ஒருவித்திலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருவித்திலைத் தாவரம்
ஹெமேரோகாலிஸ் தாவரத்தின் பூ
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: ஒருவித்திலைத் தாவரம்
ஒழுங்கு

சுமார் 10

கோதுமை, பொருளியல் அடிப்படையில் முக்கியமான ஒரு ஒருவித்திலைத் தாவரம்

ஒருவித்திலைத் தாவரம் அல்லது ஒருவித்திலையி (Monocotyledon) என்பது பூக்கும் தாவர (அங்கியோஸ்பேர்ம்கள்) வகையைச் சேர்ந்த இரு பெரும் பிரிவுகளுள் ஒன்றைச் சேர்ந்த தாவரம் ஒன்றைக் குறிக்கும். மற்றப் பிரிவைச் சேர்ந்தவை இருவித்திலைத் தாவரங்கள் ஆகும். ஒருவித்திலையிகள், பல்வேறு வகைப்பாட்டு நிலைகளிலும், பல்வேறு பெயர்களின் கீழும் அடையாளம் காணப்பட்டுள்ளன. வகைப்பாட்டியலில், அங்கியோஸ்பேர்ம்கள் தொடர்பான புதிய வகைப்பாட்டு முறைமையான ஏபிஜி II முறைமை, ஒருவித்திலையிகள் என்னும் ஒரு பிரிவை (clade) ஏற்றுக்கொண்டுள்ளது எனினும், இதற்கு ஒரு வகைப்பாட்டியல் தரநிலை (rank) ஒதுக்கப்படவில்லை.

உயிரியத் தொகுதியில் உண்டாகும் வேளாண்மைத் தாவரங்களில் பெரும்பாலானவை ஒருவித்திலையிகள் ஆகும். இப் பிரிவுள் 50,000 தொடக்கம் 60,000 வரையிலான சிறப்பினங்கள் (species) இருப்பதாகத் தெரிகிறது. அனைத்துலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் காப்பு ஒன்றியத் (IUCN) [1] பரணிடப்பட்டது 2006-06-30 at the வந்தவழி இயந்திரம் தகவல்களின்படி இவ்வெண்ணிக்கை 59,300 ஆகும். இப் பிரிவிலும், பூக்கும் தாவரங்கள் அனைத்திலும், சிறப்பினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், மிகப் பெரிய தாவரக் குடும்பம் ஆர்க்கிட்டுகள் (orchids) ஆகும். சுமார் 20,000 சிறப்பினங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள இவை ஆர்க்கிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தவை. இக் குழுவில் பொருளியல் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாவரக் குடும்பம், போவாசியே குடும்பத்தைச் சேர்ந்த புற்கள் ஆகும். இக் குடும்பத்தில், தானியங்கள் (நெல், சோளம், கோதுமை போன்றவை), மேய்ச்சற் புற்கள், மூங்கில் போன்றவை அடங்குகின்றன. இவை காற்றினாலான மகரந்தச் சேர்க்கைக்காகக் கூர்ப்பு (evolution) அடைந்துள்ளன. மிகவும் சிறிய புற்களின் பூக்கள், தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் பூங்கொத்துகளாக அமைந்துள்ளன. தென்னை முதலியவற்றை உள்ளடங்கிய பாம் குடும்பம் (அரகேசியே), வாழைக் குடும்பம் (முசேசியே), வெங்காயக் குடும்பம் (அலியேசியே) போன்றவை இக் குழுவில் உள்ள, பொருளியற் சிறப்புக் கொண்ட பிற தாவரக் குடும்பங்களாகும்.

பூக்களுக்காகப் பயிரிடப்படும் பல தாவரங்களும் ஒருவித்திலையிகளே. லில்லிகள், ஐரிசுகள், ஆர்க்கிட்டுகள், மணிவாழைகள், துலீப்புகள் என்பவை இவ்வாறானவை.

பெயரும், இயல்புகளும்[தொகு]

ஹைப்பொக்சிஸ் டெக்கும்பென்ஸ் (Hypoxis decumbens) L.. இணை இலை நரம்புகளைக் கொண்ட ஒருவித்திலைத் தாவரம்.

இத் தொகுதியில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் தமது வித்துக்களில் ஒரு வித்திலையைக் கொண்டிருப்பதனால், ஒருவித்திலைத் தாவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதற்கு மாறாக இருவித்திலைத் தாவரங்களின் வித்துக்களில் இரண்டு வித்திலைகள் இருக்கும். எனினும், வித்திலைகள் தாவரங்களின் வாழ்க்கையின் குறுகிய காலப் பகுதியிலேயே காணப்படுவதால், வித்திலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு தாவரங்களை ஆராய்தல் வசதியானது அல்ல என்பதுடன், இது அவற்றின் நம்பத் தகுந்த இயல்பும் அல்ல.

இருந்தாலும், ஒருவித்திலைத் தாவரக் குழு சிறப்பியல்புகள் கொண்டது. இவற்றுள் இவ் வகைத் தாவரங்களின் பூக்கள், மூன்று அல்லது அதன் மடங்குகள் எண்ணிக்கையில் இதழ்களைக் கொண்டவையாக அமைந்திருப்பதைக் காணலாம். பொதுவாக, இவற்றின் பூக்கள் மூன்று, ஆறு அல்லது ஒன்பது இதழ்களுடன் அமைந்துள்ளன. பல ஒருவித்திலைத் தாவர இலைகளின் நரம்புகள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்திருப்பதையும் காணலாம்.

இருவித்திலையிகளுடன் ஒப்பீட்டு அடிப்படையில் உருவவியல்[தொகு]

இணையாக அமைந்துள்ள நரம்புகளைக் காட்டும் வெங்காயத்தின் வெட்டுமுகம்.

பொதுவாக ஒருவித்திலை, இருவித்திலைத் தாவரங்களிடையே காணப்படும் வேறுபாடுகள் வருமாறு. இது மேலோட்டமானதே. பல விதிவிலக்குகள் இருப்பதால் இவை எல்லாச் சமயங்களிலும் பொருந்தும் எனக் கூற முடியாது.

  • பூக்கள்: ஒருவித்திலைத் தாவரங்களில் பூக்கள் மூவடுக்குத் தன்மை கொண்டவை. இருவித்திலைத் தாவரங்களில் இது நான்கடுக்கு, அல்லது ஐந்தடுக்குத் தன்மை (பூவின் உறுப்புக்கள் நான்கு அல்லது ஐந்தின் மடங்குகளாக இருத்தல்) கொண்டது.
  • மகரந்தத் தூள்: ஒருவித்திலைத் தாவரங்களில் மகரந்தத் தூள்கள் ஒரு துளையைக் கொண்டிருக்க, இருவித்திலைத் தாவரங்களின் மகரந்தத் துகள் மூன்று துளைகளைக் (pore) கொண்டிருக்கும்.
  • வித்துக்கள்: ஒருவித்திலையிகளின் வளர்கரு (embryo) ஒரு வித்திலையைக் கொண்டிருக்கின்றன. இருவித்திலையிகளில் இது இரு வித்திலைகளைக் கொண்டுள்ளது.
  • தண்டுகள்: ஒருவித்திலையிகளின் தண்டுகளில் உள்ள குழாய்த்திரள்கள் ஒழுங்கின்றி அமைந்திருக்க, இருவித்திலையிகளில் இவை வட்டவடிவில் அடுக்காக அமைந்துள்ளன.
  • இலைகள்: ஒருவித்திலையிகளின் இலைகளில் முக்கியமான இலை நரம்புகள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்து காணப்படும். இருவித்திலையிகளில் இது வலைப்பின்னல் அமைப்பில் காணப்படும்.

இவ்வேறுபாடுகளை இறுக்கமாகப் பின்பற்ற முடியாது. சில ஒருவித்திலையிகளின் இயல்புகள் இருவித்திலையிகளின் பொது இயல்புகளுக்கு நெருக்கமாக இருப்பதைக் காணலாம். இது போலவே ஒருவித்திலையிகளின் இயல்புகளுக்கு நெருக்கமான இருவித்திலையிகளும் உண்டு.

வகைப்பாட்டியல்[தொகு]

முளைவிடும் ஒரு புல் (ஒருவித்திலைத் தாவரம்) ஒற்றை வித்திலையைக் காண்க (இடப்பக்கம்). ஒப்பீட்டுக்காக இருவித்திலை (வலப்பக்கம்)

ஒருவித்திலையிகள், பூக்கும் தாவரங்களின் வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இருந்துவருகின்ற ஒற்றைமரபுக் குலம் ஒன்றை உருவாக்குகின்றன என்று கருதப்படுகிறது. ஒருவித்திலையிகள் தாவரக் குடும்பத்துக்கு மேற்பட்ட நிலையில் உள்ளதால், இதற்குப் பெயரிடுவதில் தாராளம் நிலவியது. ஐசிபிஎன் (ICBN) இன் 16 ஆவது சரத்து இதற்கு ஒரு விளக்கப் பெயர் அல்லது இதன் கீழுள்ள குடும்பமொன்றின் பெயரைத் தழுவிய ஒரு பெயரைக் கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறது.

வகைப்பாட்டியல் வரலாற்றில் இதற்குப் பின்வரும் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலே காட்டிய எல்லா முறைமைகளுமே இக் குலத்துக்கான உள் வகைப்பாடுகளைப் பயன்படுத்தியுள்ளன. இக் குலத்தின் புற எல்லைகள் மிகவும் உறுதியானவை. இது சிறப்பாக வரையறுக்கப்பட்டதும், உட்பிணைப்புக் கொண்டதுமான ஒரு குலமாகும். எனினும் இதன் உள்வகைப்பாடு உறுதியற்றது. எந்த இரு முறைமைகளுமே இதன் உள்வகைப்பாட்டில் இணங்கியது கிடையாது.

அண்மைய மூலக்கூற்று ஆய்வுகள் ஒருவித்திலைத் தாவரங்களுடைய ஒற்றை மரபுத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவற்றுக்கிடையிலான உட்தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும் உதவியுள்ளன. ஏபிஜி II முறைமை ஒருவித்திலையிகளுக்கு வகைப்பாட்டுத் தரநிலை ஒன்றை ஒதுக்காவிடினும், ஒருவித்திலைக் கிளேட் ஒன்றை ஏற்றுள்ளது. இம் முறைமை 10 ஒழுங்குகளையும், எந்த ஒழுங்கிலும் சேர்க்கப்படாத இரண்டு குடும்பங்களையும் அடையாளம் கண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருவித்திலை&oldid=3575028" இருந்து மீள்விக்கப்பட்டது