மறிமான்
மறிமான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | இரட்டைப்படைக் குளம்பி |
உள்வரிசை: | கொம்புள்ள கால்நடை |
குடும்பம்: | மாட்டுக் குடும்பம் |
மறிமான் (Antelope)[1] என்பது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோவாசியா பிராந்தியங்களில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பி ஆகும். இது மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தது. மறிமான்கள் கூட்டம் மந்தைக் கூட்டம் என அழைக்கப்படுகின்றது.[2] ஆண்டு தோறும் விழுந்து முளைக்கும் மானின் கொம்புகளைப் போலன்றி மறிமானின் கொம்புகள் தொடர்ந்து வளர்கின்றன.
வாழிடமும் பரவலும்[தொகு]
அதிகப்படியான மறிமான் இனங்கள் ஆப்பிரிக்காவினைத் தாயகமாகக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக சவான்னாப் பகுதியில் காணப்படுகின்றன. மற்ற இனங்கள் ஆசியக் கண்டத்தில் காணப்படுகின்றன. இந்தியாவில் நீல்காய், சிங்காரா, இரலை, நாற்கொம்பு மறிமான் ஆகியன காணப்படுகின்றன.
மறிமான்கள் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. எண்ணிக்கை அளவில் சவான்னாவில் மிகுதியாக இம்மானினம் இருப்பினும் அரேபியப் பாலைவனம் முதல் பனி மிகுந்த சைகா காடுகள் வரை இவை பரவியுள்ளன.
காடுகளில் வாழும் மறிமான்கள் அதிகம் இடம் பெயர்வதில்லை. ஆனால் சமவெளிகளில் வாழும் நூ (gnu/Wildebeest), சிறுமான் ஆகிய மிகுந்த தொலைவுக்கு வலசை போகின்றன.