ராமமூர்த்தி பாலசுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமமூர்த்தி பாலசுப்பிரமணியம்
Ramamurthi Balasubramaniam
பிறப்பு30 சனவரி 1922
தமிழ்நாடு, சீர்காழி
இறப்பு13 திசம்பர் 2003(2003-12-13) (அகவை 81)
பணிநரம்பியல் வல்லுநர்
வாழ்க்கைத்
துணை
இந்திரா ராமமூர்த்தி
பிள்ளைகள்விசயராகவன், ரவி

ராமமூர்த்தி பாலசுப்பிரமணியம் (Ramamurthi Balasubramaniam) ஓர் இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு சனவரி மாதம் பிறந்தார். எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை முன்னோடிகளில் ஒருவர் என்று பன்முகத்துடன் இவர் இயங்கினார். இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சையின் தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு[1]. 1950 ஆம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையை இவர் உருவாக்கினார் [2]. சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையையும் 1970 களில் சென்னை நரம்பியல் நிறுவனத்தையும் இவர் நிறுவினார் [3]. நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் சிறப்பாக பங்களித்ததற்காக இவருக்கு பத்ம பூசன் [4] மற்றும் தன்வந்தரி விருது போன்றவை வழங்கப்பட்டன.

ஆரம்பகாலம்[தொகு]

ராமமூர்த்தி சீர்காழி நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை கேப்டன் டி.எசு..பாலசுப்பிரமணியம் அப்போது அரசு மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் இருந்தார். ஆங்கில நாளேடான தி இந்துவின் நிறுவனர்களில் ஒருவராக இருந்த சுப்பிரமணிய ஐயர் இவரது தாத்தாவின் சகோதரர் ஆவார். பேராசிரியர் ராமமூர்த்தி பாலசுப்பிரமணியம் திருச்சியில் உள்ள இ.ஆர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சையில் பட்டமேற்படிப்பை முடித்த இவர் 1947 இல் எடின்பர்க்கில் எப்.ஆர்.சி.எசு தகுதியை அடைந்தார்.

வாழ்க்கை[தொகு]

1960 இல் மருத்துவர் பி.ராமமூர்த்தி மற்றும் அவரது குழுவினர்களான மருத்துவர் எசு கல்யாணராமன், மருத்துவர் டி எசு கனகா ஆகியோர் இவர்களுக்கு இணையான நரம்பியல் மருத்துவர்கள் அர்ச்சுன் தாசு மற்றும் மருத்துவர் கே. சகந்நாதான் ஆகியோர் துணையுடன் இவர்கள் குழுவினர் இந்தியாவில் குறுகியவிட நுண் அறுவைச் சிகிச்சை செயல்முறைகளை மேற்கொண்ட முதல் அணி என்ற பெருமையைப் பெற்றனர் [5].

1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மருத்துவர் ராமமூர்த்தி சென்னையிலுள்ள நரம்பியல் நிறுவனத்தை கனடாவில் உள்ள மாண்ட்ரீயல் நரம்பியல் நிறுவனத்தைப் போல நரம்பியல் விஞ்ஞானத்தின் அனைத்து கிளைகளையும் ஒரே கூரையின் கீழ் உருவாக்கினார். 1977-1978 ஆம் ஆண்டில் அடையாரில் உள்ள தன்னார்வ சுகாதார சேவைகள் (வி.எச்.எசு) மருத்துவமனையில் மருத்துவர் ஏ. லட்சுமிபதி நரம்பியல் அறுவை சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். ஏ. லட்சுமிபதி என்பது இவரது மாமனார் பெயராகும். வி.எச்.எசு மருத்துவமனை மருத்துவர் கே.எசு. சஞ்சிவியின் சிந்தனையில் உதயமான ஒரு மருத்துவமனையாகும். பேராசிரியர் பி. ராமமூர்த்தி மருத்துவமனையின் தலைவர் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கவுரவ துணைவேந்தர், ஆசிரியர், வழிகாட்டி என பல பரிமாணங்களில் தனது நீண்ட விரிவான ஆண்டுகளில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றினார். 1987 ஆம் ஆண்டில் உலக நரம்பியல் அறுவை சிகிச்சை சங்கங்களின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், இந்தியாவின் தேசிய மருத்துவ பரிசோதனை வாரியத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார்.

நரம்பியல் அறுவை சிகிச்சையின் பல பிரிவுகளை தொடங்கிய மருத்துவர் ராமமூர்த்தி புது தில்லிக்கு அருகிலுள்ள மானேசரில் தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தொடங்கவும் உதவி புரிந்தார். மூளை ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான ஒரு உச்ச அமைப்பு என்ற அவரது கனவு நனவாகியது. 1962 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் உறுப்பினர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். இதைத்தவிர 1972 இல் அறிவியல் அகாடமியின் உறுப்பினர், 1981 இல் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினர் மற்றும் 1983 இல் லண்டனின் மருத்துவ இராயல் கழகத்தின் உறுப்பினர் ஆகிய பெருமைகளுக்கும் உரியவரானார். இந்திய நரம்பியல் சங்கத்தின் நிறுவனச் செயலாளர் என்ற பதவியையும் ராமமூர்த்தி வகித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் இந்திராவை ராமமூர்த்தி மணந்தார். மருத்துவர் ராமமூர்த்திக்கு விசயயராகவன், ரவி என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். முதல் மகன் ஒரு பத்திரிகையாளராகவும் இரண்டாவது மகன் ஒரு நரம்பியல் நிபுணராகவும் பணிபுரிந்தனர். சென்னையில் உள்ள ராமமூர்த்தி நரம்பியல் அருங்காட்சியகம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது ஆகும்[6]. ராமமூர்த்தி தனது சுயசரிதையை தடைகள் பல தாண்டி என்ற தலைப்பில் நூலாக எழுதினார், இந்நூல் முதலமைச்சர் கருணாநிதியால் 2000 ஆம் ஆண்டு சனவரியில் வெளியிடப்பட்டது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. https://tspace.library.utoronto.ca/bitstream/1807/1950/1/ni04003.pdf
  2. "B. Ramamurthi passes away". The Hindu. 13 December 2003. https://www.thehindu.com/2003/12/13/stories/2003121312621100.htm. பார்த்த நாள்: 9 January 2019. 
  3. "The Society of Neurological Surgeons". Societyns.org. 2018-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-27 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Sridhar K. "Bioline International Official Site (site up-dated regularly)". Bioline.org.br. 2018-03-27 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Ramamurthi Neurosciences Museum opened". The Hindu. 2002-01-27. 2014-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-27 அன்று பார்க்கப்பட்டது.
  7. Sridhar K. "Prof. B. Ramamurthi: The legend and his legacy Sridhar K Neurol India". Neurologyindia.com. 2018-03-27 அன்று பார்க்கப்பட்டது.