கருத்தடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருத்தடை
தலையீடு
Package of birth control pills
கருத்தடைக் குளிகைகள்
பாடத் தலைப்பு D003267

கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதை செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுத்தலாகும்[1]. குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை முக்கிய பங்கு வகிக்கிறது. பல மதங்கள், கலாசாரங்கள் கருத்தடை தொடர்பில் எதிர்ப்புணர்வு கொண்டுள்ளன. இருப்பினும் கருக்கலைப்புடன் ஒப்பிடுகையில் கருத்தடைக்கான எதிர்ப்பு குறைவானதாகவே உள்ளது[2].

பொருளடக்கம்

கருத்தடைச் செயல்கள்[தொகு]

 1. விந்து வெளியேற்றத்தின் முன்னர் ஆண்குறியை புணர்புழையிலிருந்து வெளியே எடுத்தல் பன்னெடுங்காலமாகப் பயன்படும் கருத்தடை முறையாகும்.[3]. இதனை உள்வாங்குதல் எனலாம்.
 2. மாதவிடாய் சுழற்சியில் சில குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் உடலுறவு கொள்ளுதல் மற்றொரு கருத்தடை முறையாகும்.

இருப்பினும் இம்முறைகள் உறுதியாக கருவுறுதலைத் தவிர்க்க உதவும் என்று கூற முடியாது.

இயற்கை முறைகள்[தொகு]

a birth control chain calendar necklace
கடைசியாக ஏற்பட்ட மாதவிடாயின் நாளைக் கருத்தில்கொண்டு, கருத்தங்கலைத் தவிர்ப்பதற்காக நாட்களைக் கணக்கில் வைத்துக்கொள்வதற்கான மணிகளின் சுழற்சி முறை

இவை கருத்தங்கல் தொடர்பான அறிவைக் கொண்டிருப்பதனால் இயற்கையாக கருத்தங்கலைத் தவிர்க்கும் முறைகளாகும்.

நாள் கணக்கு வைக்கும் முறை[தொகு]

இந்த முறைப்படி, மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்குப் பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சி பருவத்தில், உடலுறவை தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம், மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும். இந்த முறையில், பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் இதில் மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு, இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

நாள் தவிர்ப்பு முறை[தொகு]

பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன், இது சற்று குறைந்த அளவில், வறண்டும், கெட்டியாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்பு தன்மை கருமுட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும். இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும் போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

உடலில் வெட்ப மாறுபாடு[தொகு]

பெண்கள் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தில் நடுப்பகுதியில் கண்காணித்திட வேண்டும். அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும் போது, உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி பாரனைட் அதிகமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவை தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்து கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தடுப்பு முறைகள்[தொகு]

தற்போது பெண்ணின் கரு முட்டையுடன் ஆணின் கரு அணு இணைவதைத் தடுக்கும் பல முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

கருத்தடைப் பயன்பாட்டில் முதலாம் ஆண்டில் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு[4][5]
முறை வழமையான பயன்பாடு மிகச் சரியான பயன்பாடு
கருத்தடை இல்லாத நிலை 85% 85%
இணைந்த குளிகைகள் 9% 0.3%
தனி புரோசெசுத்தரோன் குளிகைகள் 13% 1.1%
பெண்களில் மலடாக்கம் 0.5% 0.5%
ஆண்களில் மலடாக்கம் 0.15% 0.1%
பெண்களுக்கான உறை 21% 5%
ஆண்களுக்கான உறை 18% 2%
செப்பினாலான கருப்பையுள்ளான சாதனம் 0.8% 0.6%
இயக்குநீருடனான கருப்பையுள்ளான சாதனம் 0.2% 0.2%
ஒட்டு 9% 0.3%
யோனி வளையம் 9% 0.3%
இயக்குநீர் வகை (Depo-Provera) 6% 0.2%
பதியம் செய்தல் 0.05% 0.05%
மென்றகடும், விந்தெதிரியும் 12% 6%
கருத்தங்கல்பற்றிய அறிவு 24% 0.4–5%
உள்வாங்குதல் 22% 4%
பால்கொடுத்தலால் பின்போடல்
(6 மாத தோல்வி வீதம்)
0-7.5%[6] <2%[7]

ஆண் கருத்தடை சாதனம்[தொகு]

ஆண் அணியும் ஆணுறையை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்ப்பப்பையில் கரு முட்டையுடன் இணைவதைத் தடுத்து கருத்தரிப்பை தவிர்க்க உதவுகிறது. இந்த ஆணுறையை ஒரு முறை உபயோகித்த பின் மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

பெண் கருத்தடை சாதனம்[தொகு]

பெண்களுக்கான கருத்தடைக்குப் பல சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்தடை வளையம்[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கான கருத்தடை சாதனம் 2-4 அங்குல வட்டவடிவில் ஒரு வளையமாக இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது ஒரு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பொருத்திக் கொள்ள பழகி விட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறுப்பில் பொறுத்திக் கொள்ள இயலும். இதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதை தடுத்து கருதரிப்பைத் தவிர்க்கிறது. ஒரு முறை உபயோகித்தப்பின் அதை சோப்பு போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக உள்ளது.

கருப்பைவாய் இடைவெளி[தொகு]

இது மென்சவ்வு போன்றே கருப்பை வாய்ப் பகுதியில் பொருத்திக் கொள்ள கூடிய ஒரு ரப்பர் மூடி. இதை அணிந்து கொள்வதன் மூலம் கருப்பை வாய் மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.

கருத்தடைப் பொருள்[தொகு]

பெண்களுக்கான இந்த கருத்தடைப் பொருள், பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான, பெண்களின் உடலுறுப்பில் பொருத்திக் கொள்ளக் கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதை பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்க்கிறது. இது கருத்தரிப்பை தவிர்ப்பதுடன், எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.

விந்து எதிரி[தொகு]

விந்து எதிரி என்பது பெண் உறுப்பில் தடவிக் கொள்ளும் ஒரு பொருளாகும். இது விந்தணுவைச் செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பைத் தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும், மாத்திரைகள், பூச்சு வடிவத்தில் உள்ளது. இதன் பக்க விளைவுகள் கூட மிகக் குறைவே. சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளை கொடுக்கலாம்[8].

நடைமுறையில் உள்ள கருத்தடை முறை[தொகு]

தாய்ப்பால் அளிப்பது[தொகு]

குழந்தை பிறந்த பின் ஒரு சில மாதங்களுக்கு கருமுட்டை வளர்வது, மீண்டும் மாதவிடாய் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட சற்றே தாமதம் ஏற்படும். தாய்ப்பால் அளிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தள்ளிப் போட இயலும்.

கருத்தடுப்பு சாதனங்கள்[தொகு]

கருப்பையுள்ளான சாதனம் (Intrauterine Device (IUD)[தொகு]

கருப்பையுள்ளான சாதனம் என்பது சிறிய நெகிழியால் செய்யப்பட்டு கருப்பையில் பொருத்திக் கொள்ளும் ஒரு கருத்தடைச் சாதனம் ஆகும். கருப்பையில் உள்ள இந்த பொருள் கருத்தரிப்பை தடை செய்து விந்தணுவும் கரு முட்டையும் இணைந்து வளர்வதை தடை செய்கிறது. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள இந்த கருத்தடைப் பொருளின் பெயர் காப்பர் டி. இது பொருத்தப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட வேண்டும். இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது.

குறைபாடுகள்[தொகு]
 • இதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளது.
 • பொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வலி ஏற்படுகிறது.
 • மாதவிடாயின்போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • மிக அரிதாக கர்ப்பப்பையின் உள்சுவர் தோலில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் போது, அதை நீக்கும் நேரத்தில் வலி ஏற்படலாம்.
 • ஐயுடி பொருத்திக் கொள்வதால் கர்ப்பப்பையில் வெளிப்புறத்தில் முக்கியமாக பெல்லோபியன் டியுபில் கரு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சில பாதிப்புகள் ஏற்பட்டு சரியான மருத்துவ வசதி இல்லாத போது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட நேரிடலாம்

ஸ்டிராய்டு அல்லாத மாத்திரைகள்[தொகு]

கருத்தடுப்புக்கு சில மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இயக்குநீர் முறைகள்[தொகு]

இயக்குநீர் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முறையில், ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் இயக்குநீர்களின் அளவுகள் உடலில் மாற்றப்படுவதால் கரு வளர்ச்சியையும் கரு அணு வளர்ச்சியையும் தடுக்கப்படுகிறது. மேலும் இது கருப்பைவாய்ச் சுவரை அடர்த்தியாகச் செய்வதால் கரு அணு கருப்பைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள்[தொகு]

ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் கலந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவரியில் வளரும் கருமுட்டைகளை வளரவிடாமல் தடுப்பதால் கருத்தரிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். மாலா டி குறைந்த வீரியம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும்.

ப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள்[தொகு]

ப்ரோஐஸ்ட்ரோன் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும்போது, சர்விகல் ம்யுகஸ் அதிகமாக்கியும், கரு அணு கரு முட்டை நகர்வதை குறைத்தும், கரு வளர்வதை தடுக்கிறது. ஆனால் இம்முறையில் உடல் நலத்தில் பக்க விளைவுகள் உள்ளது.

அவசரக் கால கருத்தடை மாத்திரைகள்[தொகு]

பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகைய கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்கலாம். இதன் பக்க விளைவுகளாக, வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் இந்த முறை 100 % நம்பகமானதல்ல.

நிரந்தரக் கருத்தடை முறைகள்[தொகு]

தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்ற போதே செய்து கொள்ள நிரந்தரக் கருத்தடை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பெண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை[தொகு]

பெண்களுக்கு நிரந்தரமாக கருத்தடை செய்து கொள்ளும் முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்துச் செல்லும் குழாயைத் தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில் டியூபெக்டமி, லேப்ராஸ்கோபி போன்று பலமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை[தொகு]

வாசக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் கரு அணு செல்வது தடைபடுவதால், பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களை தூக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்கு பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. "Definition of Birth control". MedicineNet. பார்த்த நாள் August 9, 2012.
 2. "Moral case against contraception". BBC - Ethics Guide. பார்த்த நாள் 27 மே 2017.
 3. http://www.informaworld.com/smpp/content~content=a713793494~db=all
 4. Trussell, James (May 2011). "Contraceptive failure in the United States". Contraception 83 (5): 397–404. doi:10.1016/j.contraception.2011.01.021. பப்மெட் 21477680. 
  Trussell, James (November 1, 2011). "Contraceptive efficacy". in Hatcher, Robert A.; Trussell, James; Nelson, Anita L. et al.. Contraceptive technology (20th revised ). New York: Ardent Media. பக். 779–863. ISBN 978-1-59708-004-0. OCLC 781956734. 
 5. Division of Reproductive Health, National Center for Chronic Disease Prevention and Health Promotion, Centers for Disease Control and Prevention (CDC) (June 21, 2013). "U.S. Selected practice recommendations for contraceptive use, 2013: adapted from the World Health Organization Selected practice recommendations for contraceptive use, 2nd edition". MMWR Recommendations and Reports 62 (5): 1–60. பப்மெட் 23784109. http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/rr6205a1.htm. 
 6. Van der Wijden, C; Manion, C (12 October 2015). "Lactational amenorrhoea method for family planning.". The Cochrane database of systematic reviews (10): CD001329. பப்மெட் 26457821. 
 7. Blenning, CE; Paladine, H (Dec 15, 2005). "An approach to the postpartum office visit.". American family physician 72 (12): 2491–6. பப்மெட் 16370405. 
 8. "Spermicide". Planned Parenthood Federation of America. பார்த்த நாள் 27 மே 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தடை&oldid=2294947" இருந்து மீள்விக்கப்பட்டது