்களை முக்கிய உணவாகக் கொள்வதால் விதைப் பரம்பல் மூலம் அயனமண்டலக் காட்டுச் சூழலைப் பாதுகாக்க உதவுகின்றன.[3] மாம்பழம், இறம்புட்டான், கோப்பி போன்ற பழங்களை உண்ணும் இவை சிறிய பாலூட்டிகள், பூச்சிகள் போன்றவற்றையும் உணவாகக் கொள்ளும். ஆசிய மரநாய்கள் வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ரக்கூன் விலங்குகளைப் போன்று குழிகள் முதலானவற்றில் வாழும்.[4] மேலும் இவை எலிக்கோனியா போன்ற செடிகளின் கள்ளையும் உட்கொள்ளும். இதன் காரணமாகவே இவற்றைக் கள்ளுண்ணும் பூனைகள் என்றும் அழைப்பர்.[5]

நடத்தை[தொகு]

மரநாய்கள் புணர்ச்சிக் காலத்தின் போது தவிர, பொதுவாக தனித்தே வாழ்வதாகக் கருதப்படுகிறது. மரத்திலும் நிலத்திலும் வாழும் இவை மாலை நேரம் முதல் நள்ளிரவின் பின்னர் வரை சுறுசுறுப்பாக இயங்கும்.[3] பொதுவாக மாலை முதல் அதிகாலை வரை சுறுசுறுப்பாக இயங்கும் இவை நிலவொளி கூடுதலாக இருக்கும் வேளைகளில் சுறுசுறுப்பு சற்றுக் குறைந்து காணப்படும்.[4]

இவை தம் குதச் சுரப்பிகள், சிறுநீர், மலம் ஆகியவற்றால் தம் எல்லையை வகுத்துக் கொள்வதற்கு அடையாளமிடும். மிகப் பொதுவான அடையாளமிடும் முறை தம் குதச் சுரப்பிகளை நிலத்தில் தோய்த்து அங்கு தம் நாற்றத்தை இடுவதாகும். மரநாய்கள் அத்தகைய நாற்றத்தைக் கொண்டு அதனை இட்ட விலங்கு ஆணா பெண்ணா என்பதையும், அது எந்த இன விலங்கு என்பதையும், குறிப்பிட்ட விலங்கு தமக்குத் தெரிந்தததா அல்லவா என்பதையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவையாகும்.[6]

துணையினங்கள்[தொகு]

ஆசிய மரநாய்களின் துணையினங்கள்

முதன் முதலாக 1777 ஆம் ஆண்டு பீட்டர் சைமன் பல்லாசு என்ற விலங்கியலாளர் ஆசிய மரநாய்கள் பற்றி விவரித்த பின்னர் 1820-1992 காலப் பகுதியில் இவற்றின் பல துணையினங்கள் பற்றி மேலும் அறியப்பட்டது. அவை பற்றிய ஆய்வு செய்தோர், செய்த ஆண்டு என்பன பின்வருமாறு:[1]

 • பா. கெ. கெர்மாபோரோடிடசு (பீட்டர் சைமன் பல்லாசு, 1777)
 • 'பா. கெ. போந்தர் (அன்செல்மே கஏட்டன் டெசுமாரெசுட், 1820)
 • பா. கெ. மூசாங்கா (இசுட்டாம்ஃபோர்ட் ரஃபில்சு, 1821)
 • பா. கெ. ஜாவனிகா (தோமசு ஃகோர்சுஃபீல்டு, 1824)
 • பா. கெ. பாலாசீ (யோவான் எட்வர்ட் கிரே, 1832)
 • பா. கெ. பிலிப்பீன்சீசு (யோர்டன், 1837)
 • பா. கெ. சீடோசசு (ஃகொன்ரே யக்குயினோத்து மற்றும் புச்செரான், 1853)
 • பா. கெ. நிக்டிடேன்சு (டெயிலர், 1891)
 • பா. கெ. லிக்னிகாலர் (கெர்ரித்து சிமித்து மில்லர், 1903)
 • பா. கெ. மைனர் (பொன்ஃகோட்டே, 1903)
 • பா. கெ. கேனிசென்சு (லியோன், 1907)
 • பா. கெ. மில்லேரி (குளொசு, 1908)
 • பா. கெ. கான்ஜெனசு (ஓல்டுபீல்டு தாமசு, 1910)
 • பா. கெ. சம்பேனசு (சுவார்சு, 1910)
 • பா. கெ. எக்சிடசு (சுவார்சு, 1911)
 • பா. கெ. கோசினென்சிசு (சுவார்சு, 1911)
 • பா. கெ. கேனசு (மில்லர், 1913)
 • பா. கெ. பாலென்சு (மில்லர், 1913)
 • பா. கெ. பர்வசு (மில்லர், 1913)
 • பா. கெ. புக்னேக்சு (மில்லர், 1913)
 • பா. கெ. புல்செர் (மில்லர், 1913)
 • பா. கெ. சாசெர் (மில்லர், 1913)
 • பா. கெ. செனக்சு (மில்லர், 1913)
 • பா. கெ. சிம்லெக்சு (மில்லர், 1913)
 • பா. கெ. என்கேனசு (லியோன், 1916)
 • பா. கெ. லாத்தம் (கில்டென்சுடோல்பே, 1917)
 • பா. கெ. பேலிகசு (சோடி, 1933)
 • பா. கெ. சிண்டிடே (ரெயினால்டு இன்னெசு பொச்சொக்கு, 1934)
 • பா. கெ. வேலெரோசசு (பொச்சொக்கு, 1934)
 • பா. கெ. டோங்பேங்ஜெனென்சிசு (கோர்பட்டு மற்றும் ஃகில், 1992)

எது எவ்வாறிருந்தாலும், இத்துணையினங்களின் இருசொற் பெயரீட்டு வகைப்பாட்டுநிலை இதுவரை அறுதியிடப்படவில்லை.[2]

வேற்று மொழிப் பெயர்கள்[தொகு]

மனிதத் தொடர்பு[தொகு]

எண்ணெய் எடுத்தல்[தொகு]

ஆசிய மரநாயின் இறைச்சித் துண்டுகளிலிருந்து பெறப்படும் கொழுப்பை ஆளிவிதை எண்ணெயுடன் கலந்து மூடிய பேணியொன்றில் இட்டு, பல நாட்கள் வெயிலில் காய வைத்த பின்னர், சொறி சிரங்கு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவர்.[7]

கோப்பி (காப்பி)[தொகு]

கோப்பி லுவாக் என்பது இவ்விலங்குகள் பகுதியாக உட்கொண்ட கோப்பிப் பழங்களை அவற்றின் வாயிலிருந்து பறித்தெடுத்துத் தயாரிக்கும் கோப்பியாகும். தற்காலத்தில் உலகில் மிக உயர்ந்ததும் ஆகக் கூடிய விலை கொண்டதுமான கோப்பி வகை இதுவே.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000317. 
 2. 2.0 2.1 2.2 2.3 "Panthera tigris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
 3. 3.0 3.1 3.2 Grassman Jr., L. I. (1998) Movements and fruit selection of two Paradoxurinae species in a dry evergreen forest in Southern Thailand. Small Carnivore Conservation 19: 25-29.
 4. 4.0 4.1 Joshi, A. R., Smith, J. L. D., Cuthbert, F. J. (1995). "Influence of Food Distribution and Predation Pressure on Spacing Behavior in Palm Civets". Journal of Mammalogy (American Society of Mammalogists) 76 (4): 1205–1212. doi:10.2307/1382613. http://jstor.org/stable/1382613. பார்த்த நாள்: 2009-11-18. 
 5. Thohari, M., Santosa, Y.(9-11 May 1984). "A preliminary study on the role of civet (Paradoxurus hermaphroditus) in the natural regeneration of palms (Pinanga kuhlii and P. zavana) at Gunung Gede-Pangrango National Park, West Java (Indonesia)". Symposium on Forest Regeneration in Southeast Asia. 2009-11-18 அன்று அணுகப்பட்டது..
 6. Rozhnov, V. V., Rozhnov, Y. V. (November, 2003). "Roles of Different Types of Excretions in Mediated Communication by Scent Marks of the Common Palm Civet, Paradoxurus hermaphroditus Pallas, 1777 (Mammalia, Carnivora)". Biology Bulletin (MAIK Nauka/Interperiodica) 30 (6): 584–590. doi:10.1023/B:BIBU.0000007715.24555.ed. பன்னாட்டுத் தர தொடர் எண்:1062-3590. 
 7. Singh, L. A. K. (1982). "Stomach Contents of a Common Palm Civet, Paradoxurus hermaphroditus (Pallas)". J. Bombay Nat. Hist. Soc. 79 (2): 403–404. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_மரநாய்&oldid=3702367" இலிருந்து மீள்விக்கப்பட்டது