சமநிலை விட்டம் (சீருடற்பயிற்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்டத்தின்மீது ஓர் இளம் சீருடற்பயிற்சியாளர்
Dorina Böczögő, 2012.

சமநிலை விட்டம் (Balance Beam) கலைநய சீருடற்பயிற்சிக் கருவியாகும். இக்கருவியில் நிகழ்த்தும் விளையாட்டும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் கருவி, நிகழ்ச்சி இரண்டுமே சுருக்கமாக "விட்டம்" (Beam) எனப்படுகிறது. சீருடற்பயிற்சி போட்டிகளில் மதிப்பெண் குறிக்க இந்நிகழ்ச்சிக்கு BB என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து உயரத்தில் இரு முனைகளிலும் கால் அல்லது ஆதரவால் தாங்கப்பட்டுள்ள விட்டம் நீளமாகவும் குறுகலாகவும் உள்ளது. இந்த விளையாட்டு பெண்களால் மட்டுமே விளையாடப்படுகிறது.

விளையாட்டுக் கருவி[தொகு]

சமநிலை விட்டத்தில் டானியேல் ஹைபொலிட்டோ நிகழ்த்தும்போது.

பன்னாட்டு சீருடற்பயிற்சி போட்டிகளில் பயன்படுத்தப்படும் சமநிலையில்லாச் சட்டங்கள் பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு (FIG) வரையறுக்கும் விவரக்கூற்றுகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். இந்த விவரக்கூற்றுக்களுக்கிணங்க அமெரிக்காவின் ஏஏஐ, ஐரோப்பாவின் யான்சென் அண்ட் பிரிட்சென், ஆத்திரேலியாவின் அக்ரோமாட் நிறுவனங்கள் சமநிலை விட்டங்களைத் தயாரிக்கும் சிலவாகும்.

பெரும்பாலான சீருடற்பயிற்சி பள்ளிகள் இத்தகைய சீர்தர விட்டங்களைப் பயன்படுத்தினாலும் சில பள்ளிகள் விரிப்பிட்ட மேற்பரப்புள்ள விட்டங்களை பயில்வதற்காக பயன்படுத்துகின்றன. பயில்கையில் சீர்தர விட்டத்தின் அளவைகளைக் கொண்ட விட்டத்தை தரையிலிருந்து உயரத்தை மட்டும் குறைத்துக் கொண்டு பயன்படுத்துவதும் உண்டு. பயிற்சி விட்டங்கள் மற்றும் சிறு விட்டங்களிலும் பாயில் கோடுகள் வரைந்தும் பயில்கிறார்கள்.

துவக்கத்தில், விட்டத்தின் மேற்பரப்பு சமமாக தேய்க்கப்பட்ட மரமாக இருந்தது.[1] முந்தைய ஆண்டுகளில் சில போட்டியாளர்கள் கூடைப்பந்து போன்ற பொருளால் ஆன விட்டங்களைப் பயன்படுத்தினர். இருப்பினும் மிகவும் வழுக்கும் தன்மையாக இருந்தமையால் இவ்வகையான விட்டங்கள் தடை செய்யப்பட்டன. 1980களிலிருந்து விட்டங்களின் மேற்பரப்புகள் தோல் அல்லது வழவழப்பான சுவேடு துணியால் மூடப்பட்டுள்ளன. மேலும் கடினமான கவிழ்தல் மற்றும் நடனத் திறன் அழுத்தங்களைத் தாங்கும் வண்ணம் சுருள்வில் தன்மையும் உடைத்தாயுள்ளது.[2]

அளவைகள்[தொகு]

பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:

 • உயரம்: 124 சென்டிமீட்டர்கள் (4.07 அடி)[3]
 • நீளம்: 500 சென்டிமீட்டர்கள் (16 அடி)[3]
 • அகலம்: 4 inches/10 centimeters

நிகழ்வுக் கோவை[தொகு]

படிவளர்ச்சி[தொகு]

துவக்கத்தில் விட்டத்தில் கவிழ்தலை விட நடனத் திறன் காட்டும் நிகழ்ச்சிகளே முன்னிலையாக இருந்தன. உயர்நிலை போட்டிகளில் கூட தாவுதல், நடன நிலைகள், கைகளால் நிற்றல், உருளல்கள் மற்றும் நடையழகு ஆகியவற்றின் கலவைகளாலேயே தொகுக்கப்பட்டிருந்தது. 1960களில் மிகவும் கடினமான திறன் வெளிப்பாடாக பின் கைக்கரணம் விளங்கியது.

1970களில் சமநிலை விட்டப் பயிற்சிகளின் கடினத்தன்மை கூடலாயிற்று. ஓல்கா கோல்புட்டும் நாடியா கொமனட்சியும் உயர்தர கவிழ்தல் கலவைகளையும் காற்றுவழித் திறன்களையும் வெளிக்காட்டிய முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்; விரைவிலேயே இவற்றை பயிற்சியாளர்களும் போட்டியாளர்களும் கடைபிடிக்கத் துவங்கினர். இக்காலத்தில் மர விட்டங்களிலிருந்து பாதுகாப்பான வழுக்காத சுவீடுத்துணி மேற்பரப்புள்ள விட்டங்களுக்கான மாற்றமும் நிகழ்ந்தது. 1980கள் முதல் சீருடற் பயிற்சியாளர்கள் வழைமயாக பறக்கும் செய்முறைகளையும் பல காற்றுவழி செய்முறைகளையும் நிகழ்த்தலாயினர்.

தற்கால சமநிலை விட்ட நிகழ்ச்சிக் கோவை கழைக்கூத்தாடுத் திறன்கள், நடனத்திறன்கள், தாவல்கள்,நிலைகள் இவற்றின் கலவையாக இருப்பினும் இவற்றின் கடனத்தன்மை மிகவும் உயர்ந்துள்ளது.

பன்னாட்டு நிலை நிகழ்வுக் கோவை[தொகு]

ஓர் விட்ட நிகழ்வுக் கோவை கட்டாயமாக கொண்டிருக்க வேண்டியன:[4]

 • இரு நடனக் கூறுகள், ஒரு தாவல்,தாண்டல் அல்லது கால்கள் 180° பிளவுபட குதித்தல்
 • ஒரு காலில் முழுமையான சுழற்சி
 • இரு கழைக்கூத்தாடுத் திறன்களின் ஒரு தொடர்
 • கழைக்கூத்தாடுக் கூறுகள் பல்வேறு திசைகளில் (முன்புறம்/பக்கவாட்டில் மற்றும் பின்புறம்)
 • ஓர் இறக்கம்

போட்டியாளர் ஓர் குதிப்பலகையை பயன்படுத்தியோ பாயிலிருந்தோ விட்டத்திற்கு ஏறலாம். இருப்பினும் ஏற்றம் ஆட்ட விதிமுறைகளுக்கேற்ப இருக்க வேண்டும்.[4] இந்த நிகழ்வுக்கோவை 90 வினாடிகள் வரை இருக்கலாம்.[4]

மதிப்பெண்களும் விதிமுறைகளும்[தொகு]

போட்டியாளரின் இறுதி மதிப்பெண்கள் நிகழ்த்தலின் பல கூறுபாடுகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நிகழ்வுக்கோவையின் அனைத்து கூறுகளையும் மற்றும் அனைத்துப் பிழைகளையும் நடுவர்கள் கவனத்தில் கொள்வர்.[4]

கருவிக்கான குறிப்பான விதிமுறைகள்[தொகு]

போட்டியாளர் வெறுங்காலுடனோ விட்டத்திற்கான சிறப்பு காலணிகளுடனோ பங்கேற்கலாம்.[5] மேலும் விட்டத்தில் கூடுதல் நிலைத்திருப்புக்காக கைகளிலும் (அல்லது) கால்களிலும் சுண்ணப்பொடி போட்டுக் கொள்ளலாம். விட்டத்தின் மீது சிறு குறிகளை வைக்கலாம்.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "History of Balance Beam". 2009-06-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Apparatus Norms". FIG. p. II/50. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Apparatus Norms". FIG. p. II/51. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 4.2 4.3 "WAG Code of Points 2009-2012". FIG. p. 15. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-02 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 "WAG Code of Points 2009-2012". FIG. p. 2. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-04 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Balance beam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.