சுனிதா நரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனிதா நரேன்

சுனிதா நரேன் (Sunita Narain) ஓர் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார், அகிம்சை, சமூக நீதி மற்றும் அடிமட்ட சனநாயகத்தில் வேரூன்றிய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் பாதையின் ஆதரவாளரும் ஆவார்[1]. இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பொது மேலாளராக பதவி வகித்தார். மேலும் சுற்றுச்சூழல் தகவல் தொடர்பு சங்கத்தின் இயக்குநராகவும், டவுன் டு எர்த் என்ற ஓர் ஆங்கில இதழின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

ஆங்கில இதழான 'டைம்' இதழ் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் என்ற பட்டியலில் சுனிதா நரேனும் இடம்பெற்றார் [2].

பணிகள்[தொகு]

தில்லி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய படிப்பை முடித்த சுனிதா நரேன் அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் நடுவத்தின் நிறுவனரான அனில் அகர்வால் (சுற்றுச்சூழலியலாளர்) என்பவருடன் இணைந்து 1982 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் நடுவத்தில் பணி புரியத் தொடங்கினார். 1985 இல் இந்தியச் சூழலியல் அறிக்கை ஒன்றை பிறருடன் இணைந்து தயாரித்த சுனிதா பின்னர் காடுகள் மேலாண்மை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இத்திட்டத்திற்காக அவர் இந்தியா முழுக்க பயணம் செய்தார். இப்பயணத்தின் போது நாட்டின் இயற்கை வளங்களை மக்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். 'பசுமை கிராமங்களை நோக்கி' என்னும் பொருண்மையில் அனில் அகர்வாலுடன் சேர்ந்து 1989 ஆம் ஆண்டு இருவரும் ஒரு கட்டுரையை எழுதினர். உள்ளாட்சிச் சுதந்திரமும் நிலைத்த வளர்ச்சியும் இக்கட்டுரையின் பொருளாக அமைந்திருந்தன. அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் நடுவத்தில் இருந்த காலத்தில் சுனிதா சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்து கற்றுக் கொண்டார். சுற்றுச் சூழல், வளர்ச்சி ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து அவற்றை மக்கள் மத்தியில் பரப்ப முயன்றார். சுற்றுச் சூழல், வளர்ச்சி ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து அவற்றை மக்கள் மத்தியில் பரப்ப முயன்றார். 2012 ஆம் ஆண்டில், அவர் 7 வது நிலை இந்திய சுற்றுச்சூழல் அறிக்கைகள், கழிவுகள், நகர்ப்புற இந்தியாவின் நீர் வழங்கல் மற்றும் மாசுபாடு பற்றிய பகுப்பாய்வு ஆகியனவற்றை பற்றி எழுதினார்.

சுனிதா நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் அறிவியல் மையத்திற்குத் தேவைப்படும் மேலாண்மை மற்றும் நிதி ஆதரவு அமைப்புகளை உருவாக்கினார். இந்நிறுவனத்தில் 100 ஊழியர்கள் உறுப்பினர்கள் பனியாற்றினர். இவர்களின் சுயவிவரத்தை கொண்ட நிரல் சிறப்புத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. 1990 களின் முற்பகுதியில் அவர் உலக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றார். ஓர் ஆராய்ச்சியாளர் மற்றும் வழக்கறிஞராக இப்பணிகளில் அவர் ஈடுபட்டார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் பரந்த அளவிலானவையாக விரிந்திருந்தன. உலகளாவிய ஜனநாயகம், காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு கவனம், உள்ளாட்சி சனநாயகத்தின் தேவை உள்ளிட்ட அம்சங்களை இவரது ஆய்வுகள் மையமாகக் கொண்டிருந்தன. இம்மையப் பொருளின் அடிப்படையில் காடு சார்ந்த ஆதார மேலாண்மை மற்றும் நீர் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றில் அவர் அக்கறையுடன் பணியாற்றினார். தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் நரேன் சமூக அக்கறையுடன் தொடர்ந்து செயல் திறனுடன் பங்கேற்றார் [3]. தற்போது இவர் அறிவியல் மையத்தின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் பல ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் பொது பிரச்சார செயல்களில் பங்கு வகிக்கிறார் [3].

பல்வேறு அமைப்புகளின் குழுக்களுக்காகவும் அரசாங்கக் குழுக்களுக்காகவும் நரேன் பணியாற்றுகிறார், தன்னுடைய தனித்திறனை நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி உலகெங்கிலும் பல மன்றங்களில் பேசியுள்ளார். சுற்றுச்சூழல் வாதத்தின் பங்கு ஏன் என்ற தலைப்பில் கே.ஆர். நாராயணன் ஆற்றிய சொற்பொழிவை சுரேன் 2008 ஆம் ஆண்டில் எடுத்துரைத்தார் [4]. ஏழைகளின் சுற்றுச்சூழலில் இருந்து கற்றல் என்பது நமது பொது எதிர்காலத்தை கட்டமைக்கும் என்பது அச்சொற்பொழிவின் சாரம்சமாகும் [5]

மிதிவண்டி விபத்து[தொகு]

2013 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அருகில் நரேன் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் கிரீன் பார்கில் உள்ள தனது வீட்டிலிருந்து லோதி பூங்காவிற்கு காலை நேரத்தில் சென்று கொண்டிருந்தார். விரைவாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று அவர் மேல் மோதிவிட்டு சென்றது. காரின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டார். நரேன் அருகிலிருந்த அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு வழிப்போக்கர் ஒருவரால் கொண்டு செல்லப்பட்டார். முகத்தில் காயங்கள் மற்றும் எலும்பியல் காயங்களால் நரேன் பாதிக்கப்பட்டார் [6].

2016 சொற்பொழிவு[தொகு]

பிபோர் தி பிளட் என்ற ஆவணப்படத்தில் நரேன் லியனார்டோ டிகாப்ரியோவுடன் தோன்றி இந்தியாவில் பருவமழைக்கால காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைப் பற்றி பேசினார், அது விவசாயிகளை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றி எடுத்துக் கூறினார்[7]. கொகா கோலா, பெப்சிகோ ஆகிய குழுமங்களின் குளிர் நீர்மங்களில் புச்சி மருந்துகள் தாக்கம் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அரசு இதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று சுனிதா நரேன் கூறினார். இதன் விளைவாக சில மாநில அரசுகள் அந்தக் குளிர் நீர்மங்களைத் தடைப்படுத்தின.[8]

வெளியீடுகள்[தொகு]

  • 1989 இல் சுனிதா நிலையான வளர்ச்சிக்கு உள்ளாட்சி சனநாயக பங்கேற்பை வலுப்படுத்தும் பசுமை கிராமங்களை நோக்கி என்ற இதழை இணை ஆசிரியராக 1989 இல் சுனிதா நரேன் வெளியிட்டார்.
  • 1991 ஆம் ஆண்டில் சமச்சீரற்ற உலகில் புவி வெப்பமாதல் வெளியீட்டில் இணை ஆசிரியராக இருந்தார்[9].

பெற்ற விருதுகள்[தொகு]

  • பிற துறைகளுக்கான பத்மசிறீ விருது[3][10] (2005)
  • சிடாக் ஓம் வாட்டர் பரிசு (2005)
  • கல்கத்தா பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியல் முனைவர்-மதிப்புறு பட்டம் (2009)
  • ராஜ லட்சுமி விருது (2009)
  • டைம் இதழின் செல்வாக்குள்ள நூறு மனிதர்கள் பட்டியலில் ஒருவர் (2016)
  • ஐஏஎம்சிஆர் பருவ மாற்றம் தகவல் ஆய்வு விருது (2016)

மேற்கோள்[தொகு]

  1. "'Why I don't advocate vegetarianism': Indian environmentalist Sunita Narain explains her position".
  2. Time 100 Most Influential People: Sunita Narain Time Magazine, April 2016
  3. 3.0 3.1 3.2 Sunitaji's Bio Data பரணிடப்பட்டது 7 சனவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
  4. 2008 K R Narayanan Oration, The Australian National University, Canberra, 16 September 2008 பரணிடப்பட்டது 25 செப்தெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  5. Environmentalism and Equity, report on the oration, 16 September 2008
  6. http://www.thehindu.com/news/cities/Delhi/environmentalist-sunita-narain-injured-in-a-road-accident/article5256565.ece
  7. https://www.americanbazaaronline.com/2016/11/01/sunita-narain-features-in-documentary-before-the-flood-co-produced-by-leonardo-dicaprio418897/
  8. http://content.time.com/time/specials/2007/article/0,28804,1652689_1652372_1652366,00.html
  9. Global Warming in an Unequal World: A case of environmental colonialism, Anil Agarwal, Sunita Narain, Centre for Science and Environment, New Delhi, (1990). http://www.indiaenvironmentportal.org.in/books/global-warming-unequal-world-case-environmental-colonialism
  10. "Padma Awards Directory (1954-2013)" (PDF). Archived from the original (PDF) on 2015-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_நரேன்&oldid=3486269" இலிருந்து மீள்விக்கப்பட்டது