அல்தான்தூயா கொலை வழக்கு
அல்தான்தூயா சாரிபூ Altantuyaa Shaariibuu | |
---|---|
பிறப்பு | அல்தான்தூயா சாரிபூ பாயாஸ்காலன் 26 பிப்ரவரி 1979 மங்கோலியா |
இறப்பு | 18 அக்டோபர் 2006 சிலாங்கூர், சா ஆலாம், சுபாங், புஞ்சாக் நியாகா நீர்த்தேக்கம் |
இறப்பிற்கான காரணம் | கொலை |
இருப்பிடம் | உலான் பத்தூர், மங்கோலியா |
தேசியம் | மங்கோலியர் |
பணி | பன்மொழி மொழிபெயர்ப்பாளர் |
அறியப்படுவது | உயர்மட்டப் பிரபலங்கள் தொடர்புடைய கொலை |
பெற்றோர் | தந்தை: சாரிபூ செத்தெவ் (63) தாயார்: அல்தான் செத்தெக் |
வாழ்க்கைத் துணை | இருமுறை திருமணம் |
பிள்ளைகள் | இரு ஆண் மகன்கள் அதான்சகாய் (10); முங்குன்சகாய் (16) |
அல்தான்தூயா சாரிபூ அல்லது அல்தான்தூயா சாரிபூ பாயாஸ்காலன் (Altantuyaa Shaariybuu Bayasgalan) (பிறப்பு: பிப்ரவரி 2, 1979 இறப்பு: அக்டோபர் 18, 2006) என்பவர் மலேசியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு மங்கோலியா அழகி.[1][2] அவருடைய உடல், இராணுவம் பயன்படுத்தும் C-4 ரக வெடிமருந்துகளால் வெடி வைத்துச் சிதற வைக்கப்பட்ட பின்னர், சிலாங்கூர், சா ஆலாம், சுபாங், புஞ்சாக் ஆலாம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
அல்தான்தூயா கொலைச் சம்பவத்தில், மலேசியாவின் உயர்மட்டப் பிரபலங்கள் தொடர்பு படுத்தப்பட்டனர்.[3][4] அந்த வகையில், அப்போதைய துணைப்பிரதமரும், தற்காப்பு அமைச்சரும், இப்போதைய பிரதமருமான நஜீப் துன் ரசாக்கின் பெயரும் தொடர்பு படுத்தப்பட்டது. எனினும் அதை அவர் வன்மையாக மறுத்துவிட்டார். இதுவரையிலும் மறுத்தும் வருகிறார்.
சா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் 165 நாட்கள் நடைபெற்ற அல்தான்தூயா கொலைவழக்கில், அரசு தரப்பில் 84 பேரும், எதிர்தரப்பில் 198 பேரும் விசாரணை செய்யப்பட்டனர். 433 சாட்சிப் பொருள்கள் காட்சிப் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன.[5] இந்த வழக்கு மலேசியாவிலும் அனைத்துலக ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மலேசிய நீதித் துறைக்கு ஒரு சவாலாகவும் அமைந்தது.[6]
வரலாறு
[தொகு]அல்தான்தூயாவின் பிறப்புப் பெயர் அல்தான்தூயா சாரிபூ பாயாஸ்காலன். மங்கோலியா, உலான் பத்தூர் நகரில் 1979 பிப்ரவரி 26-இல் பிறந்தவர். குடுமபத்தின் மூத்த மகள். தந்தையாரின் பெயர் சாரிபூ செத்தெவ். இவர் ஒரு மருத்துவர். மங்கோலியா தேசியப் பல்கலைக்கழகத்தில் தகவல், கல்வித் துறை இயக்குநராகவும், மனோவியல் பேராசிரியராகவும் பணி புரிந்தவர்.[7] தாயாரின் பெயர் எஸ்.அல்தான் செத்தெக். இவர் மங்கோலியாவில் ரஷ்ய மொழி பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியர் ஆகும்.
பெற்றோர்கள் ரஷ்யாவில் பணி புரிந்தனர். அதனால், அல்தான்தூயாவிற்கு 12 வயதாகும் வரை ரஷ்யாவின் லெனின்கிரேட் நகரில் தங்கி, தொடக்கக் கல்வியைப் படித்தார். அவருடைய தங்கை அல்தான்சுல் என்பவரும் அல்தான்தூயாவுடன் இருந்தார். மங்கோலிய, ரஷ்ய, சீன, ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் அல்தான்தூயா சரளமாகப் பேசக் கூடியவர்.
முதல் திருமணம்
[தொகு]தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மங்கோலியாவிற்குத் திரும்பினார். 1996இல் மாடாய் எனும் மங்கோலியப் பாடகரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அல்தான்தூயாவிற்கு வயது 18. மாடாய்க்கு வயது 22. மங்கோலிய மொழியில் கார் சார்னாய் (தமிழில் கறுப்பு ரோஜா) எனும் இசைக்குழுவில் மாடாய் ஒரு பிரபலமான பாடகர். இவர்களின் திருமண வாழ்க்கை இரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
மாடாய் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் துளிர்விட்டன. அதனால், குடும்ப உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. ஜூன் 1998இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு அல்தான்தூயாவிடம் வழங்கப்பட்டது.
இரண்டாவது திருமணம்
[தொகு]விவாகரத்திற்குப் பின், அல்தான்தூயா தன்னுடைய மகனுடன் பெற்றோரின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் நயநாகரிகச் சமுதாயத்தில் இடம் பெற்ற ஒரு பெண்ணாகத் தன்னை மாற்றிக் கொண்டார். சில மாதங்களில் எஸ். குனிக்கூ (S. Khunikhu) எனும் மங்கோலிய வடிவமைப்பாளரின் மகனுடன் அறிமுகம் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.[8]
அந்தத் திருமணமும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் மறுபடியும் ஒரு விவாகரத்தில் போய் முடிந்தது. ஆனால், குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. அதன் பின்னர், வேறு ஒரு மங்கோலிய ஆடவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக, திருமணத்திற்கு அப்பாற்பட்டு இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொண்டார். இரு குழந்தைகளும் அல்தான்தூயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.
மேல்படிப்புகள்
[தொகு]முதல் திருமணத்திற்குப் பின்னர், 1996 நவம்பர் மாதம் உலான் பத்தூரில் இருக்கும் ஒத்கோண்டெஞ்சர் தனியார் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பிற்காகப் பதிந்து கொண்டார். அந்தப் படிப்பையும் அவர் தொடரவில்லை. வகுப்பிற்கு முறையாக வருவது இல்லை. தேர்வுகளையும் எழுதுவது இல்லை. அந்தச் சமயத்தில் அவர், தாய்மை அடைந்து இருந்தார். 1997 ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
இரண்டாவது விவாகரத்திற்குப் பின்னர், அல்தான்தூயா வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்து போனார். அதை மறப்பதற்கு 2000ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்திற்குச் சென்றார். அங்கு ஒரு வடிவழகு பள்ளியில் தன்னைப் பதிந்து கொண்டார். இந்த முறை அக்கறையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வடிவழகு துறையில் சான்றிதழைப் பெற்றார்.
மலேசியாவிற்கு வருகை
[தொகு]பாரிஸ் நகரில் இருந்து திரும்பியதும் வடிவழகு துறையில் அவர் ஈடுபடவில்லை. மாறாக நெசவுத் துணி வியாபரத்தில் ஈடுபட்டார். சீனாவில் இருந்து துணிமணிகளை வரவழைத்தார். ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங், தைவான் போன்ற இடங்களுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். வணிகப் பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. வடிவழகு துறையில் புகழ்பெற வேண்டும் என்று அல்தான்தூயா தொடக்கக் காலத்தில் ஆசைப்பட்டார். ஆனால், கடைசிவரை அது நடக்காமல் போய்விட்டது.
இரண்டாவது விவாகரத்திற்குப் பின்னர் அல்தான்தூயா மறுபடியும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. துணி வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தாலும், அதற்கு அப்பால் மொழிப்பெயர்ப்பு பணிகளிலும் தீவிரம் காட்டினார். அதனால் அவர் சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார். இவர் மலேசியாவிற்கு முதல் முறை 1995ஆம் ஆண்டிலும், இரண்டாவது முறை 2006ஆம் ஆண்டிலும் இரு முறைகள் வந்து இருக்கிறார்.
அப்துல் ரசாக் பாகிந்தா
[தொகு]2004இல் ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஓர் அனைத்துலக வைரக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக, அல்தான்தூயா அங்கு சென்று இருந்தார். அந்தக் கட்டத்தில், மலேசிய உத்திப்பூர்வ ஆய்வு மையத்தில் (Malaysian Strategic Research Centre), பாதுகாப்பு பகுத்தாய்வாளராக (Defense Analyst) இருந்த அப்துல் ரசாக் பாகிந்தா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகம் நட்பாக மாறி, பின்னர் ஒரு நெருக்கமான உறவு முறைக்கும் வழிகோலியது. 1961இல் பிறந்த அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு வயது 52.
மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், அல்தான்தூயாவை அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ரசாக் பாகிந்தாவுடன் அல்தான்தூயா பாரிஸ் மாநகரத்திற்குச் சென்றார். மலேசிய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் பேச்சுவார்த்தைகளில் அல்தான்தூயா ஒரு மொழிப்பெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார்.
பாரிஸில் இருக்கும் போது அல்தான்தூயாவிற்கும், அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கும் மிக நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் அல்தான்தூயா, ரசாக் பாகிந்தாவின் வைப்பாட்டியாகவே வாழ்ந்தார்.
ராஜா பெத்ரா கமாருடின்
[தொகு]மலேசியாவின் பிரபலமான வலத்தளங்களில் ஒன்றான மலேசியா டுடே தளத்தில், அதன் ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின், அல்தான்தூயாவின் இறப்பில் நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை முதன்முதலில் தெரிவித்தார். அதை நஜீப் துன் ரசாக் வன்மையாக மறுத்து வருகிறார்.[9] நஜீப் மீதான குற்றச்சாட்டை ராஜா பெத்ரா கமாருடின் பின்னர் மீட்டுக் கொண்டார்.
தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதும், அவர் மனைவி பிள்ளைகளை மலேசியாவிலேயே விட்டுவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.
நீர்மூழ்கிக் கப்பல்கள்
[தொகு]மலேசிய அரசாங்கம் இரு ஸ்கோர்ப்பின் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களை ஒரு பில்லியன் யூரோ மதிப்பில் (மலேசிய ரிங்கிட்: 4.7 பில்லியன்) பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கியது. அதில் 114 மில்லியன் யூரோ, அதாவது (மலேசிய ரிங்கிட்: 464 மில்லியன்) முகவர் சேவைக் கட்டணமாக அர்மாரிஸ் எனும் ஸ்பானிய நிறுவனம் வழங்கியது.
அர்மாரிஸ் நிறுவனம், நீர்மூழ்கிக் கப்பல்களின் விற்பனைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிறுவனம் ஆகும். அந்த முகவர் சேவைக் கட்டணம், ரசாக் பகிந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரிமேக்கர் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. அதை அறிந்து கொண்ட அல்தான்தூயா, தனக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால், இந்த முகவர் சேவைக் கட்டண விவகாரம் வெளியுலகிற்கு தெரிவிக்கப்பபட மாட்டாது என்று ரசாக் பகிந்தாவை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றார்.[10]
கோலாலம்பூர் நிகழ்வுகள்
[தொகு]2006 அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, அல்தான்தூயா கடைசி முறையாக மலேசியாவிற்கு வந்தார். அவருடன் நமீரா கெரில்மா, வயது 29 (Namiraa Gerelmaa) என்பவரும் உரிந்தூயா கால் ஒச்சிர், வயது 29 (Urintuya Gal-Ochir) என்பவரும் வந்தனர். இவர்களில் நமீரா என்பவர் அல்தான்தூயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார்.
ரசாக் பகிந்தாவைச் சந்தித்துப் பேசவே அல்தான்தூயா கோலாலம்பூருக்கு வருகை புரிந்ததின் முக்கிய நோக்கமாகும். அவர்கள் கோலாலம்பூர், ஜாலான் ஹாங் லெக்கீர் சாலையில் இருக்கும் மலாயா ஓட்டலில் தங்கினர். ரசாக் பகிந்தா தங்கி இருக்கும் வீட்டைத் தேடிப் பிடிப்பதற்காக ஆங் சோங் பெங் எனும் தனியார் துப்பறிவாளரையும் சேவையில் அமர்த்திக் கொண்டனர்.
ரசாக் பகிந்தாவின் அலுவலகம் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் சாலையில் இருந்தது. அவருடைய அந்த அலுவலகத்திற்குச் சில முறை சென்றனர். ஆனால், ரசாக் பகிந்தாவைப் பார்க்க முடியவில்லை. அவர்களைப் பார்ப்பதை ரசாக் பகிந்தா தவிர்த்தும் வந்தார்.
பாலசுப்பிரமணியம்
[தொகு]2006 அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி, இரவு 7.20க்கு அல்தான்தூயா, நமீரா கெரில்மா, உரிந்தூயா ஆகிய மூவரும் ரசாக் பகிந்தாவின் இருப்பிடமான டாமன்சாரா ஹைட்ஸ் குடியிருப்பு பகுதிக்கு வாடகைக் காரில் சென்றனர். அப்போது ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு பி. பாலசுப்பிரமணியம் எனும் தனியார் துப்பறிவாளர் பாதுகாவலராக இருந்தார்.
அவரிடம் ரசாக் பகிந்தாவைப் பற்றி விசாரித்தார்கள். தனக்கு எதுவும் தெரியாது என்று பாலசுப்பிரமணியம் சொன்னார். அவருக்கு தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். மலாயா ஓட்டலுக்கு திரும்பியதும் நமீரா கெரில்மா, உரிந்தூயா ஆகிய இருவரையும் இறக்கிவிட்டு அல்தான்தூயா மட்டும் தனியாக வாடகைக் காரில் ரசாக் பகிந்தாவின் இருப்பிடத்திற்குச் சென்றார்.
மனித எலும்புகள்
[தொகு]அதுதான் அல்தான்தூயாவை அவர்கள் கடைசியாகப் பார்த்தது. அதன் பின்னர், அல்தான்தூயா காணாமல் போய்விட்டார். அல்தான்தூயா காணவில்லை என்று காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
2006 நவம்பர் மாதம் 7 ஆம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலாம், புஞ்சாக் நியாகா நீர்த்தேக்கத்திற்கு அருகில் மனித எலும்புகளின் சிதறல்களும், மனிதத் தசைகளின் சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஞிழிகி மூலம் மரபணுச் சோதனை செய்யப்பட்டது. (DNA analysis) இறுதியில் அந்தச் சிதறல்களும் சிதைவுகளும் அல்தான்தூயாவிற்கு உடையவை என்று உறுதி செய்யப்பட்டது.[11]
காவல்துறையினர் கைது
[தொகு]மலேசியக் காவல்துறையைச் சேர்ந்த மூவர், அல்தான்தூயா கொலைத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரி (30), கார்ப்பரல் சிருல் அசார் உமார் (35) ஆகிய இருவரும் மலேசிய காவல் துறையின் மேல்தட்டுச் சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தச் சிறப்பு நடவடிக்கைக் குழுவை எதிர்ப் பயங்கரவாதக் குழு என்று அழைப்பதும் உண்டு.
இவர்கள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் மெய்க்காவலர்கள் ஆகும். கொலை நிகழ்ச்சியின் போது நஜீப் துன் ரசாக், மலேசியாவின் தற்காப்பு அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தார். அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ரசாக் பகிந்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்ற விசாரணை
[தொகு]நீதிபதி:
- முகமட் சாக்கி முகமட் யாசின்
அரசு தரப்பு வழக்குரைஞர்கள்:
- துன் அப்துல் மாஜீட் துன் ஹம்சா
- மனோஜ் குருப்
- நூரின் பகாருடின்
- ஹனிம் ரஷீட்
- வோங் சியாங் கியாட்
எதிர் தரப்பு வழக்குரைஞர்கள்:
- ஹஸ்மான் அகமட் - அஷீலா (குற்றம் சாட்டப்பட்டவர் - 1)
- குல்டீப் குமார் - அஷீலா (குற்றம் சாட்டப்பட்டவர் - 1)
- கமாருல் ஹிஷாம் கமாருடின் - சிருல் (குற்றம் சாட்டப்பட்டவர் - 2)
- ஹச்னால் ரெசுவா மெரிக்கான் - சிருல் (குற்றம் சாட்டப்பட்டவர் - 2)
- அகமட் சாய்டி சைனல் - சிருல் (குற்றம் சாட்டப்பட்டவர் - 2)
- வோங் கியான் கியோங் - ரசாக் பகிந்தா (குற்றம் சாட்டப்பட்டவர் - 3)
கண்காணிப்பு வழக்குரைஞர்கள்:
- கர்ப்பால் சிங்
- ராம்கர்ப்பால் சிங்
- சங்கீட் கவுர் டியோ
தீர்ப்பு
[தொகு]2007 ஜூன் 4ஆம் தேதி, ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்தில் அல்தான்தூயா கொலைவழக்கு தொடங்கியது. 2008 அக்டோபர் 31ஆம் தேதி, கொலைவழக்கில் இருந்து ரசாக் பகிந்தா விடுதலை செய்யப்பட்டார். தலைமை இன்ஸ்பெக்டர் அசீலா ஹாட்ரியும், கார்ப்பரல் சிருல் அசார் உமாரும் எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டனர்.
ரசாக் பகிந்தாவின் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு போதுமான சான்றுகள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால், இதுவரையிலும் முறையீடு எதுவும் செய்யப்படவில்லை.
ரசாக் பகிந்தா விடுதலை
[தொகு]விடுதலையான ரசாக் பகிந்தா, முதல் வேலையாகத் தன்னுடைய முனைவர் பட்டத்தை ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். அதே போல 2009 ஜூன் மாத 12ஆம் தேதி, அனைத்துலக உறவுகளின் தத்துவத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
2009 ஏப்ரல் 9ஆம் தேதி நீதிமன்றம் அல்தான்தூயா கொலைவழக்கின் தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் தன்னை விடுதலை செய்யும்படி சிருல் அசார் உமார் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். ஓர் உயர்மட்டக் கொலைவழக்கில் தான் பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் சொன்னார்.
283 பக்கங்களில் எழுதப்பட்ட தீர்ப்பின கடைசி நான்கு பக்கங்கள் மட்டும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் கூடியிருந்த குற்றவாளியின் உறவினர்கள் கதறி அழுதனர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் பேசுவதில் இருந்து தடை செய்யப்பட்டனர்.
இருவருக்கு தூக்குத்தண்டனை
[தொகு]நீதிமன்றத்தில் மங்கோலிய மொழிபெயர்ப்பாளர் எங்ஜார்கால் தெட்ஸ்கி என்பவரும் இருந்தார். குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டு காவல்துறையினருக்கும் தூக்குத் தனடனை வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படும் போது, அல்தான்தூயாவின் தந்தையார் மங்கோலியாவில் இருந்தார். அவருக்கு நீதிமன்றத் தீர்ப்பு, குறும் செய்திகள் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலைவழக்கில் பல சாதனைகள் இடம் பெற்றுள்ளன.
மலேசிய நீதிமன்ற வரலாற்றில், இந்த அல்தான்தூயா கொலைவழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்ற வழக்கு எனும் சாதனையைப் பதித்தது. 165 நாட்கள் நடைபெற்ற இந்த கொலைவழக்கில், அரசு தரப்பில் 84 பேரும், எதிர்தரப்பில் 198 பேரும் விசாரணை செய்யப்பட்டனர். 433 சாட்சிப் பொருள்கள் காட்சிப் பொருள்களாகக் காட்சி படுத்தப்பட்டன.
ரசாக் பகிந்தா விடுதலை செய்யப்படுவதற்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பிடித்தன. முதல் குற்றவாளி அசீலா ஹாட்ரி 891 நாட்கள் சுங்கை பூலோ சிறைச்சாலையில் காவலில் தடுத்து வைக்கப்பட்டார். சிருல் அசார் உமார் 895 நாட்களும் காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். இருவரும் மேல் முறையீடு செய்தனர்.[12] எதிர்வரும் 2013 ஜூன் மாதம் 11ஆம் தேதி இவர்களின் வழக்கு விசாரணை, மலேசிய மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றது.
குற்றவாளிகள் விடுதலை
[தொகு]தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட காவல்துறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் இன்ஸ்பெக்டர் அசிலா அட்ரி, முன்னாள் காபரல் சிருள் அசார் ஆகியோரின் மேன்முறையீடு மீதான அத் தீர்ப்பு 2013, ஆகத்து 23 இல் வழங்கப்பட்டது. குற்றவாளிகள் மீது எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்களை முன்வைக்காததால் அவ்விருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.[13][14]
இறுதி தகவல்கள்
[தொகு]ரசாக் பகிந்தாவின் வீட்டிற்கு தனியார் துப்பறியும் பாதுகாவலராக இருந்த பி. பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 2013 மார்ச் 15ஆம் தேதி, சிலாங்கூர், ரவாங் நகரில் இருக்கும் அவருடைய இல்லத்தில், மாரடைப்பால் காலமானார்.
அல்தான்தூயா கொலைவழக்கில், மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கும் தொடர்பு இருக்கிறது என்று பாலசுப்பிரமணியம் 2008 ஜூலை மாதம் 3ஆம் தேதி சத்தியப் பிரமாணம் செய்தார். அந்தச் சத்தியப் பிரமாணம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள் அந்தச் சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொண்டார்.
காணொளித் தொகுப்பு
[தொகு]- யூடியூபில் Submarines and murder: 'I can connect the dots'
- யூடியூபில் Who ordered the murder of Altantuya? PI Bala speaks.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mongolian translator named Altantuya Shaariibuu was brutally murdered at the age of 28.
- ↑ "PI points finger at Malaysia No. 2 leader in new twist to Mongolian's murder". International Herald Tribune. 3 July 2008. http://www.iht.com/articles/ap/2008/07/03/asia/AS-Malaysia-Mongolian-Murder.php.
- ↑ The slaying has rocked the political establishment because the analyst, is connected to senior politicians including deputy premier Najib Razak.
- ↑ BERNAMA (2014-06-25). "Kami tak pernah kata bahan letupan C4 diguna untuk bunuh Altantuya". Utusan Borneo (in மலாய்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-29.
- ↑ Azilah, 34, and his colleague Corporal Sirul Azhar Umar, 39, were sentenced to death on April 9, 2009, after the judge found them guilty of killing Altantuya at a jungle clearing.
- ↑ "Policemen to die in Malaysian case". BBC News. 9 April 2009. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7991132.stm.
- ↑ Shariibuu, who is also National University of Mongolia's Centre of Information and Education director.
- ↑ Altantuya, who was a socialite by then, married S. Khunikhuu, the son of a famous designer.
- ↑ Tun Abdullah Ahmad Badawi pernah memanggil kepimpinan tertinggi polis berhubung tuduhan timbalannya, Datuk Seri Najib Tun Razak terbabit dalam pembunuhan penterjemah Mongolia, Altantuya Shaariibuu.
- ↑ Malaysian PM caught up in murder, bribery scandal.
- ↑ Police find bone fragments, believed to belong to Ms Shaariibuu at a ditch in a secluded area near a dam in Puncak Alam.
- ↑ Court to hear ex-policemen's appeal over Mongolian woman's murder.
- ↑ Malaysia court overturns Mongolia model murder convictions, பிபிசி, August 23, 2013
- ↑ Malaysia court overturns convictions in grisly, high-profile model's murder பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம், ராய்ட்டர்ஸ், August 23, 2013