சிறீ இராசலட்சுமி அறக்கட்டளை (Sri Raja-Lakshmi Foundation) என்பது இந்தியாவில் செயல்படும் தொண்டு அறக்கட்டளை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், இதழியல், மனிதநேயம் மற்றும் பிற அறிவுசார் நோக்கங்களை ஊக்குவிக்கிறது. இந்தத் துறைகளில் உள்ள புகழ்பெற்ற நபர்களைக் கவுரவிக்கிறது. 1979ஆம் ஆண்டு சென்னையில் ஒரு தொழிலதிபரான மறைந்த பி. வி. இரமணிய ராசாவால் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை இராசலட்சுமி விருதை நிறுவியது.
முற்காலத்தில் இராசலட்சுமி விருது பெறுவோருக்கு இந்திய ரூபாய் 100,000/- பரிசுத் தொகையாகவும் இத்துடன் ஒரு பாராட்டுச் சான்றிதழும் பட்டயமும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள், தெலுங்கு நுண் கலை குழுமம் (TFAS), நியூ ஜெர்சி, அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்க டாலர் 2000க்கான மருத்துவர் கே. வி. ராவ் மற்றும் மருத்துவர் ஜோதி ராவ் விருதையும் பெற்றனர்.
இந்த அறக்கட்டளை ரத்னா ராவ் நினைவுப் பரிசையும் நிறுவியுள்ளது. இது ஆண்டுதோறும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னையில் பயிலும் முது அறிவியல் வேதியியலில் சிறந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது.
இந்த அமைப்பு, இராசலட்சுமி விருதுடன், இராசலட்சுமி இலக்கிய விருது (1987-1999) மற்றும் "ஆசிரியரை அங்கீகரியுங்கள்" விருது போன்ற பல விருதுகளை நிறுவியது. சிறப்பு விருதுகளும் (இராசலட்சுமி விசிஷ்டா புரஸ்கார்) ஒரு முறை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இராசலட்சுமி ராசாவைதிக விருது 1994இல் நிறுவப்பட்டது. இது சிறீமதியின் 60வது பிறந்தநாளுடன் இணைந்தது. திருமதி மகாலட்சுமி ராசா அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் ஆவார். இந்த விருது வேத பண்டிதர்களைக் கவுரவிக்கிறது. சான்றிதழும், பட்டயமும் இந்திய ரூபாய் 25,000/- இந்த விருதினைப் பெறுபவருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் ஆகத்து 15 அன்று (மறைந்த திருமதி மகாலட்சுமி ராசாவின் பிறந்தநாள்) ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்பட்டு அதே ஆண்டு நவம்பர் 19 அன்று (சிறீரமணிய ராசாவின் பிறந்தநாள்) ஒரு விழாவில் வழங்கப்படும்.
இந்த அறக்கட்டளை இப்போது கல்வி, கல்வி மேம்பாடு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான உதவி ஆகிய துறைகளில் தொண்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.