பால்வினை நோய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாலியல் நோய்கள் எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களாகும். யோனிவழி, குதவழி மற்றும் வாய்வழிப் பாலுறவால் இவை பரவுகின்றன. பாலியற் தொடர்புகளாற் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைச் சரியான மருத்துவ சிகிச்சை (பண்டுவம்) மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம். இவ்வாறான நோய்களில் சில பாலுறவு மூலமன்றி குருதி, குருதிப் பொருட்கள் போன்றவற்றாலும் கடத்தப்படலாம்.[1] இந்நோய்கள் ஏற்படும்போது, தெளிவாக அறிகுறிகள் வெளித்தெரியாமல் இருப்பதனால், அவை இலகுவாக ஒருவரிலிருந்து மற்றவருக்குக் கடத்தப்படக்கூடும்.[2][3]. யோனியிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களிலிருந்து திரவம் வெளியேறல், சிறுநீர்க் குழாய்களில் எரிவு, பாலுறுப்புக்களில் புண், வயிற்றுவலி என்பன பொதுவாக ஏற்படக்கூடிய அறிகுறிகளாகும்[1]

கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்ற பாலியல் நோய்கள் எய்ட்ஸ் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்க வல்லன.

முறையற்ற புணர்ச்சி, பால்வினைத் தொழிலாளியுடனான உறவு, பலதாரமணம், ஓரினச்சேர்க்கை போன்றவைகளால் இந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

பாலியல் நோய்கள்[தொகு]

 1. டைசன் சுரப்பி அழற்சி
 2. சிறுநீர்த்தாரை அடைப்பு
 3. சிபிலிசு
 4. கொணோறியா
 5. கிளமிடியா
 6. பாலுறுப்பு உண்ணிகள்
 7. பாலுறுப்பு ஹேர்பீஸ்
 8. பிறப்புறுப்பு மரு
 9. அக்கிப்புண்கள்
 10. எச்.ஐ.வி
 11. மனித சடைப்புத்துத் தீ நுண்மத்தின் தொற்றினால் வரக்கூடிய நோய்கள் (எ.கா. கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், வாய்த்தொண்டைப் (en:Oropharynx) பகுதியில் வரக்கூடிய வாய்த்தொண்டைப் புற்றுநோய் (en:Orophayngeal cancer).

டைசன் சுரப்பி அழற்சி[தொகு]

டைசன் சுரப்பி அழற்சி என்பது பொதுவாக வெட்டை நோய் என்று அறியப்பெறுகிறது. இது சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை ஆகியவற்றில் கிருமி தாக்குதல் நடைபெற்று சிறுநீர்க்கடுப்பு ஏற்படுகிறது. ஆண்குறியின் நுனிப்பகுதியிலுள்ள டைசன் சுரப்பி பாதிக்கப்படுவதால் டைசன் சுரப்பி அழற்சி என்று அழைக்கப்பெறுகிறது. [4]

சிறுநீர்த்தாரை அடைப்பு[தொகு]

முதன்மைக் கட்டுரை: சிறுநீர்த்தாரை அடைப்பு

வெட்டை நோய் கோனக்கால் கிருமிகளால் ம்யூக்கஸ் என்ற சவ்வுப் பகுதி தாக்கப்படுவதால், சிறுநீர் வரும் வழியில் அடைப்பு ஏற்படுகிறது.

பாலுருப்பு உண்ணிகள்[தொகு]

இந்நோய் ஆண் மற்றும் பெண்ணின் பாலுறுப்புப் பகுதிகளில் தோன்றும் சதைப் பற்றான வளர்ச்சியாகும். இந்நோயானது தாயிலிருந்து குழந்தைக்கு கடத்தப்பெறும் அபாயமும் உள்ளது.

பாலுறுப்பு ஹேர்பீஸ்[தொகு]

பாலுறுப்பு ஹேர்பீஸ் என்பது வைரசினால் ஏற்படும் நோயாகும்.

எச்.ஐ.வி[தொகு]

முதன்மைக் கட்டுரை: எச்.ஐ.வி

ரெட்ரோவைரசு எனும் வைரசின் தாக்குதலினால் மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனில் குறைபாடு ஏற்பட்டுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி பெருநோய்கள் தாக்குதல் ஏற்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்[தொகு]

பால்வினை நோய் இருக்கிறதா என்பதைக் கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வ.எண். பெண்களுக்கு ஆண்களுக்கு
1 பிறப்புறுப்பில் புண் பிறப்புறுப்பில் புண்
2 சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், வலி சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், வலி
3 அதிகமான துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் சிறுநீர்த்துவாரத்தில் வெள்ளைக்கசிவு
4 அடிவயிற்றில் வலி வலியுடன் விரைப்பை வீக்கம்
5 இடுப்பு அறையில் நெறிகட்டுதல் இடுப்பு அறையில் நெறிகட்டுதல்

பெண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்களில் பெரும்பாலானவை அவர்களின் உள்ளடங்கிய இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கின்றன. அதனால் பால்வினைத் தொற்று ஆண்களுக்கு வெளியே தெரிவது போல பெண்களுக்குத் தெரிவதில்லை.

பரிசோதனைகள்[தொகு]

 1. கிராம் ஸ்டெயினிங் பரிசோதனை - வெட்டை நோய்க் கிருமிகளை கண்டறிதல்.
 2. ஆண்டிஜன் டிடெக்ஷன் சோதனை - கிளாமிடியா கிருமிகள் கண்டறிய.
 3. சானக் ஸ்மியர் - அக்கிப் புண்களின் திரவத்தில் ஸ்டெயின் கலந்து செய்கின்ற பரிசோதனை.
 4. ஐஜீஜி. ( IgG) - ஐஜீஎம் பரிசோதனை.
 5. வி.டி.ஆர்.எல் (VDRL) பரிசோதனை - சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப் பட அறிய
 6. டி.பி.எச்.ஏ (TPHA) சோதனை - சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப்பட அறிய
 7. எலிசா சோதனை எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் அறிய.

தடுப்பு முறைகள்[தொகு]

 • பாலுறவின் பொழுது, ஆண்குறியில் ஆணுறை அணிதல், பெண்குறியில் பெண்ணுறையை உபயோகித்தல்
 • முறையான பாலுறவு.
 • பலதாரமண பாலுறவினை தவிர்த்தல்
 • விலைமாதுவினை தவிர்த்தல்
 • ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு
 • ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்ப்புணர்ச்சி போன்றவற்றை தவிர்த்தல்
 • பாலியல் தொற்று ஏற்படாமல் இருக்கு உறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புருப்புகளை தூய்மையாக வைத்திருத்தல்
 • பாலியல் நோய்களுக்கான முறையான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளல்

சிகிச்சைகள்[தொகு]

பெரும்பாலான பால்வினை நோய்கள் முறையான சிகிச்சைகளால் குணப்படுத்தக்கூடியவை. நோயின் தொடக்கநிலையிலேயே சிகிச்சை பெற துவங்கினால், எளிமையாகவும் முழுமையாகவும் குணம் செய்யலாம். முறையற்ற சிகிச்சைகளும், முழுமையற்ற சிகிச்சைகளும் மலட்டுத்தன்மை உண்டாக்கவும், இதயம் மூளை போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

தொகுப்பு சிகிச்சை முறை[தொகு]

ஒரே வகையான பால்வினைத் தொகுப்பிற்கு பல நோய்க் கிருமிகளும் காரணமாக இருக்கலாம். பால்வினை நோயிற்கு காரணமாயிருக்கும் அனைத்து நோய்க் கிருமிகளுக்கும் மருந்துகள் ஒருசேர தரப்படுகின்றன. இது “தொகுப்பு சிகிச்சை முறை” (Syndromic Management) என்று அழைக்கப்படுகின்றது.

குழந்தைக்குப் பால்வினை நோய்[தொகு]

கருவிலிருக்கும் போதோ அல்லது குழந்தை பிறக்கும் போதோ தாயின் பிறப்புறுப்புப் பாதையில் உள்ள பால்வினை நோய்த் தொற்று குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்புண்டு.

கர்ப்பமுற்றவர்களுக்கான சிகிச்சை[தொகு]

கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் மருத்துவம் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் பால்வினை நோய்த் தொற்று உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். பால்வினை நோய்க்கான அறிகுறிகள் சிறிது காலத்தில் தானாகவோ அல்லது சிகிச்சை காலம் முடியும் முன்போ மறைவதற்கு வாய்ப்புண்டு. இது போன்ற நேரங்களில் குணமடைந்து விட்டோம் என்று நினைக்கக் கூடாது. முழுமையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

தமிழ்நாட்டில் சிகிச்சை[தொகு]

தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொகுப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மையான பால்வினை நோய்கள் குணமாகி விடும். இரத்தம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுடன் சிகிச்சை பெற, அரசு தாலுகா மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவற்றை அணுகலாம்.

யார் சிகிச்சை பெறுவது?[தொகு]

பால்வினை நோய்த் தொற்றுள்ளவர் மட்டும் சிகிச்சை பெற்றால் போதாது. அவருடைய உறவுத் துணையோடு சேர்ந்து ஒரே சமயத்தில் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சிகிச்சை பெறாவிடில் சிகிச்சை பெறாத துணையின் மூலம் பால்வினை நோய் திரும்பவும் வரும் வாய்ப்பு உள்ளது.

பால்வினை நோய் - எய்ட்ஸ் தொடர்பு[தொகு]

எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் என்பதும் ஒரு வகையான பால்வினை நோய்தான். பால்வினை நோய் உள்ளவர்களை எச்.ஐ.வி. எனும் எய்ட்ஸ் தாக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட ஒன்பது மடங்கு அதிகம். மேலும் பால்வினை நோய் எச்.ஐ.வி தொற்று வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

இனப்பெருக்க உறுப்பு நோய்களுடன் தொடர்பு[தொகு]

பால்வினை நோய்களும் ஒரு வகையான இனப்பெருக்க உறுப்பு நோய்தான். இனப்பெருக்க உறுப்பு நோய்த் தொற்று உடலுறவு மூலம் மட்டுமில்லாமல் பிற வழிகளிலும் பரவலாம். திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழித்தல், அசுத்தமான கழிவறையைப் பயன்படுத்தல் போன்றவற்றாலும் வரக்கூடும். மாதவிடாய் காலங்களில் தன் சுத்தத்தைக் கடைப்பிடிக்காத பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு வழி நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதற்காகப் பயன்படுத்தும் துணிகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண், பெண் இருவருமே சிறுநீர், மலம் கழித்த பின்பும், உடலுறவுக்குப் பின்பும் இனப்பெருக்க உறுப்புகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக சுத்தமான கழிப்பறை, சுத்தமான தண்ணீர், சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்கள் போன்றவை மிகமிக அவசியம்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Sexually transmitted infections (STIs)". Fact Sheet. WHO (Aug. 2016). பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.
 2. Medical microbiology (7th ed.). St. Louis, Mo.: Mosby. 2013. p. 418. ISBN 9780323086929. https://books.google.com/books?id=RBEVsFmR2yQC&pg=PA418. 
 3. Goering, Richard V. (2012). Mims' medical microbiology. (5th ed.). Edinburgh: Saunders. p. 245. ISBN 9780723436010. https://books.google.ca/books?id=pzQayLEQ5mQC&pg=PA245. 
 4. http://www.keetru.com/medical/sex/8.php

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

 • “தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்” வெளியிட்ட கைப்பிரதி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்வினை_நோய்கள்&oldid=2260270" இருந்து மீள்விக்கப்பட்டது