மலேசியா-தாய்லாந்து எல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியா-தாய்லாந்து எல்லை
Malaysia–Thailand Border
பாடாங் பெசார் சோதனைச் சாவடிக்கு அருகில் தாய்லாந்து மலேசியா எல்லைச் சுவர்.
சிறப்பியல்புகள்
Entities  தாய்லாந்து
 மலேசியா
நீளம்595 கி.மீ.
வரலாறு
அமைக்கப்பட்டது10 மார்ச் 1909
தற்போதைய வடிவமைப்பு1909
உடன்பாடுகள் • பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909)

மலேசியா-தாய்லாந்து எல்லை (ஆங்கிலம்: Malaysia–Thailand Border; மலாய்: Sempadan Malaysia-Thailand; தாய் மொழி: ชายแดนมาเลเซีย–ไทย); என்பது மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளைப் பிரிக்கும் அனைத்துலக எல்லையாகும்.[1]

தீபகற்ப மலேசியா; மலாக்கா நீரிணை; தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand); தென் சீனக் கடல் ஆகியவற்றின் குறுக்கே 595 கி.மீ. (370 மைல்) வரை அமைந்துள்ள ஒரு நில எல்லை. கோலோக் ஆறு (Golok River) எனும் அனைத்துலக எல்லை ஆறு, இந்த இரு நாடுகளின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆறு. 95 கி.மீ. நீளத்தைக் கொண்டது.[2]

பொது[தொகு]

மலேசியா-தாய்லாந்து எல்லை வரைபடம்

1909-ஆம் ஆண்டு சயாம் நாட்டிற்கும் மலாயாவுக்கும் இடையே ஓர் எல்லை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் பெயர் பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909). அப்போது தாய்லாந்து நாடு சயாம் (Siam) (என்று அழைக்கப்பட்டது)

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வட மலாயா மாநிலங்களான கெடா, கிளாந்தான், பெர்லிஸ் மற்றும் திராங்கானு ஆகியவற்றின் மீது பிரித்தானியா அதன் செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கியது.

பிரித்தானியாவின் அழுத்தங்கள்[தொகு]

பிரித்தானியாவின் செல்வாக்கு மற்றும் அழுத்தங்களின் காரணமாக மலேசியா-தாய்லாந்து நில எல்லை அமைந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அந்த நான்கு மலாய் மாநிலங்களும் சயாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

தற்போது, மலேசியாவின் கெடா, கிளாந்தான், பெர்லிஸ் மற்றும் திராங்கானு மாநிலங்கள்; மற்றும் தாய்லாந்தின் சத்துன் (Satun), சொங்கலா (Songkhla), யாலா (Yala), நாராதிவாட் (Narathiwat) மாநிலங்கள்; மலேசியா மற்றும் தாய்லாந்தின் எல்லைகளாக உள்ளன.

கடல் எல்லை ஒப்பந்தங்கள்[தொகு]

புக்கிட் காயூ ஈத்தாம்-டானோக் எல்லைக் கடவையில் மலேசியா-தாய்லாந்து எல்லைக் கல்.

1971-ஆம் ஆண்டில் மலேசியாவும் தாய்லாந்தும் மலாக்கா நீரிணைக்கான ஒரு பிராந்திய (Territorial Sea Agreement) கடல் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. அதே போல 1979-ஆம் ஆண்டில் ஒரு நில எல்லை ஒப்பந்தத்தையும் (Continental Shelf Boundary Agreement) செய்து கொண்டன.

1990-ஆம் ஆண்டில், 7,250 சதுர கி.மீ. கடல் பகுதியில் உள்ள கனிம வளங்களைப் பகிர்ந்து கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

நில எல்லை[தொகு]

மலேசியா-தாய்லாந்து நில எல்லையானது 658-கி.மீ. நீளம் கொண்டது. வடக்கு தீபகற்ப மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் உள்ள பல மலைத் தொடர்களின் அடிவாரத்தில் 552-கி.மீ. நீளம்; கோலோக் ஆற்றின், (ஆங்கிலம்: Golok River; மலாய்: Sungai Golok); குறுக்கே 106 கி.மீ. நீளம் கொண்டது.

மேற்குப் பகுதியில் இரு நாடுகளின் நில எல்லை பெர்லிஸ் ஆறு (Perlis River) முகத்துவாரத்தின் வடக்கே தொடங்குகிறது. இந்த இடத்தில் இருந்து சயூன் மலைத் தொடரை (Sayun Range) நோக்கி நகர்கிறது.[1]

சிங்கோரா மலை முகடுகள்[தொகு]

பாடாங் பெசார் அருகே மலேசிய எல்லைச் சுவர்

தாய்லாந்தின் சி தாமராட் (Si Thammarat) மலைகளின் அடிவாரத்தில் ஏறக்குறைய 15 மைல்கள் (24 கி.மீ.) நகர்ந்து, பின்னர் கிழக்கு நோக்கி லாம் யாய் ஆறு (Lam Yai River) மற்றும் மலேசியாவின் பெர்லிஸ் ஆறு ஆகிய ஆறுகளைக் கடக்கிறது.

பின்னர் கெடா சிங்கோரா (Singgora) மலைகளின் முகடுகள் வழியாகச் செல்கிறது. பின்னர் தெற்கு நோக்கி பேராக் ஆறு மற்றும் பட்டாணி ஆறு (Pattani River) ஆகிய ஆறுகளைக் கடக்கிறது.[1]

தித்திவாங்சா மலைத்தொடர்[தொகு]

பின்னர் இந்த எல்லையானது தீபகற்ப மலேசியாவின் பிரதான மலைத் தொடரான தித்திவாங்சா மலைத்தொடர் (மலாய்: Banjaran Titiwangsa) பகுதியின் வடக்குப் பகுதியில் பேராக் ஆறு மற்றும் பெர்காவ் ஆறு (Pergau River) வழியாக கிழக்கு நோக்கி நகர்கிறது.

தாய்லாந்து பகுதியில் பட்டாணி ஆறு மற்றும் சாய் புரி ஆறு (Sai Buri River) ஆகியவை எல்லைகளாக உள்ளன. அதன் பின்னர் மலேசியப் பகுதியில் ஜெலி குன்றை (Jeli Hill) அடைகிறது. புக்கிட் ஜெலியில், 8.5 கிமீ எல்லைப் பகுதி இரு நாடுகளாலும் இன்று வரையில் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]