உள்ளடக்கத்துக்குச் செல்

புனித மரபு (கிறித்தவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித மரபு (Sacred tradition) என்பது கிறித்தவ திருச்சபைகள் நடுவே, குறிப்பாக உரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்க சபை, கீழை மரபுவழிச் சபை, கிழக்கு மரபுவழிச் சபை போன்ற சபைகள் நடுவே, திருச்சபை அதிகாரத்துக்கு மையமாகக் கருதப்படுகின்ற அம்சத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல் ஆகும்.

மரபு என்பதன் சொற்பொருள்

[தொகு]

மரபு எனப் பொருள்தரும் tradition என்னும் சொல் இலத்தீன் மொழியின் trado, tradere என்னும் சொல் மூலத்திலிருந்து பிறந்ததாகும். அதற்கு "கையளித்தல்", "ஒப்படைத்தல்", "வாரிசு உரிமையாக விட்டுச் செல்லுதல்" போன்ற பொருள்கள் உண்டு.

கிறித்தவ இறையியலின்படி, மரபு என்பது எழுத்துவடிவில் கையளிக்கப்பட்ட விவிலியத்தையும், அந்த விவிலியத்தில் அடங்கிய போதனைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவோரின் வாழ்வுமுறையையும் உள்ளடக்குவது ஆகும். எனவே மரபு எழுத்துவடிவில் மட்டும் கையளிக்கப்படுவதல்ல; மாறாக, இயேசுவின் வாழ்க்கை மற்றும் திருத்தூதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு, அவற்றின்படி ஒழுகுவோரின் வாழ்வுமுறையும் மரபு ஆகும்.

புனித பவுல் கீழ்வருமாறு கூறுகிறார்:

"நான் கிறிஸ்துவைப்போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள். நீங்கள் எப்போதும் என்னை நினைவுகூர்கிறீர்கள்; நான் உங்களிடம் ஒப்படைத்த மரபுகளை நான் ஒப்படைத்தவாறே கடப்பிடிக்கிறீர்கள்; எனவே உங்களைப் பாராட்டுகிறேன்" (1 கொரிந்தியர் 11:1-2).

மேலும், புனித பவுல் தெசலோனிகருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கீழ்வருமாறு கூறுகிறார்:

:ஆகவே அன்பர்களே! எங்கள் வாழ்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்" (2 தெசலோனிக்கர் 2:15).

இவ்வாறு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கையளிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற "மரபு" "வாழும் மரபு" (living tradition) என அழைக்கப்படுகிறது. "விசுவாசக் கருவூலம்" அல்லது "நம்பிக்கைக் கருவூலம்" (deposit of faith) என்பது இயேசு கிறிஸ்து வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய முழு வெளிப்பாட்டையும் குறிக்கும். இந்த முழு வெளிப்பாடு, விவிலியம் மற்றும் திருச்சபை அந்த விவிலிய அடிப்படையில் போதித்து, கடைப்பிடித்து வருகின்ற ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் தொகுதியான மரபு ஆகியவற்றை உள்ளடக்கும்.

எனவே, மரபு என்பதின் விரிவான பொருளில் விவிலியமும் அடங்கும். ஏனென்றால், விவிலியம் என்பது கிறித்தவ மரபின் "எழுத்து வடிவ" வெளிப்பாடு. விவிலியத்தில் கடவுள் பற்றிய அனுபவங்கள் எழுத்தில் கையளிக்கப்பட்டுள்ளன. எனவே, விவிலியத்தையும் அதன் செய்தியையும் விளங்குவதற்கும் விளக்குவதற்கும் திருச்சபை என்னும் நம்பிக்கைச் சமூகம் தேவை. விவிலியமும் மரபும் கடவுளின் ஏவுதலால் மக்களுக்கு அளிக்கப்பட்டவை. அதாவது, மனிதரின் மீட்புக்காகக் கடவுள் வழங்குகின்ற போதனைகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் விவிலியத்திலும் திருச்சபை மரபிலும் உள்ளன என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை.

பல புரட்டஸ்தாந்து சபைகள் எழுத்துவடிவில் உள்ள கிறித்தவ மரபாகிய விவிலியத்தை மட்டுமே தம் நம்பிக்கைக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளன.

குறிப்புகள்

[தொகு]

மேல் ஆய்வுக்கு

[தொகு]
  • Agius, George (2005). Tradition and the Church. Rockford, Illinois: Tan Books and Publishers, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89555-821-1.
  • Petley, D.A., ed. (1993). Tradition: Received and Handed on: [papers presented at] a Theological Conference held at the [Anglican] Cathedral Church of St. Peter, Charlottetown, P.E.I., 27 June-1st July 1993. Charlottetown, P.E.I.: St. Peter Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-921747-18-7

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_மரபு_(கிறித்தவம்)&oldid=3221856" இலிருந்து மீள்விக்கப்பட்டது