தமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் சித்தா மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் சித்தா மருத்துவ அறிஞர் (இளம்நிலை சித்தா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelour of Siddha Medicine and Surgery -B.S.M.S) மற்றும் சித்தா மருத்துவம், சித்தா குணபாடம், சித்தா சிறப்பு மருத்துவம், சித்தா குழந்தை மருத்துவம், சித்தா நோய்நாடல், சித்தா நஞ்சு நூலும் மருத்துவ நூலும் எனும் ஆறு பிரிவுகளின் கீழ் முதுநிலைப் பட்டப்படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் ஆண்டுக்கு 100 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் சித்தா மருத்துவக் கல்லூரியும், சென்னை அரும்பாக்கத்தில் ஆண்டுக்கு 50 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் சித்தா மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவை தவிர கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முன்சிறை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பூந்தண்டலம் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய மூன்று இடங்களில் தலா 30 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட 3 சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 150 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 90 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என மொத்தம் 240 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.