அனைத்துலக முறை அலகுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(SI இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இதுவும் அனைத்துலக அலகும் ஒன்றல்ல.
அனைத்துலக முறை அலகுகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய குறும்புத்தகத்தின் அட்டைப்படம்

அனைத்துலக முறை அலகுகள் (International System of Units) என்பன எடை, நீளம் போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் தரம் செய்யப்பட்ட அலகுகளாகும். இம்முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Système International d'Unités என்பதனைக் குறிக்கும். இவ்வலகுகள் உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஓரளவுக்குப் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல்-விற்றல் போன்றவைகளுக்கும் பயன்படுகின்றன.

இந்த SI முறை அலகுகள் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அடிப்படையில் ஆன மெட்ரிக் முறையிலிருந்து 1960ல் உருவாக்கப்பட்டது. இந்த அனைத்துலக முறையில் பல புதிய அலகுகளும், அளவியல் வரையறைகளும் உண்டாக்கப்பட்டன. இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை.

அலகுகள்[தொகு]

அனைத்துலக முறை அலகுகள் பலவும் முன்னொட்டுகள் கொண்டவை. அலகுகள் இரு பிரிவாக உள்ளன. முதலில் அடிப்படையான ஏழு அலகுகள் உள்ளன. இவை தவிர SI அலகுகள் அல்லாதன சிலவும் SI அலகுகளுடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடியவை உள்ளன, இவை வழிநிலை அளவுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வடிப்படை அலகுகளைக்கொண்டு பிற அலகுகள் வருவிக்கப்படுகின்றன. அடிப்படையான ஏழு அலகுகளில், ஆம்பியரும் கெல்வினும் அறிவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதால் ஆங்கிலத்தில் குறிப்பிடும்பொழுது தலைப்பு அல்லது பெரிய (Captial) எழுத்துக்களில் குறிப்பிடப்படும். ஏனையவை ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன. ஏழு அடிப்படை அளவுகளில் இருந்து 22 வழிநிலை அளவுகள் தருவிக்கப் படுகின்றன.[1]

SI அடிப்படை அலகுகள்
அலகின் பெயர் அலகின் தமிழ்ப்பெயர் குறியீடு தமிழில் குறியீடு அளபுரு தமிழில் அளபுரு
Kilogram கிலோகிராம் kg கிகி Mass பொருண்மை
Second நொடி s நொ Time நேரம்
Meter மீட்டர் m மீ Length நீளம்
Ampere ஆம்பியர் A ஆம்ப் Electrical Current மின்னோட்டம்
Kelvin கெல்வின் K கெ Temparature வெப்பநிலை
Mole மோல் mol மோல் Amount of Substance பொருளின் அளவு
Candela கேண்டெலா cd கேண்டெ Luminous Intensity ஒளிச்செறிவு

அடிப்படை அலகுகள் - இன்னொரு அட்டவணை[தொகு]

SI அடிப்படை அலகுகள்[2]
பெயர் குறியீடு அளவு
மீட்டர் m நீளம்
கிலோகிராம் kg பொருண்மை/நிறை
நொடி s காலம்
ஆம்பியர் A மின்னோட்டம்
கெல்வின் K வெப்பநிலை
கேண்டெலா cd ஒளிச்செறிவு
மோல் mol பொருளின் அளவு
SI துணை அலகுகள்
பெயர் குறியீடு அளவு
ஆரையன் rad தளக்கோணம்
திண்ணாரையன் sr திண்மக்கோணம்

ஆரையன் மற்றும் திண்ணாரையன் ஆகியவை 1995ஆம் ஆண்டு வரை துணை அளவுகளாக இருந்தன, அதன் பிறகு அவை வழிநிலை அளவுகளாக மாற்றப்பட்டுள்ளன.[3]

வழிநிலை அளவுகள்[தொகு]

சில அடிப்படை அலகுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் மதிப்புகளால் வழிநிலை அளவுகள் பெறப்படுகின்றன. இங்கு சில வழிநிலை அளவுகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

இயற்பியல் பண்பு சமன்பாடு அலகு (தமிழில்) அலகு (ஆங்கிலத்தில்)
பரப்பு நீளம்xஅகலம் மீ2 m2
பருமன் பரப்புxஉயரம் மீ3 m3
விரைவு இடப்பெயர்ச்சி/காலம் மீ நொ−1 m s−1
முடுக்கம் விரைவு/காலம் மீ நொ−2 m s−2
அடர்த்தி நிறை/பருமன் கிகி மீ−3 kg m−3
உந்தம் நிறைxவிரைவு கிகி மீ நொ−1 kg m s−1
விசை நிறைxமுடுக்கம் கிகி மீ நொ−1 (அல்லது) நியூட்டன் kg m s−2 (or) N (or) newton
மின்னூட்டம் மின்னோட்டம்xகாலம் ஆம்பியர் நொ A s

அனைத்துலக முறை அலகுகளின் (SI) தரம் செய்யப்பட்ட முன்னொட்டுகள்

SI-அலகு முன்னொட்டுகள்
பெயர் யோட்டா
(yotta)
சேட்டா
(zetta)
எக்சா
(exa)
பேட்டா
(peta)
டெரா
(tera)
கிகா
(giga)
மெகா
(mega)
கிலோ
(kilo)
எக்டோ
(hecto)
டெக்கா
(deca)
முன்னொட்டு எழுத்து Y Z E P T G M k h da
பெருக்கும் மதிப்பு 1024 1021 1018 1015 1012 109 106 103 102 101
பெயர் டெசி
(deci)
சென்ட்டி
(centi)
மில்லி
(milli)
மைக்ரோ
(micro)
நானோ
(nano)
பிக்கோ
(pico)
ஃவெம்ட்டோ
(femto)
அட்டோ
(atto)
செப்ட்டோ
(zepto)
யோக்டோ
(yocto)
முன்னொட்டு எழுத்து d c m µ n p f a z y
பெருக்கும் மதிப்பு 10−1 10−2 10−3 10−6 10−9 10−12 10−15 10−18 10−21 10−24

அலகுகளைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்[தொகு]

அலகுகளை ஆங்கிலத்தில் குறியீடுகளாகவோ முழுமையாகவோ பயன்படுத்தும் போது சில மரபுகளும் விதிகளும் பின்பற்றப்படுகின்றன.[4] அவை,

 • அறிவியல் அறிஞர்களின் பெயர்களை அலகுகளாக எழுதும் போது முதல் எழுத்தை பெரிய எழுத்தாக எழுதக்கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
  • (எ.கா:) விசையின் அலகை எழுதும் போது Newton என எழுதக் கூடாது, newton என எழுத வேண்டும்.
 • அறிவியல் அறிஞர்களின் பெயர்களினால் ஆன அலகுகளைக் குறியீடுகளாக எழுதும் போது பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
  • (எ.கா:) விசையின் அலகை குறியீட்டால் எழுதும் போது N எனக்குறிப்பிட வேண்டும். n எனக்குறிப்பிடக் கூடாது.
 • அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை எழுதும் போது பெரிய எழுத்தால் எழுதக் கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
  • (எ.கா:) நீளத்தின் அலகை எழுதும் போது m எனக்குறிப்பிட வேண்டும், M என எழுதக் கூடாது.
 • அலகுகளின் குறியீடுகளைப் பன்மையில் எழுதக் கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
  • (எ.கா:) நீளத்தைக் குறிக்கும் போது 324 km எனக் குறிப்பிட வேண்டும், 324kms எனக் குறிப்பிடக் கூடாது.
 • அலகுகளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலோ எந்தக் குறிகளும் இடக் கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
  • (எ.கா:) 250 kg எனக் குறிப்பிட வேண்டும். 250 kg. அல்லது 250 kg, என்றெல்லாம் எழுதக் கூடாது.
 • அலகுகளின் குறியீடுகளை வகுக்கும் போது மட்டும் சரிவுக்கோடுகளைப் (/) பயன்படுத்தலாம். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட சரிவுக் கோடுகளைப் பயன்படுத்தக் கூடாது.
  • (எ.கா:) J/K/mol என்று பயன்படுத்தக் கூடாது, இதனை JK −1mol−1 என்று எழுத வேண்டும்.
 • எண்ணிற்கும் அலகின் குறியீட்டிற்கும் இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
  • (எ.கா:) 486km என்று எழுதக் கூடாது, 486 km என்று எழுத வேண்டும்.
 • அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட அலகுகளை எழுதும் போது அவற்றின் இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
  • (எ.கா:) kgms−2 என்று எழுதக் கூடாது, இதனை எழுதும் சரியான முறை kg m s−2 ஆகும்.
 • தரப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாமாக சுருக்கம் செய்து குறியீடுகளைப் பயன்படுத்தக் கூடாது.
  • (எ.கா:) second என்பதை sec என்று பயன்படுத்தக்கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே). ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடான s என்பதையே பயன்படுத்த வேண்டும் (இதுவும் ஆங்கிலத்தில் மட்டுமே; எடுத்துக்காட்டாக உருசிய மொழியில் இது с என்று குறிக்கப்பெறும்).

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

 1. எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 223
 2. Barry N. Taylor & Ambler Thompson Ed.. The International System of Units (SI). Gaithersburg, MD: National Institute of Standards and Technology. பக். 23. http://physics.nist.gov/Pubs/SP330/sp330.pdf. பார்த்த நாள்: 2008-06-18. 
 3. எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 225
 4. பதினோராம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் இயற்பியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 18