உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஏ. கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஏ. கணபதி
S.A.Ganapathy
胜作为
மலாயா தொழிலாளர்களின்
உரிமைப் போராட்டவாதி
பிறப்பு1912
 இந்தியா தமிழ்நாடு
தம்பிக்கோட்டை, தஞ்சாவூர்,
இறப்புமே 4, 1949(1949-05-04) (அகவை 37)
 மலேசியா கோலாலம்பூர்
புடு சிறைச்சாலை
பிரித்தானியர்களால்
தூக்குத் தண்டனை
இருப்பிடம் சிங்கப்பூர்
தேசியம்மலேசியர்
மற்ற பெயர்கள்கயிற்றில் தொங்கிய கணபதி
(கலைஞர் கருணாநிதி
வழங்கிய பெயர்)[1]
பணிதேசிய தொழிற்சங்கவாதி
அறியப்படுவதுமலாயா தொழிற்சங்கவாதி
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவர்
சமூக நீதி செயல்பாட்டாளர்
இந்திய தேசிய இராணுவ வீரர்
சமயம்இந்து
பெற்றோர்ஆறுமுகதேவர்; வைரம்மாள்
வாழ்க்கைத்
துணை
திருமணம் ஆகவில்லை

எஸ். ஏ. கணபதி (S.A. Ganapathy) அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 - இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர்.

அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர். மலாயா கண்டெடுத்த புரட்சித் தலைவர்களில் ஒருவர்.[2][3]

வாழ்க்கை சுருக்கம்[தொகு]

எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என இரு நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்கு மத்தியில் வாட்டர்பால் தோட்டம் (Waterfall Estate) இருக்கிறது. அங்கே கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் துப்பாக்கி குண்டுகளும் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார்.[4] அவரைக் காப்பாற்ற ஜவஹர்லால் நேரு புதுடில்லியில் இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டார்.

நேருவின் நண்பர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் லண்டனில் முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. விசாரணை செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். எஸ். ஏ. கணபதி தூக்கில் இடப்பட்டதை எதிர்த்து இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.[5]

எஸ். ஏ. கணபதி தூக்கிலடப்பட்ட செய்தியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் காலனி ஆட்சிகளுக்கான அமைச்சர் வில்லியம்ஸ் டேவிட் ரீஸ், நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். எஸ். ஏ. கணபதியின் வழக்கில் நீதி மதிப்பீட்டாளர்களாக இருந்த ஓர் ஐரோப்பியரும் ஓர் இந்தியரும் ஒரு சேர தூக்குத் தண்டனைக்கு முடிவு எடுத்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.

ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார்.[6] அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army) நடத்தி வந்தனர்.[7] அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP) [8] கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இந்தக் கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]

அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம்[தொகு]

இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார்.

எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. எஸ். ஏ. கணபதி ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத் திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப் பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு கொண்டு சென்றது.

மலாயாத் தொழிற்சங்கங்களின் உருவாக்கப் பின்புலம்[தொகு]

1900களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். 1928 ஆம் ஆண்டு முதல் 1937 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அந்தச் சம்பளமும் குறைக்கப்பட்டு 40 காசாகக் கொடுக்கப் பட்டது. அதனால் பிரச்னைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வு காண 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன.

சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு வரை கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன. சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள முறை. இதைக் கண்டித்து சிலாங்கூர், கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940இல் நடந்தது.

10 காசு சம்பள உயர்வு போராட்டம்[தொகு]

அந்த முதல் இந்தியத் தொழிற்சங்கத்திற்கு, அப்போது கோலாலம்பூரில் மிக முக்கியப் பிரமுகராக விளங்கிய ஆர். எச். நாதன் எனும் ஆர். ஹாலாசிய நாதன் தலையாய பங்கு வகித்தார். இவர் 1938இல் தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியர் பகுதியில் பணிபுரிந்து வந்தார். கிள்ளான் வட்டார இந்தியத் தொழிலாளர்கள் 10 காசு சம்பள உயர்வு கோரிப் போராடினர். அப்போதைய தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் தோட்டத்திற்குள் வருகை தரக்கூடாது. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரில் மிதிவண்டியில் போகக்கூடாது எனும் அடிமைத்தனமான கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்; சம்பளத்தில் 10 காசு உயர்த்தி 60 காசாகத் தர வேண்டும் என்று கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கம் போராட்டத்தில் இறங்கியது.

வேலை நிறுத்தம்[தொகு]

1941 பிப்ரவரி மாதம் கிள்ளான் வட்டார இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும்; 5 காசு சம்பள உயர்வு தரவும் தோட்ட நிர்வாகங்கள் முன்வந்தன. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தம் 1941 ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவுக்கு வந்தது. நாடு முழுமையும் இருந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த வேலை நிறுத்தம் ஒரு புது விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மலாயாவில் முதன்முறையாகப் பெரிய அளவில் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தத்திற்கு மூல காரணமாக இருந்த ஆர். எச். நாதனும், அவருக்கு உதவியாக இருந்த டி. சுப்பையா என்பவரும், 1941 மே மாதம் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

ஜப்பானியர் ஆட்சி[தொகு]

1941 டிசம்பர் மாதம் தொடங்கி 1945 வரையில் மலாயாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் துடிப்புடன் செயல்படவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தன. 1945 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் ஜப்பானியர்களின் ஆட்சி ஒரு முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல தொழிற்சங்கங்கள் மலாயாவின் பல பகுதிகளில் உருவாக்கம் பெற்றன. இந்தியர்கள் பலர் அந்தத் தொழிற்சங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்தனர்.

 • கெடா இந்தியர் தொழிலாளர் சங்கம் - ஏ.எம்.சாமி (தலைவர்)
 • பேராக் இந்தியத் தொழிலாளர் இயக்கம் - எம்.சி.பி.மேனன் (தலைவர்)
 • நெகிரி இந்தியர் தொழிலாளர் சங்கம் - கே.சௌத்ரி; பி.பி.நாராயணன் (தலைவர்)
 • சிலாங்கூர் தோட்டத் தொழிலாளர் சங்கம் - சி.வி.எச்.ஏ.மூர்த்தி (தலைவர்)

அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்[தொகு]

இவ்வாறு தோன்றிய தொழிற்சங்கங்களில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களும் இடம் பெற்று இருந்தனர். அவர்களும் இந்தத் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர்.[10] மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றாக இணைத்து அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் (Pan Malaysian Federation of Trade Union) எனும் பெயரில் ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் முதல் மாநாடு 1946 மே மாதம் 15 ஆம் தேதி சிங்கப்பூர் சிலிகி சாலையில் இருந்த ஜனநாயக இளைஞர் கழக மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு லூ சின் இங் என்பவர் தலைமை தாங்கினார். அந்த மாநாட்டிற்குப் பிறகு லூ சின் இங், பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்ப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சி[தொகு]

அதன் பின்னர் 1947 பிப்ரவரி மாதம் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக எஸ். ஏ. கணபதி பொறுப்பேற்றார். அந்தச் சம்மேளனத்தின் மத்திய செயல்குழுவில் 4 சீனர்கள், 4 இந்தியர்கள், 2 மலாய்க்காரர்கள் இடம் பெற்றிருந்தனர். சிங்கப்பூர் துறைமுக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. வீரசேனன் அந்தத் தொழிற்சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவர்.

அப்போது மலாயா கம்யூனிஸ்டு கட்சி தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாட்டில் நிகழ்ந்த பற்பல குழப்பங்களுக்கு மலாயா கம்யூனிஸ்டு கட்சியே காரணமாகவும் இருந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டு இயங்கிய தொழிற்சங்கங்களைக் காவல் துறையினர் மிக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். தொழிற்சங்க அலுவலகங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர். சில தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டு காவலில் தடுத்தும் வைக்கப்பட்டனர்.

அவசரகால பிரகடனம்[தொகு]

மலாயாவில் பல வேலை மறியல் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன் நின்று நடத்தி வந்தது. அதனால், 1946இல் மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. தொழிற்சங்கங்க பதிவிற்காகத் தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

கடைசியில், 1948 ஜூன் 13இல் தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் ஒட்டு மொத்தமாகத் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், சிங்கப்பூரில் தடை செய்யப்படவில்லை. ஆனால், சிங்கப்பூரிலும் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட வேண்டும் என ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் (Singapore Straits Times) 19 ஜூன் 1948 இல் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தித் தலையங்கம் எழுதியது.[11]

பி. வீரசேனன்[தொகு]

அப்போது சிங்கப்பூர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகப் பி. வீரசேனன் என்பவர் இருந்தார். 1947ஆம் ஆண்டில் மட்டும் ஒரு வாரத்திற்கு இரண்டு எனும் எண்ணிக்கையில், 89 ரப்பர் தோட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அந்த வேலைநிறுத்தங்களுக்கு அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன்னோடியாக விளங்கியது. ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் மலாயாவுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் சர் எட்வர்ட் ஜெண்ட்டிற்கு (Sir Edward Gent) நெருக்குதல்கள் கொடுத்தது. சர் எட்வர்ட் ஜெண்ட் ஓர் உயர் ஆணையராக இருந்தும் மலாயாவில் ஒரு நியாயமான மனிதராக நடந்து கொண்டார்.

எஸ். ஏ. கணபதியை சிங்கப்பூரில் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை நிராகரித்தவர்.[12] அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்; சிங்கப்பூரில் அல்ல என்பதில் சர் எட்வர்ட் ஜெண்ட் பிடிவாதமாகவும் இருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் 1948 ஜூலை 4இல், அவர் லண்டன் திரும்பிய போது அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் அவர் இறந்து போனார். அந்த விமான விபத்தைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.[13]

மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஊடுருவல் இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டது. அதனால், தொழிற்சங்க அலுவலகங்கள் அடிக்கடி சோதனையிடப்பட்டன. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். 1948 ஜூன் மாதம் 18 ஆம் தேதி நாடு முழுமையும் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது.

கணபதியின் கடைசிகாலம்[தொகு]

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். எஸ். ஏ. கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ். ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன.

ஜவஹர்லால் நேரு வற்புறுத்தல்[தொகு]

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய விடுதலை வீரர் நேதாஜி போன்றோரிடம் எஸ். ஏ. கணபதிக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. 1945 ஆகஸ்டு 10ஆம் தேதி ஜப்பான் சரணடைந்த செய்தியை முதன்முதலில் நேதாஜிக்கு அறிவித்ததே எஸ். ஏ. கணபதிதான். சிங்கப்பூரில் இருந்து சிரம்பான் வந்து அந்தச் செய்தியை எஸ். ஏ. கணபதியும் லட்சுமிய்யாவும் நேதாஜியிடம் தெரிவித்தனர் என்று நம்பபடுகிறது.[14] ஜவஹர்லால் நேரு சிங்கப்பூர் வந்திருந்த போது எஸ். ஏ. கணபதியைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

கணபதியின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு நேரடியாகவும் பிரிட்டனுக்கான இந்திய்த் தூதர் வே. கி. கிருஷ்ண மேனன் மூலமாகவும் பிரித்தானிய பிரதமரை வற்புறுத்தினார். அதற்கு பிரித்தானிய பிரதமர் சம்மதம் தெரிவித்தார். முறையான உத்தரவு தொலைத்தந்தி வழி அனுப்பபட்டது. ஆனால், பலன் ஏதும் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

 1. "கயிற்றில் தொங்கிய கணபதி என்ற தலைப்பில் என்னுடைய 25-வது வயதில் ஒரு மணி நேரத்தில் 15 பக்கங்களில் எழுதித் தந்து சென்னை அறிவுப் பண்ணை பதிப்பகத்தினர் - அச்சேற்றி, அப்போது 3 அணா விலைக்கு விற்கப்பட்ட சிறிய நூல் - 1949 - ஜூலைத் திங்களில் வெளியிடப்பட்டது. - கலைஞர் கருணாநிதி, டிசம்பர் 02, 2007". Archived from the original on 2009-12-31. பார்க்கப்பட்ட நாள் 2009-12-31.
 2. Some Great Malaysian Indians.[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "A Merdeka salute to martyr S.A. Ganapathy". Archived from the original on 2007-05-19. பார்க்கப்பட்ட நாள் 2007-05-19.
 4. தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தமிழன் கணபதியை அன்றைய மலேசிய அரசாங்கம் தூக்கிலிட்டது. மலாயா தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த மலாயா கணபதி மீது சுமத்தப்பட்ட குற்றம், ஒரு கைத்துப்பாக்கியும், 6 ரவுண்டு வெடி மருந்துகளையும் வைத்திருந்தார் என்பதுதான்.
 5. The Indian Government has asked its London high Commissioner to lodge a "vigorous protest" with the British Government against the execution of A. Ganapathy, a former trade union leader in Malaya, according to official circles in new Delhi.[தொடர்பிழந்த இணைப்பு]
 6. ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். [தொடர்பிழந்த இணைப்பு]
 7. "சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) என்ற தற்காலிக சுதந்திர அரசு சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்டது". Archived from the original on 2011-01-21. பார்க்கப்பட்ட நாள் 2012-02-01.
 8. மலாயா தேசிய விடுதலை படை என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் போர்ப் படை ஆகும். மலாயா காலனித்துவ பிரித்தானியர்கள், மாலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போரின் போது நிகழ்ந்த காலத்தை மலாயா அவசரகாலம் என்றும் அழைக்கின்றனர்.
 9. மலாயா தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கணபதி, பிரிட்டீஷாரால் புடுசிறையில் 1949 ஆம் வருடம் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் அடிக்கடி பத்து ஆராங் செல்வது வழக்கமானதாகும்.
 10. It is true that some of these leaders were linked with the Communist Party of Malaya (CPM). [தொடர்பிழந்த இணைப்பு]
 11. On the 19th of June 1948, the British mouthpiece Singapore Straits Times tried to instigate the idea banning Pan Malaya Federation of Trade Union in Singapore.[தொடர்பிழந்த இணைப்பு]
 12. Edward Gent refused at one point to a suggestion of arresting S.A Ganapathy in Singapore.[தொடர்பிழந்த இணைப்பு]
 13. Edward Gent died in plane crash on his way returning to the United Kingdom near Northwood, on the 4th July 1948. There are a certain mystery and unanswered questions regarding his death.[தொடர்பிழந்த இணைப்பு]
 14. Lakshmayya and Ganapathy were bearers of an ominous news. Locked in with Netaji and S.A.Ayer in the privacy of a room, the two broke the news: Japan has surrendered.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._கணபதி&oldid=3947515" இலிருந்து மீள்விக்கப்பட்டது