மலேசியாவின் எல்லைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவின் எல்லைகள்

மலேசியாவின் எல்லைகள் (ஆங்கிலம்: Borders of Malaysia; மலாய்: Sempadan Malaysia); என்பது மலேசியாவின் அண்டை நாடுகளான புரூணை; இந்தோனேசியா; ஆகிய நாடுகளுடன் மலேசியா கொண்டுள்ள நிலம் சார் எல்லைகளையும்; பிலிப்பீன்சு; சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மலேசியா கொண்டுள்ள கடல் சார் எல்லைகளையும் குறிப்பதாகும். அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களின் மூலம் மலேசியாவின் கடல் எல்லைகளின் ஒரு பகுதி பிரித்துப் பகிரப்பட்டு உள்ளது.

இருப்பினும் இந்தோனேசியா; பிலிப்பீன்சு; தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் நிலம், கடல் மற்றும் பிற எல்லை ஒப்பந்தங்களை மீண்டும் வரையறுக்கவும் மலேசியா ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

அத்துடன் மலேசியாவும் அதன் நிலவியல் வரைபட ஆயுவுத் துறையால் வெளியிடப்பட்ட 1979 வரைபடத்தின் மூலம் அதன் கடல் எல்லைகளை ஒருதலைப்பட்சமாக அறிவித்து உள்ளது. இந்த வரைப்பட எல்லைகளை மலேசியாவின் அண்டை நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கடந்த காலங்களில் சில எல்லைத் தகராறுகளும் ஏற்பட்டு உள்ளன.[1][2]

நில எல்லைகள்[தொகு]

மலேசியாவின் மொத்த நில எல்லையின் நீளம் 3,147.3 கி.மீ.

புரூணை[தொகு]

புரூணையுடனான மலேசியாவின் எல்லை 481.3 கிமீ நீளம் கொண்டது. தென் சீனக் கடலில் அதன் கடற்கரையைத் தவிர, போர்னியோ தீவில் மலேசியாவின் சரவாக் மாநிலத்தால் புரூணை முழுமையாகச் சூழப்பட்டு உள்ளது.

இந்தோனேசியா[தொகு]

போர்னியோ தீவில் இந்தோனேசியாவுடன் நில எல்லையை மலேசியா பகிர்ந்து கொள்கிறது. மலேசியாவின் சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் இந்தோனேசியாவின் எல்லைக்கு வடக்கே அமைந்துள்ளன.

இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான், கிழக்கு கலிமந்தான் மற்றும் மேற்கு கலிமந்தான் ஆகியவை மலேசியாவின் போர்னியோ எல்லைக்கு தெற்கே அமைந்துள்ளன. இரு நாடுகளின் எல்லையின் நீளம் 2,019.5 கி.மீ.

தாய்லாந்து[தொகு]

தாய்லாந்துடனான மலேசியாவின் எல்லையானது தீபகற்ப மலேசியாவின் வடக்கே அமைந்துள்ளது. மேற்கில் மலாக்கா நீரிணை மற்றும் கிழக்கில் தாய்லாந்து வளைகுடா/தென் சீனக் கடல் இடையே இரு நாடுகளின் எல்லை செல்கிறது.

மலேசியாவின் கெடா, கிளாந்தான், பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள்; தாய்லாந்து மாநிலங்களான நாராதிவாட், சத்துன், சொங்கலா மற்றும் யாலா எனும் மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் எல்லையின் நீளம் 646.5 கி.மீ.

சர்ச்சைகள்[தொகு]

1995-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் மலேசியா - சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே ஓர் எல்லை வரையறுக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இரு நாடுகளும் அவற்றின் பொதுவான எல்லைகளை வரையறுக்க இன்னும் முறையான ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளவில்லை. சிங்கப்பூர் மூன்று கடல் மைல் (6 கி.மீ.) கடல் எல்லையைக் கோருகிறது, மலேசியா 12 கடல் மைல் (22 கி.மீ.) கடல் எல்லையைக் கோருகிறது.[3]

2008 மே 23-ஆம் தேதி அனைத்துலக நீதிமன்றத்தின் (International Court of Justice) தீர்ப்பின்படி பெட்ரா பிராங்கா (Pedra Branca) தீவின் இறையாண்மை சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் பெட்ரா பிராங்கா தீவைச் சுற்றியுள்ள மலேசியா - சிங்கப்பூர் கடல் எல்லையின் புதிய பகுதியும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

பெட்ரா பிராங்கா] தீவு[தொகு]

பெட்ரா பிராங்கா தீவு சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இருந்து 24 கடல் மைல்கள் (44 கிமீ) தொலைவிலும்; மலேசியக் கடற்கரையில் இருந்து தென்கிழக்கே 7.7 கடல் மைல்கள் (14.3 கி.மீ.) தொலைவிலும் அமைந்துள்ளது.

ஜொகூர் நீரிணையின் மேற்கு நுழைவாயிலில் சிங்கப்பூர் மேற்கொண்ட நிலச் சீரமைப்புப் பணிகள் மூலம் மலேசிய கடல் எல்லைக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் சர்ச்சை இன்னும் உள்ளது. அந்தச் சர்ச்சையும் தீர்க்கப்பட வேண்டும்.[4]

மலேசியாவின் கடல் எல்லைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BUTCHER, JOHN G. (2013). "The International Court of Justice and the Territorial Dispute between Indonesia and Malaysia in the Sulawesi Sea". Contemporary Southeast Asia. pp. 235–257. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
  2. "Malaysia has a number of territorial disputes such as Sipadan–Ligitan, Batu Puteh, Limbang and the Spratly Islands. So far, it had settled two of the disputes through the International Court of Justice (ICJ) i.e. Sipadan–Ligitan and Batu Puteh Islands". பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
  3. "One such dispute exists between Singapore and Malaysia, which (re)emerged unexpectedly in October last year. This dispute concerns the maritime area in the Johor Strait, which is off the coast of Singapore's reclaimed land area known as Tuas". www.lowyinstitute.org. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
  4. Charney, Jonathan I (2005). International Maritime Boundaries. Martinus Nijhoff Publishers. பக். 2345–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-411-0345-7. https://books.google.com/books?id=XkgfZJjh3BUC&q=straits+settlements+and+johor+territorial+waters+agreement&pg=PA2345. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியாவின்_எல்லைகள்&oldid=3911181" இலிருந்து மீள்விக்கப்பட்டது