உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சுவினி (நட்சத்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட இராசி வரைப்படத்தில் அச்சுவினி

அச்சுவினி (Ashvini) என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் முதலாவது நட்சத்திரம் ஆகும். இது மேட இராசியில் (Aries) உள்ள மிகப்பிரகாசமான நட்சத்திரம். இதனுடைய அறிவியற்பெயர் -Arietis. மேற்கத்திய நாடுகளில் இதை "ஆமல்" (Hamal) என்பர்.

இது ஆங்கிலேய வானியலில் மேட இராசி விண்மீன் குழுவில் உள்ள β மற்றும் γ விண்மீனுக்கு ஒப்பாகும்.[1] சோதிடத்தில் அச்சுவினியை கேது ஆள்கிறது[2].

அச்சுவினி விண்மீனை தமிழில் இரலை, ஐப்பசி, யாழ், ஏறு, புரவி, பரி, சென்னி என்ற சொற்களால் திவாகர, சூடாமணி நிகண்டுகள் சுட்டியுள்ளன.[3]

அறிவியல் விபரங்கள்[தொகு]

இது சூரியனின் குறுக்களவை விட 18 பங்கு பெரியது. சூரியனைப்போல் 4.5 பங்கு கனமுள்ளது. 55 பங்கு ஒளியுடையது. பூமியிலிருந்து 65.9 ஒளியாண்டுகள் தூரத்தில் தான் இருப்பதால் இதன் தோற்ற ஒளிப்பொலிவு (apparent magnitude) 2.01 ஆகும். வானத்தில் ஒளிரும் எல்லாவற்றிலும் ஒளிர்வில் 47வதாக உள்ளது.

காணக்கூடிய நேரம்[தொகு]

சாதாரணமாக இதை திசம்பர் 1ஆம் தேதி 22 மணியளவிலும், செப்டம்பர் 1ம் தேதி 4 மணி அளவிலும், மற்ற நாட்களில் கீழே உள்ள அட்டவணைப்படியும் காணலாம். இது பெகாசசு சதுரத்திற்குக் கிழக்கே உள்ளது. இதற்கு மேற்கேயுள்ள கார்த்திகை நட்சத்திரங்களும் (Pleides cluster) இதுவும் ஏறக்குறைய ஒரே நடுவரைவிலக்கம் (declination) உடையவை.

குறிப்பிட்ட நட்சத்திரத்தை வானில் மறுமுறை பார்க்கக்கூடிய கால அட்டவணை[தொகு]

நட்சத்திரம் மறுமுறை தோன்றுவது/தோன்றியது பார்வை நாள் பார்வை நேரம்
அதே இடத்தில் ஒரு மாதத்திற்குப் பின் 2 மணி நேரத்திற்கு முன்
அதே இடத்தில் ஒரு மாதத்திற்கு முன் 2 மணி நேரத்திற்குப் பின்
30 பாகை தள்ளி மேற்கே ஒரு மாதத்திற்குப் பின் அதே நேரத்தில்
30 பாகை தள்ளி கிழக்கே ஒரு மாதத்திற்கு முன் அதே நேரத்தில்
இன்னும் மேற்கே அதே நாளில் பிற்பாடு
இன்னும் கிழக்கே அதே நாளில் முன்னமேயே

இரவில் மணி அறிதல்[தொகு]

இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் அச்சுவினி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

அச்சுவனி அறுமீன் குதிரைத்தலைபோல்
மெச்சிடு கடகத்திரு கடிகையதாம்

பொருள்: அச்சுவனி ஆறு நட்சத்திரங்களைக்கொண்டது. அவைகள் சேர்ந்த உருவம் குதிரைத் தலை போல் இருக்கும். அச்சுவனி உச்சத்தில் வரும்போது கீழ்வானில் கடகராசி உதித்து இரண்டு நாழிகையாயிருக்கும்.

எ.கா.: மார்கழி மாதம் 15 தேதியில், அச்சுவினியை இரவு உச்சத்தில் பார்ப்பதாகக்கொள்வோம். தனுசு இராசியின் மத்தியில் சூரியன் இருப்பதால் சூரியனுக்கும் கீழ்த்தொடுவானத்திற்கும் உள்ள இடச்சுழி தூரத்தை இப்படி கணக்கிடலாம். தனுசில் 2 1/2 நாழி, மகரம், கும்பம், மீனம், மேசம், இரிடபம், மிதுனம், ஆகிய ஒவ்வொரு ராசிக்கும் தோராயமாக 5 நாழிகை, கடகத்தில் 2 நாழிகை -- இவ்வளவையும் கூட்டினால் 34 1/2 நாழிகை ஆகிறது. அதாவது, சூரியன் மறைந்து 4 1/2 நாழிகையாகிறது. நேரம் 7-48P.M.(தோராயமாக).

வடமொழியில் இதற்கு ஒத்த வாய்பாடு: அச்வீ கர்க்கீ ரூபா. இங்கு "ரூபா" என்ற சொல்லுக்கு க-ட-ப-ய எண்ணிக்கையில் சூட்சுமமாக 2 1/8 நாழிகை என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அச்சுவனியை உச்சத்தில் பார்த்தால் கீழ்வானில் கடகராசி உதித்து 2 1/8 நாழிகையாகியிருக்கும் என்று கொள்ளவேண்டும்.

இதன்படி, மேலே ஆளப்பட்ட எடுத்துக்காட்டில், நேரம் 7-51 P.M. என்ற விடை வரும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

இரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indianastrology2000.com/astrology-clues/ashwini.php
  2. Hart De Fouw, Robert Svoboda. ‘’Light on Life: An Introduction to the Astrology of India.’’ 2003: pg. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-940985-69-1
  3. முனைவர் பெ. துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள், அறிவன் பதிப்பகம், தஞ்சாவூர், டிசம்பர் 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுவினி_(நட்சத்திரம்)&oldid=3579759" இலிருந்து மீள்விக்கப்பட்டது