நய்யாலா மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Euteleostomi
நய்யாலா
Nyala
கிடாய்
பெட்டை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. angasii
இருசொற் பெயரீடு
Tragelaphus angasii
(Angas, 1849)
புவியியல் எல்லை
வேறு பெயர்கள் [2]
 • Nyala angasii

தாழ்நில நய்யாலா அல்லது வெறுமனே நய்யாலா ( lowland nyala or simply nyala ) என அழைக்கப்படுவது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு முறுக்கிய கொம்புகளைக் கொண்ட ஒரு மறிமான் ஆகும். இது மாட்டுக் குடும்பம் மற்றும் ட்ரேஜெலாபஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு இனமாகும். இது முன்னர் நயாலா பேரினத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது முதன்முதலில் 1849 இல் ஜார்ஜ் பிரஞ்சு அங்கஸ் என்பவரால் விவரிக்கப்பட்டது . இதன் உடல் நீளம் 135–195 செமீ (53–77 அங்குலம்), மற்றும் எடை 55–140 கிலோ (121–309 பவுண்டு) ஆகும். பெடைகள் மற்றும் இளம் பருவ மான்களின் உடல் அரக்கு அல்லது செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் வயது வந்த கிடாய்கள், பெரும்பாலும் நீல நிறத்துடன் கூடிய அடர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வளரும். பெட்டைகள் மற்றும் இளம் ஆண்களின் உடலின் பக்கங்களில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வெள்ளைப் பட்டைகள் இருக்கும். கிடாய்களுக்கு மட்டுமே 60-83 செமீ (24-33 அங்குலம்) நீளமும், மஞ்சள் முனையும் கொண்ட கொம்புகள் உள்ளன. இந்த முறுக்கிய கொம்பு இந்த விலங்கிடையையான பால் ஈருருமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நய்யாலா முக்கியமாக அதிகாலையிலும், பிற்பகலிலும் சுறுசுறுப்பாக இருக்கும். இது பொதுவாக பகலில் 20–30 °C (68–86 °F) வெப்பநிலையாக இருந்தாலும், மழைக்காலத்திலும் இரவில் உலாவுகிறது. தாவர உண்ணியான நய்யாலா இலைகள், பழங்கள், புற்கள் போன்றவற்றை உண்கிறது. மேலும் இதற்கு போதுமான நன்னீர் தேவைப்படுகிறது. கூச்ச சுபாவமுள்ள விலங்கான இது, திறந்தவெளியில் நீர்ருந்துவதை விட குட்டைகளையே விரும்புகிறது. நயயாலாக்கள் தங்களுக்கென பிராந்திய எல்லையை வகுத்துக் கொள்ளாது. இவை மிகவும் எச்சரிக்கையான உயிரினங்களாகும். இவை 10 வரையிலான எண்ணிக்கையில் ஒற்றை பாலினமாகவோ அல்லது கலப்பு குடும்பக் குழுக்களாகவோ வாழ்கின்றன. ஆனால் வயதான கிடாய்கள் தனியாக வாழ்கின்றன. இவை அடர்த்தியான மற்றும் வறண்ட சவன்னா காடுகளுக்குள் வாழ்கின்றன. நய்யாலாவை வேட்டாயாடுவையாக சிங்கம், சிறுத்தை, ஆப்பிரிக்க காட்டு நாய் போன்றவை ஆகும். வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் இனச்சேர்க்கை உச்ச நிலையை அடைகிறது. கிடாக்களும், பெட்டைகளும் முறையே 18 மற்றும் 11-12 மாதங்களில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இருப்பினும் அவை ஐந்து வயது வரை சமூக ரீதியாக முதிர்ச்சியடைவதில்லை. ஏழு மாத கர்ப்பகாலத்திற்குப் பிறகு, ஒரு குட்டி பிறக்கிறது.

நய்யாலா வாழக்கூடிய பகுதியாக மலாவி, மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, சாம்பியா, சிம்பாப்வே ஆகியவை உள்ளன. இது போட்சுவானா, நமீபியா போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லபட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 1950 களில் இருந்து அழிந்துபோன எசுவாத்தினிக்கு மீண்டும் கொண்டு செல்லபட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எண்ணிக்க நிலையாக உள்ளது. மேலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. வேட்டையாடுதல் மற்றும் மனித குடியேற்றத்தின் விளைவாக ஏற்படும் வாழ்விட இழப்பு ஆகியவை இந்த இனங்களுக்கு முக்கிய அச்சுறுத்தல்களாக உள்ளன.

வகைபிரித்தல்[தொகு]

Giant eland

எலண்ட் மான்

பெருங் கூடு மான்

Mountain nyala

போங்கோ

Sitatunga

Cape bushbuck

நய்யாலா

Lesser kudu

Phylogenetic relationships of the nyala from combined analysis of all molecular data (Willows-Munro et.al. 2005)

உடல் விளக்கம்[தொகு]

கிரூகர் தேசிய பூங்காவில் ஒரு கிடாய்

நய்யாலா மான்கள் நடுத்தர அளவிலான ஒரு மான்கள் ஆகும். இவற்றிற்கு முறுக்கிய கொம்புகள் உண்டு. இவை பால் ஈருருமை கொண்ட விலங்கு ஆகும். [2] நய்யாலா பொதுவாக தலையையும் சேர்த்து 135–195 செமீ (53–77 அங்குலம்) உடல் நீளம் கொண்டிருக்கும். [2] கிடாய்கள் நின்ற நிலையில் தோள்வரை 110 செமீ (43 அங்குலம்) உயரமும், பெட்டைகள் 90 செமீ (3.0 அடி) உயரம் வரை இருக்கும். கிடாய்களின் எடை 98–125 கிலோ வரையும், பெட்டைகளின் எடை 55–68 கிலோ வரையும் இருக்கும் நய்யாலாக்களின் ஆயுட்காலம் சுமார் 19 ஆண்டுகளாகும். [3]

இந்த மான்களில் பெட்டைகள் மற்றும் இளம் மான்களின் உடல் நிறம் செம்பழுப்பு அல்லது துரு நிறத்தில் இருக்கும். அதேசமயம் முதிர்ந்த கிடாய்கள் அடர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். [2] இந்த மான்களில் இரு பாலினத்திற்கும் உடலின் பக்கவாட்டில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வெள்ளை பட்டைக் கோடுகள் இருக்கும். நெற்றி சிகப்பு நிறமாக இருக்கும். மேல் உதடு தாடை, காதின் அடிப்பகுதி கன்னம் போன்ற இடங்களில் வெள்ளை நிறப் புள்ளிகள் உள்ளன. வயதான கிடாய்களின் உடலில் பட்டைக் கோடுகள் மிகவும் மங்கிவிடுகின்றன அல்லது இல்லாம் போகின்றன. கிடாய்களுக்கும் பெட்டைகளுக்கும் அவற்றின் கண்களுக்கு இடையே ஒரு வெள்ளை பட்டை உண்டு. மேலும் 40-55 செ.மீ (16-22 அங்குலம்) நீளம் கொண்ட வால் உண்டு. வாலின் அடிப்பகுதி வெள்ளையாக இருக்கும். இரு பாலினத்துக்கும் தலையின் பின்பகுதியிலிருந்து வால் வரை பிடறி மயிர் போன்ற உரோம கொத்து நீளமாக செல்கிறது. ஆண் மான்களுக்கு தாடையிலும், அடிவயிற்றிலும் நீண்ட உரோமங்கள் காணப்படுகின்றன. [3]

கிடாய்களுக்கு மட்டும் கொம்புகள் உண்டு. கொம்புகள் 60-83 செமீ (24-33 அங்குலம்) நீளம் கொண்டதாகவும், அதில் மஞ்சள் முனை கொண்டதாக இருக்கும். கொம்பு ஓரிரு முறுக்குகளைக் கொண்டதாக இருக்கும். [2] நயயாலாவின் கால்களில் வசனை சுரப்பிகள் உள்ளன. இதனால் அவை எங்கு சென்றாலும் தங்கள் வாசனையை விட்டுச்செல்கின்றன.

நய்யலாவின் உடல் நிலை பெரும்பாலும் பாலினங்களுக்கு இடையில் மாறுபடும். ஒரு ஆய்வின் படி, இது அவற்றின் உடல் அளவுகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம் எனப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடின் போது, வயதானவை மிகுதியன எண்ணிக்கையில் இறக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கிடாய்கள் ஆகும். [4] நய்யாலாவில் குருதி மாதிரி எடுக்கும் முயற்சியின் போது, மன அழுத்தத்தின் காரணமாக வைட்டமின் ஈ அளவு மாறுபடுவது கண்டறியப்பட்டது. [5]

சூழலியலும், நடத்தையும்[தொகு]

பாலூட்டும் தாய்

நய்யாலா முக்கியமாக அதிகாலையிலும், பிற்பகலிலும் சுறுசுறுப்பாக இருக்கும். வெப்பநிலை 20–30 °C (68–86 °F) ஆக இருக்கும் போது இவை பகலிலும், மழைக்காலத்தில் இரவிலும் உலவுகின்றன. [6] பகலில் வெப்பம் முகுந்திருக்கும் நேரங்களில் அடர்ந்த புதர்களில் இவை ஓய்வெடுக்கின்றன. [2] நய்யாலா மிகவும் கூச்ச சுபாவமும், எச்சரிக்கை உணர்வும் கொண்டது. இதனால் திறந்த வெளியில் வராமல் பெரும்பாலும் மறைவிலேயே இருக்கும். காடுகளில் நயாலாவை பெரும்பாலும் நீர் குட்டைகளில் இருப்பதைக் காணலாம். [2] ஆனால் பாதுகாக்கப்பட்ட காப்பகப் பகுதிகளில் இவை கூச்சப்படுவதில்லை. மேலும் சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் படத்தவாறு அடிக்கடி வெளியே வருகின்றன. [7]

நய்யாலாகள் கூட்டமாகவே வாழ்கின்றன. ஒரு மந்தையில் பெரும்பாலும் பெண்மான்களும், குட்டிகளுமே காணப்படுகின்றன. ஒரிரு ஆண் மான்களும் மந்தையில் இருக்கலாம். மந்தைகள் பொதுவாக ஒன்றாக உலவும், தண்ணீர் குடிக்கும். ஒவ்வொரு குழுவிலும் இரண்டு முதல் பத்து மான்கள் உண்டு. மொசாம்பிக்கில் உள்ள ஜினாவே தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 67% வரையிலானவை ஒன்று முதல் மூன்று நய்யாலாக்களைக் கொண்ட குழுக்களாகவும், மீதமுள்ள மந்தைகளில் 30 நய்யாலாக்களைக் கொண்டவையாகும் இருப்பது தெரியவந்தது. மந்தைகள் அடிக்கடி பிரிந்து மீண்டும் உருவாகின்றன. [6] பொதுவாக வயது வந்த ஆண் மான்கள் தனியாக இருக்கின்றன. பெண் மான்கள் பெரும்பாலும் தங்கள் சந்ததிகளுடனும், தங்கள் தாய்மார்களுடனும் இருக்கும். எனவே பெண் மான் கூட்டங்களில் உள்ள உறவு ஆண்களை விட நெருக்கமாக இருக்கும். [3] [8]

ஆபத்தின்போது நய்யலா நாய் போன்று குரைத்து மற்ற விலங்குகளை எச்சரிக்கிறது. இந்த அம்சம் முக்கியமாக பெண் மான்களுக்கு உண்டு. [3] இம்பாலா, பபூன், ஆப்பிரிக்கச் சுறிமான் போன்றவற்றின் எச்சரிக்கை அழைப்புகளுக்கும் இவை எதிர்வினையாற்றுகிறன. நய்யாலாவின் அழைப்புகளுக்கு இம்பாலா எதிர்வினையாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. [3] நயாலாவை வேட்டையாடுபவையாக சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப்புலி, புள்ளிக் கழுதைப்புலி, ஆப்பிரிக்க காட்டு நாய், நைல் முதலை போன்றவை உள்ளன. அதே சமயம் பாபூன்கள் மற்றும் கொன்றுண்ணிப் பறவைகள் குட்டிகளை வேட்டையாடுகின்றன. [6]

உணவுமுறை[தொகு]

இவை ஒரு தாவர உண்ணி ஆகும். நய்யலாக்கள் உணவாக தழைகள், பழங்கள், பூக்கள், கிளைகள் போன்றவற்றைக் கொள்கின்றன. மழைக்காலத்தில் இவை புத்தம்புதிய புல்ற்களை உண்ணும். இவை தங்கள் நீர் உட்கொள்ளும் தேவையினால், அருகில் நீர் ஆதாரம் உள்ள இடங்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும். [3] ஜூலுலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நய்யாலாகள் முக்கியமாக அதிகாலையிலும், பிற்பகலிலும் மேய்வதாக தெரியவருகிறது. மழைக்காலத்தில் இரவில் உணவு உண்கின்றன.

முக்குசி கேம் ரிசர்வ் மற்றும் நடாலில் உள்ள தியுமு கேம் ரிசர்வ் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, இம்பாலாவின் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தியது மேலும் நய்யாலாவின் உணவில் இடம்பெறும் இருவித்திலைத் தாவரங்களின் அளவு பருவகாலத்துக்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் காட்டுகிறது. வறண்ட காலங்களில், நய்யாலாவின் இருவித்திலைத் தாவர உணவு உள்ளடக்கம் 83.2% என்றும், இம்பாலாவின் உணவில் அது 52% என்றும் இருப்பது அறியப்பட்டது. இந்த பருவத்தில், உணவில் நார்ச்சத்து அதிகமாகவும், புரத உணவு குறைவாகவும் இருந்தது. மழைக்காலத்தில் இது நேர்மாறாக மாறுகிறது. மழைக்காலம் வந்தவுடன், இரண்டு இனங்களும் முக்கியமாக ஒருவித்திலைத் தாவரங்களை உணவாக எடுத்துக் கொண்டன. மேலும் இம்பாலா அவற்றை அதிகமாக உட்கொண்டது. உணவில் நார்ச்சத்து விட புரதம் அதிகம் இடம்பெற்றது. [9]

இனப்பெருக்கம்[தொகு]

ஆதிக்கம் செலுத்துவதில் ஆண்கள் சண்டையிடுகிறன
இரண்டு வார வயது ஆண் குட்டி ஸ்வாலு கலஹாரி ரிசர்வ், தென்னாப்பிரிக்கா
இரண்டு வார வயது ஆண் குட்டி உண்கிறது

நய்யாலா ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது, ஆனால் வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் இனச்சேர்க்கை உச்சத்தை அடைகிறது. இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் ஒளிக்காலத்துவம் மற்றும் விலங்கின் உணவுப் பழக்கம் காரணமாக கூறப்படுகிறது. [10] பெட்டைகள் 11 முதல் 12 மாத காலத்தில் பாலுறவு முதிர்ச்சி அடைகிறன. கிடாக்கள் 18 மாதங்களில் (அவை ஐந்து வயது வரை சமூக ரீதியாக முதிர்ச்சியடையாதவைகளாக இருந்தாலும்) பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. [2] ஆனால் நடைமுறையில் 14 மாதங்களில் இவற்றிற்கு விந்தணு உருவாகத் தொடங்குகிறது. [11]

பெண் மான்களின் கர்ப்ப காலம் ஏழு மாதங்களாகும். கர்பகாலம் முடிந்து ஐந்து கிலோ எலையுள்ள குட்டி பிறக்கிறது. பிரசவமானது பொதுவாக வேட்டையாடிகளின் பார்வையில் இருந்து விலகியதாக, புதர் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. குட்டி 18 நாட்கள் வரை மறைந்திருக்கும், தாய் அதற்கு சீரான இடைவெளியில் பாலூட்டூம். அடுத்த குட்டி பிறக்கும் வரை குட்டி தன் தாயுடன் இருக்கும். [3]

குறிப்புகள்[தொகு]

 1. IUCN SSC Antelope Specialist Group. 2016. Tragelaphus angasii (errata version published in 2017). The IUCN Red List of Threatened Species 2016: e.T22052A115165681. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22052A50196443.en. Accessed on 01 May 2022.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Huffman, B. "Nyala". Ultimate Ungulate.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Ciszek, D. "Tragelaphus angasii". University of Michigan Museum of Zoology. Animal Diversity Web.
 4. Anderson, J. L. (20 August 2009). "Condition and related mortality of nyala (Tragelaphus angasi) in Zululand, South Africa". Journal of Zoology 207 (3): 371–80. doi:10.1111/j.1469-7998.1985.tb04938.x. 
 5. Grandin, T.; Rooney, M. B.; Phillips, M.; Cambre, R. C.; Irlbeck, N. A.; Graffam, W. (1 January 1995). "Conditioning of nyala (Tragelaphus angasi) to blood sampling in a crate with positive reinforcement". Zoo Biology 14 (3): 261–73. doi:10.1002/zoo.1430140307. https://dspace.library.colostate.edu/bitstream/10217/4410/1/E108.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
 6. 6.0 6.1 6.2 Tello, Jose L.P.L.; Van Gelder, Richard G. (1975). "The natural history of nyala, Tragelaphus angasi (Mammalia, Bovidae) in Mozambique". Bulletin of the American Museum of Natural History (New York: American Museum of Natural History) 155: 323. 
 7. {{cite book}}: Empty citation (help)
 8. Alden, P. C.; Estes, R. D.; Schlitter, D.; McBride, B. (1995) National Audubon Society Field Guide to African Wildlife. Chanticleer Press.
 9. A. F. V. Rooyen (1992). "Diets of impala and nyala in two game reserves in Natal, South Africa". South African Journal of Wildlife Research 22 (4): 98–101. பன்னாட்டுத் தர தொடர் எண்:0379-4369. 
 10. Anderson, J. L. (1979). "Reproductive seasonality of the nyala Tragelaphus angasi; The interaction of light, vegetation phenology, feeding style and reproductive physiology". Mammal Review 9 (1): 33–46. doi:10.1111/j.1365-2907.1979.tb00230.x. 
 11. Anderson, J. L. (20 August 2009). "Reproduction in the Nyala (Tragelaphus angasi) (Mammalia: Ungulata)". Journal of Zoology 204 (1): 129–42. doi:10.1111/j.1469-7998.1984.tb02366.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நய்யாலா_மான்&oldid=3624421" இலிருந்து மீள்விக்கப்பட்டது