பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) பட்டியல் சாதி சமூக மக்களைப் பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கவும்,அவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அத்தகைய வன்முறைகள் குறித்து சுயேச்சையாக விசாரித்து உரிய நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளை வழங்கவும் , சமூக, கல்வி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார, பண்பாடு மற்றும் குடியுரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆணையம் ஆகும்.[1][2]

வரலாறு[தொகு]

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 338ன் படி 1952ம் ஆண்டு தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் நாடு முழுவதும் 12 மாநில (மண்டல) ஆணையங்கள் இயங்குகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரிக்கென்று சென்னையில் தமிழ்நாடு பட்டியல் சாதியினர் ஆணையம் செயல்படுகிறது.

பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினத்திற்கான ஆணையம்[தொகு]

முதல் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் ஆணையம், ஆகஸ்டு 1978ஆம் ஆண்டில் போலோ பாஸ்வான் சாஸ்திரி தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஆணையமாக நிறுவப்பட்டது. 1990-ஆம் ஆண்டில் இவ்வாணையத்தின் பெயர் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையம் என திருத்தி அமைக்கப்பட்டு, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் நலன்கள், மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, குடியுரிமைகளை காத்தல் போன்றவைகளில் பரந்த கொள்கைகளை இந்திய அரசுக்கு விளக்கும் தேசிய ஆலோசனை குழுவாகவும் செயல்பட்டது.

முதல் ஆணையம் 1992-ஆம் ஆண்டில் எஸ். எச். இராம்தன் தலைமையில் நிறுவப்பட்டது. இரண்டாவது ஆணையம் அக்டோபர் 1995-ஆம் ஆண்டில் எச். அனுமந்தப்பா தலைமையில் செயல்பட்டது. மூன்றாவது ஆணையம் டிசம்பர் 1998-ஆம் ஆண்டில் திலீப் சிங் பூரியா தலைமையில் செயல்பட்டது. நான்காவது ஆணையம் மார்ச் 2002-ஆம் ஆண்டில் டாக்டர். விஜய் சங்கர் சாஸ்திரி தலைமையில் செயல்பட்ட்து.

ஆணயத்தை இரண்டாக பிரித்தல்[தொகு]

89-வது இந்திய அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம், 2003-இன் படி முன்பிருந்த பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தை (1) பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் (2) பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையம் என இரண்டு ஆணையங்கள் அமைக்கப்பட்டது.

பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையங்கள்[தொகு]

பட்டியல் சமூகத்தினருக்கான முதல் தேசிய ஆணையம் சூரஜ் பான் தலைமையில் 2004-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

இரண்டாவது ஆணையம் பூட்டாசிங் தலைமையில் மே 2007-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

மூன்றாவது ஆணையம் அக்டோபர் 2010-ஆம் ஆண்டில் பி. எல். புனியா தலைமையில் நிறுவப்பட்டது.[3]

ஆணையத்தின் பணிகள்[தொகு]

பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் கடமைகள் மற்றும் பணிகள்;[4]

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் படி பட்டியல் சாதி மக்களின் நலன்களை காத்தல், ஆராய்தல், கண்காணித்தல் மற்றும் வழிகாட்டு நெறிகளை வகுத்தல்.
  • பட்டியல் சமூகத்தினரின் உரிமை மற்றும் நலன்களுக்கு எதிரான புகார் மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்தல்.
  • பட்டியல் சமூக மக்களின் கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டமிடுதல்.
  • பட்டியல் சமூகத்தினரின் பாதுகாப்பிற்கும், கல்வி, சமூகப் பொருளாதார வளர்ச்சிகளுக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டு நெறிகளை வகுத்துத் தருதல்.
  • பட்டியல் சமூகத்தினரின் மேம்பாடு, வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான இதர பணிகள் மேற்கொள்தல்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. National Commission for Schedule Castes | India Environment Portal
  2. "தேசிய-மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையங்கள் கதி: தலையிட வேண்டிய நேரத்தில் முடக்கப்படும் ரகசியம் என்ன?". 2017-08-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "National Commission for Scheduled Castes calls Haryana as 'balatkar pradesh' – Times Of India". 2014-01-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-25 அன்று பார்க்கப்பட்டது.
  4. "THE CONSTITUTION (EIGHTY-NINTH AMENDMENT) ACT, 2003". by Government of India. indiacode.nic.in. 28 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. II. Provisions relating to SCs (Page 6) – Constitutional Provisions: Ministry of Social Justice and Empowerment, Government of India

வெளி இணைப்புகள்[தொகு]