மழைநீர் சேகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எவ்வாறு மழைநீர் மலைகளில் இருந்து திரட்டப்படலாம் என்பதற்கான வரைபடம்

g) என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும்.[1] மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியது. கட்டடங்களின் மேற்கூரைகளில் சேகரிக்கப்படும் மழைநீர், பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக தூய்விப்புக்கு உட்படுத்தத் தேவையில்லாமலும் இருக்கிறது. வேறுவகை நீர் ஆதாரம் இல்லாத போது, ஆண்டு மழைப்பொழிவு 200மிமீ-க்கு கூடுதலான இடங்களில் குடும்பத்தின் குடிநீர் தேவைக்காக மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது.

மழைநீர் சேகரிக்க எளிமையானது முதல் சிக்கலானது வரை பல வகையான அமைப்புகளை உருவாக்கலாம். தரைவழியாகவோ கட்டடங்களின் மேற்கூரைகள் வழியாகவோ மழைநீர் சேகரிக்கப்படும். அமைப்பின் திட்ட அளவு, செயல்திறன், மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றைப் பொருத்து மழைநீர் சேகரிப்பு வீதம் அமையும்.

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகே கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

தரைவழி மழைநீர் வடிகால் அமைப்பு[தொகு]

தரைவழி வடிகால் அமைப்பு மழைநீரை தயார்படுத்தப்பட்ட வடிகால் பகுதியிலிருந்து சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செலுத்துகிறது. முறைப்படி வடிவமைக்கப்பட்டு கூடிய அளவு நீரைச் சேகரிப்பதன் மூலம், இது சிறிய சமுதாய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்

மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு[தொகு]

இந்த வகையான அமைப்பில் மேற்கூரையில் விழும் மழைநீரை ஒருங்கே திரட்டி நீர்த்தாரைகள் மற்றும் குழாய்கள் மூலம் சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வறண்ட காலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையின் நீரை சேகரிக்காமல் விட்டுவிடுவது நல்லது. இதில் தூசி, பறவை எச்சம் போன்றவைகள் கலந்திருக்கலாம்.

மேற்கூரை நீர்த்தாரைகள் போதுமான சரிவுடனும், பெருமழையைத் தாங்கக்கூடிய அளவு பெரியதாகவும் பலமானதாகவும் அமைத்தால் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

கொசு உற்பத்தி, நீர் ஆவி ஆதல், நீர் மாசுபடுதல், பாசி வளர்ச்சி ஆகியவைகளைத் தடுக்கச் சேமிப்புத் தொட்டிகளை நன்றாக மூட வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டம் நல்ல முறையில் செயல்படவும், தூய்மையாகவும் இருக்க அதற்கு வழக்கமான பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளும் செய்ய வேண்டும்.

மரபு வழி மழைநீர் சேமிப்பு[தொகு]

பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.

வானம் பார்த்த ஊர்களான சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் மழை நீரை நம்பியே வேளாண்மை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே நகரத்தார் காரைக்குடி, கோனாபட்டு, ஆத்தங்குடி, கானாடுகாத்தான, கோட்டையூர், தேவகோட்டை, ராங்கியம், சிறுகூடல்பட்டி, வலையபட்டி, புதுவயல் மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புக்களை கட்டிவைத்துள்ளனர்.

வீட்டின் நடுப் பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்துள்ளனர். எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. மாடியின் மேல் தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது, இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை கூடல்வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி) அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும் போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேல்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறு துளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அதே போல கழிவு நீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது.

இப்படி வீடுகளில் மட்டுமல்லாது கோயில்கள்,தெருக்கள் என எல்லா இடங்களிலும் மழைநீரை சேமித்துவைக்கும் தொலை நோக்கு அவர்களுக்கு இருந்துள்ளது.எப்படி என்றால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த செம்புரான் எனப்படும் பாறைக்கற்கலால் கட்டப்பட்டுள்ள குளங்கள் அங்கு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் எங்கு தேங்கி ஓடினாலும் கடைசியில் இந்த குளத்தில் கலக்கும் விதமாக கால்வாய்கள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதனால்தான் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றும் வற்றாதவையாக உள்ளன. மொத்தத்தில் நகரத்தார் கள் கட்டிய வீடுகள் யாவும் மழைநீர் சேமிப்புக்கான வடிகால்கள் என கூறலாம்.

நிலத்தடி நீர்மட்டம் உயர[தொகு]

நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிலத்தடித் தொட்டி, கிணறு, தெப்பக் குளம் அல்லது குட்டைகளில் சேமிக்கப்பட்டும் மழைநீர் தானாக நிலத்தடிக்கு உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது.

நகர்புறப் பகுதிகளில் பயன்பாடு[தொகு]

மழைநீர் சேகரிப்புத் திட்டம் நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மற்றும் மழை வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. சேமிக்கப்படும் மழைநீர் அன்றாட வீட்டு உபயோகத் தேவைகளுக்கும், கழிப்பறைகளிலும், சலவை மற்றும் குளியலுக்கும் தேவை பயன்படுத்தலாம்.

கடின நீர் உள்ள இடங்களில் மழைநீர் முக்கியத் தேவையாக உள்ளது. மேலும் நன்றாகச் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குடிதண்ணீராகப் பயன்படுத்த வேண்டும்.

கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம்[தொகு]

இந்தியாவில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல், கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இச்சட்டம் கொண்டுவரப்பட்டுத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டடங்களும் கட்டயாமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும்.

இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 50 விழுக்காடு வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சேகரிக்கும் முறைகள்[தொகு]

நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்த்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.

உறிஞ்சு குழிகள் (Percolation Pits)[தொகு]

தற்போது நகரங்களில் அடுக்கு்மாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி வெளிப்புற சுவர் வரை சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால் அங்கு பெய்யும் மழை முழுவதுமாகவே பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் இவை முழுவதுமாக கடலில் சென்று கலந்து விடுகிறது.

இதை தவிர்த்து நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டிடங்களச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகள் அமைத்து, அவற்றை கூழாங்கல், மணல் முதலியவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட 'சிலாப்'கள் கொண்டு மூடி விடலாம்.

இந்த முறையில் சுமார் ஒரு கிரவுண்டு (ஐந்தரை செண்ட்) இடத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி சுமார் 5 அல்லது 6 உறிஞ்சு குழிகள் அமைப்பது நிலத்தடி நீரின் அளவையும், தரத்தையும் உயர்த்த உதவும். சாதாரணமாக இவ்வாறு உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்ட பின் அருகிலுள்ள வற்றிய கிணறுகளில் நீர் மட்டம் உயர 2 வருடங்கள் ஆகும்.

மஹாத்மா காந்தி பிறந்த வீட்டில் மழை நீர் சேகரிக்கப்பட்ட முறை. போர்பந்தரில் (குஜராத் மாநிலம், இந்தியா) மஹாத்மா காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் இருபதாயிரம் காலன்கள் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.

பருவ மழை தொடங்குமுன் மேல் தளங்களின் கூரையை கவனமாக கழுவி விடுவார்கள். இங்கு விழும் மழைநீர் குழாய்கள் வழியாக கீழே இறங்கி, குழாய் முனையில் சுண்ணாம்பினால் வடிகட்டி சுத்தம் செய்யப்பட்ட பின் கீழ்த் தொட்டிக்கு செல்லும். இந்த வீட்டில் தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

உலகத்தின் மற்றப் பகுதிகளில்[தொகு]

  • இந்திய மாநிலமான இராஜஸ்தானில் தார்ப் பாலைவனத்தில் வாழும் மக்கள்களால்

மழைநீர் சேகரிப்பு முறை பாரம்பரியமாக நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது[சான்று தேவை].

  • பெர்முடாத் தீவுகளிலும், அமெரிக்க ஐக்கிய வெர்ஜினியா தீவுகளிலும், அமெரிக்க ஐக்கிய மாகாணமான கொலராடோவிலும் அனைத்து கட்டடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயமாக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது[சான்று தேவை].

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rural Water Supply Network. "Rural Water Supply Network Self-supply site" (in en-gb). http://www.rural-water-supply.net/en/self-supply. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழைநீர்_சேகரிப்பு&oldid=3812500" இருந்து மீள்விக்கப்பட்டது