உள்ளடக்கத்துக்குச் செல்

விஜிதபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துட்டகைமுனு மன்னனின் படைகளின் வாள்களை தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் கருங்கல்

விஜிதபுரம் அல்லது விஜித நகரம் அல்லது விஜித கமை என்பது பண்டைய இலங்கையின் கோட்டை நகரம் ஆகும். நாட்டின் முதலாவது ஆட்சியாளரான விசயன் இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த போது தன்னுடன் பெரியதொரு பரிவாரத்தையும் அழைத்து வந்தான். அவ்வாறு வந்த பரிவாரத்தினர் நாடு முழுவதும் பரவி அங்கு பல குடியேற்றங்களையும் அமைத்தனர். அவர்களுள் விஜித என்பவன் அமைத்த குடியேற்றமே விஜிதபுரம் ஆகும்.[1] இலங்கையின் மூன்றாவது மன்னனான பண்டுவாசுதேவனின் ஆட்சிக்காலத்தின் போதே இக்குடியேற்றம் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

மகாவம்சம், தீபவம்சம், இராசாவலிய, தூபவம்சம் ஆகிய வரலாற்று ஆதார நூல்களிலும் இந்நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாள மன்னனின் துட்டகைமுனு மன்னனுக்கு எதிரான படைகளின் தரிப்பிடமாக இந்நகரம் விளங்கியது. தூபவம்சத்தில் இந்நகரம் மூன்று அகழிகளாலும் பெரியதொரு சுவரினாலும் பாதுகாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இச்சுவர் பிரதான நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களைக் கொண்டிருந்தது. வாயில்களின் படலைகளும் இரும்பினால் செய்யப்பட்டிருந்தன. ராஜாவலிய நூலில் அனுராதபுரத்திற்கு அடுத்த இரண்டாவது தலைநகரமாக விஜிதபுரம் விளங்கியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் துட்டகைமுனுவின் படை இந்நகரை முற்றுகையிட்டு வைத்திருந்தது. இறுதியில் நான்கு வாயில்களிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களினாலேயே இந்நகரத்தை துட்டகைமுனுவின் படை கைப்பற்றியக்கூடியதாக இருந்தது.[3]

இவற்றை விட வேறெதுவும் இவ்வரலாற்று ஆதார நூல்களில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் விஜிதபுரம் அனுராதபுர இராச்சியத்தின் பிரதான வர்த்தக மையமாகவும் வர்த்தகப் பாதைகளை இணைக்கும் நகரமாகவும் அமைந்திருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது.[4] இந்நகரின் சரியான அமைவிடம் உறுதியற்றதாகவே இருக்கின்றது. எனினும் பண்டைய கலாவாவிக்கு அண்மையில் விஜிதகம எனும் பெயரில் ஓர் கிராமம் அமைந்துள்ளது. இதுவே அன்றைய விஜிதபுரமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இங்கு ஒடு புராதன ஆலயமும் பாரிய கருங்கல்லும் காணப்படுகின்றன. அக்கருங்கல் துட்டகைமுனு மன்னனின் படைகளின் வாள்களை தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.[5] வேறு சில வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் பொலன்னறுவையின் கடுறுவெல எனும் இடத்திற்கு அண்மையில் விஜிதபுரத்தின் இடிபாடுகள் காணப்படுவதாக நம்புகின்றனர்.[4][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wright, Arnold (1999). Twentieth century impressions of Ceylon: its history, people, commerce, industries, and resources. Asian Educational Services. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1335-5.
  2. Moratuwagama, H. M. (1996). සිංහල ථුපවංසය—Sinhala Thupavansaya (Sinhala Thupavamsa) (in Sinhala). Rathna Publishers. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-569-068-5.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Senaveratna, John M. (1997). The story of the Sinhalese from the most ancient times up to the end of "the Mahavansa" or Great dynasty: Vijaya to Maha Sena, B.C. 543 to A.D.302. Asian Educational Services. p. 125–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1271-6.
  4. 4.0 4.1 Siriweera, W. I. (2004). History of Sri Lanka. Dayawansa Jayakodi & Company. pp. 18, 19, 97, 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-551-257-4.
  5. Perera, Supun (2007-08-2007). "The little ocean of Rajarata". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606002311/http://www.sundayobserver.lk/2007/08/26/tra02.asp. பார்த்த நாள்: 2009-11-05. 
  6. de Silva, Theja (2009-04-12). "A destiny fulfilled". The Nation இம் மூலத்தில் இருந்து 2009-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091004022249/http://www.nation.lk/2009/04/12/eye18.html. பார்த்த நாள்: 2009-11-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜிதபுரம்&oldid=3777923" இலிருந்து மீள்விக்கப்பட்டது