ஊடகவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஊடகவியல் (Journalism) அல்லது இதழியல் என்பது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்காகச் செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய துறை ஆகும். முன்னர் இத்துறை அச்சு ஊடகங்களான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே குறித்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மின்னணு ஊடகங்களையும் இது உள்ளடக்கியது. எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுகளையும், எண்ணங்களையும், பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையாக தகவல்களைப் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதனால் மக்கள், ஊள்ளூர், மாநில, தேசிய மற்றும் அனைத்துலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. ஊடகவியல்; அரசு, பொதுத்துறை அலுவலர்கள், நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், ஊடகவியல் நிறுவனங்கள், சமூக அதிகாரங்களைக் கொண்டிருப்போர் போன்றோரின் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதுடன்; நடப்பு நிகழ்வுகள் குறித்த தமது கருத்துக்களையும் வெளியிடுவதுண்டு.

தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவகல்ளைச் சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர் இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு.

சொல் விளக்கம்[தொகு]

ஆங்கிலச் சொல்லான ஜர்னலிசம் (en:journalism) என்ற தமிழ்ச் சொல்தான் இதழியல். இந்தச் சொல்லின் மூலம் டையர்னல் (en:diurnal) என்ற பழைய லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. லத்தீன் மொழியில் “சர்னல்” , “டையர்னல்” என்றால் “அன்று” என்று பொருள். “சர்னல்” என்றால் “அன்றாடம் நடந்ததை எழுதி வைக்கும் ஏடு” என்று பொருள். இப்போது “சர்னல்” என்பது “இதழ்கள்” என்பதை மட்டும் குறிக்கும் சொல்லாகிவிட்டது. இதழ் என்பது “பத்திரிகை”, “செய்தித்தாள்”, “தாளிகை” என்றும் குறிப்பிடப்படுகிறது. இதழ்களுக்கும், குறிப்பாக செய்தித்தாள்களுக்கும் எழுதும் தொழிலைத்தான் முதலில் “இதழியல்” என்ற சொல் குறித்தது. ஆனால் தற்போது அதனுடைய பொருளும், பரப்பும் விரிவடைந்து செய்திகளையும் கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் தொடர்பு நிறுவனமாக மாறிவிட்டது.

அகராதி விளக்கம்[தொகு]

  • வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதியில், “வெளியிடுவதற்காகவோ, பதிப்பிப்பதற்காகவோ, ஒலிபரப்புவதற்காகவோ நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் “இதழியல்” என்ற விளக்கமுள்ளது.
  • சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி, “பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல்” என்று கூறுகிறது.

அறிஞர்கள் கருத்து[தொகு]

  • ஹரால்டு பெஞ்சமின் எனும் அமெரிக்க இதழியல் பேராசிரியர், “பொது நோக்கமுடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனித நலன் என்னும் லட்சியத்தை நோக்கி நடை போடுகிறது” என்கிறார்.
  • ஜி.எப்.மோட் என்பவர், “இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி பொதுச் செய்திகளையும், பொதுக் கருத்துக்களையும், பொது பொழுதுபோக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதாகும்” என்கிறார்.
  • லார்டு கிரே என்பவர், “பத்திரிகைதான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி” என்கிறார்.
  • மேத்யூ அர்னால்டு என்பவர், “இதழியல் அவசரத்தில் பிறக்கும் இலக்கியம்” என்கிறார்.
  • பிராங் மோரஸ், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும்தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது” என்கிறார்.
  • இலங்கை ஊடக ஆய்வாளர் எஸ்.மோசேஸ், "வெகுஜன ஊடகங்கள் மக்களை காக்க வேண்டிய தார்மீக பொறுப்பு வாய்ந்த சமூக சாதனங்கள்" என்கிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடகவியல்&oldid=1897734" இருந்து மீள்விக்கப்பட்டது