மலேசியா-பிலிப்பீன்சு எல்லை

ஆள்கூறுகள்: 3°10′48″N 119°28′12″E / 3.18000°N 119.47000°E / 3.18000; 119.47000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியா-பிலிப்பீன்சு எல்லை
Malaysia–Philippines Border
போர்னியோவின் வரைபடம்: மலேசியா - பிலிப்பீன்சு நாடுகள்; எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது..
சிறப்பியல்புகள்
Entities  பிலிப்பீன்சு
 மலேசியா
நீளம்800 கி.மீ.
வரலாறு
அமைக்கப்பட்டது11 சூன் 1978
தற்போதைய வடிவமைப்பு2009
உடன்பாடுகள் • பாரிஸ் உடன்படிக்கை (1898)
(The Treaty of Paris of 1898)
 • வாஷிங்டன் ஒப்பந்தம் 1930
(Washington Treaty 1930)

மலேசியா-பிலிப்பீன்சு எல்லை (ஆங்கிலம்: Malaysia–Philippines Border; மலாய்: Sempadan Malaysia–Philippines); என்பது தென் சீனக் கடல், சுலு கடல் மற்றும் சுலாவெசி கடல் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்துலக கடல் எல்லையாகும் (Maritime Boundary).

இந்தக் கடல் எல்லை போர்னியோ தீவில் உள்ள மலேசியாவின் சபா மாநிலத்தையும்; பிலிப்பீன்சு நாட்டின் தென் பகுதியில் (Southern Philippines) உள்ள சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); பலவான் தீவுக் கூட்டங்களையும் பிரிக்கிறது.

சூலு சுல்தானகம் (Sulu Sultanate) அதன் பிரதேசங்களைக் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தன் விளைவாக இந்த எல்லை உருவானது.

பொது[தொகு]

மலேசியா மற்றும் பிலிப்பீன்சுக்கு இடையிலான எல்லை முழுக்க முழுக்க கடல் சார்ந்தது. மற்றும் தென் சீனக் கடல், சூலு தீவுக்கூட்டம் மற்றும் சுலாவெசி கடல்களைக் கடக்கிறது. இது கிழக்கு மலேசியாவில் உள்ள சபா மாநிலத்தை போர்னியோ தீவு மற்றும் சூலு; மற்றும் பலவான் தீவுக்கூட்டங்களில் இருந்து பிரிக்கிறது.

சூலு சுல்தானகம், 1851 மற்றும் 1898-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எசுப்பானியா நாட்டின் பாதுகாவலில் இருந்தது. 1903 மற்றும் 1915-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் பாதுகாவலில் இருந்தது.

சூலு சுல்தானகத்தின் கலைப்புக்குப் பிறகு இந்த மலேசியா-பிலிப்பீன்சு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. வடக்கு போர்னியோ 1882-ஆம் ஆண்டில் பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் இருந்தது.

பிலிப்பீன்சு கோரிக்கை[தொகு]

பிலிப்பீன்சு முன் வைக்கும் கருத்து: 1882-ஆம் ஆண்டில் கொசுதாவ் ஓவர்பெக் (Gustav Overbeck) என்பவருக்கு, வடக்கு போர்னியோ பகுதி, சூலு சுல்தானகத்திடம் இருந்து வாடகைக்கு விடப்பட்டது. பின்னர் கொசுதாவ் ஓவர்பெக், அந்த வடக்கு போர்னியோ பகுதியை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறார்.

ஆகவே, வடக்கு போர்னியோ பகுதி பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு குத்தகைக்கு மட்டுமே விடப்பட்டுள்ளது என்று பிலிப்பீன்சு வாதிடுகிறது.[1].

எசுப்பானியாவின் கட்டுப்பாட்டு[தொகு]

சூலு சுல்தானகம் அதன் நிலப் பகுதிகளைப் பிரித்துக் கொடுக்கும் போது, பிரித்தானியர்கள், போர்னியோவின் வடகிழக்குப் பகுதியின் (North East Shores of Borneo) கட்டுப்பாட்டைப் பெற்றனர்.

இந்த வடகிழக்குப் பகுதி வடக்கு போர்னியோ (North Borneo) என்றும்; பின்னர் சபா (Sabah) என்றும் அறியப்படுகிறது. எஞ்சிய சூலு தீவுக்கூட்டம், எசுப்பானியாவின் (Spain) கட்டுப்பாட்டின் கீழ் (Spainish Control) வந்தன. பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் (United States) ஆட்சிப் பகுதிகளாக மாறின.[2]

சூலு சுல்தானகம்[தொகு]

சபாவின் கிழக்குப் பகுதியைப் பிலிப்பீன்சு, அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இன்னும் அதிகாரப்பூர்வமாக உரிமை கோரி வருகிறது. சூலு நிலப் பகுதிகளை சூலு சுல்தானின் வாரிசுகள் பிரித்துக் கொடுத்தது செல்லுபடியாகாது என்று பிலிப்பீன்சு வாதிடுகிறது.[3]

தென்சீனக் கடலில் உள்ள இசுப்ராட்லி தீவுகள் எனும் ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) மீதும் மலேசியா பிலிப்பீன்சு நாடுகளுக்கு இடையே பிரச்சினைகள் நிலவுகின்றன. அந்தத் தீவுகள் மீதான பன்னாட்டு உரிமைக் கோரிக்கைகளில் (Multinational Claims) இரு நாடுகளுமே பங்கு வகிக்கின்றன.[4]

இசுப்ராட்லி தீவு பிரச்சினை[தொகு]

இரு நாடுகளும் இசுப்ராட்லி தீவுக் கூட்டத்தின் (Spratly Islands Archipelago) சில தீவுகள் மீதும் தங்களின் உரிமை கோரிக்கையைத் தொடர்கின்றன. எல்லையின் இருபுறமும் வாழும் மக்களின் வரலாற்றுத் தொடர்புகள், எல்லைப் பகுதியில் மிகவும் நுணுக்கமான சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன.

பிலிப்பீன்சில் இருந்து மலேசியாவிற்கு ஏராளமான சட்டவிரோத குடியேற்றங்கள் நிகழ்கின்றன. சபாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மலேசிய நகரங்கள் மற்றும் ஓய்வு விடுதிகளில் பல அசம்பாவிதங்களும் நடந்து உள்ளன.

பிலிப்பீன்சின் ஆயுதமேந்திய குழுக்களால் எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் கடத்தல் (Cross-Border Raids and Kidnapping) சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

சபா எல்லை சர்ச்சைகள்[தொகு]

மலேசியா தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு இருந்து, 1966-ஆம் ஆண்டு வரை மலாயாவுடன் ஓர் எதிரான போக்கையே இந்தோனேசியா கடைபிடித்து வந்தது. தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில், பிரித்தானியர்களின் ஊடுருவல் விரிவடைந்து செல்வாக்கு அதிகரிப்பதாக இந்தோனேசியா அதிபர் சுகர்ணோ கருதினார். ஆகவே, போர்னியோ முழுமையும் இந்தோனேசியக் குடியரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தார். ஆனால், அவருடைய வீயூகங்கள் வெற்றி பெறவில்லை.[5]

சபாவின் முதல் முதலமைச்சராக துன் புவாட் ஸ்டீபன்ஸ் (Tun Fuad Stephens) பதவி ஏற்றார். துன் முஸ்தாபா சபாவின் முதல் ஆளுநராகப் பொறுப்பேற்றார். 2020-ஆம் ஆண்டு வரை சபாவில் 16 மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.[6]

லபுவான் தீவும் அதைச் சுற்றி இருந்த ஆறு சின்னத் தீவுகளும் மலேசியக் கூட்டரசு அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டன. 1984 ஏப்ரல் 16-இல் லபுவான் தீவு, கூட்டரசு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் கோத்தா கினபாலுவிற்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது. மலேசியாவில் மாநகர் தகுதி பெற்ற நகரங்களில் கோத்தா கினபாலு ஆறாவது நகரம் ஆகும். சபா மாநிலத்தில் அதுவே முதல் மாநகரம் ஆகும்.

சிப்பாடான் லிகித்தான் நெருக்கடிகள்[தொகு]

லபுவான் தீவிற்கு அருகாமையில் இருந்த சிப்பாடான், லிகித்தான் தீவுகளின் மீது இந்தோனேசியா சொந்தம் (Ligitan and Sipadan dispute) கொண்டாடி வந்தது. அதனால், சில போர் நெருக்கடிகள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் அபாயமும் ஏற்பட்டது.[7]

இந்த வழக்கு அனைத்துலக நீதிமன்றத்திற்கு (International Court of Justice) (ICJ) கொண்டு செல்லப்பட்டது. 2002-ஆம் ஆண்டு, சிப்பாடான், லிகித்தான் தீவுகள் மலேசியாவிற்குச் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் அறிவித்தது.

பிலிப்பீன்சு கோரிக்கை[தொகு]

மலேசியாவுடன் ஓர் எதிரான போக்கைக் கடைபிடித்து வந்த இந்தோனேசியாவைப் போன்று, வடக்கு போர்னியோவின் கிழக்குப் பகுதியான சபா மாநிலம், பிலிப்பீன்சு நாட்டிற்குச் சொந்தமானது என அந்த நாடு உரிமை கொண்டாடியது. 1963-ஆம் ஆண்டு மலேசியக் கூட்டரசுடன் இணைவதற்கு முன்பு, சபா என்பது வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டு வந்தது.

சூலு சுல்தானகத்தின் மூலமாக பிலிப்பீன்சிடம் இருந்து, பிரித்தானிய வட போர்னியோ நிறுவனத்திற்கு, சபா நிலப்பகுதி குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், அந்தக் குத்தகை காலாவதியாகிப் போய்விட்டது. ஆகவே, முறைப்படி சபா என்பது பிலிப்பீன்சிற்குச் சொந்தமானது என ஐக்கிய நாட்டுச் சபையில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் அதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.[8]

மோரோ முஸ்லீம் தீவிரவாதிகள்[தொகு]

இருப்பினும், மிண்டனாவோ தீவில் இருக்கும் மோரோ முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு மலேசியா மறைமுகமான ஆதரவுகளை வழங்கி வருவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டி வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மோரோ மக்கள் சபாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சபாவில் வாழும் மக்கள் மலேசியாவுடன் இணைவதையே விரும்பினர். அவர்கள் பிலிப்பைன்ஸுடனோ அல்லது சூலு சுல்தானகத்துடனோ இணைவதை விரும்பவில்லை. கோபால்டு ஆணையத்தின் (Cobbold Commission) வாக்கெடுப்பின் மூலமாக அந்த உண்மை அறியப்பட்டுள்ளது. ஆகவே, பிலிப்பைன்ஸ் கோரிக்கை செல்லுபடியாகாது என்று ஐக்கிய நாட்டுச் சபை அறிவித்தது.[9]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Boundaries : Philippines and North Borneo
  2. "Cession and transfer of the territory of North Borneo by His Highness, Sultan Mohammad Esmail Kiram, Sultan of Sulu, acting with the consent and approval of the Ruma Bechara, in council assembled, to the Republic of the Philippines". Government of the Philippines. 24 April 1962. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  3. "Cession and transfer of the territory of North Borneo by His Highness, Sultan Mohammad Esmail Kiram, Sultan of Sulu, acting with the consent and approval of the Ruma Bechara, in council assembled, to the Republic of the Philippines". Government of the Philippines. 24 April 1962. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  4. United States. Dept. of State; Charles Irving Bevans (1968). Treaties and other international agreements of the United States of America, 1776-1949. Dept. of State; for sale by the Supt. of Docs., U.S. Govt. Print. Off.. பக். 473–481. https://books.google.com/books?id=yc8WAAAAYAAJ. 
  5. "The Indonesia-Malaysia Confrontation, or Konfrontasi, lasted from 1963 to 1966. The conflict was an intermittent war waged by Indonesia to oppose the formation and existence of the Federation of Malaysia". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  6. "Tun Mustapha's contribution to Sabah's political maturity is immeasurable". web.archive.org. 21 October 2006. Archived from the original on 21 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  7. Chandran Jeshurun (1993). China, India, Japan, and the Security of Southeast Asia. Institute of Southeast Asian Studies. பக். 196–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-3016-61-3. https://books.google.com/books?id=o5e1xpmGbT0C&pg=PA196. 
  8. "The Sabah Dispute" (PDF). Keesing's Record of World Events. December 1968. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.
  9. "The Sabah Dispute" (PDF). Keesing's Record of World Events. December 1968. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.

வெளி இணைப்புகள்[தொகு]