பெர்சே பேரணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்சே பேரணிகள் மலேசிய எதிர்க்கட்சிகளும் அரசு சார்பற்ற அமைப்புகளும் இணைந்து நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக நடத்திய பேரணிகளைக் குறிக்கிறது. பெர்சே என்பதற்கு மலாய் மொழியில் "தூய்மை" எனப் பொருள்படுவதாகும். குறிப்பாக இந்தக் கூட்டணி கோரும் சீர்திருத்தங்கள்:

  • அழியா மை பயன்படுத்தி ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே இடுமாறு செய்தல்.
  • வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்து இறந்தவர்களையும் செல்லாத தரவுகளையும் நீக்குதல்.
  • தவறாகப் பயன்படுத்துதல் எளிதாக இருப்பதால் அஞ்சல் வாக்குகள் நீக்கப்பட வேண்டும்.
  • மிக முக்கியமாக அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களில் சமமான வாய்ப்பளித்தல்

இதன் தற்போதைய தலைவராக முன்னாள் வழக்கறிஞர் கழக தலைவர் அம்பிகா சீனிவாசன் இயங்கி வருகிறார்.

பெர்சே 1.0[தொகு]

பெர்சே 1.0 பேரணி, மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு, நவம்பர் 23 ஆம் திகதி நடைபெற்றது. அந்தப் பேரணிக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ். அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கியத் தலைவர்களாகத் தலைமை தாங்கினார்கள்.

பெர்சே 2.0[தொகு]

நவம்பர் 10, 2007 இல், பெர்சே ஒரு பேரணியை கோலாலம்பூரின் டாத்தாரான் மெர்டெக்கா எனும் விடுதலை சதுக்கத்திலும், இஸ்தானா நெகாரா எனும் தேசிய அரண்மனையிலும் அனுமதியின்றி நடத்தியது. ஏறக்குறைய 50,000 பேர் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கு அம்பிகா சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா. ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்தச் சட்ட விரோதப் பேரணியில் கலந்து கொண்டவர்களை, மலேசியக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். இரு பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூலை 9, 2011[தொகு]

தனது முதல் பேரணியை அடுத்து தேர்தல் ஆணையராக இருந்த அப்துல் ரசீத் அப்துல் ரகுமானின் பதவியை அரசு நீட்டித்தால் மீண்டும் தெருப்போராட்டங்களில் ஈடுபடுவோமென பெர்சி அறிவித்தது. நவம்பர் 20, 2007 அன்று பிரதமரின் துறை அமைச்சர் நசிரி அசீஸ் தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் ஓய்வு வயதை 65இலிருந்து 66ஆக மாற்றும் அரசியலமைப்பு திருத்தம் சட்டவரைவை கொண்டு வந்தார். இதனை நாடாளுமன்றம் திசம்பர் 11 அன்று நிறைவேற்றியது.[1]

இதனால் 2012ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மலேசிய தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக பெர்சி தனது தெருப் போராட்டத்தை சூலை 9, 2011க்கு திட்டமிட்டது. இந்தத் திட்டங்களை அரசு மற்றும் அரசு சார்பு அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன; இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே பல பெர்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னருடன் இது குறித்து உரையாட அனுமதி கிடைத்த பின்னர், பெர்சி தெருக்களில் பேரணி நடத்துவதற்கு மாற்றாக உள்ளரங்கம் ஒன்றில் நடத்த சூலை 5, 2011 அன்று உடன்பட்டது. [2][3]

மெர்டெகா விளையாட்டரங்கத்தில் நடந்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஆயினும் இவர்கள் விளையாட்டரங்கினுள் கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல பெர்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள், அம்பிகா உட்பட, கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் 1400க்கும் கூடுதலானவர்களை கைது செய்துள்ளது.

பெர்சே 3.0[தொகு]

பெர்சே 3.0 பேரணி 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம் ஆகும். 250,000 பேர் கலந்து கொண்டனர்[சான்று தேவை]. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள் அம்பிகா சீனிவாசன் தலைமையில் அணிவகுத்து நின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சே_பேரணிகள்&oldid=3350694" இலிருந்து மீள்விக்கப்பட்டது