உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசியா-மலேசியா எல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசியா-மலேசியா எல்லை
Indonesia–Malaysia border
Sempadan Malaysia–Indonesia
சிறப்பியல்புகள்
நிலப்பகுதிகள்  இந்தோனேசியா
 மலேசியா
நீளம்1,881 km (1,169 mi)
வரலாறு
அமைக்கப்பட்டது1824

ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கை, 1824
தற்போதைய வடிவமைப்பு2002

சிப்பாடான் லிகித்தான் நெருக்கடி
உடன்பாடுகள்எல்லை ஒப்பந்தம் (1891; 1915; 1928)

இந்தோனேசியா-மலேசியா எல்லை (ஆங்கிலம்: Indonesia–Malaysia Border; மலாய்: Sempadan Malaysia–Indonesia); என்பது போர்னியோ தீவில் உள்ள இந்தோனேசியா - மலேசியா நாடுகளின் நிலப்பரப்பைப் பிரிக்கும் நில எல்லையாகும். இந்த எல்லை 1,881 கிமீ (1,169 மைல்); நில எல்லையைக் கொண்டுள்ளது.[1]

இரு நாடுகளின் நிலம்சார்ந்த எல்லை என்பது போர்னியோ தீவில் உள்ள மலேசியாவின் சபா சரவாக் மாநிலங்களையும்; இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான், மத்திய கலிமந்தான், கிழக்கு கலிமந்தான் நிலப் பகுதிகளையும் பிரிக்கிறது. அதே வேளையில், கடல் சார்ந்த எல்லை என்பது மலாக்கா நீரிணை, தென் சீனக் கடல், சுலாவெசி கடல் ஆகிய கடல் சார் பகுதிகளைப் பிரிக்கிறது.[2]

இந்த இரு நாடுகளின் நில எல்லை, போர்னியோவின் வடமேற்கு மூலையில் உள்ள தஞ்சோங் டத்துவில் இருந்து, போர்னியோ தீவின் மலைப்பகுதிகள் வழியாகச் செபாடிக் வளைகுடா மற்றும் சுலாவெசி தீவின் கிழக்குப் பகுதியில் சுலாவெசி கடல் வரை நீண்டுள்ளது.

பொது

[தொகு]
செபாடிக் தீவில் இந்தோனேசியா-மலேசியா எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கிழக்கு எல்லைக் குறிப்பி
மேற்கு கலிமந்தானில் எந்திக்கோங் இந்தோனேசியா-மலேசியா எல்லைச்சாவடி

மலாக்கா நீரிணையில் உள்ள கடல் எல்லை, பொதுவாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் அடிப்படைக் கடல்சார் பிராந்திய நீர்எல்லையைப் பின்பற்றுகிறது. இந்தக் கடல்சார் எல்லை மலேசியா-தாய்லாந்து எல்லையில் (Malaysia–Thailand border) இருந்து, தெற்கே மலேசியா-சிங்கப்பூர் எல்லையின் (Malaysia–Singapore border) தொடக்கம் வரை செல்கிறது.

இந்தக் கடல் எல்லையின் ஒரு பகுதி மட்டுமே 1969-இல் கையெழுத்தான கண்டங்களின் அடுக்கு எல்லை ஒப்பந்தம் மற்றும் 1970-இல் கையெழுத்தான பிராந்தியக் கடல் எல்லை ஒப்பந்தம் (Territorial waters) மூலம் பிரிக்கப்பட்டு உள்ளது.

சுலாவெசி கடல் எல்லை

[தொகு]

சுலாவெசி கடல் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைகள் இன்றும் தொடர்கிறது. 2002-இல் சிப்பாடான் லிகித்தான் நெருக்கடி வழக்கில், பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், சுலாவெசி கடல் எல்லைச் சர்ச்சையின் ஒரு பகுதி தீர்க்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை உடன்படிக்கை இன்னும் கையெழுத்திடப் படவில்லை.

இருப்பினும், கண்டத் திட்டு (Continental shelf) சர்ச்சையில், இரு நாடுகளும் இன்னும் உரிமைகோரல்களை முன்வைத்து வருகின்றன. இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் ஏராளமான கடல் போக்குவரத்துக் குறுக்குவழிகள் உள்ளன.

நிலப் போக்குவரத்து

[தொகு]

கடல் போக்குவரத்து என்பது பெரும்பாலும் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கும் இடையில் உள்ளது. நிலப் போக்குவரத்து என்பது இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மாநிலத்திற்கும் மலேசியாவின் சபா மாநிலத்திற்கும் இடையில் உள்ளன.

மேற்கு கலிமந்தானுக்கும் சரவாக்கிற்கும் இடையே மூன்று அதிகாரப்பூர்வ நிலப் போக்குவரத்துக் கடக்கும் இடங்கள் மட்டுமே உள்ளன. நிலம் மற்றும் கடல் எல்லைகள் இரண்டும் ஒப்பீட்டளவில் ஊடுருவல்களைக் கொண்டவை; இந்தோனேசியாவில் இருந்து கடப்பிதழ்கள் இல்லா தொழிலாளர்கள் மலேசியாவிற்குள் செல்வது வழக்கமாக உள்ளது.

சபா எல்லை சர்ச்சைகள்

[தொகு]

மலேசியக் கூடமைப்பு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு இருந்து, 1966-ஆம் ஆண்டு வரை மலாயாவுடன் ஓர் எதிரான போக்கையே இந்தோனேசியா கடைபிடித்து வந்தது. தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில், பிரித்தானியர்களின் ஊடுருவல் விரிவடைந்து செல்வாக்கு அதிகரிப்பதாக இந்தோனேசியா அதிபர் சுகர்ணோ கருதினார். ஆகவே, போர்னியோ முழுமையும் இந்தோனேசியக் குடியரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தார். ஆனால், அவருடைய வீயூகங்கள் வெற்றி பெறவில்லை.[3]

சபாவின் முதல் முதலமைச்சராக துன் புவாட் இசுடீபன்ஸ் (Tun Fuad Stephens) பதவி ஏற்றார். துன் முசுதபா சபாவின் முதல் ஆளுநராகப் பொறுப்பேற்றார். 2020-ஆம் ஆண்டு வரை சபாவில் 16 மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.[4]

லபுவான் தீவும் அதைச் சுற்றி இருந்த ஆறு சின்னத் தீவுகளும் மலேசியக் கூட்டரசு அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டன. 1984 ஏப்ரல் 16-இல் லபுவான் தீவு, கூட்டரசு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் கோத்தா கினபாலுவிற்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது. மலேசியாவில் மாநகர் தகுதி பெற்ற நகரங்களில் கோத்தா கினபாலு ஆறாவது நகரம் ஆகும். சபா மாநிலத்தில் அதுவே முதல் மாநகரம் ஆகும்.

சிப்பாடான் லிகித்தான் நெருக்கடிகள்

[தொகு]

லபுவான் தீவிற்கு அருகாமையில் இருந்த சிப்பாடான், லிகித்தான் தீவுகளின் மீது இந்தோனேசியா சொந்தம் (Ligitan and Sipadan dispute) கொண்டாடி வந்தது. அதனால், சில போர் நெருக்கடிகள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் அபாயமும் ஏற்பட்டது.[5]

இந்த வழக்கு அனைத்துலக நீதிமன்றத்திற்கு (International Court of Justice) (ICJ) கொண்டு செல்லப்பட்டது. 2002-ஆம் ஆண்டு, சிப்பாடான், லிகித்தான் தீவுகள் மலேசியாவிற்குச் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் அறிவித்தது.

பிலிப்பீன்சு கோரிக்கை

[தொகு]

மலேசியாவுடன் ஓர் எதிரான போக்கைக் கடைபிடித்து வந்த இந்தோனேசியாவைப் போன்று, வடக்கு போர்னியோவின் கிழக்குப் பகுதியான சபா மாநிலம், பிலிப்பீன்சு நாட்டிற்குச் சொந்தமானது என அந்த நாடு உரிமை கொண்டாடியது. 1963-ஆம் ஆண்டு மலேசியக் கூட்டரசுடன் இணைவதற்கு முன்பு, சபா என்பது வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டு வந்தது.

சூலு சுல்தானகத்தின் மூலமாக பிலிப்பீன்சிடம் இருந்து, பிரித்தானிய வட போர்னியோ நிறுவனத்திற்கு, சபா நிலப்பகுதி குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், அந்தக் குத்தகை காலாவதியாகிப் போய்விட்டது. ஆகவே, முறைப்படி சபா என்பது பிலிப்பீன்சிற்குச் சொந்தமானது என ஐக்கிய நாட்டு அவையில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் அதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.[6]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Malaysia". CIA World Factbook. பார்க்கப்பட்ட நாள் 22 September 2020.
  2. Resolution of the Governor-General of Netherlands India regarding the Dutch Possessions in Borneo, dated Buitenzorg-Batavia, 28 February 1846
  3. "The Indonesia-Malaysia Confrontation, or Konfrontasi, lasted from 1963 to 1966. The conflict was an intermittent war waged by Indonesia to oppose the formation and existence of the Federation of Malaysia". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  4. "Tun Mustapha's contribution to Sabah's political maturity is immeasurable". web.archive.org. 21 October 2006. Archived from the original on 21 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  5. Chandran Jeshurun (1993). China, India, Japan, and the Security of Southeast Asia. Institute of Southeast Asian Studies. pp. 196–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-3016-61-3.
  6. "The Sabah Dispute" (PDF). Keesing's Record of World Events. December 1968. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]