உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை (Water scarcity in India) என்பது நாளுக்கு நாள் பெருகி வரும் தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடியாகும். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.[1] மிகப்பெரிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் நீர் பற்றாக்குறை சுற்றுச்சூழலையும் விவசாயத்தையும் பரவலாக பாதிக்கிறது. 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை இருந்தபோதிலும் உலகின் நன்னீர் வளங்களில் இந்தியா 4% மட்டுமே கொண்டுள்ளது.[2]நன்னீர் சமசீர் அளவாகக் கிடைப்பதில்லை என்பதைத் தவிர, பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே நாடு முழுவதும் கோடை மாதங்களில் ஆறுகள் மற்றும் அவற்றின் நீர்த்தேக்கங்கள் உலர்ந்து போவதன் விளைவாலும் இந்தியாவில் நீர் பற்றாக்குறைஏற்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் காலநிலை மாற்றம் காரணமாக இந்நெருக்கடி மோசமடைந்துள்ளது. இதன் விளைவாக பருவமழை தொடங்கும் காலமும் தாமதமாகிறது. பல பிராந்தியங்களில் நீர்த்தேக்கங்கள் வறண்டு போகின்றன. சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, அரசாங்க மேற்பார்வை இல்லாமை மற்றும் சரிபார்க்கப்படாத நீர் மாசுபாடு போன்ற காரணிகளும் இந்தியாவில் நீர் பற்றாக்குறைக்கு நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகின்றன.

அன்றாட தேவைகளுக்கான கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடி பல அரசாங்க மற்றும் அரசு சாரா நிறுவனங்களை இப்பிரச்சினையை எதிர்த்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தூண்டியுள்ளது. இச்சிக்கலைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் பலசெயல் திட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கியது. இதன் ஒரு திட்டமாக நீர்சக்தி அமைச்சகம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் திறமையான நீர்ப்பாசனம் போன்ற தண்ணீர் சேமிப்பு நுட்பங்களையும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் 80% நீர் பயன்பாட்டுக்கு விவசாயம் மட்டுமே பொறுப்பாகும்.[2]

இந்தியாவின் உள்ள பல பெரிய நகரங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளன. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு சென்னை நகரம் இப்பிரச்சினையில் சிக்கியது.[3] இப் பற்றாக்குறை நகரத்தில் வாழ்கின்ற 9 மில்லியன் மக்களையும் பாதித்தது. உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.[4] இந்தியாவை மாற்றும் தேசிய நிறுவனம் எனப்படும் நிதி ஆயோக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தலைநகர் புது தில்லி உட்பட குறைந்தது 21 முக்கிய இந்திய நகரங்கள் 2020 ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி நீரை முழுவதுமாக இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 200,000 பேர் இறக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.[5]

பாதிப்புகள்

[தொகு]

மக்கள்

[தொகு]

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை நாடு முழுவதும் வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. மக்கள்தொகையில் ஒரு பெரும் பகுதியினர் தங்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரைப் பெறுவதற்கான நம்பகமான மற்றும் நிலையான வழிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் 65% நீர்த்தேக்கங்கள் சாதாரண நீர் மட்டத்திற்கும் கீழே பதிவாகியுள்ளன. மேலும் 12% நீர்த்தேக்கங்கள் முற்றிலும் வறண்டுவிட்டன.[6]சென்னை போன்ற சில பெருநகரங்கள் உட்பட பல நகரங்களில் குழாய் நீர் கிடைக்காததால் குடியிருப்பு மக்கள் மாற்று நீர் ஆதாரங்களை தேடுகின்றனர்.[7]பொது நீர் விசையியக்கக் குழாய்கள் நாடெங்கிலும் அமைக்கப்பட்டன. ஆனால் அவை நகரங்களிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்தன. அவற்றின் நீர் ஓட்டமும் விட்டு விட்டும், கணிக்க முடியாமலும் இருந்தது, இருக்கிறது. ஏராளமான இந்தியமக்கள் குடிநீரை வாங்குவதற்கு பணம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் சமூகத்தின் ஏழை பிரிவினர் தினசரி தண்ணீர் வாங்க செலவழிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு நீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்குகிறது.[8]

தண்ணீர் கிடைப்பது மட்டுப்படுத்தப்படுவது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகும். போதிய தண்ணீர் இல்லாமல் வாழும் நீர் நெருக்கடி ஒரு முழு நகரத்தின் ஆரோக்கியத்தையும் மோசமாக்கும் திறன் கொண்டதாகும். மகாராட்டிர மாநிலம் லாத்தூர் நகரில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் ஆதாரங்கள் குறைந்து போனதால் அங்கு ஒரு பெரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் தரையில் ஆழ்துளைக் கிணறுகளை தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆபத்தான இரசாயனங்கள் அவர்கள் மீது வெளிப்பட்டு ஆபத்தையும் மாசுபாடுகளையும் ஏற்படுத்தியது. சில உள்ளூர்வாசிகள் தண்ணீர் நெருக்கடியால் மாசுபட்ட நீர் ஆதாரங்களை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2016ஆம் ஆண்டு சூன் மாதத்தில் லாத்தூர் நகரத்தின் சுகாதார பிரச்சினைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. மக்கள் பலர் காய்ச்சல், தொற்று, நீரிழப்பு, வாந்தி மற்றும் சிறுநீரக நோய்களின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர்.

இந்த சுகாதார நெருக்கடிகளுக்கு மேலதிகமாக அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நோய்த்தொற்றுகள் மற்றும் சுத்தமான குடிநீர் பற்றாக்குறையால் ஏற்படும் சுகாதார சிக்கல்கள் காரணமாக மருத்துவமனைகளால் எந்தவொரு அறுவை சிகிச்சையையும் பாதுகாப்பாக செய்ய முடியவில்லை.[9]

இதேபோன்ற தண்ணீர் நெருக்கடி 2019ஆம் ஆண்டு சென்னையிலும் தோன்றியது. இதன் விளைவாக வன்முறை சம்பவங்களும் நகரவாசிகள் மத்தியில் எதிர்ப்புப் போராட்டங்களும் ஏற்பட்டன. இதே ஆண்டு சூன் மாதத்தில் சென்னையில் ஒரு பெண் தண்ணீருக்காக ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்ட முயன்றபோது அண்டை வீட்டாரால் குத்தப்பட்டார்.[9]

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புது தில்லியில் சில சாட் பழங்குடியின ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தால் நீர் நெருக்கடியின் கடுமையான விளிம்பிற்கு நகரம் இட்டுச் செல்லப்பட்டது. போராட்டக் காரர்கள் நகரத்திற்கான நீர் வழங்கும் முக்கிய ஆதாரமான முனக் கால்வாயை வேண்டுமென்றே சேதப்படுத்தினர். இந்த போராட்டங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பதிலடியாக இருந்தன. உச்சநீதிமன்றம் அப்போது இவர்களுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டை ரத்து செய்திருந்தது.

தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடி இந்தியாவில் தண்ணீர் கொள்ளைக் காரர்கள் அல்லது தண்ணீர் கொள்ளையை அதிகரித்து நாட்டின் அமைதியைக் குலைத்தது. தனியர்கள் சட்டவிரோதமாக சுத்தமான தண்ணீரை கடத்தி உள்ளூர் நீர் தொட்டி உரிமையாளர்களுக்கு அதிக விலைக்கு நீரை விற்பது தண்ணீர் கொள்ளை எனக் கருதப்பட்டது. போபால் நகரில் தண்ணீர் கொள்ளைகார்களின் எண்ணிக்கை பெருகியது. ஏழை குடியிருப்பாளர்களையும் போட்டியிடும் வணிகர்களையும் இவர்கள் கொடுமைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, சமூக உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தி ஓர் அசாதாரண சூழ்நிலையை இக்கும்பல் அப்போது உருவாக்கியது.[10]

சுற்றுச்சூழல் அமைப்பு

[தொகு]

தண்ணீர் பற்றாக்குறை இந்தியா முழுவதும் உள்ள காட்டு விலங்குகளின் உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. காட்டு விலங்குகள் குடிநீரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குள் ஊடுருவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளாகின்றன. 2016 ஆம் ஆண்டு மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகள் வறட்சியால் கடுமையான நீர் பற்றாக்குறையை சந்தித்தன. இதனால் அருகிலுள்ள காடுகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு போயின. இறுதியில் காட்டு விலங்குகளான யானைகள், புலிகள் மற்றும் புள்ளி மான்கள் போன்ற விலங்குகள் தண்ணீரைத் தேடி நகரங்களுக்குள் பதுங்கத் தொடங்கின.[11] இந்த விலங்குகளில் சில குடிமக்களை தாக்கக்கூடும் என்ற போக்கு அச்சுறுத்தலாக இருந்தது. புள்ளி மான் போன்ற சில விலங்குகள் இந்தநீர் தேடும் செயல்பாட்டில் நாய்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டன. அவற்றில் சில காயங்களால் அல்லது விபத்துக்களால் இறந்துபோயின.

மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக இந்தியக் காட்டெருமைகள் தண்ணீரைத் தேடும் போது கிணறுகளில் விழுந்து இறந்தன.[12]

விவசாயம்

[தொகு]

விவசாயத்திற்கு நீர் மிகவும் அவசியமானதாகும். தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயிகளால் பயிர் செய்ய முடியவில்லை. 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் வறட்சி காரணமாக குளிர்காலப் பயிர்களுடன் கூடுதலாக துணை பயிர்களும் அழிந்தன. தண்ணீர் பற்றாக்குறையால் இந்தியாவில் மதிப்புமிக்க விவசாய நிலங்கள் முற்றிலும் பயனற்றதாக மாறின. சில பிராந்தியங்களில் விவசாயத் தொழிலின் பெரும்பகுதி செயல்படாமல் நின்று போனது. 2016 ஆம் ஆண்டு லாத்தூர் நகரில் ஏற்பட்ட தண்ணீர் நெருக்கடியால் விவசாயத் தொழில் நிலைகுலைந்து விவசாயப் பணியாளர்களில் பாதி பேருக்கு வேலையில்லாமல் போய்விடும் நிலைதோன்றி அச்சம் ஏற்பட்டது. மாசுபட்ட நீரைப் பயன்படுத்துவதைத் தவிர குடிமக்களுக்கு வேறு வழியில்லை என்பதால் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் விவசாயப் பகுதிகள் கிட்டத்தட்ட சரிந்தன.இதனால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள்குறைந்தன. குடிமக்கள் வேலை தேடி நகரங்களுக்கு செல்லவேண்டிய நிலை உருவானது. பெரிய நகரங்கள் ஏற்கனவே தண்ணீருக்காக திண்டாடிவரும் நிலையில் மக்கள் இடம்பெயரும் போக்கு ஏற்கனவே சிக்கியுள்ள நகரங்களின் உள்கட்டமைப்பிற்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.[10]

நெருக்கடிக்கான காரணங்கள்

[தொகு]

காலநிலைமாற்றம்

[தொகு]

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் மிகமுக்கிய காரணிகளில் ஒன்று பருவக்காற்றாகும். நிலத்திற்கும் கடலிற்கும் இடையே ஏற்படும் வெப்பநிலை வேறுபாட்டினால் உருவாகும் காற்றுப் பெயர்ச்சியே பருவக்காற்று என வரையறுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று அத்திசையின் பெயரைப் பெறுகிறது. பருவக்காற்று மழையைக் கொண்டு வருவதால் அது பருவமழை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பொழியும் மொத்த மழையில் 10% -20% மழையை வடகிழக்கு பருவக்காற்று கொண்டுவருகிறது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று சுமார் 80% மழையை வழங்குகிறது. எனவே காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவில் மழை குறைவதற்கும் நீர் பற்றாக்குறைக்கும் ஒரு முக்கிய காரணமாகிறது என்பதை அறியமுடிகிறது. சமீபத்திய பத்தாண்டுகளில் இந்தியாவில் பருவமழை மிகவும் அரிதாகிவிட்டது. அவை மழை கொடுக்கும் நேரத்தின் நீளமும் குறைந்துவிட்டது. எனவே இந்தியாவின் மொத்த மழைப் பொழிவின் அளவும் குறைந்துவிட்டது.[13]

2018 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெயாமல் 44% ஆகக் குறைந்தது.[13] தென்மேற்கு பருவமழையோ இயல்பாகப் பெய்வதைக் காட்டிலும் 10% குறைவாகப் பொழிந்தது. 2019, 2020 காலத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவிற்கும் சற்று அதிகமாக பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இயல்பான அளவை விட சற்று அதிகமாக பதிவானது.

வழக்கமாக சூன் மாதம் முதல் செப்டம்பர் வரை பெய்யும் கோடைகால தென்மேற்கு பருவமழை 2018 ஆம் ஆண்டு 10 நாட்களுக்கு தாமதமானது, இதனால் 50 ஆண்டுகால மழை சராசரியுடன் ஒப்பிடும்போது மழை அளவு 36 சதவீதம் குறைந்தது.[14] மழைப்பொழிவு குறைந்து போனதால் நாடு முழுவதும் நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகளில் நீர் குறைந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை சிக்கல் ஏற்பட்டது. 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் 91 பெரிய நீர்த்தேக்கங்கள் அவற்றின் நீர் திறனில் 32% வீழ்ச்சியைப் பதிவு செய்தன. இதன் விளைவாக சென்னை நீர் நெருக்கடி போன்ற பேரழிவுகள் பல இடங்களில் ஏற்பட்டன.

உள்கட்டமைப்பு சிக்கல்கள்

[தொகு]

நதிகள் மாசுபடுதல்

[தொகு]

நீண்டகால நீர் மேலாண்மை திட்டங்கள் வகுக்கப்படாத காரணத்தால் நாட்டின் பல ஆறுகள் வறண்டு ஓடுகின்றன அல்லது மாசுபட்டுள்ளன. இந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்று என்றாலும், கங்கை ஆறும் மிகவும் கடுமையாக மாசுபட்ட ஒரு நதியாகவே ஓடுகிறது.[15] இந்த மாசுபாடு பெரும்பாலும் அடர்த்தியான நகரங்களில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழில்துறை கழிவுகள் மற்றும் ஆற்றிலும் அதைச் சுற்றியும் நடைபெறும் மதச்சார்பு விழாக்களாலும் விளைகிறது. இந்து புராணங்களில் கங்கை ஒரு புனித நதியாக கருதப்படுவதால் மத விழாக்களின் போது 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கங்கையில் குளிக்கிறார்கள். அவ்வாறு குளிப்பதால் அவர்கள் செய்த பாவங்கள் கழுவப்படுவதாக நம்புகிறார்கள்.[16] இந்து மதத்தில் இறப்புக்குப் பின்னர் மனித உடலின் தகனத்திற்குப் பிறகு மீதமுள்ள எலும்புகள் மற்றும் சாம்பல் மற்ற மதக் கழிவுகளுடன் கங்கையில் கரைக்கப்படுகின்றன மற்றும் வீசப்படுகின்றன. சில நேரங்களில், அரை தகனம் செய்யப்பட்ட உடல்களும் கங்கைக்குள் வீசப்படுகின்றன. அவை தண்ணீரில் சிதைவடைந்து தண்ணீரை மாசுபடுத்துகின்றன.[17]

கங்கை நதியை 25 ஆண்டுகளுக்குள் சுத்தம் செய்யும் முயற்சியாக 1984 ஆம் ஆண்டில் கங்கா செயல் திட்டம் என்று ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் நதி இன்றுவரை மேலும் அதிகமாகத்தான் மாசுபட்டு வருகிறது. அதிக அளவு கனரக உலோகங்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தான இரசாயனங்களும் கூட தற்பொழுது கங்கையில் கலந்துள்ளன.[15]கங்கா செயல் திட்டத்தின் தோல்விக்கு தொழில் நுட்ப அறிவு இல்லாமையும்[18]தவறான முன்னுரிமைகளுமே காரணமாகின்றன.[19]வசதிகளை சரியாகப் பராமரிக்க இயலாமையும் சேவைகளுக்கான போதிய கட்டணம் இல்லாமையும் மேற்கோள் காட்டப்படும் பிற காரணங்களில் அடங்குகின்றன.[16]

நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் மற்றும் நீர்ப்பாசனம்

[தொகு]

உலகில் அதிகமான அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடு இந்தியாவாகும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் 251 பில்லியன் கனமீட்டர் தண்ணீரை இந்தியா நிலத்தடியிலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்த அளவு 112 பில்லியம் கனமீட்டர்கள் மட்டுமேயாகும்.[20]2007 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை நிலத்தடி நீரை தொடர்ந்து சுரண்டியதால் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் 61 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.[21]

இத்தகைய நிலத்தடி நீரின் கட்டுப்பாடற்ற மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத பிரித்தெடுத்தல் செயல்பாடுகள் இந்தியாவின் நீர்வளத்தை குறைத்தும் மாசுபடுத்தியும் உள்ளது. இந்த நீர் ஆதாரங்களை நம்பியுள்ள மக்கள் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு நீர் கிடைக்காமல் தவிக்கின்றார்கள்.[22]

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் நாடு வரலாற்றில் மிக மோசமான நீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் 21 இந்திய நகரங்களில் நிலத்தடி நீரில்லாமல் போகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[23]

நிலத்தடி நீர் நாட்டின் தேவையில் பாதிக்கும் மேலான நீர்வழங்கலைக் கொடுக்கிறது.[20] இந்தியாவில் எடுக்கப்படும் நிலத்தடி நீரில் கிட்டத்தட்ட 89% பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசனத்தின் பாரம்பரிய நுட்பங்களும் நீர் நெருக்கடிக்கு காரணமாகின்றன. ஏனெனில் நீர்ப்பாசன பணியின் போது பெரும்பான்மையான நீர் இழப்பும் ஆவியாதலும் நிகழ்கின்றன.

வீணாகும் தண்ணீர்

[தொகு]

காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு குறைந்து அதன் மூலம்குறைந்த நீர் வழங்கல் ஏற்பட்டாலும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களின் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான மழையை நாடு இன்னும் பெறுகிறது என்று மத்திய நீர் ஆணையம் கூறுகிறது. மழைநீர் சேகரிப்பு நாட்டில் மோசமாக இருப்பதால் இந்தியா தனது வருடாந்திர மழையில் 8 சதவீதத்தை மட்டுமே பெறுகிறது. விரைவான நகரமயமாக்கல் காரணமாகவும், அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகரத் திட்டமிடல் வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்தாததாலும் தண்ணீரை சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஏராளமான குளங்கள் இழக்கப்பட்டுள்ளன.[24]

கழிவுநீரை மறுபயன்பாட்டுக்கு சுத்திகரிப்பதில் இந்தியாபின் தங்கியே உள்ளது. உள்நாட்டு கழிவுநீரில் ஏறத்தாழ 80 சதவிகிதம் கழிவுநீராக வெளியேற்றப்பட்டு மற்ற நீர்நிலைகளில் பாய்கிறது. இது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் போன்ற உப்பு நீர் ஆதாரங்கள் உருவாக வழிவகுக்கிறது.[24]

முயற்சிகள்

[தொகு]

அரசாங்க முயற்சிகள்

[தொகு]

நாட்டின் வளர்ந்து வரும் நீர் தேவைகளுக்கு ஈடுகொடுக்க இந்திய அரசாங்கம் அதன் பல துறைகளை சீர்திருத்தியுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளில் நீர் வழங்கல் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.[24] இத்தகைய சீர்திருத்தங்களில் சல் சக்தி அமைச்சகம் என்று அழைக்கப்படும் தண்ணீருக்கான புதிய அமைச்சகத்தை நிறுவுதலும் அடங்கும். பிரதான ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை முன்வைத்து அரசாங்கம் பல திட்டங்களைத் தொடங்கியது. புதிய அமைச்சகமும் அதன் திட்டங்களும் நீர் இருப்புக்களின் திறனை மேம்படுத்துவதற்கும், தற்போது அதிகமாக சுரண்டப்படும் பகுதிகளைப் பாதுகாப்பதையும் முன்னிறுத்தி செயல்படும்.[25] நாட்டின் நீர் பயன்பாட்டு திறனை கூடுதலாக 20% அதிகரிக்க முயற்சிக்கும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.

துறை மறுசீரமைப்பு மூலம் புதிய அமைச்சகம்

[தொகு]

2019 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிலத்தடிநீர் மற்றும் மேற்பரப்பு நீர் பற்றாக்குறை நிலையை எதிர்கொள்வதற்காகப் பல்வேறு நீர்வளத் துறைகளை ஒன்றிணைக்கும் பொருட்டு “அனைவருக்கும் குழாய் நீர்” என்ற ஒருபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.[24]

புதிதாக அமைக்கப்பட்ட சல் சக்தி அமைச்சகம் நீர்வளப் பயன்பாட்டிற்கான கொள்கை வழிகாட்டுதலை வெளியிடுவதற்கும், நீர்வளம் தொடர்பான திட்டங்களை ஒழுங்குபடுத்தி வழிநடத்துவதற்கும் பன்னாட்டு அளவிலும் மாநிலங்களுக்கிடையிலும் நீர்வளங்களின் ஒத்துழைப்பு, வசதி மற்றும் பேச்சுவார்த்தைகளை கையாள்வதற்கும் புதிதாக அமைக்கப்பட்ட சல் சக்தி தண்ணீர் அமைச்சகத்திற்கு பொறுப்புவழங்கப்பட்டது.[25] நீர் சக்தி அமைச்சகம் உருவாக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் நீர்வளம் உள்ளூர் மாநில அரசு அல்லது மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் பல்வேறு துறைகளால் நிர்வகிக்கப்பட்டுவந்தது. நீர்வளம், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துயிர்ப்பு ஆகிய துறைகளை புதிய அமைச்சகம் முன்னாள் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இணைத்தது. பல்வேறு துறையினர் ஒருவருக்கொருவர் முரண்படுவதையும் தொடர்புடைய துறைகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துவதையும் தடுக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் இந்தநடவடிக்கையை மேற்கொண்டது. நாடு முழுவதும் உள்ள நீர்வளங்கள் தொடர்பான நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களை நிர்வகித்தல், கொள்கை ஆதரவு மற்றும் மாசு ஒழுங்குமுறை வரிசைப்படுத்தல் ஆகியவற்றுக்கு தண்ணீர் சக்தி அமைச்சகம் பொறுப்பேற்கவும் வழிவகை செய்யப்பட்டது.[26]

கங்கை நதியைசுத்தம்செய்யும் திட்டங்கள்

[தொகு]

இந்தியாவின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக அறியப்படும் புனிதகங்கை நதிவட இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறது. நீர் மாசுபாடு பட்டியலில் 2007ஆம் ஆண்டில் உலகின் மிக ஆபத்தான 10 நதிகளில் ஒன்றாக இந்நதியும்இடம்பெற்றது.[27] கங்கை ஆற்றில் அதிகப்படியான நீர் மாசுபடுவதற்கான சிக்கலைச் சமாளிக்கும் நோக்கத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கங்கா நதி தூய்மைத் திட்டமான கங்கா செயல் திட்டம்தொடங்கப்பட்டது.இந்தியாவில் பாய்கின்ற பிற நதிகளையும் கவனிப்பதற்காக இந்த திட்டம் படிப்படியாக விரிவாக்கப்பட்டது.கடந்த 20 ஆண்டுகளில்ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளின் தொழில்துறை மாசுபாட்டின் தாக்கத்தை குறைக்க மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது.[28]இருப்பினும், கங்கா செயல் திட்டம் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முடிவுகள் எதையும் காட்டவில்லை. 2018ஆம் ஆண்டில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கங்கா நதியில் 7% நீர் பகுதி மட்டுமே குடிக்கக்கூடியது என்றும் சுமார் 10% தண்ணீரை மட்டுமே குளிக்க பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.[26] நீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் இயலாமையின் சிக்கலைப் போக்குவதற்காக கங்கை மற்றும் இந்தியாவின் பிற நதிகளில் மாசுபாட்டை நிர்வகிக்க புதிய கொள்கைகளை வகுப்பதோடு, அதிக முதலீடுகளுடன் புதிய திட்டங்களைத் தொடங்கப்போவதாகவும் நரேந்திர மோடி அரசு அறிவித்தது.[29][30]

அரசு சாரா முயற்சிகள்

[தொகு]

நாட்டின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தும் ஏராளமான அரசு சாரா நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. போர்சு மற்றும் 'பாதுகாப்பான நீர் வலையமைப்பு' போன்ற சில தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் நீர் நெருக்கடியைக் கையாள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாங்கள் தண்ணீர் மற்றும் யுனிசெப் போன்ற பன்னாட்டு அமைப்புகளும் கிராமங்களில் அடிப்படை நீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தணிப்பதில் மிகவும் தீவிரமாகச் செயல்படுகின்றன.[31][32]

பெரும்பாலான அரசு சாரா நிறுவனங்கள் மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டின் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர்வள திட்டங்களை நிறுவுவதற்காகவும் செயல்படுகின்றன.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

[தொகு]

பெரும்பாலான அரசு சாரா நிறுவனங்கள் சமூக விழிப்புணர்வை வளர்ப்பது அவர்களின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக கருதுகின்றன. புதிய நீர் சேகரிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலமும், அவற்றின் நீர்ப்பாசன நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலமும் நீர்வளங்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் நீர் பயன்பாட்டுத் திறனை எவ்வாறு அதிகரிப்பது என்பதை உள்ளூர் மக்களுக்கு கற்பிப்பதில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.[32][33]

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை மையமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ‘நாங்கள் தண்ணீர் என்ற பன்னாட்டு அமைப்பு ஆவணப்படங்களை வெளியிடுகிறது. இந்த ஆவணப்படங்கள் நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களைச் சொல்கின்றன. ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சொந்த வீடுகளில் தண்ணீரைப் பாதுகாக்க எவ்வாறு செயல்பட முடியும் என்பதையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆவணங்கள் கிராமப்புறங்களில் குறிப்பாக பொருத்தமானவையாகும். ஏனெனில் கிராமக் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்க திட்டங்களுக்கான நேரடி அணுகல் இல்லை.

நீர்வள திட்டங்களை நிறுவுதல்

[தொகு]

இந்தியாவில் ஏராளமான அரசு சாரா நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அகமதுநகருக்கு அருகிலுள்ள பால்வெபுத்ரு கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் 1,435 எக்டேர் பரப்பளவில் யுனிசெப்பின் ஆதரவுடன் ஒரு நீர்ப்பிடிப்புத் திட்டத்தை உருவாக்கினர். 3 அணைகள், 20 கால்வாய் கரைகள், பிரதான தொட்டியுடன் இணைக்கப்பட்ட இரண்டு சிறிய உட்கசிவுத் தொட்டிகள் மற்றும் 19 கிராம குளங்கள் இந்த அமைப்பில் உள்ளன. உட்கசிவுத் தொட்டிகளில் சேமிக்கப்படும் நீர்கண்டிப்பாக வீடுகள் பயன்பாட்டிற்காக குறிக்கப்படுகிறது. காலையில் ஒரு மணி நேரத்திற்கு குழாய் நீர் வழங்கப்படுகிறது. இந்நேரத்தில் குடும்பங்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்குமான தண்ணீரை நிரப்பிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[34]

இராசத்தான் மாநிலத்தின் பாலைவன நிலப்பரப்புகளில் நீர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளை கையாளும் இந்தியாவின் மிக முக்கியமான இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்று சல் பாகீரதி அறக்கட்டளையாகும். இந்த அறக்கட்டளை மாநிலமெங்கும் 550 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராமங்களை தன்னுள் இணைத்துக்கொண்டு தொண்டாற்றுகிறது. இப்பகுதியில் 2000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் புதுப்பித்துள்ளது[35] நூற்றுக்கும்மேற்பட்ட எக்டேர் தரிசு நிலத்தை மீட்டெடுப்பதோடு, ஒவ்வொரு ஆண்டும் 4000 மில்லியன் லிட்டர் தண்ணீரை அறுவடை செய்வதாக இவ்வமைப்பு கூறுகிறது.[35]பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுடன் இணைந்து அறக்கட்டளை அமைப்பு தீவிரமாக செயல்படுகிறது. மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குகிறது. சல் பகீரதி அறக்கட்டளை நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இம்முயற்சிகளுக்காக ஏராளமான விருதுகளையும்பெற்றுள்ளது.

தீர்வுகளும் தொழில்நுட்பமும்

[தொகு]

மழைநீர் சேகரிப்பு

[தொகு]

மழை பொழியும்போது கிடைக்கும் மழைநீரை வீணாகாமல் நமது தேவைக்காகவோ அல்லது நிலத்தடி நீர் உயரவோ சேகரிக்கும் முறையே மழைநீர் சேகரிப்பு ஆகும். தன்னிறைவு பெறுவதற்காக நிறைய வீடுகள் தங்களது சொந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டியுள்ளன. பெங்களூரில் பயோம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் ஏரிகளின் நண்பர்கள் என்ற அமைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 1 மில்லியன் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் வரை தோண்டி அவற்றை நிலத்தடி நீருடன் இணைத்துள்ளனர். இந்த முயற்சி மொத்த மழை நீரில் 60% வரை சேகரிக்கும் என்று இலாப நோக்கற்ற நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. [22]

உப்பகற்றல்

[தொகு]

உப்பு மற்றும் பிற கனிமங்கள் கலந்த நீரிலிருந்து உப்பை நீக்கும் செயல்முறை உப்பகற்றல் செயல்முறை எனப்படும். நீர் பற்றாக்குறை சிக்கலைத் தீர்க்க குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உப்புநீக்கம் என்பது ஒரு மேம்பட்ட தொழில் நுட்பமாகும். இங்கெல்லாம் கடல் நீரிலிருந்து அதன் உள்ளடக்க உப்பு நீக்கப்படுகிறது. உப்புநீக்கம் செய்யப்பட்ட தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக அமைகிறது. கடந்த பத்தாண்டுகளில் தொழில்துறை மற்றும் உள்நாட்டு பயன்பாட்டிற்காக கடல் நீரை நன்னீருடன் கலக்க ஒரு முறையான செயல்முறையை இசுரேல் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. சென்னை போன்ற நகரங்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய கடலோரப் பகுதிகளுக்கு அருகில் உப்புநீக்கும் ஆலைகளை நிறுவுவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆலோசனை நடத்தி வருகிறது. [36]

நீர்ப்பாசன நுட்பங்கள்

[தொகு]

இந்தியாவின் உழைக்கும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 44% பேர் இந்தியாவின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்றான விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக, இந்தியாவின் நிலத்தடி நீரில் 80% தண்ணீர் வரை பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. [29]இந்திய வேளாண் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியாவில் நீர் பற்றாக்குறையை போக்க சொட்டு நீர் பாசன தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறது. சொட்டுநீர்ப்பாசன நுட்பம் நாட்டின் அனைத்து வகையான நிலப்பரப்புகளுக்கும் பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், மண்ணின் ஈரப்பதத்தின் அடிப்படையில் நீர்ப்பாய்ச்சலை மாற்றிக் கொள்வதன் மூலம் விவசாயிகள் தண்ணீரை மிகவும் திறமையாக பயன்படுத்த இந்த நுட்பம் உதவுகிறது. இந்திய அரசாங்கத்தின் உதவியால் சொட்டு நீர் பாசனம் செயல்படுத்துவதில் கடந்த 15 ஆண்டுகளில் மிகப் பெரிய உயர்வை நாடு கண்டுள்ளது. 1960 ஆம் ஆண்டுகளில் வெறும் 40 எக்டேர் சொட்டுநீர் பாசனம் என்பதை ஒப்பிடும்போது, தற்போது கிட்டத்தட்ட 351,000 எக்டேர் பாசன நிலம் சொட்டு நீர் பாசனத்தின் கீழ் உள்ளது. [37]

தற்கால நிகழ்வுகள்

[தொகு]

2019 சென்னை நீர் நெருக்கடி

[தொகு]

2019 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இந்திய நகரமான சென்னையில் 4 முக்கிய நீர் தேக்கங்கள் முற்றிலும் வறண்டு ஓடியதால் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரம் இந்தியாவின் 6 வது பெரிய பெருநகரமாகும். [38]

சென்னையின் பெரும்பாலான மக்களை இந்நெருக்கடி மிகவும் மோசமாக பாதித்தது, நூற்றுக்கணக்கான மக்கள் வெற்று நீர் வாளிகளுடன் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.[39] தண்ணீர் பற்றாக்குறையால் நகரத்தில் உள்ள பல உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளும் மூடப்பட்டன. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இயங்கூர்தி நிறுவனங்களும் கூட நெருக்கடி மோசமடைந்த காரணத்தால் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தின. ஒரு நாளைக்கு சென்னை நகரத்திற்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில் நகரம் ஒரு நாளைக்கு 525 மில்லியன் லிட்டர் தண்ணீரை மட்டுமே வழங்க முடிந்தது. [40] அப்போதைய தண்ணீர் நெருக்கடியைச் சமாளிக்க சென்னை மெட்ரோ வாட்டர் அதன் அன்றாட நீர் விநியோகத்தை 40% அளவுக்குக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [41] இதற்கு பதிலளித்த அரசாங்கம் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் கொள்கலன் வாகனங்களை அனுப்பியது. தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட ஒரு சிறப்பு இரயில் மூலம் நகரத்திற்கு நீர் வழங்கப்பட்டது. [42]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. NITI Aayog (2019). COMPOSITE WATER MANAGEMENT INDEX (PDF). National Institute for Transforming India. Archived (PDF) from the original on 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  2. 2.0 2.1 Dhawan, Vibha. "Water and Agriculture in India". Federal Ministry of Food and Agriculture. https://www.oav.de/fileadmin/user_upload/5_Publikationen/5_Studien/170118_Study_Water_Agriculture_India.pdf. பார்த்த நாள்: 19 December 2019. 
  3. "சென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்?". விகடன். https://www.vikatan.com/literature/environment/139996-chennai-faced-water-scarcity-crisis-due-to-lorry-strike. பார்த்த நாள்: 24 June 2021. 
  4. "நீர் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/opinion/columns/514730-water-scarcity-prevention.html. பார்த்த நாள்: 24 June 2021. 
  5. "Bengaluru, Delhi, Chennai among 21 cities to run out of groundwater by 2020- Technology News, Firstpost". Tech2. 25 June 2018. Archived from the original on 26 June 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  6. "65% of India's Reservoirs Running Dry, Maharashtra Worst Affected, Shows Water Panel's Report". News18. Archived from the original on 5 June 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  7. Khadka, Navin Singh (6 August 2019). "Global report warns of Indian water crisis" (in en-GB). BBC News இம் மூலத்தில் இருந்து 4 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210204142651/https://www.bbc.com/news/world-asia-india-49232374. 
  8. Masih, Niha; Slater, Joanna. "As a major Indian city runs out of water, 9 million people pray for rain". Washington Post (in ஆங்கிலம்). Archived from the original on 12 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  9. 9.0 9.1 "28-year-old Chennai woman stabbed by neighbour over water dispute". The New Indian Express. Archived from the original on 3 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  10. 10.0 10.1 Rajawat, Somya (21 June 2016). "Drought and Water Security in India". Future Directions International. http://www.futuredirections.org.au/wp-content/uploads/2016/06/Drought-and-Water-Security-in-India.pdf. பார்த்த நாள்: 7 May 2018. 
  11. "Wild animals hit by water scarcity" (in en-IN). The Hindu. 19 December 2016 இம் மூலத்தில் இருந்து 5 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200605124815/https://www.thehindu.com/news/states/Wild-animals-hit-by-water-scarcity/article16906373.ece. 
  12. Arockiaraj, J. (9 July 2013). "Water scarcity leading Indian gaurs to death traps". The Times of India (in ஆங்கிலம்). TNN. Archived from the original on 9 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  13. 13.0 13.1 "Water Scarcity: How Climate Crisis is Unfolding in India". Impakter (in அமெரிக்க ஆங்கிலம்). 18 September 2019. Archived from the original on 19 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  14. "Water Shortages in India". earthobservatory.nasa.gov (in ஆங்கிலம்). 27 June 2019. Archived from the original on 11 December 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  15. 15.0 15.1 Ghosh, Anirban (18 October 2012). "NCRP: Ganga a deadly source of cancer now: Study | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Archived from the original on 26 June 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  16. 16.0 16.1 Singh, Rajesh Kumar (3 January 2007). "Hindus throng to Ganges for bathing festival". msnbc.com (in ஆங்கிலம்). AP. Archived from the original on 17 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  17. "HINDU FUNERALS, CREMATION AND VARANASI - World Topics | Facts and Details". 16 October 2013. Archived from the original on 16 October 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  18. "Need to understand why GAP failed". The Times of India (in ஆங்கிலம்). TNN. 11 October 2009. Archived from the original on 4 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  19. "Why plans to rejuvenate the river Ganga are failing". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-11-12. Archived from the original on 8 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  20. 20.0 20.1 "India's Water Crisis: Causes and Cures". The National Bureau of Asian Research (NBR) (in ஆங்கிலம்). Archived from the original on 4 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  21. Dutta, PrabhashK. (28 June 2019). "Why India does not have enough water to drink". India Today (in ஆங்கிலம்). New Delhi. Archived from the original on 10 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  22. 22.0 22.1 "India's water crisis could be helped by better building, planning". Environment (in ஆங்கிலம்). 15 July 2019. Archived from the original on 11 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  23. Bhardwaj, MalanchaChakrabarty and Shreya. "India's water crisis: A permanent problem which needs permanent solutions". ORF (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  24. 24.0 24.1 24.2 24.3 Dutta, PrabhashK. (28 June 2019). "Why India does not have enough water to drink". India Today (in ஆங்கிலம்). New Delhi. Archived from the original on 10 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  25. 25.0 25.1 "National Water Mission, Ministry of Jal Shakti, Department of Water Resources, RD & GR, Government of India". nwm.gov.in. Archived from the original on 28 March 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  26. 26.0 26.1 "Can Ministry of Jal Shakti save Indian rivers?". www.downtoearth.org.in (in ஆங்கிலம்). Archived from the original on 23 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  27. "US TV host takes dig at Ganges". Zee News (in ஆங்கிலம்). 16 December 2009. Archived from the original on 20 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  28. "Clean Up Or Perish - Times of India". The Times of India. Archived from the original on 5 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  29. 29.0 29.1 "The National Ganga River Basin Project". World Bank (in ஆங்கிலம்). Archived from the original on 3 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  30. "'NamamiGange' improved water quality of Ganga: AmitShah". Deccan Herald (in ஆங்கிலம்). 13 March 2020. Archived from the original on 4 February 2021. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  31. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 17 March 2015. Archived from the original (PDF) on 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  32. 32.0 32.1 "12 Nonprofits That Address the Global Water Crisis". Classy (in அமெரிக்க ஆங்கிலம்). 22 March 2016. Archived from the original on 24 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  33. "Our foundation". We Are Water (in Indian English). Archived from the original on 6 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  34. "Stories". www.unicef.org (in ஆங்கிலம்). Archived from the original on 7 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  35. 35.0 35.1 "Home". JBF (in ஆங்கிலம்). 4 April 2020. Archived from the original on 3 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  36. Akhil Ramesh; Shenhav Ruttner (31 October 2019). "Surviving India's Water Crisis". The National Interest (in ஆங்கிலம்). Archived from the original on 15 August 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  37. "Drip Irrigation Technology to save Water and Enhance Crop Yields". www.iari.res.in. Archived from the original on 2 April 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  38. "Nearly 11 Million People In The Indian City Of Chennai Are Almost Out Of Water". www.wbur.org (in ஆங்கிலம்). Archived from the original on 10 December 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  39. "தண்ணீர் வெறும் ஹெச்2ஓ மட்டும் அல்ல: புகைப்படங்கள் உணர்த்தும் செய்தி". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/reporters-page/540713-chennai-s-water-matters-exhibition-for-students.html. பார்த்த நாள்: 24 June 2021. 
  40. Imranullah, Mohamed (18 June 2019). "Water supply in city cut to 525 MLD from 830 MLD, HC told" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 4 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210204142652/https://www.thehindu.com/news/cities/chennai/water-supply-in-city-cut-to-525-from-830-mld-hc-told/article28023481.ece. 
  41. "Chennai's Piped Water Supply Cut By 40 Per Cent Amid Severe Water Crisis". NDTV.com. Archived from the original on 4 March 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  42. Gupta, Swati. "Indian water train arrives to relieve dry Chennai". CNN. Archived from the original on 25 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.

புற இணைப்புகள்

[தொகு]