உள்ளடக்கத்துக்குச் செல்

பறவைக் கூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குச்சிக்கூடு

பறவைக் கூடு (Bird nest) என்பது பறவையானது முட்டையிட்டு, முட்டைகளை அடைத்து அதன் குஞ்சுகளை வளர்க்கும் இடமாகும். இவை வாழுமிடத்திற்குத் தக்கவாறு பாதுகாப்பான இடங்களில் புல், இலை, குச்சி முதலியவற்றைக் கொண்டு, தேவைக்கேற்றபடி அழகான கூடுகளையோ, செப்பனிடாத ஒழுங்கற்ற கூடுகளையோ கட்டுகின்றன.

வகைகள்[தொகு]

பொதுவாக காணப்படக்கூடிய கூடுகள் இங்கு குறிப்பிடபட்டுள்ளன.

மேலே திறந்த கூடுகள்[தொகு]

மேலே திறந்த கூடுகள் ஆழமாகவும் கிண்ணம் போலவும் இருக்கும். அதனால் முட்டைகளோ, குஞ்சுகளோ கீழே விழாமல் பாதுகாப்பாக இருக்கும். அடியிலே மெத்தென்று இருக்க நார், சிறு குச்சி, இறகுகள் போன்றவை இருக்கும். கூடுகளைப் பாதுகாக்க ஜோடியாகவோ, கூட்டமாகவோ பறவைகள் வசிக்கும், காக்கை, கொக்கு, புறா போன்ற பறவைகளின் கூடுகள் இப்படிப்பட்டவை.[1]

இதில் காகம், பருந்து, மணிப்புறா முதலியவை மரம், கட்டடம் , செங்குத்துப் பாறைப் போன்ற இடங்களில் குச்சிகளைப் பரண் போல அடுக்கி , நடுவில் சிறு குழியமைத்து அதில் நார், புல், கந்தை, இறகு போன்றவற்றை கொண்டு குச்சிக்கூடு கட்டும்.

மூடிய கூடுகள்[தொகு]

முழுதும் மூடிய கூடுகளுக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சிறிய வழி இருக்கும். கூட்டின் உள்ளே சுற்றிலும் சுவர்போல உள்ள பகுதி சிறிய இறகுகளாலும், ரோமத்தாலும் மூடப்பட்டு இருக்கும்.[1]

சுரங்கக் கூடு[தொகு]

சுரங்கக் கூடு என்பவை மீன் கொத்தி, பஞ்சுருட்டான் போன்ற பறவைகள் ஆற்றங்கரைகளில் தமது அலகால் சுரங்கங்களோ, குழிகளோ உண்டாக்கிக்கொண்ட கூடுகள் ஆகும்.[1]

பொந்து கூடுகள்[தொகு]

மரம், பாறை, சுவர் இவற்றிலுள்ள பொந்துகளில் இருவாய்ச்சி, மஞ்சள் கழுத்து சிட்டு, மரங்கொத்தி, ஆந்தை, மைனா போன்றவை மென்மையான நார், இறகு கொண்டு கூடு கட்டும். சில வேளைகளில் கிளி, பொந்துகளில் முட்டை இடும். சிலசமயம் வேறு சில இனப்பறவைகளும் முட்டையிடும். இயற்கையாக உள்ள பொந்துகளை இவை பயன்படுத்துவதோடு தாமாகவே பொந்துகளை உண்டாக்கவும் செய்யும். இருவாய்ச்சிகள் ஒரு விநோதமான வழக்க முடையவை. இவை மரத்திலுள்ள பொந்திலே முட்டையிட்டுப் பெண் பறவை அடைகாக்கும் பொழுது ஆண் பறவை கூட்டை முழுவதும் அடைத்துவிடும். ஒரு சிறிய ஓட்டை மட்டுமே அதில் இருக்கும். ஆண் பறவை இரைதேடிக் கொண்டு வந்து அதன் வழியாகப் பெட்டைக்குக் கொடுக்கும்.[1]

வெளியே செல்லும் பொழுது மூடப்படும் கூடுகள்[தொகு]

முக்குளிப்பான், நீர்க்கோழி, காட்டு வாத்து இவற்றின் கூடுகள் மேலே திறந்து இருக்கும். ஆனால் கூட்டைவிட்டுப் போகும்பொழுது ஆண் பெண் பறவைகள் முட்டைகளை நன்றாக மூடிவைத்து விட்டுப் போகும். முக்குளிப்பானுடைய கூடு, களைகளாலும் நாணல் தட்டுகளாலும் ஆன சிறு தெப்பம்போலக் காணப்படும். வறண்ட தழைகளைப் போலவே இக் கூடுகள் தோன்றும்.[1]

சுரண்டிய கூடுகள்[தொகு]

இவை உண்மையில் கூடு கட்டுகட்டுவதாகவே சொல்ல முடிாது. ஆலா, ஆள்காட்டி, கரைக்கோழி இவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் முட்டைகள் நிறத்திலே சுற்று புறத்தின் நிறத்தைப் போலவே இருப்பதால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. கரைக் கோழி கிளிஞ்சல்களையும், கூழாங்கற்களையும், கரையிலுள்ள பாறைமீது சேர்த்து வைத்து அவற்றின் மேலே முட்டையிடுகின்றது.[1]

களிமண் கூடு[தொகு]

கருங்குருவி, சீகாரம், சுவாலோ ஆகியவை குளம் குட்டைகளிலுள்ள சேற்றைச் சிறு உருண்டையாக்கிப் பின் கிண்ணம் அல்லது குடம் போன்ற வடிவில் கூடுகட்டும் . இனப்பெருக்கக் காலங்களில் இப்பறவையின் உமிழ்நீர் சுரப்பி பெரிதாக இருக்கும். தகைவிலான் குருவி இறகுகளை தன் உமிழ்நீரால் ஒட்டிக் கூடுகட்டும்.

மரப்பொந்து கூடு

கிண்ணக்கூடு[தொகு]

கிண்ணக்கூடு

மாம்பழசிட்டு, மாங்குயில் போன்ற குருவிகள் மிகுந்த வேலைப்பாடு கொண்ட கூடுகட்டு திறன்கொண்டது. மரக்கிளைகளில் புல்தண்டு , இலை , நார், குதிரை மயிர் கொண்டு கிண்ணவடிவ கூடுகட்டும்.

தொங்கற் கூடு[தொகு]

தொங்கற் கூடு
தொங்கற் கூடு

தேன்சிட்டு, பூங்கொத்தி, தூக்கணாங்குருவி கூடு கிளை நுனியில் தொங்கும். மேலே கயிறு போல தொங்கி கீழே உருண்டு அகன்ற வடிவில்இருக்கும்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ஜமால் ஆரா (1970). "பறவைகளைப் பார்". நூல். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. pp. 27–29. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவைக்_கூடு&oldid=3649552" இலிருந்து மீள்விக்கப்பட்டது