பொருளியல் சிந்தனையின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியல் சிந்தனையின் வரலாறு (History of Economic Thought) என்பது பொருளியல் எண்ணங்கள் பழங்காலத்திலிருந்து இன்று வரை தோன்றி வளர்ந்த விதம் குறித்து விளக்குவது ஆகும். பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளியல் சிந்தனைகளின் வளர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு. பொருளாதார வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதாகும் ஆனால் பொருளியல் சிந்தனை வளர்ச்சி என்பது பொருளியல் குறித்த எண்ணங்கள் எவ்வாறு உருவெடுத்து பின்பு இது ஒரு தனி இயலாக வளா்ந்தது என்பது குறித்தது ஆகும்.

பொருளியல் சிந்தனையின் வரலாற்றை மூன்று காலங்களாகப் பிரித்து அறியலாம் அவை பழங்காலம், இடைக்காலம், தற்காலம் ஆகும். மேலும் இவ்வரலாறு, பொருளியல் ஒரு அறிவியல் பிரிவாகக் கருதப்படுவதற்கு முன்பு எழுந்த சிந்தனைகள், இதற்கு பின் எழுந்த சிந்தனைகள் என்று இரண்டாகவும் பிரிக்கப்படுகின்றன.[1]

பொருளியல் சிந்தனைகள் ஒரு வடிவமெடுக்கும் முன் பழங்காலந் தொட்டு கவிஞர்கள் மற்றும் தத்துவ அறிஞா்களின் கூற்றுகளில் இது தொடர்பான எண்ணங்கள் பரவிக்கிடந்துள்ளன.[2] இப்பொருளியல் கருத்துக்கள் சமகால சமூகப்பழக்க வழக்கங்களை பிரதிபலிப்பவையாகவே இருந்தன. இவைகள் மற்ற காலங்களுக்கோ சமூகங்களுக்கோ பொருந்தும் என்றும் கூறமுடியாது [2]

எபிரேயா்கள்[தொகு]

கி.மு 2500ஆம் ஆண்டு வாக்கில் இருந்த பழமையான நாகரிகத்தில் வாழ்ந்திருந்த எபிரேயர்கள் ( Hebrews) மற்றும் யூதர்கள் காலந்தொட்டே பொருளாதார அமைப்புகள் இருந்துள்ளன. மோசசு வகுத்த சட்டத்தின்படி அதிக வட்டிவாங்குவது தடை செய்யப்பட்டிருந்தது. அந்நியருக்கு கடன் வழங்குவதும், வறுமையில் வாழ்வோர், வசதி இல்லாதவர்கள் கடன் வாங்குவதால், அவர்களிடமிருந்து வட்டி வாங்குவதும் தடைசெய்யப்பட்டிருந்தது.[1] பொருட்களை அதிகவிலைக்கு விற்பதும் இலாபம் ஈட்டுவதற்காக பொருள்களின் விலையை ஏற்றுவதும், முற்றுரிமை வணிகம் (Monopoly) செய்வதும் தடைசெய்யப்பட்டிருந்தன. நியாயமான விலை என்பது சாியான எடை, சரியான விலை, நியாயமான இலாபத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பணம் என்னும் கோட்பாடு அப்பொழுது உருவாக்கப்படவில்லை. பண்டமாற்று தங்கத்தின் அடிப்படையிலேயே நடந்து வந்தது. செல்வம் என்பது ஒருவன் தாம் கொண்டிருக்கும் வேளாண் நிலம், அடிமைகளின் எண்ணிக்கை, கைவசம் இருக்கும் தங்கம் போன்ற உலோகங்களின் அளவுகளின் அடிப்படையில் அமையும். தேவைக்கு அதிகமான தானியங்கள் மட்டும் சந்தைப்படுத்தப்பட்டன. வரிவிதிப்பு என்பது அக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

கிரேக்கர்கள்[தொகு]

பொருளியல் கோட்பாடுகளுக்கு முதன்முதலில் ஒருவடிவம் கிடைத்தது கிரேக்கர்கள் காலத்தில்தான் [2] இக்கோட்பாடுகளின் வளர்ச்சிக்கு கிரேக்கர்களின் பங்கு பெரிதாக இருக்கவில்லை.

பிளேட்டோ[தொகு]

பிளேட்டோ

தத்துவ அறிஞர் பிளேட்டோ நீதிநெறி மற்றும் அரசியல் பிரிவுகளின் ஒரு அங்கமாக பொருளியலைக் குறிப்பிட்டுள்ளார்.[2] பிளாட்டோ எந்த ஒரு தனி மனிதனும் தானாக தன்னிறைவு அடைய முடியாது, தனி மனிதர்களுடைய தேவையை நிறைவு செய்வதற்காக நாடு உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்.[2] இவர் வேலைப் பகுப்பைப் (Division of Labour) பற்றியும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு தொழிலையும் வேறு வேறு பிரிவினர் செய்ய வேண்டுமென்றும் இதனால் அனைத்துப் பொருட்களும் ஏராளமாகவும் தரமானதாகவும் மலிவான செலவில் செய்ய முடியும் என்றும் குறிப்பிடுகிறார்.[2] மக்கள் தொகை பற்றியும் குறிப்பிடுகிறார்: நாட்டிற்கு உகந்த மக்கள் தொகையையும் அளவிட்டுள்ளார் அப்பொழுதுதான் ஒவ்வொருவரும் தன்னிறைவு அடையமுடியும் என்று குறிப்பிடுகிறார்.[2] பண்டமாற்று முறைக்கு பணம் ஒருகருவி என்பதை அறிந்திருந்தார். வேளாண்குடிகளும், கைவினைஞர்கள் மட்டும் சொத்து வைத்துக்கொள்ளலாம் என்றும், உன்னதநிலையில் அனைத்து சொத்துகளும் பொதுவில் இருப்பது தான் சிறந்தது என்றும் அறிவுறுத்துகிறார். ஆண் பெண் இருவரும் ஒரே மாதிரியான கல்வி கற்க வேண்டும் என்று கூறுகிறார்.

அாிஸ்டாட்டில்[தொகு]

அாிஸ்டாட்டில்

அாிஸ்டாட்டில்தான் (பிளாட்டோவின் மாணவர்) முதலில் பொருளியல் ஒரு அறிவியலாக வளர்வதற்கு சிறிய அடித்தளமிட்டவர். பிளாட்டோவைப் போலல்லாமல் சொத்துக்கள் தனியார் வசம் இருப்பது நல்லது என்று கூறுகிறார்.[3] சொத்து தனியார் வசமிருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் எனவும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் கூறுகிறார். தவறினால் வருமை அதிகமாகி அதனால் கலகம் வரலாம், குற்றம் புரிவது அதிகமாகும் என்று கூறிகின்றார். சொத்து வைத்திருப்பவர்கள் அறங்காவலர் போல செயல்பட வேண்டும் என்றும் கூறுகின்றார். குடும்ப மேலாண்மையைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது பொருளியல் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப மேலாண்மையில் இரண்டு கூறுகள் உள்ளன. அவை பொருளியல் (Economics) மற்றும் ‘ கிரிமாடிச்டிகிச்’(Chrematstics) ஆகும். ‘பொருளியல்’ என்பது ‘தேவைகளை நிறைவு செய்வதற்காக’ செல்வத்தை நுகர்வது பற்றியது ‘கிரிமாடிச்டிகிச்’ என்பது பணத்தின் மூலமோ அல்லது பரிமாற்றத்தின் மூலமோ சொத்து சேர்ப்பது குறித்ததாகும். பரிமாற்றம் இரண்டு வகையில் நிகழும். அவை இயற்கையானது மற்றும் இயற்கைக்கு மாறானது ஆகும். தமது தேவையை நிறைவு செய்வதற்காக செய்யப்படும் பரிமாற்றம் இயற்கையானது என்றும், சொத்து சேர்ப்பதற்காக செய்யப்படும் பரிமாற்றம் இயற்கைக்கு மாறனது என்றும் குறிப்பிடுகிறார்.[3] இவரின் இக்கருத்துக்கள்தான், பொருட்களுக்கு இரண்டு வகைப்பயன் உண்டு: நுகர்வதற்கு அல்லது பரிமாறிக் கொள்வதற்கு, என்றைய பிற்காலக் கருத்திற்கு அடித்தளம் இட்டுள்ளது. மேலும் இவர் பணம் என்பது என்ன, அது என்ன செய்யும் என்று விளக்குகிறார். பண்டமாற்று ஊடகமாக (Medium of Exchange ) இருப்பது தான் பணத்தின் முக்கியப் பணி என்பதைக் கண்டுணர்கிறார். வட்டி வாங்கப்படுவதை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் பணத்திற்குப் பண்டமாற்று ஊடகமாக இருப்பது தான் பயன் என்று தெளிவாக்குகின்றார். முற்றுரிமை (Monopoly ) பற்றியும் கூறி இது தவறு என்றும் வாதிடுகின்றார்.[1]

உரோமானியார்கள்[தொகு]

உரோமானியர்கள் பெரும்பாலும் கிரேக்கர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தனர். சிசரோ, செனிகர், பிளினி போன்ற தத்துவ அறிஞர்கள் வேளாண் தொழிலின் பெருமையைக் கூறினர். வட்டி வாங்குவதற்கு கடும் எதிர்ப்பையையும் தெரிவித்துள்ளனர். முதலில் பண்ட மாற்று முறை நிலவி வந்திருந்தாலும் பிற்பாடு நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பணம் ஒரு மாற்று ஊடகம் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். வேலைப் பகுப்பின் பலனை உணர்ந்து இதனை அறிவுறுத்தி வந்தனர். அதிக விலையை எதிர்நோக்கி பொருள்களை விற்காமல் வைத்திருந்த வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சொத்துரிமை தனியார் வசம் இருப்பது நல்லது என்று ஏற்றுக்கொண்டனர்.[1]

இடைக்காலம்[தொகு]

இடைக்காலம் என்பது எது என்பதில் வேறுபட்ட கருத்து இருந்தாலும் பொதுவாக உரோமானியப் பேரரசு வீழ்ந்ததற்கும் (கிபி 476), கிபி 13 அல்லது 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என்று பெரும்பாலோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இக்காலத்தில் கருத்து சுதந்திரம் இருந்துள்ளது. பண்டமாற்று முறை அமுலில் இருந்தது. லாபம் ஈட்டுவது தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த காலத்தில் புனித தாமசு அக்கினோசு மற்றும் நிக்கோலசு ஒரிச்மி என்னும் இருவரும் பொருளியல் சிந்தனை வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர்.[3]

தாமசு அகினோசு[தொகு]

ஒரு பொருளின் பயனைப் பொருத்து அதன் விலை அமையும் என்று தாமசு அகினோசு தெரிவித்தார். இவர் “நியாயவிலை” என்று இதற்குப்பெயரிட்டு, இது பொருளின் மதிப்பை பிரதிபலிக்கும் என்றும் கூறினார். தரமில்லாத பொருட்களை விற்பது ஏமாற்று வேலை என்றும் விலையை அங்காடி நிர்ணயம் செய்வது இல்லை என்றும் விலை என்பது அறுதியானது மற்றும் இடுபொருட்களின் விலையைச் சார்ந்தது என்றும் குறிப்பிடுகிறார். செல்வம் சேர்ப்பதற்காக வட்டி வாங்குவது தவிர்க்கப்பட வேண்டிய செயல் என்றும் கூறுகிறார்.[4] தனியாரிடம் சொத்துரிமை இருப்பதை அனுமதிக்கின்றார். வாணிகம் ஒரு தவிர்க்க முடியாத கொடுஞ்செயல் எனவும், வாணிகம் பொதுமக்கள் நன்மைக்காக மட்டும் செய்யப்பட வேண்டும் எனவும், வளங்கள் பலவாறாக பல இடங்களில் பிரிந்து கிடப்பதால் வாணிகம் தவிர்க்க இயலாத செயல் என்றும் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறுகின்றார். பொருள் ஈட்டும் செயல் நன்கு நடைபெற வேலைப்பகுப்பு ஆற்ற வேண்டிய செயல் என்று கூறுகிறார். அரசு ஒரு தனியார் பொருளாதார அமைப்பைப் போன்றது எனவும் அரசின் வருவாய்க்கான ஆதாரங்களையும் குறிப்பிடுகின்றார்.

நிக்கோலி ஓரிசுமி[தொகு]

இவர் பொருளாதாரத்தின் பணம் தொடர்பான கோட்பாடுகளை விவரித்துள்ளார். பணம் எவ்வாறு தோன்றியது, அதன் தன்மை என்ன என்பது குறித்தும் கூறுகிறார். தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்த நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தார். நாணயம் அச்சிடும் வேலையை அரசுதான் செய்ய வேண்டும் எனவும் நாணையத்தை அச்சிடுவதில் ஒரு வழிமுறையை உருவாக்கி அதனைத் தொடர்ச்சியாக அனுசரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்[4]

வணிகவாதம்[தொகு]

வணிகவாதம் (Mercantalism) என்னும் கோட்பாடு ஐரோப்பிய நாடுகளில் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் இருந்தது ஏறக்குறைய 300 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்த இம்முறை ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வணிக வாதம் உருவாவதற்கு பல்வேறு பொருளாதார, அரசியல், மத, கலாச்சாரம் மற்றும் அறிவியல் காரணங்கள் இருந்தன. இதுவரை தனியாக, அதிகமாக வெளியார் தொடர்பு இல்லாமல் இருந்த பொருளாதாரங்கள் தற்பொழுது தொடர்பு கொள்ளத் துவங்கின. வேளாண்மை இருந்த இடத்தை தற்பொழுது தொழிற்சாலைகள் பிடிக்கத் தொடங்கின. வாணிகம் ஒரு முக்கியமான அம்சமாக மாறியது. வாணிகம் வளர்ந்ததால் போக்குவரத்து, வேளாண்மை மற்றும் மக்கள் தொகை ஆகியனவும் வளரத்தொடங்கின.[1] இக்காலகட்டத்தின் இறுதியில் நாட்டுப்பற்று வளர்ந்து பிரிட்டன், பிரான்சு மற்றும் இசுபெயின் போன்ற பலம் வாய்ந்த நாடுகள் உருவாகின. நாடுகளின் வலிமையை அதிகப்படுத்த வணிகவாத ஆதரவாளர்கள் பொதுமக்களின் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தத் துவங்கினர். ஐரோப்பாவில் பரவிய ‘மறுமலர்ச்சி இயக்கம், ’ மதங்களின் முழுமையான ஆதிக்கத்தை மறுதலித்தது இதனால் இதுகாறும் வழங்கி வந்த, மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த மதங்களின் அறிவுரைகள் முக்கியதுவத்தை இழக்க ஆரம்பித்தன. புது அறிவியல் கண்டுபிடிப்புகளும், புதிய கடல் பயணங்களும் புதிய நாடுகள் கண்டுபிடிப்பும் மக்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.[4]

முக்கிய அம்சங்கள்[தொகு]

நாட்டை வளப்படுத்துவதும் அதனால் பலப்படுத்துவதும் தான் இம்முறையின் முக்கிய குறிகோள். ஒரு நாட்டின் வளம் அல்லது செல்வம் அந்நாடு கைவசம் வைத்திருக்கும் தங்கம் போன்ற விலைமதிப்பான உலோகங்களின் மொத்த அளவைப் பொருத்திருக்கிறது என்று கூறுகிறது இம்முறை. ஆதலால் வெளிநாடுகளிலிருந்து இயன்ற அளவு தங்கம் போன்ற உலோகங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெளிநாட்டு வாணிகத்தில் இயன்ற அளவு இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரித்து வளத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடும் தங்கத்தை தமது நாட்டிற்கு ஈட்டுவதில் போட்டி போட்டுக்கொண்டன ஆனால் அவரவர் நாடு போட்டியில் தோற்று விடக்கூடாது என்பதில் குறிப்பாக இருந்தனர்.[4]

வாணிகம் செய்தலும், தொழில் புரிவதும் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. இவைகளை நெறிப்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கமுடியும் என்று நம்பினர். பொருட்கள் உற்பத்திக்கும் வாணிகம் செய்வதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று நம்பினர். நாட்டின் படைபலத்தையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க அதிக மக்கள்தொகை தேவை என்று கருதி மக்கள் தொகை அதிகரிப்பதை ஊக்கப்படுத்தினர்.[4] நாட்டின் அனைத்து இயற்கை வளங்களையும் நன்கு பயன்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று வணிகவாதிகள் வலியுறுத்தினர். புதிய நாடுகளை அடிமைபடுத்தி அங்கிருக்கும் இடுபொருகளை இங்கு கொண்டுவந்து மதிப்புக்கூட்டி அதிகவிலைக்கு அவருகளுக்கே ஏற்றுமதி செய்யும் கொள்கையையும் கடைப்பிடித்தனர்.[5] உற்பத்திக்காரணிகளாக நிலம், உழைப்பவர் மற்றும் மூலதனம் என்பனவற்றை கண்டுணர்ந்தனர். உள்நாட்டு தொழில்கள் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி அதற்கு தேவையான சட்டங்கள் இயற்றவும் அறிவுருத்தினர் ஆன்டேனியோ சேரா, தாமசு மன், ஆன்டோனியோ டி மான்ட்செரியன், பிலிப் வான் கார்நிக் போன்ற அறிஞர்கள் வணிகவாதத்தை முன்வைத்தவைத்தவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

பிசியோகிராட் கொள்கைகள் (Physiocrat)[தொகு]

வணிகவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உருவாக்கிய கருத்து இது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த பிரன்சுவா குவாச்நெ (Francis Quesnay), ஜாகஸ் டர்காட் (Anne Robert Jacques Turgot), டியுபான்ட் டி நெமூசு (Pierre samuel du Pant de Nemours) ஆகியோா் இக்கருத்துப்பள்ளியின் முக்கிய மாணவா்கள் ஆவா். இவா்கள் இயற்கையின் வழி (Natural order) அல்லது இயற்கையின் விதிக்கு (Natural law) ஏற்புடைய நடைமுறைகள் தான் சிறந்தது என்னும் எண்ணம் கொண்டவா்கள். இதன் மூலம் பொருளை உருவாக்கி மற்றவா்களிடம் பாிமாற்றம் செய்து கொள்வது நன்மை பயக்கும். ஆதலால் தடையில்லா வாணிபம்தான் சிறந்தது. அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் சொற்ப அளவிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தினை “லெ சே பா (Laissez faire) என்று கூறினாா்கள்[4] வணிகவாதக் கொள்கையான தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இவா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேளாண் உற்பத்தியைப் பெருக்கி அதன்மூலம் வணிகம் செய்து செல்வத்தை பெருக்குவதுதான் இயற்கையோடு இசைந்த சிறந்த வழி என்று வாதிட்டனா். மேலும் தடையில்லா வாணிகம் தான் சிறந்தது என்று வாதிட்டனர். இக்கருத்துப்ப்பள்ளியைச்சேர்ந்த டர்காட் என்னும் அறிஞர்தன் முதன் முதலில் குறைந்து செல் விளைவு விதியை (Law of Diminishing Marginal Returns ) விளக்கியவர் .[5]

பொருளியல் அட்டவணை (Tableu Economique) என்னும் அட்டவணையை உருவாக்கி வேளாண் தொழிலில் வரும் உபாி எவ்வாறு மற்ற பிாிவினருக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது என்பதை விளக்கினாா்கள்.[4] மேலும் இப்பொருளியல் அட்டவணை பிற்காலத்தில் பேரினப் பொருளியல் தோன்றுவதற்கு ஒரு ஆரம்பகட்ட நடிவடிக்கையாக கருதப்படுகிறது.[5] இவ்வாறு இயற்கை வழி வாழ்வது சமூகத்தில் சமச்சீா் நிலையை ஏற்படுத்தும் [4]. பிசியோகிராட்டுவாதிகள் பணத்திற்கும் மூலதனத்திற்கும் வேற்றுமையைக் கண்டுணா்ந்தனா். மூலதனம் சேமிப்பின் மீது விளைவது ஆகவே மூலதனத்திற்கு வட்டி பெறுவதில் தவறு இல்லை என்று வாதிட்டனா். அதுபோலவே மக்கள்தொகை பெருக்கத்தையும் விரும்பினா் ஏனென்றால் இது நுகா்ச்சியை அதிகாிக்கும். இதனால் உற்பத்தியும் செல்வமும் வளர வாய்ப்புண்டு என்று வாதிட்டனா். தனியாா் சொத்துாிமையில் நம்பிக்கை கொண்டவா்கள், வெளிநாடுகளுடன் வாணிகம் செய்யும் பொழுது உள்நாட்டில் கிடைக்காததையோ அல்லது உள்நாட்டில் உபாியாக உள்ள பொருட்களை மட்டுமே பாிமாற்றம் செய்யவேண்டும் என்று கூறினா்.[1]

ஆடம் சுமித்து[தொகு]

ஆடம் சுமித்து

ஆடம் சுமித்து மற்றும் அவரைத் தொடா்ந்து வந்த ரிகாா்டோ, மால்தசு, ஜே எச் மில் ஆகிய அறிஞா்கள் உருவாக்கிய பொருளியல் கருத்துரு செவ்வியல் பொருளாதாரம் ( Classical Economics) என்று அழைக்கப்பட்டது. இந்த செவ்வியல் பொருளியல் கருத்துப் பள்ளியின் அம்சங்கள் பின்வருமாறு. அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் சொற்பமாகவே (laissez faire) இருக்க வேண்டும். அங்காடி வழியில் நடைபெறும் நிறைவுப் போட்டி (Perfect Competetion) தான் சிறந்த அனுகுமுறை. எவ்வளவு உற்பத்தி செய்வது, எப்படி பரிமாற்றம் செய்வது மேலும் மற்ற உற்பத்திக் காரணிகளுக்கு எப்படி வினியோகம் நடைபெறும் என்பதை அங்காடி நடவடிக்கைகள் தீர்மானிக்க வேண்டும். இப்பொருளியல் கருத்துக்கள் மூலம் உள் நாட்டிலும், நாடுகளுக்கிடையிலும் தடையில்லா வாணிபம் நல் விளைவுகளை விளைவிக்கும், அரசு தலையிடுவது தவிக்கப்பட வேண்டும். நாட்டில் அனைவருக்கும் வேலை என்பது நடைபெறும் என்றும், இந்த நிலையிலிருந்து பொருளாதாரம் விலகும் பொழுது அது தானாகவே அனைவருக்கும் வேலை என்ற நிலையை எய்த சரிக்கட்டிக் கொள்ளும். ஒவ்வொருவருடைய நலமும் அக்கறையும் மற்றவருடையதுடன் சார்ந்தும் இணக்கமானதாகவே இருக்கும், பொருளியல் விதிகள் அனைவருக்கும் அனைத்துக்கும் பொருந்துவையாகவும், பொதுவாகவும் இருக்கும் என்று இவர்கள் நம்பினர். பொருளாதார வளர்ச்சி (Growth) என்னும் கருத்தைக்குறித்து முதலில் சிந்தித்தவர்கள் இந்த செம்மை பொருளியல் கருத்துருவாதிகளே. அது மட்டுமல்லாமல் பேரினப் பொருளியலுக்கும் (Macro Economics) அடித்தளம் இட்டவர்கள் இவர்களே. ஆடம் சுமித்தின் ’நாடுகளின் செல்வம்’ என்னும் நூல், பெரும்பாலும் இந்தக் கருத்துக்கள் அனைத்தயும் உள்ளடக்கியிருப்பதால் அதை செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தின் மூல நூல் என்று அறிஞர்கள் வருணிக்கின்றார்கள்

"நாடுகளின் செல்வம் அட்டைப்படம், 1776 லண்டன் பதிப்பு

[5]

இவர்களில் முக்கியமானவர் ஆடம் சுமித்து. இவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அடிப்படை சுயநலம் என்பது இயற்கை. இதனடிப்படையில் சுதந்திரமாக உழைத்து, சொத்து சேர்ப்பது மற்றும் தம் தேவைகளை நிறைவு செய்ய முயற்சி செய்வதும் இயற்கை. இதில் மற்றவர் துணையும் தேவை. தனி மனிதனை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அவன் தானும் செழித்து வாழ முயற்சிசெய்து,மற்றவர்களுக்கும் உதவி, முழுசமுதாயம் வளர இது ஏதுவாகும் என்று கருதினர். இதை ‘புலப்படாத கை’ (invisible hand) என்ற கருத்துமூலம் விளக்குகிறார். தனிமனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை தவிர மற்றவைகளில் அரசு தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர் கொள்கை[6]

இயற்கையும் உகந்ததும்[தொகு]

ஆடம்சுமித் அவா்கள் மனிதனுடைய பொருளாதார நடவடிக்கைகள் தானாகவே இயற்கையாகவும் தமக்கு உகந்ததை நோக்கியே செயல்படும் என்று கூறுகிறார். வேலைப்பகுப்பு (Division of labour) என்பதும் மனிதனின் இயற்கை உணர்வின் அடிப்படையில் தோன்றியதே.இதனால் உற்பத்தி பெறுகும் தான் சிறப்பாக செய்யும் தொழிலைத் தாம் செய்து அதன் பலனை மற்றவர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்வது இயற்கை தான்.[6] அது போலவே பணம், மூலதனம் பொருள்களுக்கான ‘தேவை’ மற்றும் ‘அளிப்பு’ (Demand and Supply) முதலிய பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் இயற்கையானதாக இருக்கும், உகந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாட்டில் பொருட்கள் தேவைக்கு ஏற்பவே உற்பத்தி செய்யப்படும். தேவை குறைந்தால் உற்பத்தியும் குறையும். தேவை அதிகரித்தால் உற்பத்தியும் அதிகரிக்கும். ஆகவே ‘தேவை’யும் ‘அளிப்பு’ம் (Demand and Supply) எப்பொழுதும் சமச்சீர் நிலையை அடையவே முயற்சிக்கும்[5] பொருளாதார வளர்ச்சி (Economic Growth), குறித்தும் ஆடம் சுமித் கூறிய கருத்துக்கள் இத்தலைபுகளின் பிற்கால வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தன.

தாமசு இராபர்ட் மால்தசு[தொகு]

மக்கள் தொகைபற்றி மால்தசு இரண்டு பொதுக்கொள்கைகளைக் கூறுகிறார். உணவு உற்பத்தி மனித வாழ்விற்கு இன்றியமையாதது. அது குறைந்து செல் விளைவு விதியை (Law of Diminishing Returns) பின்பற்றியிருக்கும். இரண்டாவதாக ஆண் பெண் பால் ஈர்ப்பு அவசியமானது. அது அவர் காலத்தில் இருந்தது போலவே எப்போதும் தொடரும். ஆதலால் மக்கள் தொகையின் அதிகரிக்கும் சக்தி அளவிடமுடியாத அளவு பூமியின் உணவு உற்பத்தி செய்யும் திறனை விடப்பெரியது என்றும் ஆதலால் கட்டுப்படுத்தாத மக்கள்தொகை ‘மடிப்பு வளர்’ வீதத்தில் (Geometric Progression) பெருகும் எனவும், மனித இனம் பிழைத்திருக்க இன்றியமையாத உணவுப் பொருள் வளர்ச்சி “ கூட்டு வளர்” வீதத்தில் (Arithmetic Progression) பெருகும் எனவும் தெரிவிக்கின்றார்.[6] 1,2,3,4,5, என்று வளர்வது ‘கூட்டு வளர் வீதம்’ எனவும் 1,2,4,8,16 என்று வளர்வது மடிப்பு ‘வளர்வீதம்’. இதனால் சமச்சீர் நிலை குலைந்து பசி, பட்டினி,வறட்சி,நோய்,போர் போன்ற இடர்களால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்படும் என்று கூறுகிறார். இத்தகைய இயற்கைத்தடையை நேர்நிலையான தடைகள் (Positive Checks) என்று குறிப்பிடுகின்றார். இது போன்ற இயற்கையின் நேர்நிலைத்தடைகளைத் தவிர்க்கும் வண்ணம் மனிதன் முன்னெச்சரிக்கைத் தடைகளை (Preventive Checks) கடைப்பிடிக்கலாம் என்றும் கூறுகின்றார். மலட்டுத் தன்மை, கருத்தடை போன்ற மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் தடைகள் முன்னெச்சரிக்கைத் தடைகளுக்குள் அடங்கும்.[6]

டேவிட்ரிக்கார்டோ - பகிர்ந்தளிப்பது[தொகு]

நாட்டில் உற்பத்தியாகும் செல்வத்தை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ரிக்கார்டோவின் கருத்துத்தான் அவருடைய முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள்யாவும் உழைப்பு, இயந்திரங்கள் மற்றும் மூலதனம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து ஈடுபடுத்துவதால் விளையும் பயன்கள் எனவும், இவையாவும் சமுதாயத்தின் மூன்று பிரிவினர்களான நில உடமையாளர்கள், மூலதனம் செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடையே பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறுகிறார். அரசியல் பொருளாதாரத்தின் முக்கியப்பணி இப்பகிர்வை வரையறை செய்வது தான் என்றும் கூறுகிறார்[5] இதன் மூலம் ரிகார்டோ விலை விதிக்கும் முறையை செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் முறையிலும் ஈடுபடுத்துகின்றார்.

வாரம்[தொகு]

நிலத்தைப் பயன்படுத்துவதற்கு உடமையாளருக்குத் தரப்படும் வெகுமதி வாரம் எனப்படும். தரமான நிலங்களின் உற்பத்திக்கும் தரமில்லாத நிலத்தின் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசம் ‘நிகரவித்தியாசம்’ என்வும் இதுவே வாரத்திற்கு அடிப்படை என்றும் ரிக்கார்டோ கூறுகிறார். இது நிலத்தின் சுயமானதும், அழிக்க முடியாததுமான ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு நில உடமையாளருக்கு வழங்கப்படும் ஊதியம் அல்லது வாரம் எனப்படும்[6]

ஊதியம்[தொகு]

உழைப்பாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் இரண்டு வகைப்படும். இயற்கை ஊதியம் என்பது தங்கள் இனத்தின் எண்ணிக்கை குறையாமலும் அதிகரிக்காமலும் பிழைக்கவைத்துக் காப்பாற்றக் கூடிய அளவு (Subsistance level) இருக்கும்.[6] அங்காடி ஊதியம் என்பது ஏறி இறங்கும் தன்மையுடையது. அளிப்பு, தேவையைப் பொருத்து குறுகிய காலத்தில் நிர்ணயம் செய்யப்படும். நீண்ட காலத்தில் அங்காடி ஊதியமும் இயற்கை ஊதியமும் உயரும் வாய்ப்பு அதிகம் என்றும் இரண்டும் சமச்சீர்நிலையை நோக்கி நகரும் எனவும் குறிப்பிடுகின்றார். அங்காடி ஊதியம் இயற்கை ஊதியத்தை விட அதிகமாக இருந்தால் நீண்ட காலத்தில் தொழிலாளர் எண்ணிக்கை பெருகி அங்காடி ஊதியத்திற்கும் இயற்கை ஊதியத்திற்கும் இடைவெளி குறைய வாய்ப்பு உள்ளது என்றும், இயற்கை ஊதியம் அதிகமாக இருந்து அங்காடி ஊதியம் குறைவாக இருந்தால், உணவு பற்றாக்குறையால் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து அங்காடி ஊதியம் உயர்ந்து இடைவெளி குறைய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இரண்டும் சமன் நிலையை நோக்கியே நகரும் என்று கூறுகின்றார்.[6]

ஜே.பி.சேய்[தொகு]

இவர் கூற்றுப்படி, ஒருநாட்டின் செல்வத்தைக் குறித்துப் பேசுவது தான் அரசியல் பொருளாதாரம் என்பது. இவர் பொருளியலை, உற்பத்தி,, வினியோகம் மற்றும் நுகர்ச்சி என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்.[7] நாட்டின் செல்வம், உற்பத்திக் காரணிகளுக்கு, வாரம், ஊதியம் மற்றும் லாபம் என்று பிரித்து வழங்கப்படும்.[7] தொழிலைத் துவங்குபவரை முதலீடு செய்பவரிடமிருந்து ‘சேய்’ வேறுபடுத்திக் காட்டினார். தொழிலைத் துவங்குபவரை ‘தொழில் முனைவர்’ ( Entrepreneur) என்று இவர் குறிப்பிட்டது இன்றளவும் நிலைத்து விட்டது. பொருளியல் இயற்பியலைப் போன்று ஒரு அறிவியல் பிரிவு என்றும், பொருளியல் விதிகள் அறிவியல் விதிகள் போன்று எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் என்றும் எடுத்துரைத்தார். தொழில்காரணிகளில், தொழில் முனைவுத்துவம் தான் மிகவும் முக்கியமான காரணி. ஏனென்றால் இதுதான் அனைத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி செய்து நுகா்வோர்களுக்கு அளிக்கிறது என்றார். பொருளாதாரத்தில் சுரண்டல் என்பது நடவாது, இந்த அமைப்பு தானாக சீரடைந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

‘சேய்’ ‘அளிப்பு’ தானாகவே தேவையான அளவை உருவாக்கிக் கொள்ளும் (‘Supply creates its own demand’) என்னும் விளக்கத்தை முன்வைத்தார். இதனால் பொருளாதாரத்தில் வேலையில்லா நிலையும் இருக்க வழியில்லை தேவையில்லாமல் அதிகமாக உற்பத்தி நடைபெற்றது என்ற நிலையும் வராது என்பது அவர் கருத்து. இவருடைய இந்த விதி சொற்ப தலையீடு (laissez faire) என்னும் கொள்கைக்கு வலுவவூட்டியது. அது போல கட்டுப்பாடில்லா வாணிகம் (Free Trade) என்னும் கருத்திற்கும் இது வலுசோ்த்தது.[7] பொருளாதாரம் தானாகவே சுயமாக சமச்சீர் நிலையை அடையுமென்றால் தேவையில்லாத கட்டுப்பாடுகள் எதற்கு என்பது இவர் வாதம்

ஜேம்சுமில்[தொகு]

அரசியல் பொருளாதாரத்தை, உற்பத்தியை வரையறுக்கும் விதிகள், வினியோகத்தை வரையறுக்கும் விதிகள், பொருள்களைப் பாிமாற்றம் செய்யும் முறைகளை வரையறைக்கும் விதிகள் மற்றும் நுகர்ச்சியை வரையறுக்கும் விதிகள் என்று நான்காகப் பிரித்தார். உழைப்பவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்பது மக்கள் தொகைக்கும், நாட்டில் உள்ள மூலதன அளவிற்கும் உள்ள விகிதத்தைப் பொறுத்தது என்று கூறினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு வழி காண்பது தான் மிகப்பெறிய சவாலாக இருக்கும் என்றார்.

பிரெடிரிக் பாசுடியாட்[தொகு]

நம்பிக்கை இன்மைதான் மிகப்பெரிய தீவினை என்றும் அது சமூகம் தானாக சுயமாக நல்ல முறையில் இயங்கும் என்ற எண்ணத்தை முழுவதுமாக அழித்து விடும் என்று கூறுகிறார். சுதந்திரமும், சொத்துரிமையும் சுயமாக இயங்கினால் எல்லாவற்றிலும் மேம்பாடு இயற்கையாக வரும் என்று நம்பினார். மேலும் இவர் பயன்பாட்டில் இரண்டு வகை உள்ளது,[7] முதலில் இயற்கை அளித்த விலையில்லா பொருள்களின் பயன்பாடு, ஆதலால் இதற்கு மதிப்பு இல்லை எனவும், இரண்டாவதாக மனிதஉழைப்பால் வரும் பொருள்களில் உள்ள பயன்பாடு இதற்கு மதிப்பு உண்டு, விலை அங்காடியில் கொடுக்கப்பட வேண்டும் என்னும் மதிப்புக் கோட்பாட்டை விளக்கினார். மேலும் இயற்கை அளித்த விலையில்லாப் பொருட்களைப் பயன் படுத்தினால் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறினார் [7]. மக்கள் தொகை பெருக்கத்தைப் பொறுத்த வரை மக்களுக்கு இயற்கையாகவே பொறுப்பு உள்ளது ஆதலால் சுயமாகவே இவர்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவார்கள் என்று கூறினார். மேலும் இவர் கட்டுப்பாடில்லாத வாணிகம் (Free trade) மற்றும் சொற்ப தலையீடு (Laissez faire) கொள்கைகளை ஆதரித்தார். பாதுகாப்பு கொள்கையும் (Protectionism), பொதுவுடைமைக் கொள்கையும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார் [7]

பொதுவுடமைத் திறனாய்வாளர்கள், சிசுமாண்டி[தொகு]

செவ்வியல் பொருளாதார வாதத்தை பொதுவுடைமைத் திறனாய்வாளர்கள் மறுதலித்தனர். இவர்களில் சிசுமாணடி முக்கியமானவர். இவர் செவ்வியல் பொருளாதாரவாதிகள் கூறியது போல் பொருளியல் நாட்டின் செல்வத்தைக் குறித்த விசாரணை அல்ல அது மக்களின் நல்வாழ்வு குறித்தது என்றார். செவ்வியல்வாதிகளைப் போலல்லாமல் உற்பத்தியை விட வினியோகம் முக்கியம் என்று கூறினாா். செவ்வியல் வாதிகள், உற்பத்தியும் தேவையும் சுயமாகவே சீரடையும் என்று நம்பினா். ஆதலால் அதிக உற்பத்தி என்பது நாட்டின் வளமையின் அறிகுறி என்று நம்பினாா்கள். ஆனால் சிசுமாண்டி இது நடவாது என்றும் இது ஓரு தீவினை என்றும் வாதிட்டாா். உழைப்பவா்களும் செல்வந்தா்களும் ஒன்றாக இருக்க முடியாது. அதிக உற்பத்தியினால் வரும் லாபம் உழைப்பவா்களுக்கு ஊதியமாக வராது தொழில் முனைபவா்களுக்கு லாபமாக மட்டுமே போய்ச் சேரும் என்று வாதிட்டாா். செவ்வியல் வாதிகள், இயந்திரமயமாக்கல் நன்மை தரும். இதனால் உற்பத்தி அதாிகாிக்கும், விலைகள் வீழ்ச்சி அடையும் ஆதலால் தேவைகள் அதிகாித்து உழைப்பவா்களுக்கும் தேவை அதிகாித்து, வேலைவாய்ப்பு பெருகும். அதனால் இயந்திரமயமாக்கலால் வேலை இழந்தவருக்கு தற்பொழுது வேலைகிடைக்கும் என்று நம்பினா். ஆனால் சிசுமாண்டி இயந்திரமயமாக்கலினால் வேலைவாய்ப்பு குறையும், நுகா்வும் குறைந்து உற்பத்தியும் குறையும் என்று வாதிட்டாா்.[6] செயின்ட் சைமன் என்று மற்றொரு அறிஞா், இவருக்கு ஒத்த கருத்துக்களை உடையவா். தனியாா் சொத்துாிமை உகந்துது அல்ல பொதுவுடைமைதான் சிறந்தது என்று வாதிட்டுள்ளாா்

செவ்வியல் பொருளாதாரம் மீண்டும் வலியுறுத்தப்படுதல்[தொகு]

ஜான் சுடுவாா்டு மில்[தொகு]

ஒவ்வொரு தனிமனித நடவடிக்கைக்குப் பின்பும் சுயநலம் உள்ளது, இதுதான் வாழ்வின் அடிப்படை, ஆனால் பொதுநலத்திற்கு எதிரானது என்று கூறமுடியாது இரண்டும் அரவணைத்துப் போகும் இதுதான் இயற்கை என்று கூறி இதனடிப்படையில் தான் நாம் பொருளியலை அணுக வேண்டும் என்று ஜான் சுடுவாா்டுமில் கூறுகின்றாா். பொருளியல் என்பது ஒரு நாட்டின் வளத்தையும், பொருள்களின் உற்பத்தி மற்றும் வினியோகத்தின் விதிமுறைகளைக் குறித்துப் பேசும் எனவும் குறிப்பிட்டாா். மில் உழைப்பும் இயற்கைப் பொருள்களும் இரண்டு முக்கியமான உற்பத்திக் காரணிகள் என்று விளக்கினாா். மேலும் உழைப்பை ஆக்கவளமுடையது (Productive) ஆக்கவளமில்லாதது என்று இரண்டு வகையாகப் பிாிக்கின்றாா். அதேபோல வேலைபகுப்பு முறையும் சிறந்தது என்று கூறுகின்றாா். மக்கள்தொகை கட்டுப்பாடு வேண்டும்.[7] மூலதனம் உழைப்பிற்கு அடுத்த முக்கியமான உற்பத்தி காரணி.[5] ஒரு பொருளின் மதிப்பு உற்பத்திச் செலவை எதிரொளிக்கவில்லை யென்றால் நிரந்தரமாக அப்பொருள் உற்பத்தி செய்யப்படமாட்டாது என்றும் குறிப்பிடுகின்றாா். அதேபோல உற்பத்தியின் அளவு அதிகாிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை விளக்குகிறாா். உழைப்பிற்கு கிடைக்கும் ஊதியம் ‘தேவை’ மற்றும் ‘அளிப்பை’ப் பொருத்து உள்ளது என்றும் மேலும் அது ‘குறைந்த பிழைப்பு நிலை அளவை’ப் பொருத்தும் (Subsistence level) உள்ளது என்றும் குறிப்பிடுகின்றாா். வட்டியும், மூலதனத்தின் ‘தேவை’யையும் ‘அளிப்பை’யும் பொருத்து உள்ளது என்று கூறுகிறாா்.ஜே எச் மில்தான் பன்னாட்டு வாணிபத்தில் எதிர் விழுக்காடு தேவையின் (Reciprocal Demand) முக்கியத்துவத்தை வெளிக்கொணர்ந்தவர். இக்கருவைத்தான் பின்னர் ஆல்பிரட் மார்சல் வடிவ இயலைப் (Geometry) பயன் படுத்தி ‘விலை அறிவிப்பு வளை கோடு (Offer Curve) என்று படமாக்கிக் காட்டினார் [5]

விளிம்பு நிலைப் புரட்சி (Marginal Revolution)[தொகு]

இக்கருத்துப் பள்ளியைச் சாா்ந்தவா்கள் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டவா்கள் மற்றும் அல்லாதவா்கள் என்று இருவகையில் அடங்குவா். முதல்வகையில் அகஸ்டின் கவிா்நட், கோசன் வால்ரசு மற்றும் சிலோன் என்பவர்களும், கணக்கு அடிப்படை அல்லாதவா்கள் ஆஸ்ட்ரியா நாட்டைச் சோ்ந்த காா்ல் மெனகா், வோன்வைசா் மற்றும் போம்-பாவாிக் ஆவா் செவ்வியல் பொருளியலாளா்கள், சராசாி பயனை அளவு கோலாகப் பயன்படுத்தினா். ஆனால் இவா்கள் விளிம்ப நிலை பயனைப் (Marginal utility) பயன்படுத்தினா்.[7]) செவ்வியல் பொருளியல்வாதிகள் ‘உற்பத்தி’, ‘அளிப்பு’ மற்றும் ‘இடுபொருள்களின் மதிப்பு’ ஆகியவற்றை முன்னிறுத்தினர், ஆனால் இவர்கள் நுகர்வு, தேவை மற்றும் பயன் ஆகியவற்றை முன்னிறுத்தினர். இவர்கள் விளம்பு நிலைப் பயன்பாட்டை அறுதியாகப் பயன்படுத்தினர். விளிம்பு நிலை பொருளியல்வாதிகள் கணிதத்தையும் வரிவடிவங்களையும் அதிகமாகப் பயன்படுத்தி பொருளியில் கோட்பாடுகளை விளக்கினார். இவர்கள் நுண்ணினப் பொருளியல் அணுகுமுறையை அனுசரித்தனர். மேலும் இவர்களும் நிறைவுப் போட்டியில் (Perfect Competetion) நம்பிக்கை வைத்திருந்தனர். சொற்ப தலையீடு என்னும் கொள்கையிலும் பொருளாதாரம் சுயமாக சமச்சீரடையும் இயல்பு கொண்டது என்னும் கொள்கையிலும் நம்பிக்கை வைத்திருந்தனர்.

அகசுட்டின் கவுர்நட்[தொகு]

விலைக்கோட்பாட்டை உருவாக்கிய இவரது முக்கியமான பங்களிப்பு. ஒரு பொருளின் தேவை அதன் விலையைப் பொருத்து மாறும் என்பது ஆகும். இவர் பொருளியலில் தேவை வளைகோட்டை (Demand Curve) அறிமுகப்படுத்தினார். அங்காடி என்பது பொருள்கள் வாங்கி விற்கப்படும் இடம் என்னும் பொருளில் பொருளியலில் கூறப்படவில்லை என்றும் வாங்குபவர்களும் விற்பவர்களும் பொருட்களை ஒரு குறிப்பிட்ட விலையில் சுதந்திரமாக வாங்கவும் விற்கவும் ஏதுவான ஒரு அனுமானம் என்று விளக்கினார். இவர் இருமுக முற்றுரிமை (Duopoly) பற்றியும் விளக்கியுள்ளார்.

கார்ல் மார்க்சு[தொகு]

கார்ல் மார்க்சு

கார்ல் மார்க்சுக்கு முன்பு பல பொதுவுடைமை வாதிகள் இருந்தாலும் அவர்கள் பொருளாதார அறிவியல் வாதங்களை தங்களுடைய பொதுவுடைமை கருத்திற்கு கோர்வையாக ஆதரவாகத் தெரிவிக்கவில்லை இதனை மார்க்சு செய்தார். இவருடைய சித்தாந்தம் ‘அறிவியல் பொதுவுடைமை அல்லது மார்க்சியம் என்றழைக்கப்பட்டது.[7] மார்க்சியத்தில் பொருளாதாரக் கருத்துக்கள் மட்டுமின்றி மற்ற சமூக அறிவியல் பிரிவுகளான தத்துவம், அரசியல், வரலாறு போன்றவையும் அடங்கும். இவை ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளதால் ஒன்றை மற்றொன்றிலிருந்து சுலபமாகப் பிரிக்க இயலாது அதனால்தான் மார்க்சியத்திலிருந்து பொருளாதாரத்தை பிரிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. மார்க்சியம் பன்னாட்டிற்கும் பொருந்தும் ஒரு தத்துவம். நாட்டுப்பொதுவுடமை (State Socialism) என்பது ஒரு நாட்டிற்கு மட்டும் பொருந்துவது ஆகும். முதலாளித்துவம் எப்படி படிப்படியாக பொதுவுடைமைக்கு வழிகொடுக்கும் என்பதை மார்க்சியம் விளக்குகிறது. ஊழியர்களுக்கும் உடையவர்களுக்கும் எங்கு மோதல் வந்தாலும் அனைத்து மார்க்சியர்களும் ஒற்றுமையாக இருந்து எதிா்கொள்வர். மார்க்சியம் ஒரு வர்க்கப் போரட்டத்தைக் குறிக்கும் தத்துவம். மார்க்சு முதலில் ஒரு பொருளாதாரத்தில் உற்பத்திக்கான அணுகுமுறை எத்தகையது என்பதில் துவங்குகின்றார். எந்த ஒரு சமூகத்திலும் பொருள்களை உற்பத்தி செய்வது இன்றியமையாதது. இதற்காக சமூகம் பல்வேறு அமைப்புகளை, எப்படி பணிசெய்வது எப்படி வினியோகம் செய்வது பரிமாற்றம் எப்படிச் செய்வது என்பனவற்றை இயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்ளும். இவைகளெல்லாம் இணைந்து தான் உற்பத்திக்கான அணுகுமுறை என்று மார்க்சு குறிப்பிடுகின்றார். அடுத்ததாக மார்க்சு ‘மிகை மதிப்பு’ (Surplus Value) என்னும் கோட்பாட்டை விளக்குகின்றார்.[5] பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் பொழுது ஊழியர்கள் இடும் உழைப்பு இடுபொருட்களை, பொருட்களாக மதிப்புக் கூட்டப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு கூட்டப்பட்ட மதிப்பு, ஊழியர்களின் பிழையுதியத்தைவிட மிகையானது, இதுவே மிகை மதிப்பு என்று கூறப்படுகிறது.[7] சமூகத்தில் உள்ள இந்த மிகை மதிப்பு ஊழியர்களின் உழைப்பால் வந்தது. ஆனால் மற்றவர்க்கத்தினர் இதனைத் தட்டிப்பறிக்கின்றனர். பல அரசியல் பொருளாதார மதக் கோட்பாடுகளும் வரைமுறைகளும் இந்த ‘மிகைமதிப்பை’ச் சுற்றி வந்த வண்ணமே உள்ளன. ஆளும் வர்க்கமே இந்த ‘மிகை மதிப்பை’ வசப்படுத்திக் கொள்கிறது என்றும் மற்ற வர்க்கத்தினர் சுரண்டப்படுகிறார்கள். முதலாளிகள் தொடர்ந்து மூலதனத்தைத் திரட்ட முயற்சிக்கின்றனர். செல்வட்திரட்ச்சி ஒரு மையத்தில் குவியும், சிறிய முதலாளியின் சொத்தைப் பெரிய முதலாளி பறி முதல் செய்கிறான்.[5] இறுதியில் தற்பொழுது உள்ள ஆளும் வர்க்கத்தை பிறிதொரு ஆளும் வர்க்கம் சுரண்டும் என்றும் இறுதியில் உழைக்கும் வர்க்கம் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடுகிறார் [7]. இவ்வாறு சமூகத்தில் மாற்றம் நிகழும் என்று மார்க்சு எடுத்துரைக்கின்றார். காா்ல் மார்க்சு நான்கு முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி, நுகர்வு, பரிவர்த்தனை மற்றும் வினியோகம் ஆகியவற்றை ஆராய்ந்து இவை ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது என்று கூறுகின்றார். அதே போல் பணத்திற்கு மூன்று பயன்கள் உள்ளன. அவை மதிப்பின் அளவு, விலைக்கு ஒரு தரத்தை அளிப்பது மற்றும் செல்லுபடியாகுவதற்கான ஏது என்பனவாகும். ஒரு நாட்டில் உள்ள மொத்த பணத்தின் அளவு அந்த நாட்டில் சுற்றிலுள்ள அனைத்துப்பொருட்களின் விலையின் கூட்டுத்தொகையும், இப்பொருட்கள் எவ்வளவு வேகமாக சுழற்சியில் ஈடுபடுகின்றனவோ அந்த வேகத்தயும் சார்ந்தது என்று கூறுகிறார். மார்க்சு வேலையின் பகுப்பை (Division of labour) நன்கு ஆராய்ந்து எந்த ஒரு பொருளும் பல தொழிலாளர்களின் கூட்டு முயற்சியின் பலன் என்கிறார். மார்க்சு வேலையின் பகுப்பை, உற்பத்தியில் வேலையின் பகுப்பு என்றும் சமூகத்தில் வேலையின் பகுப்பு என்றும் இருவகைப் படுத்துகின்றாா், உற்பத்தி வேலைப்பகுப்பில், பலதொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பின் சக்தியை ஒரு முதலாளி வசமே கொடுத்து விடுகின்றனர்.[1] ஆதலால் உற்பத்தியின் காரணிகள் ஒருவர் வசமே குவிந்து கிடக்கின்றன. ஆனால் சமூக வேலைப் பகுப்பில் அவ்வாறு இல்லை என்றும் அங்கு வேலைப்பகுப்பு முறையாக நடைபெறும் என்றும் விளக்குகிறார்.

நவீன செம்மைப் பொருளியல்[தொகு]

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் தொழில் முனைவதில் ஏராளமான மாற்றங்கள் வந்தன. இம்மாற்றங்களுக்கு ஏற்றாற் போல் செவ்வியல் கருத்துக்களில் மாற்றம் தேவைப்பட்டது. இதுவே நவீன செவ்வியல் பொருளியலுக்கு அடிப்படை . இதை நிறுவியவர் ஆல்பிரடு மார்சல் ஆகும்

ஆல்பிரடு மார்சல்[தொகு]

ஆல்பிரடு மார்சல்

இவர்தான் ‘அரசியல் பொருளாதாரம்’ என்றிருந்த பெயரை மாற்றி ‘பொருளியல்’ எனப் பெயரிட்டவர். பொருளியளுக்கு முறையான பொருள் வரையரை (Definition) கொடுத்தவர். பொருளியல் என்பது மனிதர்களைப் பற்றிப் படிக்கக் கூடியது, அவனுடைய பொருளாதார அம்சங்களைப் பற்றியது ( சமுகம், அரசியல் அல்ல) தன்னுடைய உணவு உடை இருப்பிடம் போன்ற தேவைகளை சாதாரண வாழ்வில் அடைவதைப் பற்றிக் குறிப்பிடுவது என்று தெளிவாக விளக்கினார். மனிதனுடைய தேவைகளை, அடிப்படைத் தேவைகள், சுகத்துக்கான தேவைகள், ஆடம்பரத்துக்கானவை என்று மூன்றாகப் பிரித்தார். அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் நுகர்ச்சி தான் அடிப்படை என்றும் ஆதலால் நுகர்ச்சியை முதலில் ஆராய்ந்து பின் உற்பத்தியைப் பற்றிப் பேசவேண்டும் என்கிறார். ஒரு பொருளின் விலையை, ‘தேவை’ ‘அளிப்பு’ ஆகிய இரண்டும் நிர்ணயம் செய்யும். ஒரு வாடிக்கையான நுகர்வர் அதிகப்படியான திருப்தியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நுகர்வார், திருப்தி என்பது நுகரும் பொருள்களின் எண்ணிக்கையைப் பொருத்து உள்ளது என்று கூறி குறைந்து செல் இறுதிப் பயன்பாட்டு விதியை (Law of Diminishing Marginal Utility) விளக்கியுள்ளார். மற்ற காரணிகள் மாறாமல் இருக்கும் பொழுது, தேவை என்பது ஒரு குறிப்பிட்ட விலையில் எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று கணக்கிடுவது என்று குறிப்பிடுகின்றார். மார்சல்தான், நுகர்வோர் எச்சப்பாடு (Consumer Surplus) என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர். தேவையின் நெகிழ்ச்சி (Elasticity of Demand) என்று மற்றொரு கருத்தையும் அறிமுகப்படுத்தினார். உற்பத்திக்கான காரணிகளைப் பொருத்தவரை நிலமும் ஊழியர்களுமாக இரண்டும் முக்கியமானவை என்றும் முதலீடு இரண்டாம் தரத்தினது என்றும் தொழில் முனைவது என்பதும் ஒரு வகை ஊழியம் தான் என்று குறிப்பிடுகின்றார். குறைந்து செல் விளைவு விதி (Law of diminishing returns), வளர்ந்து செல் விளைவு விதி (Law of increasing returns), மாறாவிளைவு விதி (Law of constant returns) என்னும் விதிகளுக்கு சரியான விளக்கம் கொடுக்கின்றார்.[1]

நலன்புரி பொருளியல் (Welfare economics)[தொகு]

பொருளியலின் நோக்கம் சமூக மேம்பாடு. இதைக்கருத்தில் கொண்டு அரசுகள் நடத்தப்படவேண்டும். செவ்வியல் பொருளியல் காலத்திலிருந்து, மேம்பாடு தான் குறிக்கோளாக இருந்திருந்தாலும், தற்பொழுது இதற்கு சிறப்பு கவனம் வழங்கப்படுகிறது. இக்கோட்பாட்டிற்கு முக்கியமாக பங்களித்தவர்கள் ஆர்தா சிசில் பிகு,பேரிடோ, கால்டர், கிக்சு மற்றும் சிசிடோவ்சுகி ஆவர்.

ஜான் மேய் நார்டு கீன்சு[தொகு]

ஜே எம் கீன்சு

கீன்சின் பொருளியல் அல்லது பேரினப் பொருளியல் (Macro economics) தேசிய அளவில் ஒட்டு மொத்தமான தேசிய வருமானம், தேசிய நுகர்வு, ஒட்டு மொத்த சேமிப்பு, முதலீடு மற்றும் அனைவருக்கும் வேலை என்னும் நிலை ஆகியவைகளைப் பற்றியது ஆகும். மேலும் இவைகளின் தாக்கம் ஒரு நாட்டின் செழிப்பின் மீது எத்தகையது என்பதைக் குறித்தும் கீன்சு விளக்கியுள்ளார். செவ்வியல் பொருளியல் வாதிகளின் கூற்றான பொருளாதாரம் இயல்பாகவே சமநிலையை அடையும் என்னும் வாதத்தை மறுத்து, பொருளாதாரம் செம்மையாக நடைபெற அரசின் தலையீடு அவசியம் என்று கூறுகின்றார். அதே போல நிறைவுப் போட்டி (Perfect Competetion) என்பது நடவாத ஒன்று எனவும் அங்காடியில் பல இடையூறுகள் இயல்பாகவே இருக்கும் எனவும் கூறுகிறார். ‘புலப்படாத கை’ என்னும் செவ்வியல் பொருளியல் வாதிகளின் கருத்தையும் மறுக்கின்றார். கீன்சு, மக்கள் பணத்தைத் தேடுவதற்கு மூன்று குறிக்கோள்கள் உள்ளன எனவும் அவை பரிவர்த்தனை நோக்கம் (Transaction Motive), முன்னெச்சரிக்கை நோக்கம் (Precautionary Motive) யூக நோக்கம் (Speculative Motive) என்பனவாகும்.[8] வேறு எந்தச் சொத்தும் பணத்தை போன்று எளிமையாகக் கையாளக் கூடியது அல்ல என்றும் வட்டி விகிதம் மிகவும் குறைந்தால், மக்கள் பணத்தை வங்கிகளிலோ, பங்குகளிலோ முதலீடு செய்வதை விட தங்கள் சேமிப்பை கையில் வைத்திருப்பதையே விரும்புவார்கள் எனவும் கூறுகின்றார். வட்டி விகிதத்தில் எதிர்காலத்தில் எற்படும் மாற்றங்களை எதிர்நோக்கி தங்களது சேமிப்பை, பணமாக வைத்திருப்பதா அல்ல முதலீடு செய்வதா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு மக்கள் செய்யும் தீர்மானம் நாட்டில் நிகழும் மொத்த முதலீட்டின் மீதும், வேலை வழங்கும் திறன் மீதும் மொத்த உற்பத்தியின் மீதும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விளக்குகின்றார்.

கீன்சு நாட்டின் மொத்த உண்மை வருமானம் அதிகரிக்கும் பொழுது நாட்டின் மொத்த நுகர்வும் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார். இது ஏனென்றால் ஒரு மனிதனின் வருமானம் அதிகரிக்கும் பொழுது அவன் அதிகமாக தமது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுகிறான். அதே போல வருமானம் அதிகரிக்கும் பொழுது மனிதன் ஒரு பகுதியை தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மீதத்தை சேமிப்பிற்கும் செலவிடுகிறான். வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்விற்கான செலவும் சேமிப்பும் அதிகரிக்கும் ஆனால் நுகர்விற்கான செலவு குறைந்த விகிதத்திலேயே அதிகரிக்கும் என்று கூறினார்.[8] மேலும் இவர் முதலீட்டின் இறுதிநிலைத் திறன் (Marginal Efficiency of Capital) என்னும் விதியையும் வகுத்து, இதனுடன் வட்டி விகிதமும் சேர்ந்து ஒரு நாட்டின் மொத்த முதலீட்டைத் தீர்மானிக்கும் என்று கூறுகின்றார்.

கீன்சின் வெலை வாய்ப்புக் கோட்பாடு[தொகு]

ஒரு நாட்டில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பதற்கும், ஒட்டு மொத்த உற்பத்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உற்பத்தி அதிகமாகும் போது வேலை வாய்ப்பும் அதிகமாகும். மொத்த உற்பத்தி என்பது அந்த நாட்டின் மொத்த அல்லது செயலூக்கம் உள்ள தேவையை (Effective Demand) ப்பொருத்து அமையும். செயலூக்கம்முள்ள தேவை என்பது அந்த நாட்டில் உள்ள மக்களின் நுகர்ச்சிக்கு வேண்டிய தேவையும், கட்டமைப்பு மற்றும் தளவாடங்களில் முதலீடு செய்வதற்கான தேவையையும் உள்ளடக்கியது. மொத்த வேலை வாய்ப்பு செயலூக்கமிக்க தேவையைப் பொருத்து உள்ளது என்றால், வேலைவாய்ப்பு குறைவாக இருந்தால், செய்லூக்கம் மிக்க தேவை குறைவாக இருக்கிறது என்று பொருள். வேலை வாய்யப்பைப்பெருக்க வேண்டுமென்றால், செயலூக்கமிக்க தேவையைப் பெருக்கவேண்டும். முதலளியம் நடைபெரும் நாடுகளில் ( Capitalist Countries) வேலைவாய்ப்பு பற்றாக்குறை பரவலாகக் காணப்படுவதால், செயலூக்கமிக்க தேவையும் குறைவாகவே இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், நாட்டின் வருமானம் அதிகமாகும் பொழுது, அதற்கு சமமாக நுகர்ச்சிய்ம் அதிகமாவதில்லை. வருமானம் முழுவதும் நுகர்ச்சியில் செலவு செய்யப்படுவதில்லை. வருமானத்தில் ஒரு பகுதி சேமிக்கப் படுகிறது. இந்த இடைவெளி முதலீடு செய்வதன் மூலம் ஈடுகட்டப்படவேண்டும். ஆதலால், வேலைவாய்ப்பு அதிகரிக்க முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பது கீன்சின் தீர்மானமான பரிந்துரை ஆகும்.[9][10]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 M.L.Jhingan, M.Girija,L Sasikala (2003). History of Economic Thought, pages 1,2,11-14,20,37,38,189,209, 210. Delhi: Vrinda Publicaions (P) Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8281-389-2. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Sir Alexander Gray (1931). The Development of Economic Doctrine, An Introductory Survey, pages 1,3,5,10. London: Longmans, Green and Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5148-5691-8. 
  3. 3.0 3.1 3.2 Sir Alexander Gray (1931). The Development of Economic Doctrine, An Introductory Survey, pages 12,13,15. London: Longmans, Green and Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5148-5691-8. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Sir Alexander Gray (1931). The Development of Economic Doctrine, An Introductory Survey, pages 42,50,51,54,62,65,87,93,94. London: Longmans, Green and Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5148-5691-8. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 எஸ் நீலகண்டன் (2012). ஆடம் சுமித் முதல் கார்ல் மார்க்சு வரை. சென்னை: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் 46,49-51, 56,57,78,79,179,317,363,400. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81969-15-1. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 Sir Alexander Gray (1931). The Development of Economic Doctrine, An Introductory Survey, pages 114,132,143,146,163,168,197. London: Longmans, Green and Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5148-5691-8. 
  7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 Sir Alexander Gray (1931). The Development of Economic Doctrine, An Introductory Survey, pages 245-248,251-253,267,280,283,315. London: Longmans, Green and Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5148-5691-8. 
  8. 8.0 8.1 Vanita Agarwal (2010). Macro Economica Theory and Policy Pages 42, 176-179. New Delhi: Dorling Kindersley (India) Pvt Ltd licensees of Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-3149-9. 
  9. ML Seth,Principles of Economics, Micro and Macro economics) page 542, July 1968, Lakshmi Narain Agarwal Educational Publishers, Agra
  10. Karl E Case, Ray C. Fair, Principles of Economics, pages 432-438, Pearson Education( Singapore) Pte Ltd., ISBN 81-7808-587-9

வெளி இணைப்புகள்[தொகு]