குவாண்டம் நேரடுக்குமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குவாண்டம் நேரடுக்குமை (Quantum superposition) என்பது குவாண்டம் பொறிமுறையின் அடிப்படை விதியாகும். இது குவாண்டம் பொறிமுறைத் தொகுதியின் அனுமதிக்கப்பட்ட நிலை வெளிகளை (state space) வரையறுக்கிறது.

நிகழ்தகவுக் கோட்பாட்டில், எதிர்பார்க்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுக்கும் அது நிகழக்கூடிய வாய்ப்பு ஒரு நேர் எண்ணால் குறிக்கப்படும். இது அந் நிகழ்வின் நிகழ்தகவு எனப்படும். ஏதாவது இரண்டு தனித்தனி நிகழ்வுகள் ஒன்றாக நிகழ்வதற்கான நிகழ்தகவை அறிவதற்கு இரண்டு நிகழ்வுகளினதும் நிகழ்தகவுகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நிகழ்வு, ஒருமித்து நடைபெற முடியாத வேறு இரு தனித்தனி நிகழ்வுகளால் நடைபெறக்கூடும் எனில், அந் நிகழ்வு நடைபெறுவதற்காக நிகழ்தகவு, முன் குறிப்பிட்ட தனித்தனி நிகழ்வுகளின் நிகழ்தகவுகளின் கூட்டுத்தொகை ஆகும்.

குவாண்டம் பொறிமுறையும் நிகழ்வுகளுடன் தொடர்புடைய எண்களின் பெருக்கல், கூட்டல் தொடர்பில் மேலே காட்டியது போன்ற அதே விதிகளையே பயன்படுத்துகின்றது. எனினும், குவாண்டம் பொறிமுறையில் நிகழ்தகவு என்பதற்குப் பதிலாக வீச்சு என்பது பயன்படுத்தப்படுவதுடன், அது சிக்கலெண்களால் குறிக்கப்படுகின்றது.