பேச்சு:அனைத்துலக முறை அலகுகள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்துலக முறை அலகுகள் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

‘அனைத்துலகம்’ என்றுக் குறிப்பிடுவது சரியானது தானா என்று சிந்திக்க வேண்டும். நமக்குத் தெரிந்த வரையில் இந்த அலகுகள் நமது உலகத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அப்படி இருக்க, எல்லா உலகங்களிலும் பயன்படுத்தப்படும் என்றப் பொருளைத் தரும் அனைத்துலக என்ற சொல் பொருத்தமற்றது. உலக அலகு முறைகள், பன்னாட்டு அலகு முறைகள், சர்வதேச அலகு முறைகள் போன்றப் பொருத்தமான தலைப்புகளில் ஒன்றிற்கு இக்கட்டுரையை நகர்த்துமாறு வேண்டுகிறேன். −முன்நிற்கும் கருத்து Aravind.rec (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அனைத்துலகம் என்பது முழு உலகு (க்குமான) என்று பொருள்படும். உலக அலகு முறை என்றும் கூறலாம். முறை அலகு என்னும் சொல்லாட்சி முறை செய்த அலகு என்னும்பொருளைத் தரும். அதாவது சீர்தரம் செய்த அலகு என்று பொருள் தரும். அனைத்துலக முறை அலகுகள் என்பது சரியான பெயராகத்தான் எனக்கு தெரிகின்றது. மாற்ற வேண்டும் என்றால் உலக முறை அலகுகள் (உலக முறையலகுகள்) என்று மாற்றலாம். பிற பயனர்களின் கருத்தையும் அறியலாம். --செல்வா 05:00, 2 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]
உங்கள் கருத்துக்கு நன்றி செல்வா. முழு என்பது ஒரு முழுமையானப் பொருளைக் குறிக்கும். முழுப்பழத்தையும் தின்றான் என்பது ஒரேயொருப் பழத்தை முழுமையாகச் சப்பிட்டதைத்தான் குறிக்கிறது. அனைத்து, எல்லா, என்றச் சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முழுப் பொருட்களைக் குறிப்பன. அனைத்துப் பழங்களையும் தின்றான் என்ற சொற்றொடரிலிருந்து இதை உணரலாம். எனவே அனைத்துலகம் என்பது முழு உலகு என்றப் பொருளைத் தராது. நிற்க.
SI என்பது பிரெஞ்சு மொழியில் Le Système International d'Unités என்றும் ஆங்கிலத்தில் International System of Units என்றும் விரிவாக்கப்படுகிறது. இரண்டின் பொருளும் ஒன்றே. இங்கே சீர்தரம் செய்யப்பட்ட என்றப் பொருள் காணப்படவில்லை. உலக முறை அலகுகள் என்பது ஏற்கக்கூடிய சொல்லாட்சியே. metric system -> மெட்ரிக் முறை, என்பது போல் International system -> உலக முறை அல்லது பன்னாட்டு முறை. சொற்களை இணைக்க விரும்பினால், உலக முறையலகுகள் என்பதைவிட உலகமுறை அலகுகள் என்பது சரியாக இருக்கும்.--தாமரைப்பூ 19:31, 2 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]
அனைத்துலக என்பது "International" என்பதற்கு ஈடாக, பரவலாகப் பயன்படுத்தும் சொல். எடுத்துக்காட்டாக அ. கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியில் "International Date Line" என்னும் சொற்றொடருக்கு அனைத்துலக நாட்கோடு என்று குறிக்கப்பட்டுள்ளது. "க்ரியாவின்" தற்கால அகராதி, அனைத்து என்னும் சொல்லுக்குத் தரும் பொருளில் எடுத்துக்காட்டுத் தொடராக அனைத்துலக எழுத்தாளர்கள் என்பதனையும் தருகின்றார்கள். "க்ரியாவின்" தற்கால அகராதி, அனைத்து என்பதற்கு "மொத்த, அகில, whole of, all" என்று பொருள் தருகின்றது. அனைத்து என்பதன் பொருள் "முழுவதும், எல்லாம்" என்பது மிக நன்றாக அறியப்பட்டது. எனவே அனைத்துலக என்றால் உலகம் முழுவதற்குமான என்று பொருள். அனைத்தும் என்று உம் பின்னொட்டு இருந்தால், சிறிதளவு வேறு பொருள் கொள்ளும். "மாடுகள் அனைத்தும்", "பழங்கள் அனைத்தும்" என்று பல பொருள்களை மொத்தமாகக் குறிக்கும். இங்கும் கூட எல்லாமும், மொத்தமும் என்னும் பொருளில் வருவதுதான். அனைத்து இந்திய ஆசிரியர்கள் கருத்தரங்கு என்றால், இந்தியா முழுவதிலும் உள்ள ஆசிரியர்களுக்கான அல்லது அவர்கள் பங்குகொள்ளும் கருத்தரங்கு என்பது பொருள். எனவே அனைத்துலக, அனைத்து இந்திய போன்ற ஆட்சிகளில் அனைத்து என்பது முழுவதும் (உலகமோ, இந்தியாவோ) என்பதைச் சுட்டும். அனைத்து இந்திய என்றால் எல்லா இந்தியாக்களும் என்று பொருள் கொள்ளமுடியாது. அனைத்துலக முறை அலகுகள் என்பது சரியே என்பது என் கருத்து. அடுத்ததாக, நீங்கள் "சீர்தரம் செய்யப்பட்ட" என்ற பொருள் காணப்படவில்லை என்று கூறுவது சரியான கூற்று இல்லை. இவை அனைத்தும் சீர்தரம் செய்தவையே (ஒழுங்குபடுத்தித் தேர்ந்து கொண்டவையே). தமிழில் அனைத்துலக முறை அலகுகள் என்னும் பொழுது இயல்பாய் பொருந்திவரும் பொருள். System என்பதற்கு தமிழில் முறை என்றும் கூறுவது வழக்கம். ஆனால் முறை என்பது natural order, standardized system, oragnaized system என்றெல்லாம் பொருள் சுட்டும். அதைத்தான் குறித்தேன். அனைத்துலக முறை அலகுகள் சரியான பெயர், இதனை மாற்ற வேண்டாம். உலக முறை அலகுகள் என்று சுருக்கமாகவும் கூறலாம், ஆனால் அனைத்துலக என்பது உலகப்பொதுமையை ஒருவாறு வலியுறுத்துவது. --செல்வா 01:23, 3 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

இவை சீர்தரம் செய்யப்பட்ட அலகுகளே என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ’International System of Units’ என்பதில் அந்தப் பொருள் இல்லை என்பதையேக் குறிப்பிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதுப் போல் ‘முறை’ என்ற சொல் ஆங்கிலச் சொல் சுட்டாத இந்தச் சிறப்புப் பொருளையும் (standardized system) சுட்டுவது தமிழின் சுவையையும் பெருமையும் உணர்த்துகிறது.

’அனைத்து’ என்ற சொல்லுக்கு வருவோம். இதை இக்கட்டுரைக்கான உரையாடலாக மட்டும் கொள்ளாமல் பொதுவான ஒரு தமிழ்ச் சொல்லின் பயன்பாடு குறித்த ஆய்வாகக் கொள்ளலாம்.

All India என்பதற்கு அனைத்திந்திய, அகில இந்திய போன்ற சொற்களும், ‘of the whole world’ என்பதற்கு அனைத்துலக, அகில உலக போன்ற சொற்களும் பயன்படுத்தப்படுவது முற்றிலும் உண்மையே. ஆனால் அது தமிழ் மரபு அன்று. அந்த ஆட்சி அவசியமும் அன்று. அயராதுத் தமிழ்ப்பணி ஆற்றி வரும் பேராசிரியர் நன்னனின் கருத்தும் இஃதேவாகும். இந்தியாவில்தான் ‘அனைத்திந்திய வானொலி நிலையம்’ என்று சொல்கிறோம். இலங்கையில், ‘இலங்கை வானொலி நிலையம்’ என்று சொல்கிறார்களா அல்லது ‘அனைத்து இலங்கை வானொலி நிலையம்’ என்று சொல்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இல்லை ‘அனைத்து இலங்கை’ என்ற சொல்லாட்சிதான் இருக்கிறதா? தமிழ் மரபை விட்டுவிட்டு ஆங்கில மரபின் வாலைப்பிடித்துச் செல்வதுதான் சிறப்பு என்ற பொருளற்ற எண்ணமே இத்தகையப் பயன்பாடுகள் நிலைப்பெற்றமைக்குக் காரணம். ஆங்கில மரபுப்படி ‘All the world is a stage’ என்பதும், ‘All England Lawn Tennis Club’ என்பதும் சரியாக இருக்கலாம். ஆனால் தமிழ் மரபு அதுவன்று. தமிழக விவசாயிகள் சங்கம், அரியலூர் இளைஞர்ச் சங்கம், என்றுதான் சொல்வதுதான் மரபேத் தவிர அனைத்துத் தமிழக விவசாயிகள் சங்கம் என்றோ, அனைத்து அரியலூர் இளைஞர் சங்கம் என்றோக் குறிப்பிடுவது சரிதானா? அவசியந்தானா? த.வி போன்ற இடங்களில் இப்படிப்பட்டக் குறையுள்ள தமிழை மேலும் வளர விடாமல், அறவே தவிர்க்க வேண்டியதன் அவசியம் நீங்கள் நன்கு அறிந்ததே.

கிரியா அகராதி ‘அனைத்து’ என்பதற்கு ‘அகில’ என்றுப் பொருள் கூறுவதாக எழுதியிருக்கிறீர்கள். அகிலம் என்பது உலகத்தைக் குறிக்கும் சொல். இவ்விரு சொற்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், மேற்கூறியதுப் போல் இதுவும் ஒரு குறையுள்ளப் பயன்பாடே என்றும் எனக்குப்படுகிறது.

இதுக் குறித்து, ஆழ்ந்தத் தமிழறிவும், பன்னாட்டுத் தமிழ்ப் பரிச்சயமும், உயர்ந்தப் பண்பும் கொண்ட த.வி பயனர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

மேலும் ‘international’ என்பது அனைத்து நாடுகளையும் குறிக்கும் சொல் அல்ல. பன்னாட்டு என்பதையே அச்சொல் குறிக்கிறது. இந்த முறை அலகுகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாத நாடுகளும் உண்டு. உதாரணம் அமெரிக்கா. எனவே உலக முறை அலகுகள் என்ற ஆட்சிப் பொதுமையை உணர்த்தவில்லை என்றுக் கருதினால், பன்னாட்டு முறை அலகுகள் என்று ஆளலாம்.--Aravind.rec 05:42, 3 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

அனைத்து என்னும் சொல் பற்றிய பயன்பாடு, மறுமொழி[தொகு]

அரவிந்த்/தாமரைப்பூ, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நல்ல தமிழில் இருக்கவேண்டும் என்னும் உங்கள் நினைப்பே இங்குள்ள எல்லோருடைய நினைப்பும். நான் தமிழறிஞர் நன்னன் அவர்களை மதிப்பவன். எனினும் சில கருத்துகளைச் சொல்ல விழைகிறேன். இந்தியாவை ஒப்பிடும் பொழுது இலங்கை சிறிய நாடு; இந்தியாவைப் போல பல மொழிகளும் பல்வேறு இனங்களும் திரண்ட நாடல்ல. அரியலூரும் சிறிய ஊர், தமிழகமும் சிறிய பகுதியே (இந்தியாவை ஒப்பிடும் பொழுது). எனவே அனைத்து அரியலூர் உழவர்கள் மாநாடு என்று கூற வேண்டியதில்லை. இது தமிழ் நாட்டுக்கும் பொருந்தும். ஆனால் அனைத்திந்திய என்று கூறுவதில் பொருள் உண்டு. இங்கிலாந்தும் சிறிய நாடுதானே, என்றால், அது அவர்கள் வழக்கமாக இருக்கலாம், ஆனால் அவர்களைப் பின்பற்றி நாம் இப்படிக் கூறவில்லை. ஆனால் அனைத்து உருசிய, அனைத்து ஐரோப்பிய, அனைத்து இந்திய என்னும் சொல்லாட்சிகள் நல்ல பொருளுடையதாகவே எண்ணுகிறேன். "அனைத்துலக" என்னும் சொல்லாட்சி அனைத்துலகத்துக்குமான திட்டம் (உலகத்தில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் அத் திட்டத்தை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் உரிமை, ஆனால் திட்டம்/முறை அனைத்துலக திட்டம்/முறை). எனவே அனைத்து என்பது ஏதோ ஒரு வகையில் பெரிய அளவிலான ஒன்றுக்கு "எல்லாமும், முழுவதும்" என்னும் பொருளில் வழங்குவது. உலகம், பன்னாட்டு ஆகிய முன்னொட்டுகளும் இடலாம். பலவற்றை நோக்கிக் கூறும் பொழுது எல்லாம் என்னும் பொருளில் வரும்பொழுது அப்பொருள்களின் பன்மை வடிவம் இருக்கும். எ.கா: அனைத்து கட்சிகள் மாநாடு, தமிழக அனைத்து நீதிபதிகள் கூட்டம். இவை தவிர அனைத்து என்பதற்கு வேறு பொருள்களும் உண்டு. அவை இங்கு கருத்துப் பொருள் இல்லை எனினும், அனைத்து என்னும் சொல்லைப் பற்றியதாகையால் கூறுகிறேன். அனை என்னும் சொல்லின் பொருள் ஒத்த தன்மை என்னும் பொருள்வழி அனை என்றால் "அத்தன்மை" "அவ்வளவு" "அத்தனை" என்று பொருள் தரும். என் அனைய என்றால் என்னைப் போன்ற என்று பொருள். இதன் வழி அனைத்து என்றால் "அத்தன்மையது", "அவ்வளவு" என்னும் பொருள்களும் கொள்ளும். "வட்டம் அனைத்து" என்றால் வட்டத்தைப் போன்றது என்று பொருள். "கடல் அனைத்து" என்றால் கடல் அளவு என்று பொருள். தாமரைப்பூ நான் உங்கள் கருத்துகளைப் பாராட்டுகிறேன், நன்னன் ஐயாவை மதிக்கின்றேன், ஆனால் அருள்கூர்ந்து நடுநின்று இங்கிட்ட கருத்துகளைத் தேர வேண்டுகிறேன் --செல்வா 13:48, 3 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

இந்த உரையாடலின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துக் கொண்டு ஆக்கப்பூர்வமாகப் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. என் கருத்தை மதித்துப் பாராட்டியிருப்பதற்கும் நன்றி.
எனவே அனைத்து என்பது ஏதோ ஒரு வகையில் பெரிய அளவிலான ஒன்றுக்கு "எல்லாமும், முழுவதும்" என்னும் பொருளில் வழங்குவது என்று சொல்லியிருக்கிறீர்கள். பெரிய என்பது ஓர் ஒப்பீட்டு அளவே என்பதை நீங்கள் அறிவீர்கள். இத்தனை சதுர மீ பரப்பளவுக்கு மேல் இருந்தால் ‘அனைத்து’ பயன்படுத்தலாம் என்று இலக்கணம் சொல்ல இயலாது. உலகம், உருசியாவை ஆகியவற்றை ஒப்பிடும் போது இந்தியா சிறியது. அண்ணா நகரை ஒப்பிடும் போது அரியலூர், இலங்கை, தமிழகம் ஆகியவைப் பெரியவை. இவற்றில் எவற்றிற்கு ‘அனைத்து’ சரியானப் பயன்பாடு என்று எவரால் வரையறுக்க இயலும்? முன்புக் கூறியதுப் போல் இது ஆங்கில மோகத்தால் வந்தச் சொல்வழக்கேயாகும். தமிழில் ஆங்கிலக் கலக்காமல் இருந்திருந்தால் இப்படிபட்ட வழக்கு (இழுக்கு!?) தமிழுக்கு வந்திருக்குமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அப்போதும் வந்திருக்கும் என்று உங்களுக்கு ஐயமின்றித் தோன்றினால் தலைப்பை மாற்ற வேண்டாம் என்பதை ஏற்கிறேன்.

அனைத்துலகம், உலகளாவிய, சர்வதேச, பன்னாட்டு[தொகு]

அனைத்துல, சர்வதேச ஆகிய இரண்டும் இப்போது International என்பதற்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது. இரண்டம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய சொற்களாகவே படுகிறது பன்னாட்டு என்பது Multi national என்பதைக் குறிக்கும். இங்கே Multi என்பது வேறு பொருளில் கொள்ள வேண்டும். International என்று பொருள் தராது. எனவே பன்னாட்டு என்பது இங்கே பொருந்தாது. --Natkeeran 03:00, 4 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]