உள்ளடக்கத்துக்குச் செல்

ரோகிணி (நட்சத்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோகிணி அல்லது உருள்(விண்மீன்) (Aldebaran) என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ஆகும். இது இடப இராசியிலுள்ள பெரிய சிவப்புப் பேருரு நட்சத்திரம். இதனுடைய அறிவியற் பெயர் . வழக்கிலுள்ள பொதுப்பெயர் அல்டிபாரன் (Aldebaran) ஆகும். இதை வானில் எளிதில் கண்டுபிடித்துக்கொள்ளலாம். Orion's Belt என்று சொல்லப்படும் மூன்று நட்சத்திரங்களில் இடமிருந்து வலம் (வட அரைகோளத்தில்) சென்று அதே நேர்கோட்டில் பார்த்துக் கொண்டே போனால் முதலில் காணப்படும் பிரகாசமான நட்சத்திரம் உரோகிணிதான்.

மேழ விண்மீன்குழுவில் உள்ள விண்மீன்களில் உரோகிணி (aldebaran) மிகவும் முக்கியமானதாகும். உருள் என்று அழைக்கப்படும் இது சிவப்பு நிறமுடையதாகும். அடிவானத்தில் கார்த்திகை விண்மீன் தோன்றிய சிறிது நேரத்தில் இது தோன்றும். எனவே, பின்பற்றுபவர் என்ற பொருள்படும் அரேபியச் சொல்லிருந்து இதன் பெயர் தோன்றியதாக்க கூறப்படுகின்றது. இந்த விண்மீனின் தோற்றப் பொலிவுப் பருமை (apparent magnitude) 0.86 ஆகும். இதன் விட்டம் தோராயமாகச் சூரியனின் விட்டத்தைப் போல் ஐம்பது மடங்கு ஆகும். இது K-5 அலைமாலை வகையைச் சார்ந்தது. புவியிலிருந்து தோராயமாக 65 ஒளியாண்டு தொலைவிலுள்ள இதன் புறப்பரப்பு வெப்பநிலை 4000 °C ஆகும்.

அறிவியல் விபரங்கள்[தொகு]

சூரியனையும் ரோகிணியையும் ஒப்பிட்டுப் பார்த்தல்

ரோகிணி ஒரு 0.8 ஒளியளவுள்ள முதல் அளவு நட்சத்திரம். சூரியனைப் போல் 36 மடங்கு பெரியது. சூரியனை விட 100 மடங்கு பிரகாசமானது. 65 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

இரவில் மணி அறிதல்[தொகு]

இரவில் நட்சத்திரங்களைக்கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் ரோகிணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

உரோகிணி ஊற்றால் பன்னிரு மீனாம்

முரண்மிகு சிம்மம் மூன்றேகாலாம்.

இங்கு உரோகிணி பன்னிரு நட்சத்திரங்களைக்கொண்டது என்று சொல்லும் இந்தச் செய்யுளின் கருத்து தற்கால அறிவியல் ரோகிணியைப்பற்றிக் கொடுத்திருக்கும் தகவல்களுக்கு ஒப்புவதாக இல்லை. அதனால் செய்யுளின் இரண்டாம் பாகத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம். ரோகிணி உச்சத்திற்கு வரும்போது சிங்கராசியில் 3 1/4 நாழிகை யளவு தொடுவானத்திற்கு மேலே வந்திருக்கும் என்பது பாட்டின் கருத்து. இது சரியான கருத்து என்பதை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

எ. கா.

கார்த்திகை மாதம் 22ம் நாள் சூரியன் விருச்சிகராசியில் முக்கால் பாகத்தைக்கடந்திருக்கும். அன்றிரவு நாம் உரோகிணியை உச்சவட்டத்தில் பார்க்கும்போது நேரம் என்னவாக இருக்கும் என்று பாட்டின் இரண்டம் பாகம் சொல்கிறது. கீழ்த்தொடுவானத்தில் சிங்கராசியினுடைய மிகுதி 1 3/4 நாழிகை -- எல்லா இராசிகளுக்கும் இராசிச்சக்கரத்தில் சராசரி ஐந்து நாழிகை அல்லது 30 பாகையளவு இடம் இருப்பதாக, நாம் கணிப்பு வசதிக்காகக் கொள்கிறோம் --, அதற்குக் கீழே கன்னிராசியில் 5 நாழிகை, பிறகு துலா ராசியில் 5, அதற்குப் பிறகு விருச்சிக ராசியில் முக்கால் பகமான 3 3/4 நாழிகை, (பார்க்க: படிமம்) இவ்வளவும் சேர்ந்த தூரம் தான் கீழ்த்தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் உள்ள இடச்சுழி தூரம். அதாவது 15 1/2 நாழிகை. அதாவது, 6 மணி 12 நிமிடங்கள். சூரியன் கீழ்த்தொடுவானத்திற்கு வர இன்னும் இவ்வளவு நேரம் இருப்பதைக் காட்டுகிறது. ஆக, நேரம் (ஏறக்குறைய) 11-48 P.M. இதே முறையில் இதர நாட்களிலும் கணக்கிட்டு மாதிரிக்காக கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரோகிணியை உச்ச வட்டத்தில்

பார்க்கும் இரவு

சூரியன் இராசிச்சக்கரத்தில்

இருக்கும் இடம்

வாய்பாட்டிலிருந்து

கணிக்கப்பட்ட நேரம் (ஏறக்குறைய)

ஆவணி 22 சிங்க ராசியில் நுழைந்து

22 நாள் ஆனது

5-48 A.M.
புரட்டாசி 22 கன்னி ராசியில் நுழைந்து

22 நாள் ஆனது

3-48 A.M.
ஐப்பசி 22 துலா ராசியில் நுழைந்து

22 நாள் ஆனது

1-48 A.M.
கார்த்திகை 22 விருச்சிக ராசியில் நுழைந்து

22 நாள் ஆனது

11-48 P.M.
மார்கழி 22 தனுசு ராசியில் நுழைந்து

22 நாள் ஆனது

9-48 P.M.
தை 22 மகர ராசியில் நுழைந்து

10 நாள் ஆனது

7-48 P.M.

துணை நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_(நட்சத்திரம்)&oldid=3860370" இலிருந்து மீள்விக்கப்பட்டது