மராத்தியரின் பண்டிகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மராத்தியரில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தையும், பௌத்த சமயத்தையும் பின்பற்றுகின்றனர். ஆகவே, மகாராட்டிராவில் இந்துக்களின் பண்டிகைகளும் பௌத்த பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிலர் இயற்கையை வழிபடுகின்றனர்.

இந்து பண்டிகைகள்[தொகு]

குதி பத்வா[தொகு]

வெற்றிக் கம்பம்

குதி என்ற மராத்தி மொழிச் சொல்லுக்கு வெற்றிக் கம்பம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் சித்திரை மாதத்தின் முதல் நாள் (பெரும்பாலும் இந்நாள் மார்ச்சு மாதத்தில் வருகிறது) மராத்தியர்களின் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளே கன்னட, தெலுங்கு வருடப் புத்தாண்டு நாள் யுகாதியும் ஆகும். இந்த நாளில் இராமர் இராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பியதாகவும், அயோத்தி மக்கள் இராமனின் வரவை குதி (வெற்றி கம்பம்) நட்டுக் கொண்டாடியதாகவும் மராத்தியர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தியாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்நிகழ்ச்சி, தீபாவளி அன்று நடைபெற்றதாகக் கூறுவர். இந்த நாளில் மக்கள் புதுத் துணிகள், நகைகள் வாங்குவர். புதிய காரியத்தை இந்த நாளில் தொடங்குகின்றனர். இந்நாளில் குழந்தைகள் சரசுவதிக்குப் பூசை செய்வர்.[1]

அட்சயத் திருதியை[தொகு]

இப்பண்டிகை வைகாசி மாதத்தின் பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும். இந்து நாட்காட்டியின்படி இம்மாதத்தின் முக்கிய நாட்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய நாளில் பெண்களுக்கான சுமங்கலி பூசை நடைபெறும். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களின் தோழியரையும், உறவினரையும், தெரிந்தோரையும் இப்பூசைக்கு அழைப்பர். நிகழ்ச்சியினை நடத்துபவர் வளையல், இனிப்புகள், பரிசுகள், பூக்கள், வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம் போன்றவற்றை விருந்தினர்க்கு வழங்குவர். மாம்பழச் சாறும் வத்லி தாலும் சிற்றுண்டியாகத் தருவர்.

வத் பூர்ணிமா[தொகு]

ஜ்யேஷ்ட பூர்ணிமா அன்று இப்பண்டிகை கொடாடப்படுகிறது. இந்நன்னாளில் மகளிர் தங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்தோங்க, உண்ணாநோன்பிருந்து ஆலமரத்தை வழிபடுவர். திருமணமான பெண்கள் அருகிலுள்ள மரத்தில் சிவப்புக் கயிற்றைக் கட்டி வழிபடுவர். இது போன்ற வழிபாடுகள் குடும்ப ஒற்றுமையைப் போற்றுவனவாக அமைகின்றன.

கோகுலாஷ்டமி[தொகு]

ஜன்மாஷ்டமி
கோவிந்தாஷ்டமி

கிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவர். சிரவண மாதத்தின் எட்டாம் நாளின் இரவில் கொண்டாடப்படும். இந்நாளில் பரணிலிருந்த வெண்ணெயை கிருஷ்ணன் திருடித் தின்றதை நினைவு கூறுவர். பெரிய மட்பாண்டங்களில் பால், வெண்ணெய், தேன், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து தெருக்களில் உயரமான இடத்தில் தொங்க விடுவர். இளைஞர் இப்போட்டியில் கலந்து கொள்ள முன்வருவர். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று முக்கோண அமைப்பில், மேலே நிற்கும் மனிதர் பானையை உடைத்து வெற்றி பெறுவர். அமைப்பில் நின்றவர்க்கு பரிசுத் தொகை பிரித்தளிக்கப்படும். சுற்றி நிற்போர் கூச்சலிட்டு உற்சாகப்படுத்துவர்.

மங்கள் கவுர்[தொகு]

மராத்தி பிரமாணப் பெண்களுக்கு முதல் மங்கள கவுர் என்ற பண்டிகை பிரசித்தி பெற்றது. கணவனும் குடும்பத்தினரும் நலமுடன் வாழ சிவலிங்கத்திற்கு பூசை செய்து வழிபடுவர். திருமணமான பெண்கள் கூடியமர்ந்து அரட்டையடித்து, உணவுண்டு சொல் விளையாட்டுகளை விளையாடுவர்.

போகி[தொகு]

மகர சங்கராந்திக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையே போகி. இந்நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பர்.

மகர சங்கிராந்தி[தொகு]

சங்கரமன் என்பது கதிரவன் ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு பெயர்வதை குறிப்பதாகும். இந்நாளில், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு கதிரவன் பெயர்கிறார். இதே நாளில் தமிழர் தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர். சங்கராந்தி, நட்புப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழைய நண்பர்களை சந்தித்தும், சச்சரவுகளை பேசித்தீர்த்து, புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வர். இந்நாளில் இனிப்புகளை வழங்கி இனிய சொற்களைப் பேசு என்று கூறிக்கொள்வர். தில்குல் என்ற இனிப்பு இன்றைய சிறப்பு உணவாகும். இது எள்ளுருண்டை போன்றிருக்கும். எள்ளையும் சர்க்கரைப் பாகையும் போன்று இணைபிரியாது நண்பர்களாய் இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த உணவு உடலுக்கு ஏற்றது. இந்த நாளில் பெண்கள், நிலவு படம் பொறித்த கருமை நிற ஆடையணிவர். திருமணமான பெண்கள் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவர்.

தீபாவளி[தொகு]

தீபாவளி

இந்தியாவின் முக்கியப் பண்டிகையாகத் திகழ்வது தீபாவளி. ஐப்பசி மாத அமாவாசையன்று அகல்விளக்குகளை வீடுகளில் ஏற்றி வைத்து இந்நாளைக் கொண்டாடுவர். ரங்கோலிக் கோலங்கள் இட்டு வண்ண விளக்குகளில் தீபம் ஏற்றி மகிழ்வர். புதுத் துணிகளை உடுத்தி, வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்வர். பேராசை எனும் இருளைப் போக்கி, மகிழ்ச்சி எனும் ஒளியை ஏற்றும், மகிழ்ச்சித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது

துளசி விவாகம்[தொகு]

துளசி விவாக நிகழ்வு

இந்துக்கள் துளசிச் செடியை மகாலட்சுமியின் அம்சமாகக் கருதுகின்றனர். தீபாவளித் திருநாள் முடிந்தவுடன் துளசி விவாகம் தொடங்கும். மராத்தியர்கள் தங்கள் வீடுகளில் துளசிக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைப்பர். துளசிமாடம் மணப்பெண் போல் அலங்கரிக்கப்படும். கரும்பு, புளியங்கொம்பு, நெல்லிச்செடி ஆகியவை துளசிச் செடிக்கு அருகி நடப்படும். இது பொய்த் திருமணம் என்றாலும், மராத்திய திருமணங்களில் நிகழும் அத்தனை சடங்குகளும் இதிலும் நடைபெறும். மாலை நேரத்தில் நிகழும் இவ்விழாவில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வர். இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்படும் இந்நாளே திருமணக் காலத்திற்கான தொடக்கமாகும்.

மகா சிவராத்திரி[தொகு]

பங்குனி மாதத்தில் 14ஆம் நாள், கிருஷ்ண பட்சத்தில் தொடங்கும் இந்துப் பண்டிகை இது. சிவனை நோக்கி நோன்பிருந்து வில்வ இலைகளால் அர்ச்சித்து தூங்காமல் வழிபடுவர். பாவ மன்னிப்பு வேண்டினால் நல்ல முறையில் வீடுபேறு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஹோலி[தொகு]

மராத்தியரின் நாட்காட்டியின் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் நிகழும் ஹோலிப் பண்டிகை சிறப்பான பண்டிகையாகும். வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளில் தீப் பந்தங்களைக் கொளுத்தி மகிழ்வர். இரண்டாம் நாளில் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்வர். இதன் மூலம் இன்னொருவரின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வாழ்த்துவதாக அர்த்தம்.

தசரா[தொகு]

தசராப் பண்டிகை (அக்டோபர் மாதத்தில் வரும்) அசுவினி மாதத்தின் பத்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. மூன்றரை நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதல் நாளில் நிறுவப்பட்ட சிலைகள் மூன்றாம் நாளில் நீரில் கரைக்கப்படுகின்றன. இராமர் இந்நாளிலேயே இராவணனை வெற்றி கொண்டதாக அறியப்படுகிறது. இந்நாளில் உற்றார் உறவினரை சந்தித்து இனிப்புகள் வழங்கி மகிழ்வர். ஆப்த மரம் என்னும் மரத்தின் இலைகள் தங்க இலைகள் என்று கருதப்படுகின்றன. மக்கள் இவ்விலைகளை பிறருக்கு வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துவர். குபேரன், இராமரின் முன்னோரான ரகுராசா, ஆப்த மரம் ஆகியவற்றைப் பற்றிய கதையொன்றும் கூறப்படுகிறது. பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த சாமி மரத்தைப் பற்றிய கதையொன்றும் கூறப்படுகிறது.

கிராம ஜாத்ரா[தொகு]

மகாராட்டிரத்தின் பல கிராமங்களில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிராம விழாக்கள் நிகழும். கிராம தேவதைக்காக கொண்டாடப்படுகிறது. சமய ரீதியான பண்டிகைகள் தவிர்த்து, வண்டி ஓட்டும் போட்டி, கபடி, மல்யுத்தம் ஆகிய போட்டிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இக்காலத்தில் சிலர் அசைவ உணவுகளையும் தயாரித்து உண்கின்றனர். சில ஊர்களில் பெண்களுக்கு ஓய்வளித்து ஆண்கள் வீட்டுவேலைகளைச் செய்கின்றனர்.

அஷாதி ஏகாதசி[தொகு]

தியானேசுவர், துக்காராம் போன்ற மராத்திய முனிவர்களின் நினைவாக, யூலை ஆகத்து ஆகிய மாதங்களின் இடையில் கொண்டாடப்படும் பண்டிகை இது. இருபது நாட்களுக்கு முன்னரே ஆயிரக்கணக்கான வர்காரிகள் தங்களது பாத யாத்திரையை மேற்கொள்வர்.

குரு பூர்ணிமா[தொகு]

அஷாதா மாதத்தில் முழுனிலவு அன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படும். கல்வியோ, சம்பிரதாயமோ இந்துக்கள் குரு-சிஷ்ய உறவுமுறை மிக முக்கியமானது. குருக்கள் இறைவனோடு ஒப்பிடக்கூடியவர்கள். இந்த நாளில் குருக்களுக்கும் குருவான மகரிஷி வியாசரை வழிபடுவர்.

திவ்யாஞ்சி அமாவாசை[தொகு]

அஷாதி மாதத்தின் கடைசி நாளன்று திவ்யாஞ்சி அமாவாசை கொண்டாடப்படும். இது சிரவண மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த நாளில் வீடுகளில் உள்ள விளக்குகளை தூய்மையாக்கி புதுத்திரி போட்டு விளக்கேற்றி, இறைவழிபாட்டை மேற்கொள்வர். விளக்கு போன்ற அமைப்பில் கோதுமை இனிப்பைச் செய்து உண்பர்.

நாக பஞ்சமி[தொகு]

இயற்கை வழிபாடுகளில் இதுவும் ஒன்று. சிரவண மாதத்தின் ஐந்தாம் நாள் நாகங்களை வழிபடுவர். நாக பஞ்சமி அன்று, நாக குடும்பத்தை போற்றும்வகையில் ஆண், பெண், 9 குழந்தைகள் ஆகியவற்றை வரைந்து, சந்தன பொடியும் பாலும் வைத்து வழிபடுவர். நாக தேவதைகள் வீட்டிற்கு வந்து பாலைக் குடித்து, சந்தனத்தை தடவிக் கொண்டு, வீட்டினரையும் வாழ்த்துவதாக நம்பப்படுகின்றது. பெண்கள் முதல் நாளே கையில் மருதாணி தடவிக் கொண்டு, புது வளையல்களை அணிந்து மகிழ்வர்

நாகங்களுக்கு தீங்கு விளையக் கூடாது என்பதால், மண்ணைத் தோண்டுவதோ, காய்களை நறுக்குவதோ, வறுப்பதோ செய்வதில்லை. பாம்பாட்டிகள் சாலையோரத்தில் அமர்ந்து பாம்புகளைக் காட்டி, சாலையில் செல்வோரை அழைத்து பாம்புக் கடவுளுக்கு உணவு அளிக்குமாறு வேண்டுவர். பெண்களும் இனிப்பு சேர்த்த பாலையும் சோளத்தையும் வழங்கி, ஆசி வழங்குமாறு வேண்டுவர். பழைய துணிகளை பாம்பாட்டிகளிடம் வழங்குவர்.

நரளி பூர்ணிமா[தொகு]

சிரவண மாதத்தின் முழுனிலவன்று இப்பண்டிகை கொண்டாடப்படும். மழைக் காலம் முடிந்து மீன் பிடிக்கும் காலமென்பதால், கடற்கரையோரத்தில் வாழ்வோருக்கு இப்பண்டிகை முக்கியமானது. மீனவர்கள் கடலுக்கு தேங்காய் படைத்து, கடல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வர். இதே நாளில் இராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவர். பச்சரிசியில் தேங்காய் கலந்த உணவு இன்றைய சிறப்பு உணவாகும். பிராமணர்கள் தங்கள் பூனூலை மாற்றிக் கொள்வதும் இன்னாளிலேயே

கோஜகாரி[தொகு]

"யார் விழித்திருப்பது" என்று பொருள்படும் சமற்கிருத சொல்லான கோ ஜகார்த்தி என்பதன் சுருக்கமே இப்பெயர். அசுவினி மாதத்தின் பௌர்ணமி இரவில் கொண்டாடப்படும். இன்னாளில் அன்னை மகாலட்சுமி அனைத்து வீடுகளையும் பார்வையிட்டு விழித்திருப்பவர்களை செல்வமும் வளமும் பெற ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை. அன்னையை வரவேற்பதற்காக வீடுகள், தெருக்கள், கோவில்களில் விளக்கேற்றி வைப்பர். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி, நள்ளிரவு வரை விளையாடுவர். நிலவின் வெளிச்சத்தைக் கண்டவுடன் கொதித்த பாலைக் குடித்தும், பழங்களை உண்டும் விழாவை நிறைவு செய்வர். வீட்டின் மூத்த பிள்ளைக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும்.

பிதோரி அமாவாசை[தொகு]

இந்நாளில் மகனையும் மகளையும் நீண்ட காலம் சிறப்பான வாழ்வைப் பெறுமாறு தாய்மார்கள் வாழ்த்துவர். இந்நாள் வயலில் கடுமையாக உழைத்த காளை மாடுகளுக்கு மதிப்பு செலுத்தும்வகையில் கொண்டாடப்படும். இந்நாளில் உழவர்கள் தங்கள் மாடுகளை ஆற்றில் குளிப்பாட்டி மாடுகளுக்கு ஆபரணங்கள் அணிவித்து, மாலை சூட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மகிழ்வர். மாடுகளை ஓட்டிச் சென்று ஆடல் பாடலுடன் விழா நிறைவடையும். இது ஏறத்தாழ. தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலைப் போன்றே இருக்கும்.

அர்த்தாலிகா[தொகு]

பச்சை நிறத்தில் இருக்கும், அறுவடை மற்றும் மகிழ்ச்சிக்கான கடவுளாகக் கருதப்படும் அரிதா கவுரியை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெறும். பார்வதியின் அம்சமாகக் கருதப்படும் கவுரி, வினாயகரின் தாயாகப் போற்றப்படுகிறார். இந்நாளில் பெண்கள் நோன்பிருந்து சிவபார்வதியை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடுவர். பச்சை நிற ஆடையும் அணிகலன்களும் அணிந்து பெண்கள் நள்ளிரவு வரை விழித்திருப்பர்.

வினாயகர் சதுர்த்தி[தொகு]

விநாயகர்

அறிவை, விவேகத்தைத் தரும் கடவுளான வினாயகரைப் போற்றும்வகையில் இவ்விழா கொண்டாடப்படும். ஒவ்வொரு வீட்டிலும் வினாயகர் சிலைகளை வைத்து பூசிப்பர். இந்நாளில் இசை நிகழ்ச்சிகளும், நாடகங்களும் நிகழும். இரத்த தானம், நிதி போன்றவை இன்னாளிலேயே பெறப்பட்டுப் பயன்படுத்தப்படும்.

கண்டோபா திருவிழா[தொகு]

ஆறு நாட்கள் தொடரும் இப்பண்டிகை மிருகசீரிச மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி போன்றே இவ்விழாவும் கொண்டாடப்படும்.

கௌரி / மகாலட்சுமி[தொகு]

விநாயகருடன், மகாலட்சுமியையும் வழிபடுவர். கௌரி மகாலட்சுமிக்கான விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படும். ஜ்யேஷ்டா, கனிஷ்டா என்னும் கௌரி சகோதரிகள் முதல் நாளன்று மக்களின் வீடுகளில் தங்கி, இரண்டாம் நாளில் இனிப்புகளை உண்டு, மூன்றாம் நாள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் எனக் கூறினார். தங்கள் இல்லங்களுக்கு வரும் மகள்களாக நினைத்து அன்புடன் கொண்டாடுவர்.

அனந்த சதுர்த்தசி[தொகு]

விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து பதினொன்றாம் நாள் அனந்த சதுர்த்தசி கொண்டாடப்படும். இது விநாயகர் சதுர்த்தியின் முடிவைக் குறிக்கிறது. விநாயகருக்கு பிரிவு உபசார விழாவைக் கொண்டாடும் இந்நாளில் தங்கள் வீடுகளில் விதமாக, விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பர். சிலர் இந்நாளில் நோன்பிருப்பர். இந்நாளில் விஷ்ணுவின் வாகனமான அனந்தனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுவர்.

கட்சுதபனா[தொகு]

அசுவினி மாதத்தின் முதல் நாளில் இப்பண்டிகை கொண்டாடப்படும். இது தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். யானையின் படங்களை வரைந்து வைத்து சிறுமிகள் பாடல்கள் பாடி வழிபடுவர். கடைசி பாடல் முடிந்தவுடன் சிறப்பு இனிப்பை வழங்குவர்.

கார்த்திகை ஏகாதசி[தொகு]

கார்த்திகை மாதத்தின் பதினொன்றாம் நாள் இப்பண்டிகை கொண்டாடப்படும். .

பௌத்த பண்டிகைகள்[தொகு]

அம்பேத்கர் ஜெயந்தி[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மேதகு அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் ஜெயந்தி எனப்படுகிறது. புத்த சமயத்தைத் தழுவிய மக்கள், நள்ளிரவு வரை களிக்கூத்தாடி வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

தம்ம சக்கர பிரவர்த்தன தினம்[தொகு]

அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு, அக்டோபர் 14ஆம் நாள், தசராவின்போது, புத்த சமயத்திற்கு மாறினார். இவரைப் பின்பற்றி இவரது ஐநூறாயிரம் பேர் புத்த சமயத்தித்தைத் தழுவினர். உலகிலேயே ஒரே நேரத்தில் அதிகம் பேர் வேறு சமயத்தைத் தழுவியது இதுதான் முதல் முறை. இத்தினமே தம்ம சக்கர பிரவர்த்தன தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் தீட்ச பூமி என்றழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

புத்த பூர்ணிமா[தொகு]

வைகாசி மாதத்தின் பௌர்ணமியின்போது புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். புத்தரின் மூன்று முக்கிய நிகழ்வுகள் இந்நாளிலேயே நடைபெற்றன. இந்நாளில்தான் புத்தர் லும்பினியில் பிறந்தார். இதேநாளில் போத்கயாவில் புத்தநிலையை அடைந்தார். இதே நாளில் இறந்தார். புத்த பூர்ணிமா, பவுத்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. இந்நாளில் புத்த விகாரங்களைப் பார்வையிட்டு, இனிப்புகளை வழங்கியும். எளியோருக்கு உதவி செய்தும் கொண்டாடி மகிழ்வர்.

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]