தடகள விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தட கள விளையாட்டுக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தடகள விளையாட்டுக்கள்
Athletics competitions.jpg
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
இருபாலரும் ஆம்
பகுப்பு/வகை வெளியே அல்லது அரங்கத்தினுள்
தற்போதைய நிலை
ஒலிம்பிக் துவங்கிய 1896 ஒலிம்பிக்சிலிருந்தே
இணை ஒலிம்பிக் துவங்கிய 1960 மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிருந்தே

தட கள விளையாட்டுக்கள் (Athletics) எனப்படுவது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன. எளிதாகவும் மலிவாகவும் இருந்தபோதிலும் மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை சோதிக்கின்றன. இது பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776இல் தொன்மைய ஒலிம்பிக்சு காலத்திலிருந்தே அறியப்படுகிறது. தற்காலத்து பல நிகழ்வுகளை தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கத்தினரின் பல்வேறு உறுப்பினர் சங்கங்கள் நடத்தி வருகின்றன.இந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

வரலாறு[தொகு]

தொன்மைக்காலங்களிலும் இடைக்காலங்களிலும்[தொகு]

வட்டு எறிபவரைச் சித்தரிக்கும் தொன்மைக்கால கிரேக்கச் சிலை, டிசுகோபொலசு

தடகள விளையாட்டுக்களில் ஓடுதல், நடத்தல், தாண்டுதல் மற்றும் விட்டெறிதல் ஆகியன தொல் பழங்கால துவக்கங்களைக் கொண்டு மிகப் பழமையான விளையாட்டுக்களாக விளங்குகின்றன.[1] தடகள விளையாட்டுக்கள் சகாராவிலுள்ள பண்டைய எகிப்திய கல்லறைகளில் காணலாம்; இங்கு எப் சூட் திருவிழாவில் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுவதை வரைந்துள்ளனர். இதேபோன்று கிமு 2250களின் கல்லறைகளில் உயரம் தாண்டும் போட்டிகள் வரையப்பட்டுள்ளன.[2] கிமு 1800இல் அயர்லாந்தில் நடந்த தொன்மையான கெல்ட்டியத் திருவிழாக்களில் நடந்த இடயில்டெயன் விளையாட்டுக்கள் துவக்ககால விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும். இது 30 நாட்கள் நடந்தது. இதில் ஓட்டம், கற்கள் விட்டெறிதல் போன்ற போட்டிகள் இடம் பெற்றிருந்தன.[3] கிமு 776இல் நடந்த முதல் மூல ஒலிம்பிக் நிகழ்வில் இடம் பெற்றிருந்த ஒரே போட்டி அரங்க நீளத்திற்கு நடந்த ஓட்டப் பந்தயம் ஆகும். இது இசுடேடியான் எனப்பட்டது. பின்னர் விட்டெறிதல், தாண்டுதல் போன்ற போட்டிகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கிமு 500களில் பான் எல்லெனிக் விளையாட்டுக்கள் நிறுவப்பட்டன.[4]

இங்கிலாந்தில் 17வது நூற்றாண்டில் காட்சுவொல்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.[5] புரட்சிகர பிரான்சில் 1796 முதல் 1798 வரை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற இலெ ஒலிம்பியாட் டெ லா ரிபப்ளிக்கு தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. இந்தப் போட்டியின் முதன்மை விளையாட்டாக ஓட்டப் பந்தயம் இருந்தது. பல கிரேக்க விளையாட்டும் துறைகளும் காட்சிக்கு இருந்தன. 1796இல் நடந்த ஒலிம்பியாட்டில் முதன்முறையாக மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.[6]

தற்கால வரலாறு[தொகு]

1812இலும் 1825இலும் சாண்டுஅர்சுட்டில் உள்ள அரச இராணுவக் கல்லூரியே இதனை முதலில் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது; இதற்கு ஆதாரம் ஏதுமில்லை. பதிவுசெய்யப்பட்ட முதல் தடகள விளையாட்டுப் போட்டிகள் 1840இல் இசுரோப்சையரின் இசுரூசுபரியில் அரச இசுரூபரி பள்ளியால் ஒழுங்கமைக்கப் பட்டது. இதற்குச் சான்றாக 1838 முதல் 1841 வரை அங்கு மாணாக்கராக இருந்த சி.டி.இராபின்சனின் மடல்கள் அமைந்துள்ளன.


இங்கிலாந்தில் 1880இல் அமெச்சூர் தடகள விளையாட்டுச் சங்கம் உருவானது. முதல் தேசிய அளவிலான இச்சங்கம் ஆண்டுதோறும் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் துவங்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் யுஎஸ்ஏ வெளியரங்க தடகள விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறத் தொடங்கின.[7] 19வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் சங்கம் மற்றும் பிற பொது விளையாட்டு அமைப்புகளினால் தடகளப் போட்டிகளுக்கான சீர்திருத்தங்களும் விதிமுறைகளும் முறைப்படுத்தப்பட்டன.

1886இல் துவங்கிய முதல் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தடகளப் போட்டிகள் இடம் பெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் விரைவிலேயே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்புமிக்க பல்துறை விளையாட்டுப் போட்டியாக உருவெடுத்தது. தொடக்கதில் ஆண்களுக்கு மட்டுமாக இருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1928 கோடைக்கால ஒலிம்பிக்கிலிருந்து பெண்களுக்கான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.1960இல் உருவான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் தடகள விளையாட்டுக்கள் முன்னிடம் பெற்றுள்ளன. ஒலிம்பிக் போன்ற சிறப்புப் போட்டிகளின்போது தடகளப் போட்டிகளுக்கு இருக்கும் முதன்மைத்துவம் பின்னர் மற்ற நேரங்களில் கிடைப்பதில்லை.

1912இல் பன்னாட்டளவிலான கட்டுப்பாட்டு அமைப்பு, பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு உருவானது. இது 2001 முதல் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் என அறியப்படுகிறது. ஐ.ஏ.ஏ.எஃப் தனியாக உலக தடகளப் போட்டிகளை 1983 முதல் நடத்தி வருகிறது.

வகைகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடகள_விளையாட்டு&oldid=2227983" இருந்து மீள்விக்கப்பட்டது