உள்ளடக்கத்துக்குச் செல்

கிரியோல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாதலூப்பே கிரியோல் மொழியில் ஒரு வீதி அறிவிப்பு: மெதுவாகச் செல், பிள்ளைகள் இங்கு விளையாடுகிறார்கள்.

கிரியோல் மொழி (creole language) என்பது ஒருவகை உருவாக்க மொழி. ஒருசார் குழுவினர் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்ட வணிகர்கள் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். [1] தமிழில் குழூஉக்குறி என்னும் சொல்வகை உண்டு. குழூஉக்குறி என்பது ஒரு சொல் மட்டுமே. கிரியோல் மொழி வெறும் சொல் அன்று. இது ஒரு முழுமையான மொழி. தமிழில் உள்ள குழூஉக்குறியை ’கிரியோல் சொல்’ என்று குறிப்பிடலாம். கிரியோல் என்பது, பல மொழிகளின் கலப்பினால் உருவான உறுதியான ஒரு மொழியைக் குறிக்கும். கிரியோல் மொழிகளின் சொற்கள் அவற்றின் மூல மொழிகளிலிருந்தே பெறப்படினும், பெரும்பாலும் அவற்றில், ஒலி மாற்றங்களும், பொருள் மாற்றங்களும் இருப்பதைக் காணமுடியும். இலக்கணம் பெருமளவுக்கு மூல மொழிகளின் இயல்புகளைக் கொண்டு இருப்பினும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்படுவதுண்டு.

அறிமுகம்[தொகு]

தேவைகளின் பொருட்டு இரண்டாவது மொழியாகப் பயன்படுத்துவதற்காக வளர்ந்தவர்களால் உருவாக்கப்படும் பிட்யின் மொழி அவர்களின் பிள்ளைகளுக்குத் தாய்மொழியும் முதல் மொழியும் ஆவதனால் கிரியோல் உருவாவதாக நம்பப்படுகிறது. இத்தகைய உருவாக்கமுறையைத் தாய்மொழியாக்கம் எனலாம். இளைய ராபர்ட் ஏ. ஆல் என்பார் பிட்யின் - கிரியோல் சுழற்சி பற்றி 1960 களில் ஆய்வு செய்துள்ளார்.

கிரியோல் மொழிக்கும் அது உருவாவதற்குப் பங்களித்த மூல மொழிகளுக்கும் இடையிலான இலக்கண ஒற்றுமைகளை விட, கிரியோல் மொழிகளுக்கு இடையே கூடிய இலக்கண ஒற்றுமைகள் இருப்பதாகச் சில மொழியியலாளர்கள் கூறுகின்றனர். எனினும், இவ்வாறான ஒற்றுமையை விளக்குவதற்குப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் எதுவும் கிடையாது. மேலும் கிரியோல்களுக்கே தனித்துவமான இலக்கண அம்சங்களும் எதுவும் இல்லை.

இன்று உள்ள பெரும்பாலான கிரியோல் மொழிகள் கடந்த 500 ஆண்டுக் காலப்பகுதியுள் உருவானவை. விரிந்த ஐரோப்பியப் பேரசுகளும், அடிமை வணிகமும் உண்டாவதற்குக் காரணமான கடல் வல்லரசுகளின் உலகளாவிய விரிவாக்கமும், அவர்களது வணிகமும் இதற்குக் காரணமாகும்[2]. அதிகாரத் தகுதியற்ற அல்லது சிறுபான்மை மொழிகளைப்போல கிரியோல் மொழிகளும், அவற்றின் மூல மொழிகளின் சிதைவடைந்த வடிவமாக அல்லது அவற்றின் ஒரு வட்டார வழக்காகக் கருதப்பட்டன. இப்பிழையான கருத்தாக்கம் காரணமாக ஐரோப்பியரின் குடியேற்ற நாடுகளில் உருவான பல கிரியோல் மொழிகள் அழிந்து விட்டன. இருப்பினும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுவரும் அரசியல் மற்றும் அறிவுசார் மாற்றங்களினால் வாழும் மொழிகளாக அவற்றின் நிலை மேம்பட்டிருப்பதோடு, மொழியியல் ஆய்வுகளுக்கான ஒரு விடயமாகவும் இவை ஆகியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Creole languages
  2. Linguistics, ed. Anne E. Baker, Kees Hengeveld, p. 436
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியோல்_மொழி&oldid=3436840" இலிருந்து மீள்விக்கப்பட்டது