பாலிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலிங்
Baling
பாலிங் மலை
பாலிங் மலை
நாடு மலேசியா
மாநிலம்Flag of Kedah.svg கெடா
நகரத் தோற்றம்1900களில்
நகரத் தகுதி1976
அரசு
 • யாங் டி பெர்துவாதுவான் அப்துல் சுக்கோர் பின் அப்துல் கனி AMK, BCK
பரப்பளவு
 • மொத்தம்1,530 km2 (590 sq mi)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்2,04,300
 • அடர்த்தி130/km2 (350/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (MST) (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு09xxx
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6044 (தரைவழித் தொடர்பு)
இணையதளம்http://www.mdbaling.gov.my/panduan-ke-baling

பாலிங் (Baling) மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். கெடா மாநிலத்தில் 12 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தின் பெயர் பாலிங் ஆகும். இந்த மாவட்டத்தில் தான் பாலிங் நகரும் அமைந்து உள்ளது. தாய்லாந்து நாட்டின் தெற்கே இருக்கும் பெத்தோங் நகருக்கு மிக அருகில் இந்தப் பாலிங் நகரம் உள்ளது. சுங்கை பட்டாணி நகரில் இருந்து 56 கி.மீ. வடக்கே உள்ளது.

மலேசிய வரலாற்றில் சிறப்பு பெற்ற நகரங்களில் பாலிங் நகரமும் ஒன்றாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து 1960 ஆம் ஆண்டு வரை, மலாயா கம்னியூஸ்டுப் போராளிகளுக்கு எதிராகப் பாலிங் மாவட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் செய்யப் பட்டது. மலாயா வரலாற்றில் புகழ்பெற்ற பாலிங் பேச்சுவார்த்தை இங்குதான் நடைபெற்றது. மலாயா கம்னியூஸ்டு கட்சிக்கும் மலாயா அரசாங்கத்திற்கும் இடையே அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

பாலிங் பேச்சுவார்த்தை[தொகு]

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் பாலிங்கில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது. ஜப்பானியர்களை எதிர்த்தப் போராளிப் படையினருக்கு,[1] பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்.[2][3]

இந்தக் கொரில்லா போராளிக் குழு பேராக், கெடா, சிலாங்கூர், பகாங், ஜொகூர், மலாக்கா மாநிலங்களில் பரவியிருந்தது. தவிர, பேராக் மாநிலத்தில் தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை சிப்புட், சிம்மோர், தஞ்சோங் ரம்புத்தான், தம்பூன், கம்பார் நகரம் போன்ற இடங்கள்; கெடா மாநிலத்தில் பாலிங், கிரிக், குரோ, கூலிம் போன்ற இடங்கள்; பகாங் மாநிலத்தில் ரவுப், பெந்தோங், பிரேசர் மலை, போன்ற இடங்கள்; ஜொகூர் மாநிலத்தில் சிகாமட், குளுவாங், மூவார், பத்து பகாட் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது.

மலாயா அவசரகாலம்[தொகு]

மலாயா அவசரகாலம் என்பது 1948லிருந்து 1960 வரை மலாயா, தற்போதைய மலேசியாவில் அமல் படுத்தபட்ட ஓர் ஒழுங்கு நடவடிக்கை காலம் ஆகும். மலாயா அவசரகாலத்தில் Malayan National Liberation Army (MNLA)[4] எனும் மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரை மலாயா அவசரக் காலப் போர் என்றும் அழைக்கிறார்கள்.

மலாயா தேசிய விடுதலை படை என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் போர்ப் படை ஆகும். மலாயா காலனித்துவப் பிரித்தானியர்கள், மாலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போரின் கால கட்டத்தை மலாயா அவசரகாலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினர் அந்தக் கால கட்டத்தைத் தேசிய பிரித்தானிய எதிர்ப்பு - விடுதலைப் போர் (Anti-British National Liberation War)[5] என்று அழைத்தனர்.

மலாயா கம்னியூஸ்டு கட்சி[தொகு]

பிரித்தானியர்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்திய இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் பின்னாளில் மலாயா கம்னியூஸ்டு கட்சி என்று கொள்கை மாற்றம் அடைந்தது.[6] மலாயாக் கம்னியூஸ்டுக் கட்சி ஒட்டு மொத்த மலாயாவையும் ஒரு கம்னியூச நாடாக மாற்ற திட்டங்களை வகுத்தது.[7] மலாயாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர பல நாச வேலைகளிலும் ஈடுபட்டது. அந்தக் கட்சிக்குச் சின் பெங் என்பவர் தலைமை வகித்தார்.

மலாயாவில் நடந்த இந்த உள்நாட்டுப் போரில், 1960ஆம் ஆண்டில், மலாயா கம்யூனிஸ்டுகள் தோல்வி அடைந்தனர். இருப்பினும் அவர்களின் தலைவர் சின் பெங் 1967ஆம் ஆண்டு அந்தச் சண்டையை மீண்டும் புதுப்பித்தார்.

அதற்கு முன்னரே ஆஸ்திரேலிய, பிரித்தானிய படைகள் அப்போரில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சின் பெங்கின் புதிய அணுகுமுறையும் தோல்வி கண்டது.

மலாயாவின் பொருளாதாரம் பாதிப்பு[தொகு]

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயாவின் பொருளாதாரம் மிக மோசமான பாதிப்பு நிலையை அடைந்தது. வேலையில்லாமை, குறைவான ஊதியம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவின. தொழிலாளர்களிடையே பரவலான அமைதியற்றத் தன்மை இருந்தது.

1946 லிருந்து 1948 வரை ஆங்காங்கே வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. இந்தக் காலகட்டத்தில் பிரித்தானியர் மலாயாவின் பொருளாதாரத்தைச் செப்பனிட பலவகையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் கொலை[தொகு]

1948 ஜூன் மாதம் 16ஆம் தேதி பேராக், சுங்கை சிப்புட்டில் மூன்று ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்று காலை 8.30க்கு சுங்கை சிப்புட், எல்பில் தோட்டத்தின் நிர்வாகி ஏ.இ.வால்கர் அவருடைய அலுவலக அறை மேசையில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அதற்கு அடுத்து, முப்பது நிமிடங்கள் கழித்து இரண்டு கி.மீ. தொலைவில் இருந்த பின் சூன் தோட்ட நிர்வாகி ஜே.எம்.எலிசன் என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.[8] இந்த அசம்பாவிதங்கள் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களை நிலை தடுமாறச் செய்தது.

கொலை செய்யப்பட்ட பிரித்தானிய நிர்வாகிகளின் உடல்கள் பத்து காஜாவில் உள்ள ஆங்கலிக்கன் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் மலாயாவில் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்தனர்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்குத் தடை[தொகு]

அதன் வழி மலாயா கம்யூனிஸ்டு கட்சி முற்றாகத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர். விசாரனைகள் இல்லாத கைது நடவடிக்கை தீவிரமாக அமல் படுத்தப்பட்டது.[9]

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக சின் பெங் என்பவர் இருந்தார். மலாயா கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டதும் அக்கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சி என்பது மலாயா மக்கள் விடுதலைப் படை என்று மாற்றம் கண்டது. மலாயா கம்யூனிஸ்டுகளினால் கிராமப்புற மக்களின் வாழ்வில் சித்ரவதைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன.[10]

ரகசியமான இராணுவப் பயிற்சிகள்[தொகு]

ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஜப்பானியர்களை எதிர்த்து கொரில்லா போர் முறையில் களம் இறங்கியது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி ஜப்பானியர்களை எதிர்க்கச் செய்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ரகசியமான முறையில் இராணுவப் பயிற்சிகளையும் வழங்கி வந்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரின் ஆயுதஙளைப் பிரித்தானியரிடமே மீண்டும் ஒப்படைக்குமாறு கட்டளையிடப் பட்டது. இருப்பினும் அந்த ஆயுதங்களில் பெருவாரியான ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரே வைத்துக் கொண்டனர். பின்னர், அதே ஆயுதங்கள்தான் பிரித்தானியர்களுக்கு எதிராகவும் திசை திருப்ப பட்டன.[11]

கொரில்லா போர்[தொகு]

மலாயா தேசிய விடுதலை படையினர் (Malayan National Liberation Army) கொரில்லா போர்த் தந்திரங்களைக் கையாண்டனர். மின்நிலையங்கள், நீர்த் தேக்கங்கள் போன்றவற்றைச் சேதம் அடையச் செய்தல், ரப்பர் தோட்டங்களில் தாக்குதல் நடத்துதல், பொது போக்குவரத்திற்கு குந்தகம் விளைவித்தல் போன்றவையே மலாயா தேசிய விடுதலை படையினர் கையாண்ட கொரில்லா போர் தந்திரங்களாகும்.[12]

அப்போது மலாயாவில் 3.12 மில்லியன் சீனர்கள் இருந்தனர். இவர்களில் ஏறக்குறைய 500,000 பேர் மலாயா தேசிய விடுதலை படையினருக்கு ஆதரவாக இருந்தனர். மலாய்க்காரர்களில் சிலரும் ஆதரவு வழங்கினர்.

பொது மன்னிப்பு[தொகு]

1955 செப்டம்பர் 8ஆம் தேதி மலாயா கம்யூனிஸ்டுகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப் படுவதாக மலாயாக் கூட்டரசு அரசாங்கம் அறிவித்தது.[13] இதே போன்ற ஓர் அறிவிப்பைச் சிங்கப்பூர் அரசாங்கமும் அறிவித்தது. ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினருடன் எந்தவிதப் பேரமும் பேச முடியாது என்று அப்போதைய மலாயாவின் முதலமைச்சர் துங்கு அப்துல் ரகுமான் உறுதியாக அறிவித்தார். பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அது தொடர்பாக எந்தப் பேரமும் பேச முடியாது. இது அரசாங்கத்தின் தீர்க்கமான முடிவு என்று துங்கு அப்துல் ரகுமான் திடமாகச் சொல்லி விட்டார்.[14]

பொது மன்னிப்பின் மூலக் கூறுகள்[தொகு]

 • அவசரகாலம் தொடர்பான தவறுகளைச் செய்தவர்கள் உடனடியாக சரண் அடையலாம்.
 • அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
 • இப்போதே அவர்கள் சரண் அடையலாம்.
 • அவர்கள் விரும்பும் நபரிடம் சரண் அடையலாம்.
 • அல்லது பொது மக்களிடமும் சரண் அடையலாம்.
 • அரசாங்கம் பொதுவான சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவில்லை.
 • அதனால் பாதுகாப்பு படையினர் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார்கள்.
 • சரண் அடைந்தவர்களிடம் அரசாங்கம் கன்டிப்பாக விசாரண நடத்தும்.
 • சரண் அடையும் ஒருவர் நாட்டிற்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேன்டும்.
 • அவருக்கு அரசாங்கம் எல்லா வகைகளிலும் உதவிகள் செய்யும்.
 • சரண் அடைந்தவர் சமுதாயத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப் படுவார்.
 • சரண் அடைந்தவர் அவருடைய குடும்பத்தாருடன் இணைத்து வைக்கப் படுவார்.
 • சரண் அடைந்த பின்னர் அவர்களுடைய நடமாட்டம் தொடர்ந்து கவனிக்கப்படும்.
 • சீனாவிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.[15]

மலாயா அரசாங்கத்தின் சமாதானப் பேச்சு[தொகு]

தன்னுடைய நோக்கம் வெற்றி பெறவில்லை என்பதை உணர்ந்த சின் பெங், ஆளும் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அழைப்பு விடுத்தார். அந்தப் பேச்சு வார்த்தை மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது. 1955 டிசம்பர் 28ஆம் தேதி கெடா, பாலிங்கில் உள்ள பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றது.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங், அதன் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின், மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர். மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.[16]

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை[தொகு]

சண்டை சச்சரவுகளுக்கு ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு ஆகும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

இறுதியில் பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தக் கட்டமாக நியூசிலாந்து தன்னுடைய இராணுவப் படையை மலாயாவுக்கு அனுப்பியது. பொதுநலவாய உறுப்பு நாடுகள் (Commonwealth Countries) தத்தம் படைகளையும் மலாயாவுக்கு அனுப்பி வைத்தன.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் இறுதி முயற்சி[தொகு]

பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததினால், 1956 பிப்ரவரி 8ஆம் தேதி முதலமைச்சர் துங்கு பொது மன்னிப்பை மீட்டுக் கொண்டார். மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு ஐந்து மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் உறுதியாகச் சொன்னார்.[17]

எனினும், மலாயா கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த தன்னால் இயன்ற வரை முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், அனைத்தும் வெற்றி பெறவில்லை. மலாயா சுதந்திரம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட, ஆகக் கடைசியாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி இன்னொரு முயற்சி செய்து பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கேட்டது. ஆனால், துங்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

மலாயா சுதந்திரம் அடைந்தது[தொகு]

1957 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி மலாயா சுதந்திரம் அடைந்தது. மறு ஆண்டில் பேராக், தெலுக் இந்தானில் கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் கடைசியாக ஒரு தாக்குதல் நடத்தினர். அதுதான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தாக்குதல்.

அந்தத் தாக்குதலில் வெற்றி பெற முடியாமல் போகவே, தாக்குதல் நடத்திய அனைவரும் அரசாங்கக் காவல் துறையிடம் சரண் அடைந்தனர். மலாயாவில் ஆங்காங்கே எஞ்சியிருந்த கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் தென் தாய்லாந்து எல்லையில் தஞ்சம் அடைந்தனர். 1960 ஜுலை 31-இல் அவசரகாலம் முடிவிற்கு வந்ததாக மலாயா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன் பின்னர் சின் பெங், தென் தாய்லாந்தில் இருந்து சீனா, பெய்ஜிங்கிற்குச் சென்றார். அவருடன் முக்கியமான சிலரும் சென்று சீனாவில் அடைக்கலம் அடைந்தனர். இவர் 2013 செப்டம்பர் 16 ஆம் திகதி தாய்லாந்து தலைநகரமான பாங்காக்கில் காலமானார். பாங்கோக் போஸ்ட் நாளிதழ் செய்திகளின் படி, அன்றைய தினம் அதிகாலை மணி 6.20 மணியளவில் சின் பெங் வயது மூப்பு காரணமாகக் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தின் படி, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்குத் திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அவர் தன்னுடைய வாழ்நாளில் பல வருடங்களைத் தாய்லாந்திலேயே கழித்தார்.

அவசரகாலத்திற்கு ஒரு முடிவு[தொகு]

மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மலாயா அவசரக் காலப் போரில்...

 • 6,710 கம்யூனிஸ்டுக் கொரில்லாக்கள் கொல்லப்பட்டனர்.
 • 1,287 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
 • 2,702 கொரில்லாக்கள் சரண் அடைந்தனர்.
 • அரசு தரப்பில் 1,345 இராணுவத்தினரும், காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.
 • 519 பொதுநலவாய (காமன்வெல்த்) அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
 • பொதுமக்களில் 2,478 பேர் கொல்லப்பட்டனர்.

பாலிங் பெயர் தோற்றம்[தொகு]

கெடா மாநிலத்தின் புராணக் கதைகளை விரிவாக எடுத்துரைக்கும் காப்பியம் ஹிக்காயாட் மேரோங் மகாவங்சா (Hikayat Merong Mahawangsa)[18]. இதில் மேரோங் மகாவங்சா எனும் இந்து மன்னர், கெடா சுல்தானகத்தைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சுல்தானகம் பிரா ஓங் மகாவங்சா எனும் மன்னரால் 1136-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் இந்த மன்னர் இஸ்லாம் சமயத்தைத் தழுவி சுல்தான் முஷபர் ஷா என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

7-ஆம் 8-ஆம் நூற்றாண்டுகளில் கெடா மாநிலப் பகுதி ஸ்ரீ விஜயா பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஸ்ரீ விஜயா பேரரசின் ஆளுமைக்குப் பின்னர் சயாமியர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுக்கு அடுத்து மலாக்கா பேரரசு கெடாவைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தது. 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களும் சுமத்திராவின் ஆச்சே அரசும் கெடாவின் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தின.

ராஜா பெர்சியோங்[தொகு]

அந்தக் காப்பியத்தில் ராஜா பெர்சியோங் (Raja Bersiong) எனும் ஓர் அரசரைப் பற்றிய கதை உள்ளது. அதில் வரும் பாலிங் எனும் சொல்லில் இருந்துதான் பாலிங் நகரத்திற்கும் பாலிங் மாவட்டத்திற்கும் பெயர்கள் வந்து இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் சான்று பகிர்கின்றனர்.[19]

பாலிங் எனும் சொல் தாய்லாந்து மொழியின் பான் லிங் (Ban Ling - தாய்: บ้านลิง) எனும் சொற்களில் இருந்தும் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. குரங்குகள் கிராமம் என்று பொருள். இருப்பினும் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை.

பாலிங் மாவட்டத்தில் உள்ள நகரங்கள்[தொகு]

பாலிங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள்:

 • கோல கெட்டில்
 • பாரிட் பாஞ்சாங்
 • தாவார்
 • கோலா பெகாங்
 • குப்பாங்
 • பாலிங்
 • கம்போங் லாலாங்
 • கோத்தா பாலிங் ஜெயா

மக்கள் தொகை[தொகு]

2009 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலிங் மாவட்டத்தின் மக்கள் தொகை 2.04,300. இனவரியாக:

 • மலாய்க்காரர்கள் - 77 %
 • சீனர்கள் - 10.5 %
 • இந்தியர்கள் - 10.7 %
 • இதர இனத்தவர் - 1.8 %

மேற்கோள்[தொகு]

 1. Dato' HL "Mike" Wrigglesworth, The Japanese Invasion of Kelantan in 1941
 2. Ooi Keat Gin, Japanese Empire in the Tropics, 1998, 6–7
 3. Wigmore, Lionel (1957) The Japanese Thrust Australia in the War 1939–1945 Series 1 (Army), Volume 4. Canberra: Australian War Memorial, page 179 (Online in PDF form at [1])
 4. My Side of History by Chin Peng (Media Masters; Singapore, 2003)
 5. The MNLA termed it the "Anti-British National Liberation War". The conflict was called an "emergency" for economic reasons, as London insurance companies would only cover property losses to Malayan rubber and tin estates during rioting or commotion in an emergency, but not in an armed insurrection or civil war.
 6. The Malayan Emergency (1947-1960).
 7. O'Ballance, p.23.
 8. The British Colonial government declared a State of Emergency after the murder of three European planters on 16 June 1948.
 9. A long bitter campaign was fought in the jungles of the Malay Peninsular, with people relocated into fortified villages to deny support to the rebels. The Emergency officially ended 31 July 1960.
 10. The communists started to realise that their policy of terrorizing supplies from the local population was just breeding hostility, facing renewed military opposition they pulled back into the deep jungles and stopped the random attacks.
 11. Some units were trained by the British. The equipment and skills gained in guerrilla warfare against the Japanese served the MPAJA in good stead when it fought Commonwealth forces during the postwar Malayan Emergency.
 12. Rashid, Rehman (1993). A Malaysian Journey. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-99819-1-9. 
 13. Memorandum from the Chief Minister and Minister for Internal and Security, No. 386/17/56, 30 April 1956. CO1030/30
 14. Baling Talks, a meeting between Messrs. David Marshall, Tunku Abdul Rahman, Dato Sir Tan Cheng Lock, and Chin Peng on 28 December 1955.
 15. Prof Madya Dr. Nik Anuar Nik Mahmud, Tunku Abdul Rahman and His Role in the Baling Talks
 16. The Baling Talks were held in Malaya in 1956 in an attempt to resolve the Malayan Emergency situation. The main participants were Chin Peng, David Marshall and Tunku Abdul Rahman.
 17. MacGillivray to the Secretary of State for the Colonies, 15 March 1956, CO1030/22
 18. Hikayat Merong Mahawangsa atau Sejarah Kedah adalah hikayat yang menceritakan susur galur Merong Mahawangsa dan pengasas Kedah, sebuah negeri di Malaysia.
 19. Raja Bersiong tak wujud dalam pemerintahan raja Kedah, ia hanyalah satu episod dalam Hikayat Merong Mahawangsa.

வெளி இணைய இணைப்புகள்[தொகு]

நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிங்&oldid=3103475" இருந்து மீள்விக்கப்பட்டது