சந்தைப் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திறந்த சந்தை பொருளாதாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சந்தைப் பொருளாதாரம் அல்லது கட்டற்ற சந்தைப் பொருளாதாரம் என்பது ஒரு பொருளியல் முறை ஆகும். இதில் பொருட்களினதும், சேவைகளினதும் உற்பத்தியும், விநியோகமும் கட்டற்ற விலை முறைமையினால் நெறிப்படுத்தப்படும் கட்டற்ற சந்தைப் பொறிமுறையினால் நடைபெறுகின்றது. ஒரு சந்தைப் பொருளாதார அமைப்பில் வணிகத்துறையும், நுகர்வோரும் எதை வாங்குவது எதை உற்பத்திசெய்வது போன்ற முடிவுகளைத் தாங்களாகவே எடுக்கின்றனர். இம்முறையில் வளங்களின் ஒதுக்கம் அரசின் தலையீடுகள் இன்றி நடைபெறும். கோட்பாட்டு அடிப்படையில் இம் முறையின் கீழ், எதனை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது, என்ன விலை விற்பது, தொளிலாளருக்கு எவ்வளவு ஊதியம் வழங்குவது போன்ற முடிவுகளை உற்பத்தியாளரே எடுப்பார், அரசு அல்ல. சந்தைப் பொருளாதாரத்தில் இம் முடிவுகள், போட்டி, தேவையும் வழங்கலும், போன்றவற்றால் உண்டாகும் அழுத்தங்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன. இது என்ன பொருளை எவ்வளவு உற்பத்தி செய்வது போன்றவற்றை அரசே தீர்மானிக்கும் திட்டமிட்ட பொருளாதார முறைக்குப் புறம்பானது. திட்டமிட்ட பொருளாதாரம்போல் விரிவாக இல்லாவிட்டாலும், முற்றிலும் கட்டற்ற முறையில் இல்லாமல் ஓரளவு அரசின் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் கலப்புப் பொருளாதார முறையும், சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து வேறுபடுகின்றது. நடைமுறையில் எந்த நாட்டிலும் உண்மையான சந்தைப் பொருளாதாரம் இருப்பதாகக் கூறமுடியாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தைப்_பொருளாதாரம்&oldid=3888374" இலிருந்து மீள்விக்கப்பட்டது