தி. க. சிவசங்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி.க.சிவசங்கரன்

தி. க. சிவசங்கரன் மார்க்சிய திறனாய்வாளர். 1925ல் திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். இப்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம். இவர் தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பொருளடக்கம்

[தொகு] திறனாய்வாளர்

நா.வானமாமலை, தொ.மு.சி.,ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய முன்னுதாரணமாக க.நா.சுப்ரமணியம் முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி "அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களைப் மாற்றிக் கொண்டார்.

[தொகு] இளம் எழுத்தாளர் அறிமுகம்

தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார்.

[தொகு] சாகித்ய அகாதமி விருது

இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

[தொகு] தி.க.சி.வேண்டுகோள்

"தமிழ்நாட்டில் உள்ள சில அறிவு ஜீவிகளிடம் இந்த மூன்று குணங்களும் இருந்துகொண்டு கேடு விளைவித்து வருகின்றன. இதை ஒழித்தால்தான் நல்லது. தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படையில் மாற்றம் தேவை. இல்லையெனில் நமது சுதந்திரமும், ஜனநாயகமும் பறிபோய்விடும். இதற்கு களப்பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். இன்றைய ஊடகங்கள் உண்மையைத் தெரிவிக்க மறுக்கின்றன. அவை மக்களை மூளைச்சலவை செய்து வருவதை எல்லோரும் அறிவோம். கல்வியின் தரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். செம்மொழி மாநாடு மேட்டுக்குடி மக்களுக்காக நடைபெற உள்ளதா அல்லது சாதாரண மக்களுக்காக நடைபெற உள்ளதா? செம்மொழி மாநாடு தமிழை வாழ வைக்கவா அல்லது தற்பெருமையைப் பறைசாற்றவா? இதை செயல்பாடுகள் தெளிவுபடுத்தும். செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் அனைத்துவழி கல்வி முறையிலும் தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும். இதுவே தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதலாவது பணியாகும். அப்போதுதான் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்." என்றார் தி.க.சிவசங்கரன் [1]

[தொகு] தி.க.சி.அறக்கட்டளை

"எழுத்தாளர்களை வாழும் காலத்திலேயே வாழ்த்த வேண்டும். தி.க.சி.யின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பணியை தினமணி செய்ய வேண்டும். அதற்கான நிதியை எழுத்தாளர்கள் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அந்த அறக்கட்டளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்." என்று அறிவித்தார்.[1]

[தொகு] ஆவணப்படம்

தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 தினமணி நாளிதழ் செய்தி
"http://ta.wikipedia.org/w/index.php?title=தி._க._சிவசங்கரன்&oldid=863367" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்