அம்ரி, சிந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்ரி என்பது, பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் கி.மு 3600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொல்பழங்காலக் குடியிருப்பு ஆகும். இக்களம், மொகெஞ்சதாரோவுக்குத் தெற்கே ஐதராபாத் - தாரு சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், ஐதராபாத்துக்கு வடக்கே 1000 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.

தொல்லியல்[தொகு]

இது எக்காலத்திலும் ஒரு பெரிய நகரமாக இல்லாதிருந்தபோதும், இது பல்வேறு அடுக்குகளாகக் காணப்படுகிறது.[1]

அரப்பாவுக்கு முந்திய காலம்[தொகு]

கி.மு 3600க்கும் 3300க்கும் இடைப்பட்ட இதன் தொடக்க நிலையில், இது ஒரு அரண்செய்யப்பட்ட நகரமாக இருந்தது. இது சிந்து வெளி நாகரிகத்தின் அரப்பாவுக்கு முந்திய நிலையைச் சேர்ந்ததாகும். கிர்த்தார் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்த இது அக்காலத்தில் கீழ் சிந்துப் பகுதியில் ஒரு முக்கியமான நகர மையமாக விளங்கியது. கி.மு 6000க்கும் 4000க்கும் இடையில் வேளாண்மைச் சமுதாயத்தின் உருவாக்கமும் தொடர்ந்து நகராக்கமும் ஏற்பட்ட பலூச்சித்தானுக்கு அண்மையில் அம்ரி அமைந்துள்ளது. கால வரிசைப்படி, அம்ரி, ரெகுமான் டேரிக்குப் பிந்தியது ஆகும்.

சிந்து ஆற்றின் மேற்குக் கரையில், 8 எக்டேரில் அமைந்துள்ள பண்டைக்கால மேடுகளில் விரிவான அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் தனியான இயல்புகளைக் கொண்டிருப்பதால், அம்ரிப் பாண்டங்கள் என அழைக்கப்படுகின்றன. பிற அரப்பாவுக்கு முந்தியகால நகரங்களைப்போல இப்பகுதியில் எழுத்துக்கள் எதுவும் காணப்படவில்லை. கி.மு 2500 அளவில் இங்கே பரவலான தீ ஏற்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

பிற்காலம்[தொகு]

பிற்பட்ட காலப்பகுதிகளில் இப்பகுதியின் பண்பாட்டு இயல்புகள் பின்வருமாறு காணப்படுகின்றன.

  • காலப்பகுதி 2 (கி.மு 2750 - 2450) சிந்துவெளிப் பண்பாட்டின் கூறுகள் கூடுதலாகத் தெரிகின்றன.
  • காலப்பகுதி 3 (கி.மு 2450 - 1900) முழுவது சிந்துவெளிப் பண்பாட்டைச் சேர்ந்த்தது.
  • காலப்பகுதி 4 (கி.மு 1900 - 1300) பண்பாட்டுப் படைகளின் கலப்புக் காணப்படுகின்றது. சூக்கர் பண்பாட்டின் கூறுகள் தோன்றி சிந்துவெளிப் பண்பாட்டின் கடைசிப் பகுதியுடன் சேர்ந்து நிலவுகின்றது.[2] பின்னர் சாங்கர் பண்பாடும் காணப்படுகிறது.
  • காலப்பகுதி 5 - இது முசுலிம் பண்பாட்டுக்குரியது. மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Charles Higham, Encyclopedia of Ancient Asian Civilizations. Infobase Publishing, 2009 ISBN 1438109962 p. 9
  2. Sigfried J. de Laet, Ahmad Hasan Dani, eds. History of Humanity: From the third millennium to the seventh century B.C. UNESCO, 1996 ISBN 9231028111 p.674
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரி,_சிந்து&oldid=2808101" இருந்து மீள்விக்கப்பட்டது