உள்ளடக்கத்துக்குச் செல்

மொழியின் தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இத் தலைப்பு, ஓமோ சாப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது.

மொழியைப் பயன்படுத்தும் வல்லமை, ஓமோ சாப்பியன்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அது, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால் மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக இருப்பதால், இதற்காக அறிவியலாளர்கள் மறைமுகமான முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. முக்கியமானதும், ஆய்வு செய்வதற்குக் கடினமானதாகவும் இருப்பதனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனுடைய தோற்றம் பற்றிச் சார்லசு தார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்த காலத்தில் இருந்தே, இத் தலைப்புப் பெருமளவு கவனத்தை ஈர்த்து வந்திருப்பதுடன், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது.

சில மொழிக் குறியீடுகள்

தற்காலத்தில் தொடக்கநிலை மொழிகள் எதுவும் உலகில் பேசப்படுவது இல்லை என்பதையும், தற்போதைய மொழிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்க சிக்கல்தன்மை கொண்டவையே என்றும் அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.[1] தற்கால மொழிகளுடைய சொற்றொகுதிகளின் அளவும், அவை குறிக்கும் விடயங்களும் பெருமளவில் வேறுபடுகின்ற போதிலும், அவை அனைத்துமே எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான இலக்கணம் முதலியவற்றைக் கொண்டிருப்பதுடன், இதற்குத் தேவையான சொற்களை உருவாக்கவும், மொழிபெயர்க்கவும், தேவையேற்படின் பிற மொழிகளிலிருந்து கடன் பெறவும் கூடிய வல்லமை கொண்டுள்ளன.[2] எல்லாக் குழந்தைகளுமே மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வல்லமையைக் கொண்டுள்ளனர் என்பதுடன் குழந்தைகள் பிறக்கும்போது உயிரியல் அடிப்படையில் எந்த மொழிக்கும் சாதகமான சார்புநிலையைக் கொண்டிருப்பதும் இல்லை.[3] மொழிகளின் படிமலர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள உதவக் கூடிய பல "அரை மொழிகள்" உள்ளன.

மொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மொழியின் தோற்றம் குறித்த முக்கியமான விவாதம், தேவையான உடற்கூற்றியல், நரம்பியல் வல்லமைகள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போதே படிப்படியாக மொழிப் பயன்பாடு ஏற்பட்டதா அல்லது எல்லா வல்லமைமைகளையும் பெற்ற பின்னரே சடுதியாக மொழி தோற்றம் பெற்றதா என்பதாகும்.

தகவல் பரிமாற்றம், பேச்சு, மொழி[தொகு]

பல அறிவியலாளர்கள், பேச்சுக்கும் மொழிக்கும் இடையில் வேறுபாடு காண்கிறார்கள். எடுத்துக் காட்டாகப், பேசும் பறவைகள் மனிதருடைய பேச்சை அவ்வாறே ஒப்புவிக்கக்கூடியவை. எனினும் இது மொழி வல்லமை ஆகாது. இதுபோலவே, மொழிப் பயன்பாட்டுக்கு ஒலி முக்கியமானதும் அல்ல. உடலியல் சைகைகளைப் பயன்படுத்தும் தற்காலச் சைகை மொழிகள் இதற்குச் சான்றாகும்.

தகவல் பரிமாற்றத்துக்கும், மொழிக்கும் இடையிலான வேறுபாடும் முக்கியமானது. எடுத்துக் காட்டாக, வெர்வெட் குரங்குகளின் தகவல் பரிமாற்ற முறைகள் பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.[4] அவை ஏறத்தாழப் பத்து வகையான குரலொலிகளை எழுப்புவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வொலிகளுட் பல கொன்றுண்ணிகள் வருவதைக் குறித்துத் தமது குழுவினருக்கு அறிவிப்பதற்குப் பயன்படுகின்றன. இவ்வொலிகளுள் ஒரு " சிறுத்தை அழைப்பு", ஒரு "பாம்பு அழைப்பு", ஒரு கழுகு அழைப்பு" என்பன அடங்குகின்றன. இவை வெவ்வேறு விதமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுகின்றன. எனினும் இவ்வகைத் தகவல் பரிமாற்றங்கள் அண்மைச் சூழலின் தூண்டல்கள் காரணமான நேரடி நடவடிக்கையே அன்றி உயர்நிலை மொழி அல்ல. மனிதரின் பிடியில் இருந்த மனிதக் குரங்குகளும், தொடக்கநிலைச் சைகை மொழி, குறியீடுகள் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தபோது இவ்வாறான தகவல் தொடர்பு வல்லமைகளை வெளிக்காட்டியுள்ளன. கான்சி போன்ற மனிதக் குரங்குகள் நூற்றுக் கணக்கான குறிகளைக் கற்றுக்கொண்டன. இவை எளிமையான தொடரியல் மற்றும் குறிப்பு முறைமைகளைக் கற்றுக்கொண்டாலும், அவற்றின் தகவல் தொடர்பு முழுமையான மொழியொன்றுக்கு உரிய சிக்கல் தன்மையைக் கொண்டிருக்கவில்லை,

மனித மொழிக்கான உயிரியல் அடிப்படைகள்[தொகு]

இறங்கிய குரல்வளை[தொகு]

இறங்கிய குரல்வளை மனித ஒலியுறுப்புக்களுக்கே உரிய தனித்துவமான அமைப்பு என்றும், இது பேச்சு உருவாக்கத்திற்கும், மொழி உருவாக்கத்துக்கும் அவசியமானது என்றும் முன்னர்க் கருதப்பட்டது. எனினும் இது சில நீர்ப் பாலூட்டிகளிலும், பெரிய மான்கள் போன்ற வேறு உயிரினங்களிலும் காணப்பட்டுள்ளது. அத்துடன், நாய்கள், ஆடுகள், முதலைகள் போன்ற விலங்குகளிலும் அவை ஒலியெழுப்பும்போது, குரல்வளை இறங்குவது கவனிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் குரல்வளை இறங்கியிருப்பது, குரல் வழியின் நீளத்தை அதிகரித்து அவர்கள் உருவாக்கக்கூடிய ஒலி வேறுபாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது.

இறங்கிய குரல்வளைக்கு மொழி தொடர்பற்ற செயற்பாடுகளும் உண்டு. இது விலங்கின் தோற்ற அளவைப் பெருப்பித்துக் (எதிர்பார்ப்பதிலும் குறைவாக சுருதியுடன் கூடிய குரலினூடாக) காட்டுவதற்காகவும் இருக்கலாம். இறங்கிய குரல்வளை பேச்சு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுவதுடன், மனிதர் உருவாக்கக்கூடிய ஒலிகளின் வேறுபாடுகளை அதிகரித்தாலும்கூட, இது இந்த நோக்கத்துக்காகவே படிமலர்ச்சி அடைந்திருக்கக்கூடும் என்று கூறமுடியாது. ஓசர், சொம்சுக்கி மற்றும் ஃபிச் (2002) குறிப்பிட்டதுபோல், முன்னரே இருந்த இவ்வமைப்பை மொழித் தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கவும் கூடும்.

உயர்விலங்கு மொழி[தொகு]

மூளையில் புரோக்காவினதும், வேர்ணிக்கினது அமைவிடங்கள்

காட்டில் பெரிய மனிதக் குரங்குகளின் தகவல் பரிமாற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. அவற்றின் குரல்வளையின் அமைப்பு, மனிதப் பேச்சில் உள்ள பல ஒலிகளை அவை உருவாக்குவதற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால், முன்னர்க் குறிப்பிட்டதுபோல் மனிதரின் பிடியில் இருந்தபோது நூற்றுக்களக்கான குறியீடுகளை அவை கற்றுக்கொண்டன. ,

உயர்விலங்குகளின் மூளையில் உள்ள புரோக்காவினதும், வேர்ணிக்கினதும் பகுதிகள், முகத் தசைகள், நாக்கு, வாய், குரல்வளை என்பவற்றைக் கட்டுப்படுத்துவதோடு, ஒலிகளை அடையாளம் காண்பதற்கும் பொறுப்பாக உள்ளன. உயர்விலங்குகள் குரல் அழைப்புக்களை எழுப்புவது அறியப்பட்டுள்ளது. இவ்வழைப்புக்கள், மூளைத்தண்டிலும், லிம்பிக் தொகுதியிலும் உள்ள சுற்றுக்களால் உருவாக்கப்படுகின்றன.[5]

வேர்வெட் குரங்குகள், ஏறத்தாழப் பத்து விதமான குரல் ஒலிகளை எழுப்புவதாகவும், அவற்றில் பல கொன்றுண்ணிகளின் வரவை அறிவிப்பன என்றும் முன்னர் குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு விதமான அழைப்புக்கும், இக் குரங்குகள் வெவ்வேறு விதமான பதில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன எனவும் அறியப்பட்டுள்ளதோடு, பதிவு செய்யப்பட்ட ஒலிகளையும், ஒலிபெருக்கிக்களையும் பயன்படுத்திச் செய்த சோதனைகளில் எதிர்பார்த்த வகையான செயற்பாடுகளை அறிவியலாளர்கள் அக் குரங்குகளிடம் கண்டுள்ளனர். ஒரு குட்டிக் குரங்கு அழைப்பின்போது, தாய் குழந்தையை நோக்கித் திரும்ப, பிற குரங்குகள் தாய் என்ன செய்யப் போகிகிறது என்று பார்ப்பதற்காகத் தாயை நோக்கித் திரும்புகின்றன.[6]

தொல் ஓமினிடுகள்[தொகு]

தொல் ஓமினிடுக்களின் மொழி வல்லமை குறித்துப் பலவிதமான ஊகங்கள் நிலவுகின்றன. உடற்கூற்றியல் அடிப்படையில், சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஓமினிட்டுக்கள் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியபோது, மண்டையோட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும், அது கூடிய அளவுக்கு "ட" வடிவம் கொண்ட தொண்டைக் குழியை உருவாக்கியிருக்கும் என்றும், சில அறிஞர்கள் நம்புகின்றனர். தொண்டைக்குழியின் வடிவமும், கழுத்துல் குரல்வளை ஒப்பீட்டளவில் கீழே அமைந்திருப்பதும் மனிதர் இன்று ஒலிக்கும் பல ஒலிகளைச், சிறப்பாக உயிரொலிகளை உருவாக்குவதற்கான முன்தேவைகள் ஆகும். வேறு சில அறிஞர்கள், குரல்வளையில் அமைவிடத்தை வைத்து நோக்கும்போது நியண்டர்தால்கள் கூட மனித மொழியின் எல்லா ஒலிகளையும் உருவாக்கத்தக்க உடற்கூற்றமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்கின்றனர்[3][7] இன்னும் சிலரோ குரல்வளை இறக்கம் பேச்சு உருவாக்கத்துடன் எவ்வித தொடர்பும் அற்றது என்கின்றனர்.[8]

டெரெக் பிக்கெர்ட்டன் என்னும் மொழியியலாளரின் கருத்துப்படி, ஓர் அடிப்படை முந்து மொழி, திருந்தாத வடிவம் கொண்ட ஒரு தகவல் பரிமாற்றமாக இருந்ததுடன், பின்வரும் அம்சங்களையும் கொண்டிராத ஒன்றாக இருந்தது:

 • முழு வளர்ச்சியடைந்த தொடரியல்
 • காலம், துணைவினைகள் முதலியன
 • ஒரு closed-class (i.e. non-lexical) சொற்றொகுதி

இது பெரிய மனிதக் குரங்கு மொழிக்கும், மனித மொழிக்கும் இடைப்பட்ட ஒரு நிலை ஆகும். "ட" வடிவத் தொண்டைக்குழி போன்ற உடற்கூற்றியல் அம்சங்கள் சடுதியாகத் தோன்றாமல் படிப்படியாகவே வளர்ந்து வந்துள்ளன.[9] இதனால், தொல் மனிதர்கள், பிற தொல் உயர் விலங்குகளுக்கும், தற்கால மனிதருக்கும் இடைப்பட்ட தகவல் பரிமாற்ற வடிவங்களைக் கொண்டிருந்திருப்பது சாத்தியமானதே.[10]

நியண்டர்தால்கள்[தொகு]

2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நியண்டர்தாலின் நாவடி எலும்பு ஒன்று, நியண்டர்தால்கள் தற்கால மனிதர்களுடையதை ஒத்த ஒலிகளை எழுப்புவதற்கான வல்லமையைக் கொண்டிருக்கக்கூடும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. நாவடிக் கால்வாய் ஊடாகச் செல்லும் நாவடி நரம்பு, நாக்கின் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. அதன் அளவு, பேச்சு வல்லமையை எடுத்துக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒமினிட்டுக்களுடைய நாவடிக் கால்வாய் தற்கால மனிதருடையதைக் காட்டிலும், சிம்பன்சிகளுடைய நாவடிக் கால்வாய்களையே கூடிய அளவுக்கு ஒத்திருந்தது.[11][12][13]

நியண்டர்தால்கள் பேசுவதற்குரிய உடற்கூறுகளைக் கொண்டிருந்திருப்பினும் அவர்கள் ஒரு முழுமையான மொழியைக் கொண்டிருந்திருப்பார்கள் என்பது ஐயத்துக்கு உரியதே என 2004 ஆம் ஆண்டில் இரிச்சட்டு சி. கிளெயின் (Richard G. Klein) என்பார் கூறியுள்ளார். இவரது ஐயம் பெரும்பாலும், தொல் மனிதரின் புதைபடிவப் பதிவுகளையும், அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஓமோ அபிலிசுகள் தோன்றியதிலிருந்தான சுமார் 2 மில்லியன் ஆண்டுகளில் கற்கருவித் தொழில்நுட்பம் மிகவும் குறைந்த அளவிலேயே மாற்றம் கண்டுள்ளது. பண்டைக்காலக் கற்கருவிகள் தொடர்பில் விரிவான ஆய்வுகளைச் செய்த கிளெயின், அக் கருவிகளை அவற்றின் பயன்பாட்டு அடிப்படையில் வகைப்படுத்த முடியாதிருப்பதாகவும், அக் கருவிகளின் இறுதி வடிவம் குறித்து நியண்டர்தால்கள் அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் அடிப்படையில், உடற்கூறுகள் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தால் கூட நியண்டர்தால்களின் மூளை தற்கால மொழிகளையொத்த மொழியொன்றைப் பேசுவதற்கான சிக்கல் தன்மையைக் கொண்டிருந்திருக்க முடியாது எனக் கிளெயின் கருதுகிறார்.[14][15] நியண்டர்தால்களின் பண்பாடு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்தன்மை குறித்த விடயம் இன்னும் சர்ச்சைகளுக்கு உரியதாகவே உள்ளன.

ஓமோ சாப்பியன்சு[தொகு]

உடற்கூற்றியல் அடிப்படையிலான தற்கால மனிதனின் மிகப் பழைய புதைபடிவப் பதிவுகள் எதியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அப்பகுதியில் மனிதர்கள் சுமார் 195,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. உடற்கூற்றியலின் அடிப்படையில் தற்கால மனிதர்களை ஒத்திருந்தாலும், தொல்லியல் சான்றுகளின்படி அவர்களுடைய நடத்தைகள் முந்திய ஓமினிடுகளிலும் அதிகம் வேறுபட்டிருந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் முன்னரைப் போன்றே செப்பமற்ற கற்கருவிகளைப் பயன்படுத்தி வந்ததோடு, ஒப்பீட்டளவில் செயல்திறன் குறைந்த முறைகளைப் பயன்படுத்தியே வேட்டையாடி வந்தனர்.[16] எனினும், இற்றைக்குச் சுமார் 164,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதர்களுடைய நடத்தைகள் கூடிய சிக்கல்தன்மை கொண்டவையாக மாறியிருந்தமைக்கான சான்றுகள் தென்னாபிரிக்காவில் கிடைத்துள்ளன.[17] ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதனுக்குரிய முழுமையான நடத்தைகள் உருவாகிவிட்டதாகக் கருதப்படுகிறது.[16] இக் காலத்தில், கடற்கரையை அண்டிய வாழ்க்கை முறைகளுக்கும், ஓட்டு மீன்களை உணவாகக் கொள்ளும் வழக்கத்துக்கு ஏற்ற கருவிகளின் சிக்கல்தன்மை வளர்ச்சிக்கும் சான்றுகள் தென்படுகின்றன. இந்த வாழ்க்கைமுறை, பனிக்கட்டிக்கால நிலைமைகளோடு தொடர்புடைய தட்பவெப்ப வாழிடச் சூழல் அழுத்தங்களுக்கான ஒரு எதிர்வினையாக இருக்கக்கூடும். இக்காலத்திய கற்கருவிகள் துல்லியமாக ஒரேமாதிரியான வடிவத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டவையாகக் காணப்படுகின்றன. எலும்புகள், விலங்குக் கொம்புகள் போன்றவற்றாலும் கருவிகள் செய்யப்பட்டன. அத்துடன் அக் காலத்துக் கருவிகள், பயன்பாட்டு அடிப்படையில் இலகுவாக வகைப்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளன. அவற்றை, எறிவதற்கான கூர்முனைகள், செதுக்குக் கருவிகள், கத்தி விளிம்புகள், துளைக் கருவிகள் என இலகுவாக அடையாளம் காண முடிகின்றது.[14] பிள்ளைகளுக்கும், பிற குழு உறுப்பினர்களுக்கும், கருவிகளைச் செய்யக் கற்பிப்பது, மொழியின் துணை இல்லாவிட்டால் கடினமானது.[18]

மொழியின் படிமலர்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றம், திருத்தமற்ற, பிட்யின் போன்ற தொடர்புப் பரிமாற்ற முறையிலிருந்து, தற்கால மொழிகளையொத்த இலக்கணத்துடனும் தொடரியல் அம்சங்களுடனும் கூடிய கிரியோல் போன்ற மொழியாக மாறியது ஆகும்.[4] இத்தகைய ஒரு முன்னேற்றம், சடுதியான மரபணு மாற்றம் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய உயிரியல் மாற்றம் மூளையில் ஏற்பட்டிருந்தாலே சாத்தியம் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். FOXP2 போன்ற மரபணு ஒன்று சடுதியான மாற்றத்துக்கு உட்பட்டிருக்கக் கூடும் என்றும், இதனால், மனிதருக்கு மொழியாற்றல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்து உள்ளனர். இத்தகைய ஒரு சடுதியான மாற்றம் 100,000 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்கும், 50,000 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்கும் இடையில் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் எங்கோ ஓரிடத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இது சடுதியாகக் குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்தியதைப் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன.[4] எனினும், மொழி படிப்படியாக ஆயிரக்கணக்கான ஆண்டுக் காலப்பகுதியில் வளர்ந்ததா அல்லது சடுதியாக உருவானதா என்பது இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது.

புரோக்கா பகுதியும், வேர்னிக் பகுதியும் மனித மூளையிலும் காணப்படுகின்றன. முதல் பகுதி அறிதிறன்சார்ந்த (cognitive) செயற்பாடுகளிலும், நிலையான (perceptual) செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. இரண்டாவது மொழித் திறமைக்கு உதவுகிறது. உயர் விலங்கினங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட மூளைத்தண்டு, லிம்பிக் தொகுதி என்பன மனிதரிலும், சிரித்தல் அழுதல் போன்ற பேச்சு அல்லாத ஒலிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இது, மனித மொழியின் மையமாக, எல்லா உயர் விலங்குகளின் மூளையிலும் காணப்படும் நரம்புச் சுற்றுக்களின் மேம்பட்ட ஒரு அமைப்பே என்பதைக் காட்டுகிறது. இந்த மாற்றமும், இதனால் ஏற்பட்ட மொழிசார் தகவல் பரிமாற்றத்துக்கான திறனும் மனிதனுக்கே தனித்துவமான அம்சங்களாகத் தெரிகிறது. இது, மனிதர் உயர் விலங்குக் கால்வழியிலிருந்து பிரிந்த பின்னரே மொழித்திறன் உறுப்புக்கள் அவர்களுக்கு ஏற்பட்டதைக் காட்டுகிறது.[5]

அறிதிறன் வளர்ச்சியும், மொழியும்[தொகு]

மொழியைப் பயன்படுத்துபவர்கள் கொண்டுள்ள முக்கியமான வல்லமை, பேசுபவரால் காணமுடியாத பொருள்களையோ, நிலைகளையோ புலப்படுத்தக்கூடியதாக இருப்பது ஆகும். இந்த ஆற்றல் பொதுவாக மனக் கோட்பாட்டோடு அல்லது, மற்றவர்களும் தன்னைப் போன்று தனிப்பட்ட விருப்புகளோடும் நோக்கங்களோடும் உள்ளவர்களே என்ற உணர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த முறைமையில் ஆறு முக்கியமான அம்சங்கள் உள்ளதாக சொம்சுக்கி, கோசர், பிச் (2002) ஆகியோர் கூறுகின்றனர்:

 • மனக் கோட்பாடு
 • பொருள் / வகை வேறுபாடுபோல, மொழியல்லாத கருத்தாக்கப் பதிலீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வல்லமை
 • தொடர்புபடுத்தல் சார்ந்த வாயொலிச் சைகைகள்
 • அறிவார்ந்த வகையில் வேண்டுமென்றே போலச்செய்தல்
 • வேண்டுமென்றே செய்யும் தகவல் தொடர்புக்குச் சான்றாக சைகை உருவாக்கத்தில் தன்விருப்பக் கட்டுப்பாட்டைக் கொண்டிருத்தல்
 • எண் பதிலீடு

மனக் கோட்பாடு[தொகு]

சைமன் பாரன்-கோகன் என்பார், பின்வரும் இயல்புகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, மனக் கோட்பாடு, மொழிப் பயன்பாட்டுக்கு முன்னரே உருவாகியிருக்கும் எனக் கூறுகிறார்:

 • எண்ணித் தகவல் பரிமாறல்
 • பிழையான தகவல் பரிமாற்றத்தைத் திருத்துதல்
 • கற்பித்தல்
 • எண்ணித் தூண்டுதல்
 • எண்ணி ஏமாற்றுதல்
 • பொதுவான திட்டங்களையும், நோக்கங்களையும் கட்டியெழுப்புதல்

பாரன்-கோகன், சில உயர்விலங்குகள் இந்த எல்லா ஆற்றல்களையும் வெளிக் காட்டாவிட்டாலும், சில ஆற்றல்களையாவது வெளிக்காட்டுகின்றன என்கிறார். கோல், தொமாசெல்லோ ஆகியோர் சிம்பன்சிகளை வைத்து நடத்திய ஆய்வுகள் இக்கூற்றை ஆதரிக்கின்றன. இந்த ஆய்வின்போது மற்றச் சிம்பன்சிகளுக்கு அறிந்துகொள்ளும்தன்மை, அறிவு, விருப்பு என்பவை இருப்பதை ஒவ்வொரு சிம்பன்சியும் புரிந்து கொள்கிறது எனத் தெரியவருகிறது. எனினும் பிழையான நம்பிக்கைகளை அவை புரிந்துகொள்ளவில்லை. பல உயர்விலங்குகள் ஓரளவு மனக் கோட்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவரினும், அது மனிதர்களிடம் இருப்பதுபோல் முழுமையான அளவில் இல்லை. மொழிப் பயன்பாட்டுக்கு மனக் கோட்பாடு தேவை என்பது குறித்து இத்துறையில் ஓரளவு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. எனவே, முழுமையான மனக் கோட்பாட்டு வளர்ச்சியின் பின்னரே, மனிதர்களிடம் மொழிப்பயன்பாடு தோன்றியது எனலாம்.

மொழி அமைப்புக்கள்[தொகு]

பொதுமை இலக்கணம்[தொகு]

பெரும்பாலும் குழந்தைகளே பிட்யினைக் கிரியோலாக்கம் செய்வதில் ஈடுபடுகிறார்கள் என்பதால், மனிதர்கள் தமது மூளையில் பொதுமை இலக்கணத்தைக் கொண்டபடியே பிறக்கிறார்கள் என டெரெக் பிக்கெர்ட்டனும், நோம் சொம்சுக்கியும் முடிவு செய்கிறார்கள். இப்பொதுமை இலக்கணம், உலக மொழிகள் எல்லாவற்றிலும் காணப்படும் பல்வேறு வகையான இலக்கண மாதிரிகளை உள்ளடக்கியுள்ளது. பொதுமை இலக்கணத்தின் இயல்பான அமைப்பு கிரியோல் மொழிகளில் இருப்பதை ஒத்தவை. குழந்தைகள் மொழி கற்கும்போது, இந்த இயல்பிருப்பான இலக்கணங்கள் கற்கும் மொழிக்குப் பொருந்துமாறு பதிலீடு செய்யப்படுகின்றன. குழந்தைகள் மொழியைக் கற்கும்போது கிரியோலை ஒத்த அம்சங்களை, அதோடு முரண்படுபவற்றைக் காட்டிலும் இலகுவாகக் கற்றுக்கொள்கின்றனர்.

பொதுமை இலக்கணக் கோட்பாட்டுக்கு ஆதரவாக அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் நிக்கராகுவா சைகை மொழி உருவாக்கம் ஆகும். 1979 ஆம் ஆண்டில் அப்போது புதிதாகப் பதவியேற்றிருந்த நிக்கராகுவாவின் அரசாங்கம் செவிப்புலனற்ற குழந்தைகளுக்குக் கல்வியளிக்கு பரவலான திட்டம் ஒன்றைத் தொடங்கியது. சிறப்புக் கல்விக்கான மையம் ஒன்று தொடங்கப்பட்டு முதலில் 50 செவிப்புலனற்ற சிறுவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 1983 ஆம் ஆண்டளவில் மையத்தில் 400 சிறுவர்கள் இருந்தனர். உலகத்தின் பிற பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த சைகை மொழிகளைக் கற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் அம்மையத்தில் இருக்கவில்லை. இதனால் அச் சிறுவர்களுக்குச் சைகை மொழி கற்பிக்கப்படவில்லை. ஆனால், மையத்தின் மொழித்திட்டம் எசுப்பானிய மொழி பேசுவதை உதட்டு அசைவுகளைக் கொண்டு அறிந்து கொள்ளக் கற்றுக்கொடுப்பதை முக்கியமான நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்துடன், எழுத்துக்களை விரல்களால் காட்டுவதன் மூலம் எளிமையான எழுத்துக் கூட்டல்களைச் செய்வதற்கும் கற்றுக் கொடுத்தனர். பல மாணவர்கள் எசுப்பானியச் சொற்களின் கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதால் அத் திட்டம் வெற்றிபெற முடியவில்லை.

முதலில் வந்த சிறுவர்கள், தமது குடும்பங்களுக்குள் பயன்படுத்திய சில திருத்தமில்லாத சைகைகளையே அறிந்து வைத்திருந்தனர். ஆனால், சிறுவர்கள் பலர் ஒன்றாக விடப்பட்டபோது ஒவ்வொருவருக்கும் தெரிந்த சைகைகளை வைத்துச் சைகை மொழியை வளர்த்தெடுக்கலாயினர். புதிய இளம் சிறார்கள் சேரச்சேர மொழியும் சிக்கல்தன்மை அடையலாயிற்று. மாணவர்களுடன் தொடர்பு கொள்வதில் அதிகம் வெற்றிபெற முடியாமல் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைக் கண்டு வியப்பு அடைந்தனர்.

பின்னர் நிக்கராகுவா அரசாங்கம், வடகிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்கச் சைகை மொழி வல்லுனரான யூடி கெகில் என்பாருடைய உதவியை நாடியது. கெகிலும் பிற ஆய்வாளர்களும் அச் சைகை மொழியை ஆய்வு செய்தனர். வளர்ந்த சிறுவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பிட்யின் போன்ற மொழியை இளம் சிறுவர்கள் கூடிய சிக்கல்தனமை கொண்ட ஒரு மொழியாக உருவாக்குவதை அவர்கள் கண்டனர்.

குறிப்புக்கள்[தொகு]

 1. Salingaros, Nikos A.; Mehaffy, Michael W. (2006). A theory of architecture. Solingen: Umbau-Verlag. p. 229.
 2. Pinker, Steven (2000). The Language Instinct: How the Mind Creates Language. New York: Harper Perennial Modern Classics. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-060-95833-2.
 3. 3.0 3.1 Aronoff, Mark; Rees-Miller, Janie, eds. (2001). The Handbook of Linguistics. Oxford: Blackwell Publishers. pp. 1–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1405102527.
 4. 4.0 4.1 4.2 Diamond, Jared (1992, 2006). The Third Chimpanzee: The Evolution and Future of the Human Animal. New York: Harper Perennial. pp. 141–167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0060183071. {{cite book}}: Check date values in: |year= (help)
 5. 5.0 5.1 Freeman, Scott; Jon C. Herron., Evolutionary Analysis (4th ed.), Pearson Education, Inc. (2007), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-227584-8 pages 789-90
 6. Wade, Nicholas (2006-05-23). "Nigerian Monkeys Drop Hints on Language Origin". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2007-09-09.
 7. Fitch, W. Tecumseh. "The Evolution of Speech: A Comparative Review" (PDF). Archived from the original (PDF) on 2007-08-09. பார்க்கப்பட்ட நாள் 2007-09-09.
 8. Ohala, John J.. (2000). The irrelevance of the lowered larynx in modern man for the development of speech பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம். In Evolution of Language - Paris conference பரணிடப்பட்டது 2006-10-22 at the வந்தவழி இயந்திரம் (pp. 171-172).
 9. Olson, Steve (2002). Mapping Human History. Houghton Mifflin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0618352104. Any adaptations produced by evolution are useful only in the present, not in some vaguely defined future. So the vocal anatomy and neural circuits needed for language could not have arisen for something that did not yet exist
 10. Ruhlen, Merritt (1994). Origin of Language. New York, NY: Wiley. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471584266. Earlier human ancestors, such as Homo habilis and Homo erectus, would likely have possessed less developed forms of language, forms intermediate between the rudimentary communicative systems of, say, chimpanzees and modern human languages
 11. Jungers, William L. et al. (August 2003). "Hypoglossal Canal Size in Living Hominoids and the Evolution of Human Speech" (PDF). Human Biology 75 (4): 473–484. doi:10.1353/hub.2003.0057. http://www.baa.duke.edu/kay/site/riogallegos/PDFs/j74.pdf. பார்த்த நாள்: 2007-09-10. 
 12. DeGusta, David et al. (1999). "Hypoglossal Canal Size and Hominid Speech". Proceedings of the National Academy of Sciences of the United States of America 96 (4): 1800–1804. doi:10.1073/pnas.96.4.1800. பப்மெட்:9990105. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?artid=15600%094. பார்த்த நாள்: 2007-09-10. "Hypoglossal canal size has previously been used to date the origin of human-like speech capabilities to at least 400,000 years ago and to assign modern human vocal abilities to Neandertals. These conclusions are based on the hypothesis that the size of the hypoglossal canal is indicative of speech capabilities.". 
 13. Johansson, Sverker (April 2006). "Constraining the Time When Language Evolved" (PDF). Evolution of Language: Sixth International Conference, Rome: 152. doi:10.1142/9789812774262_0020. http://www.tech.plymouth.ac.uk/socce/evolang6/johansson_constraining.pdf. பார்த்த நாள்: 2007-09-10. "Hyoid bones are very rare as fossils, as they are not attached to the rest of the skeleton, but one Neanderthal hyoid has been found (Arensburg et al., 1989), very similar to the hyoid of modern Homo sapiens, leading to the conclusion that Neanderthals had a vocal tract similar to ours (Houghton, 1993; Bo¨e, Maeda, & Heim, 1999).". 
 14. 14.0 14.1 Klarreich, Erica (April 20, 2004). "Biography of Richard G. Klein". Proceedings of the National Academy of Sciences of the United States of America 101 (16): 5705–5707. doi:10.1073/pnas.0402190101. பப்மெட்:15079069. http://www.pnas.org/cgi/content/full/101/16/5705#SEC1. பார்த்த நாள்: 2007-09-10. 
 15. Klein, Richard G. "Three Distinct Human Populations". Biological and Behavioral Origins of Modern Humans. Access Excellence @ The National Health Museum. பார்க்கப்பட்ட நாள் 2007-09-10.
 16. 16.0 16.1 Schwarz, J. http://uwnews.org/article.asp?articleID=37362 பரணிடப்பட்டது 2009-05-04 at the வந்தவழி இயந்திரம்
 17. quote "Our findings show that at 164,000 years ago in coastal South Africa humans expanded their diet to include shellfish and other marine resources, perhaps as a response to harsh environmental conditions," said Curtis Marean, a paleoanthropologist with the Institute of Human Origins at Arizona State University who headed the research team "This is the earliest dated observation of this behavior" Schwarz, J. http://uwnews.org/article.asp?articleID=37362 பரணிடப்பட்டது 2009-05-04 at the வந்தவழி இயந்திரம்
 18. Wolpert, Lewis (2006). Six impossible things before breakfast, The evolutionary origins of belief. New York: Norton. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0393064492.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழியின்_தோற்றம்&oldid=3992887" இலிருந்து மீள்விக்கப்பட்டது