அகமது போசுதமாம்
அகமது போசுதமாம் Yang Berhormat Tuan Ahmad Boestamam | |
---|---|
தலைவர், மலாயா தேசிய கட்சி | |
பதவியில் 1955–1959 | |
மலேசிய நாடாளுமன்றம் மலேசிய மக்கள் கட்சி | |
பதவியில் 1959–1964 | |
செதாபாக் மக்களவை தொகுதி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அப்துல்லா சானி ராஜா கெச்சில் Abdullah Sani Raja Kechil 30 நவம்பர் 1920 பேராக் பேராங் உலு, பேராக் மலாயா |
இறப்பு | 19 சனவரி 1983 கோலாலம்பூர் பொது மருத்துவமனை கோலாலம்பூர், மலேசியா | (அகவை 62)
அரசியல் கட்சி | மலாயா தேசிய கட்சி மலேசிய மக்கள் கட்சி மலேசிய மருகேன் கட்சி |
துணைவர் | டத்தின் ரபிதா முகமது வாஜிப் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | கோலாலம்பூர், மலேசியா |
வேலை | அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் |
அகமது போசுதமாம் அல்லது அப்துல்லா சானி ராஜா கெச்சில் (ஆங்கிலம்; மலாய்: Ahmad Boestamam; சீனம்: 阿末·博斯达曼); (பிறப்பு: 30 நவம்பர் 1920; இறப்பு: 19 சனவரி 1983) என்பவர் மலேசிய சுதந்திரப் போராட்ட வீரர்; பிரித்தானிய மலாயாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அரசியல் புரட்சியாளர் என அறியப்படுகிறார்.
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அகமது போசுதமாம்; மலேசிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட அரசியல் போராட்டவாதி ஆவார். மலாயா தேசிய கட்சி, மலேசிய மக்கள் கட்சி, மலேசிய மருகேன் கட்சி ஆகிய கட்சிகளைத் தோற்றுவித்த தலைவரும் ஆவார்.[1]
பொது
[தொகு]இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவில் உள்ள தானா தாத்தார் எனும் இடத்தில் இருந்து; பேராக், தஞ்சோங் மாலிம், பேராங் உலு கிராமத்தில் குடியேறிய மினாங்கபாவு மக்கள் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர்.
1930-களின் பிற்பகுதியில் பேராக் மாநிலத்தில் இயங்கி வந்த கெசத்துவான் மெலாயு மூடா எனும் மலாய் இளைஞர்களின் இயக்கத்தில் போசுதமாம் ஈர்க்கப்பட்டார்.[2] இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அங்காத்தான் பெமுடா இன்சாப் எனும் தீவிரவாத இளைஞர் இயக்கத்தின் இளைஞர்ப் பிரிவு தலைவராகச் செயல்பட்டார்.[3]
அந்த இயக்கத்தில், அந்தக் காலக்கட்டத்தில் டாக்டர் புர்கானுதீன் அல்-எல்மி (Burhanuddin al-Helmy)[4] மற்றும் இசாக் அஜி மொகமட் (Ishak Haji Muhammad) போன்ற வயதான மற்றும் மிதமான கொள்கைகளைக் கடைப்பிடித்த தலைவர்களும் இருந்தார்கள். மலேசிய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாக் சாக்கோ (Pak Sako) எனும் இசாக் அஜி மொகமட் என்பவர் மலேசியாவின் மலாய் தேசியவாத கட்சியின் தொடக்க கால நிறுவனரும் ஆகும்.
மலாயா அவசரகாலம்
[தொகு]1948-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மலாயா அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்படுவதற்கு முன்னர், ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மலாயா நாட்டிற்கு விடுதலை கோரி போராட்டம் செய்தனர். அவர்களின் தலைவர்களில் ஒருவராக போசுதமாம் செயல்பட்டார்.
அதன் காரணமாக, 1948-ஆம் ஆண்டில், மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போசுதமாம் கைது செய்யப்பட்டு, ஏழு ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டார். 1955-இல் போசுதமாம் விடுதலையானார். அவர் விடுதலையானதும் 11 நவம்பர் 1955-இல் மற்ற விடுதலைப் போராளிகளுடன் இணைந்து மலாயா மக்கள் கட்சி (Parti Rakyat Malaya) எனும் கட்சியை நிறுவினார். பின்னர் இதுவே மலாயா சோசலிச முன்னணி (Malayan Peoples' Socialist Front) என பெயர் மாற்றம் கண்டது.
அரசியல் வாழ்க்கை
[தொகு]அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவின் தலைமையிலான இந்தோனேசிய காலனித்துவ எதிர்ப்பு மற்றும் இந்தோனேசிய தேசியவாதப் போராட்டங்களில் ஈர்க்கப் பட்டார். 1959-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் அகமட் போசுதமாம் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளித்தது. அவர் கோலாலம்பூர் கூட்டரசு பகுதியின் செதாபாக் மக்களவை தொகுதியில் மலாயா மக்கள் சோசலிச முன்னணி கட்சியின் கீழ் வெற்றி பெற்றார். அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் மலாயாவில் பிரபலம் அடைந்தார்.
1963-இல், மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. அதன் தொடர்ச்சியாக அப்போதைக்கு மலாயாவை ஆட்சி செய்த கூட்டணி அரசாங்கம்; சோசலிச எதிர்க்கட்சிகள் மீது அழுத்தமான நடவடிக்கைகளை எடுத்தது.
எதிர்க்கட்சி தலைவர்கள் கைது
[தொகு]மலாயாவில் செயல்பட்ட எதிர்க்கட்சிகள் சார்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது. வலுவான அரச அடக்குமுறையின் கீழ், மலாயா சோசலிச முன்னணி கலைக்கப்பட்டது; மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் முடக்கப்பட்டன.[1]
எதிர்க்கட்சி தலைவர்கள்
[தொகு]- அகமட் போசுதமாம் (Ahmad Boestamam)
- இசாக் அஜி முகம்மது (Ishak Haji Muhammad)
- அப்துல் அசீஸ் இசாக் (Abd(ul Aziz Ishak)
- டத்தோ காம்போ ராட்ஜோ Datuk Kampo Radjo)
- டான் காய் கீ (Tan Kai Hee)
- டான் காக் கின் (Tan Hock Hin)
- டாக்டர் எம்.கே. ராஜகுமார் (Dr. M.K. Rajakumar)
- அசுனுல் அடி (Hasnul Hadi )
- தாஜுதீன் காகார் (Tajuddin Kahar)
அதன் பின்னர் நாடாளுமன்ற அரசியலில், மலேசிய மக்கள் கட்சி ஒரு விளிம்புநிலைக் கட்சியாக மாறியது. அகமட் போசுதமாம் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, காசிம் அகமது என்பவரின் தலைமையிலான குழுவினரால், அகமட் போசுதமாம் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மலேசிய மருகேன் கட்சி
[தொகு]இதைத் தொடர்ந்து அகமட் போசுதமாம் அவர்களும்; அவருடைய தோழர் இசாக் அஜி முகம்மதுவும் இணைந்து; 1968-இல் மலேசிய மருகேன் கட்சியை (Parti Marhaen Malaysia) நிறுவினார்கள். அத்துடன் 1974 மலேசியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் சோசலிஸ்டு முன்னணியை மீண்டும் நிறுவ முயன்றார்கள். ஆனால் தோல்வி அடைந்தனர்.[5]
பின்னர் அகமட் போசுதமாம், மலேசிய மருகேன் கட்சியை மலேசிய பெக்கெமாஸ் (Malaysian Social Justice Party) கட்சியில் இணைத்தார். ஆனாலும் அந்தக் கட்சி 1974 மலேசியப் பொதுத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே வென்றது. பின்னர் அகமட் போசுதமாம்; மலேசிய பெக்கெமாஸ் கட்சியின் தலைவர் பதவியை டான் சி கூன் (Tan Chee Khoon) என்பவரிடம் இருந்து ஏற்றுக் கொண்டார். ஆனால் விரைவில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இறுதியில் மலேசிய அரசியலில் இருந்து அகமட் போசுதமாம் அதிகமாய் அறியப் படாமல் போனார். 1982-ஆம் ஆண்டில், அவர் ஆறு மாதங்களாக அவதிப்பட்டு வந்த நுரையீரல் புற்றுநோயின் காரணமாக, கோலாலம்பூர் மருத்துவமனையில் 19 சனவரி 1983 அன்று காலை இறந்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Syed Husin remembers #1: Merdeka-era leaders lost to the nation". 23 September 2021.
- ↑ Sani, Rustam (2008). Social Roots of the Malay Left. SIRD. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9833782444.
- ↑ Sani, Rustam (2008). Social Roots of the Malay Left. SIRD. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9833782444.
- ↑ Federspiel, Howard M. (2007). Sultans, shamans, and saints: Islam and Muslims in Southeast Asia. University of Hawaii Press. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-3052-6.
- ↑ "Partai Marhaen mulai ator langkah".
- ↑ NST (19 Januari 1983). "Datuk Boestaman meninggal di KL". Berita Harian. 20 Januari 1983.
நூல்கள்
[தொகு]- Harry Aveling, trans., Ishak Haji Muhammad: The Prince of Mount Tahan, Singapore: Heinemann Educational Books, (Asia), 1980.
- Adam, Ramlah (1994). Ahmad Boestamam: Satu Biografi Politik. Kuala Lumpur: Dewan Bahasa Dan Pustaka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9836243453.
- Boestamam, Ahmad (2004). Memoir Ahmad Boestamam: Merdeka dengan Darah dalam Api. Bangi: Penerbit Universiti Kebangsaan Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9679426122.