டத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Panglima Jasa Negara டத்தோ விருது

டத்தோ என்பது (மலாய்:Datuk), மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். 'பாங்லிமா ஜாசா நெகாரா' எனும் Panglima Jasa Negara (PJN)[1] விருதையும் 'பாங்லிமா செத்தியா டிராஜா' எனும் Panglima Setia Diraja (PSD) விருதையும், டத்தோ விருது என்று அழைக்கிறார்கள். 1965 ஆம் ஆண்டில் இருந்து பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வழங்கப்படுவதிலும் சில கட்டுப்பாடுகள், வரைமுறைகள் உள்ளன. மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 200 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும்.[2]

மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் 'பாங்லிமா ஜாசா நெகாரா' விருது 9ஆவது இடத்திலும், 'பாங்லிமா செத்தியா டிராஜா' விருது 10ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன.

டத்தோ விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை டத்தின் (Datin) என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை டத்தின் பாதுக்கா (Datin Paduka) என்று அழைக்க வேண்டும். மலேசியப் பேரரசரைத் தவிர மலேசிய மாநிலங்களின் சுல்தான்களும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்கும் தகுதிகளைப் பெற்று உள்ளனர். மலேசியர்கள் மட்டுமே பெறக் கூடிய இந்த விருதை வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காகப் பெற்றுள்ளனர்.

சர்ச்சைகள்[தொகு]

அண்மைய காலங்களில், டத்தோ விருது வழங்கப்படுவதில் மலேசியாவில் சில சர்ச்சைகள் ஏற்பட்டு உள்ளன. டத்தோ விருது பெற்ற சிலர் முன்மாதிரியான வாழ்க்கை முறையைத் தவிர்த்து ஒழுங்கீனமான வகையில் சொத்துகளைச் சேர்த்துள்ளனர். அவர்களில் சிலர் நீதிமன்றங்களினால் தண்டிக்கப் பட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய டத்தோ விருதுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என சமூக அமைப்புகள் கண்டனக்குரல்களை எழுப்பின.

உலகச் சுவர்ப்பந்து வீராங்கனையான 25 வயது நிக்கல் டேவிட் என்பவருக்கும் மலேசிய ஒலிம்பிக் வீரர் லீ சோங் வேய் என்பவருக்கும் டத்தோ விருது வழங்கப்பட்டதில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்டன. அவர்கள் இருவரும் மிக இளம் வயதினர். ஆகவே, அவர்களுக்கு டத்தோ விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது எனும் அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன.

அதைத் தவிர, இந்தி நடிகர் ஷாருக் கான் மலாக்காவில் படப்பிடிப்புகள் நடத்தியதற்காக மலாக்கா மாநில அரசு அவருக்கு டத்தோ விருதை வழங்கி இருக்கக் கூடாது என்றும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.[3]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டத்தோ&oldid=3483313" இலிருந்து மீள்விக்கப்பட்டது