இலங்கையில் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் தொலைக்காட்சி முதன் முதலாக 1979, ஏப்ரல் 13 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் முதலாவது தொலைக்காட்சிச் சேவை சுயாதீன தொலைக்காட்சி (Independent Television Network - ITN) ஆகும். இது ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியாக செயல்பட்டது. இச்சேவையை 1979 சூன் 5 இல் இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது[1]. இலங்கை அரசின் தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினி 1982, பெப்ரவரி 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது[2]. அதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இறுதிவரை இலங்கையில் ஒன்பது அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக இருபத்திநான்கு அலைவரிசைகள் தோன்றியுள்ளன. அவற்றுள் சில மறைந்துவிட்டன. சில அலைவரிசைகள் தமது சேவையினை தொடர்ந்தும் வழங்கிவருகின்றன.

வரலாறு

இலங்கைத் தொலைக்காட்சியின் வரலாற்றை நோக்கும்போது 1977ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் ஆட்சியமைத்ததன் பின்பு முன்வைக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலேயே இது பற்றிய எண்ணக்கருக்கள் உதயமாகின. இதன் முதற்படியாக 1979ம் ஆண்டு சனவரி மாதத்தில் இலங்கையில் தொலைக்காட்சிச் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்காலகட்டத்தில் இலங்கையில் தகவல் தொழிநுட்ப இலத்திரனியல் ஊடகமாக அரசாங்க வானொலி சேவை மாத்திரமே நடைமுறையிலிருந்தது. 1978ம் ஆண்டு முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தகவல் தொடர்பூடகங்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கியது. இவ்வமைச்சின் செயலாளராக சரத் அமுனுகம பதவி வகித்தார். 1979ம் ஆண்டு இவரின் தலைமையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இதற்கான ஆலோசனைகள் இடம்பெற்றன.

தேசிய தொலைக்காட்சித் திட்டமிடல் குழு

அப்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய தேவிஸ் குருகே ஒலிபரப்புப் பொறியியலாளர் டேவிட் புவல் உட்பட ஒலிபரப்புத்துறையைச் சேர்ந்த சிலரைக் கொண்டு தேசிய தொலைக்காட்சித் திட்டமிடல் குழு (National Television Planning Committee) அமைக்கப்பட்டது. தமிழ்சேவை சார்பில் இக்குழுவில் அக்காலகட்டத்தில் தமிழ்ச்சேவைப் பணிப்பாளராக கடமையாற்றிய பொன்மணி குலசிங்கம், மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய ஞானம் இரத்தினம் போன்றோரும் இடம்பெற்றனர்.

தொலைக்காட்சி அலைவரிசைகள்

இலங்கையில் செயல்பட்டுவரும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பின்வருமாறு:

செய்மதி தொலைக்காட்சி

மேற்கோள்கள்