சூழலியல் மானிடவியல்
சூழலியல் மானிடவியல் என்பது, மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான, காலம் மற்றும் இடம் சார்ந்த தொடர்புகள் பற்றி ஆராயும் ஒரு மானிடவியல் துறையாகும். இது சூழலை மனித இனம் எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதையும் அதன் விளைவாக ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வு செய்கிறது. சூழலியல் மானிடவியல், பண்பாட்டுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்வதற்கு அமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.[1] மனிதனும் சூழலும் ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் தன்மையிலிருந்தும், இயற்கைக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான ஒன்றிலிருந்து மற்றது பயன்பெறும் தன்மையிலிருந்தும் பெறப்பட்டவைகளே இன்றைய சூழலியல் மானிடவியலின் மையக் கருத்துக்கள் ஆகும்.
சூழலியல் மானிடவியல் ஜூலியன் ஸ்டெவார்டு என்பவரை முன்னோடியாகக் கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட பண்பாட்டுச் சூழலியல் என்னும் மானிடவியலின் துணைத்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து 1960 களில் தோற்றம்பெற்றது. தொடக்கத்திலிருந்தே இது, நிலையியல் சமநிலை மீது அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துவதாகவும், மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், முறைமைகளை அளவுமீறி எளிமைப்படுத்துவதாகவும் பல அறிஞர்களால் குற்றம் சாட்டப்பட்டது. இது பண்பாட்டுச் சார்பியத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் தங்கியிருப்பது தற்காலத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உண்மையான பண்பாட்டுச் சார்பு மக்களினத்தைக் காண்பது அரிது. பண்பாடுகள், ஊடகங்கள், அரசுகள், அரசு சார்பற்ற அமைப்புக்கள், வணிகம் போன்றவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டு மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், சூழலியல் மானிடவியல் துறையும் பயன்பாட்டுச் சூழலியல் மானிடவியல், அரசியல் சூழலியல், சூழல்சார் மானிடவியல் ஆகியவை பக்கம் சாய்ந்து வருகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kottak, Conrad Phillip (2010). Anthropology : appreciating human diversity (14th ed.). New York: McGraw-Hill. pp. 579–584. ISBN 978-0-07-811699-5.