பொருளாதார அமைப்புக்கள்
பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி,பகிர்வு,மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கபடும் விதத்தினை பொருளாதார அமைப்புக்கள் (Economic systems) தீர்மானிக்கின்றன.
பொருளாதார அமைப்புக்களானது கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு, பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது. ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான எதனை உற்பத்தி செய்தல்?,எவ்வாறு உற்பத்தி செய்தல்?, யாருக்காக உற்பத்தி செய்தல்?, எவ்வளவு உற்பத்தி செய்தல்? போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது. எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள்,சமூகங்களில் இவற்றிக்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள்,சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார அமைப்புகள் வேறானவைகள் ஆகும்.
உலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளியல் அமைப்புகளாவன:
- சந்தைப் பொருளாதார அமைப்பு (Market economy) - அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.
- திட்டமிடல் பொருளாதார அமைப்பு (Planned economy) - கியூபா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.
- கலப்பு பொருளாதார அமைப்பு (Mixed economy) - இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.